கொனஷ்டை

ஃபேஸ்புக்கில் எனது இந்தக் குறிப்புக்கு நண்பர் ராஷித் அகமது எழுதிய கமெண்ட் கீழே உள்ளது.

எழுதும்போது ஒருவரால் சிரித்தபடியோ, குறைந்தது புன்னகையுடனோ எழுத முடியுமா?

அநேகமாக முடியாது என்றே நினைக்கிறேன். நான் எப்படி எழுதுகிறேன் என்று சொல்லுகிறேன்.

எழுதுவதையும் யோசிப்பதையும் நான் ஒன்றாகச் செய்வதில்லை. முழுதும் யோசித்து முடிக்காமல் எழுத அமரமாட்டேன். உட்கார்ந்துவிட்டால் நடுவே நிறுத்தி யோசிக்கிற வழக்கம் என்றுமே இருந்ததில்லை. முதல் வரி முதல் இறுதி வரி வரை மனத்துக்குள் முழுதாக எழுதிப் பார்த்த பிறகே டெக்ஸ்ட் எடிட்டைத் திறப்பேன். டைப் செய்ய ஆரம்பித்துவிட்டால் இடையில் தடை இருக்காது. மிகக் குறைவாகவே பேக் ஸ்பேஸ் தொடுவேன். முடிக்கும்வரை வேறு சிந்தனை இராது. ஒரு எண்ணூறு சொற்கள் எழுதவேண்டுமானால் எனக்கு அதற்கு அதிகபட்சம் இருபது முதல் இருபத்தி ஐந்து நிமிடங்கள் போதும். ஆனால் இந்த இருபத்தி ஐந்து நிமிட எழுத்து வேலைக்கு முன்னதாகக் குறைந்தது மூன்று முதல் ஐந்து மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கும்.

பெரும்பாலும் இரு சுவர்கள் இணையும் ஓரத்தில் திரும்பி உட்கார்ந்து சுவரைப் பார்த்தபடி யோசிப்பது எனக்குப் பிடிக்கும். யோசிக்கும்போது இடதுகாலை மடித்து வைத்துக்கொண்டு வலது காலைத் தொங்கப் போட்டிருப்பேன். சடாரென்று யோசிப்பதை நிறுத்திவிட்டு எதாவது ஒரு புத்தகத்தின் ஏதோ ஒரு பக்கத்தை எடுத்துப் படிப்பேன். கடாசிவிட்டு சட்டென்று ஒரு பாட்டுக் கேட்பேன். முன்பெல்லாம் அது பெரும்பாலும் ‘காற்றில் எந்தன் கீத’மாக இருக்கும். சில வருடங்களாக அதிகமும் ‘செம்பூவே’ அல்லது ‘வானம் மெல்ல’.  மூடு பயங்கரமாக இருக்குமானால் பாலமுரளி கிருஷ்ணா. அவரது நளினகாந்தி ஆலாபனை ஒன்று என்னிடம் இருக்கிறது.  கதற வைக்கிற ஆலாபனை. கேட்கும்போதே முக்தியடைந்துவிட்டாற்போல் இருக்கும். அதைக் கேட்டுக்கொண்டே சில நிமிடங்கள் கண்மூடிக் கிடப்பேன். அநேகமாக அழுதிருப்பேன்.

சட்டென்று எழுதவேண்டியது நினைவுக்கு வந்து இசையை நிறுத்திவிட்டு மீண்டும் யோசிக்கத் தொடங்குவேன். சட்டை பட்டன்களை அவிழ்த்துவிட்டுக்கொண்டு கழுத்தில் ஒரு துண்டைச் சுற்றிக்கொண்டு யோசித்தால் எனக்கு வேகமாக யோசிக்க வரும். ரொம்ப வேகம் வேண்டுமென்றால் அதே துண்டைத் தலையில் முக்காடு போலப் போட்டுக்கொண்டுவிடுவேன்.

யோசிக்கும்போது போன் அடித்தால் நான் செத்தேன். அல்லது போனில் அழைத்தவர் செத்தார். கண்டிப்பாக அந்த உரையாடல் சுமுகமாக இருந்ததில்லை. இதுவே எழுதும்போது போன் வந்தால் எனக்குப் பிரச்னை இல்லை. மணிக்கணக்கில் வேண்டுமானாலும் எழுதுவதை நிறுத்திவிட்டுப் பேசுவேன். பேசி முடித்ததும் விட்ட இடத்தில் இருந்து தங்குதடையின்றி எழுதுவேன். ஆனால் ஒன்றை எழுத ஆரம்பித்து முடிக்காமல் இரவு படுத்துவிட்டால், மறுநாள் அதைத் தொடர்வது எனக்கு சிரமம். மீண்டும் முதலில் இருந்தே எழுதுவது வழக்கம்.  இதனாலேயே புத்தகங்கள் எழுதும்போது உறக்கத்தை மதியத்தில் வைத்துக்கொண்டு இரவெல்லாம் எழுதுவேன். அதிகாலை மட்டும் ஓரிரு மணி நேரம் உறங்கிவிட்டு உடனே எழுந்து எழுத ஆரம்பித்துவிடுவேன்.

என் அறையும் சரி, நானும் சரி. எப்போதும் மணக்க மணக்க இருப்பது வழக்கம். எழுத்து என்பது வாசனையுடன் நெருங்கிய தொடர்புள்ளது. பேகான் ஸ்ப்ரே அடிப்பது போல பாடி ஸ்ப்ரே அடிக்காதே என்று என் மனைவி எப்போதும் சொல்லுவார். ஒரு நாளும் கேட்டதில்லை. விதவிதமான ஸ்பிரேக்களை முயற்சி செய்வேன். அதேபோல் அறையில் எப்போதும் சாம்பிராணி வத்தி மணம் இருந்துகொண்டே இருக்கவேண்டும். டேபிள் மீதுள்ள என் இஷ்ட தெய்வங்களுக்கு சாற்றிய பூக்களை அவ்வப்போது எடுத்து முகர்ந்துகொள்வேன். வாசனையின் வழி அருளாசி இறங்குமென்று ஒரு மூட நம்பிக்கை. இதைப் போலவே சிந்தனை சோர்வுறும்போதெல்லாம் அணிந்திருக்கும் ஸ்படிக மணி, துளசி மணி மாலைகளைத் தொட்டுக்கொள்வேன். ஸ்படிகத்தை எடுத்து சில வினாடிகள் காதில் வைப்பேன். ஜில்லென்று நீர் இறங்குவது போலிருக்கும். உடனே சுறுசுறுப்பாகிவிடும்.

எழுதும்போதும் சுருதி மாற்றவேண்டிய தருணம் வருமானால் சட்டென்று நிறுத்திவிட்டுக் கொஞ்ச நேரம் பாட்டுக் கேட்பேன். இது பெரும்பாலும் புதிய பாடல்களாக இருக்கும். இப்போது அடிக்கடிக் கேட்பது, ‘நானே வருகிறேன்’. சமயத்தில் பாட்டுக் கேட்பதற்கு பதில் படக்காட்சிகள் ஏதாவது பார்ப்பேன். பெரும்பாலும் நகைச்சுவைக் காட்சிகள். இந்த டைவர்ஷன், எழுதும்போது எனக்கு மிகவும் அவசியம். என்ன பிரச்னை என்றால் நகைச்சுவைக் காட்சிகளைக் கூட படு தீவிரமான முகபாவத்துடனேயே பார்ப்பேன். வேலை முடிந்தபிறகு பார்த்த காட்சியை மீண்டும் நினைவுகூர்ந்து சிரித்துக்கொள்வேன்.

முன்பெல்லாம் நொறுக்குத்தீனி நிறைய உண்பேன். இப்போது இல்லை. நாலு சிட்டிகை மாவா போதுமானதாக உள்ளது.

எழுதும்போது நான் எப்படி இருக்கிறேன் என்று அவ்வப்போது மொபைல் கேமராவில் செல்ஃபி மோடில் வைத்துப் பார்த்திருக்கிறேன். எனக்கே சகிக்காதபடிதான் இருக்கிறேன். பெரும்பாலும் மூக்குக் கண்ணாடியைக் கழட்டிவிட்டே எழுதுகிறேன். அடிக்கடி இரு கைகளாலும் தலையைக் கச்சாமுச்சாவென்று கலைத்துக்கொண்டு, அடிக்கடி காது மடல்களை நிமிண்டிக்கொண்டு, வலது காலை ஆட்டிக்கொண்டு, உதட்டைக் கடித்துக்கொண்டு, பல் குத்தும் குச்சியால் காது குடைந்துகொண்டு, கைரேகைகளை எண்ணிக்கொண்டு, திடீரென்று சொல் தடுக்கித் தடுமாறிவிடுகிறபோது பதற்றமாகி கைகால் நடுங்கி, பாட்டில் நீரை அப்படியே குடித்து, மேலெல்லாம் கொட்டிக்கொண்டு – இத்தனை அவஸ்தைக்கு இன்னும் நன்றாக எழுதலாம் என்று ஒவ்வொரு முறையும் தோன்றாதிருப்பதில்லை.

ஆரம்பத்தில் இதையெல்லாம் பார்த்து என் மனைவி மிகுந்த கலவரமடைந்திருக்கிறார். பிறகு இக்கிறுக்குத்தனங்கள் அவருக்குப் பழகி, எழுத உட்காரும் வேளைகளில் அறைப்பக்கம் வருவதே இல்லை. மகளானவள், பிறந்தது முதலே இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதால் அப்பா என்கிற பிம்பத்தின் அடிப்படையே இதுதான் என்று புரிந்துகொண்டிருக்கிறாள்.

என் பிரியத்துக்குரிய இரண்டு எழுத்தாளர்கள் எழுதும்போது நான் அருகே இருந்து பார்த்திருக்கிறேன். ஒருவர் இரா. முருகன். இன்னொருவர் ம.வே. சிவகுமார். முருகன் கையால் எழுதிக்கொண்டிருந்த காலங்களில் அவரது மோதிலால் தெரு வீட்டுக்குப் போயிருக்கிறேன். குழந்தையைக் கொஞ்சுவதுபோல இருக்கும் அவர் எழுதும் தோரணை. எழுதிய தாளை அட்டையில் இருந்து உருவும்போது அதற்கு வலித்துவிடாமல் க்ளிப்பை அழுத்தி உயர்த்தி எடுப்பது புதையல் எடுப்பது போலிருக்கும். எடுத்தபின் தாளை ஒரு தடவு தடவி தனியே வைத்துவிட்டு அடுத்த தாளின் முதல் சொல்லை எழுதிவிட்டு, ஒரு வினாடி இடைவெளி விட்டு என்னைப் பார்ப்பார். புன்னகை செய்வார். பிரமாதமான புன்னகை அது.

சிவகுமார் வரிக்கு வரி லயித்து, ரசித்து, தன்னைத் தானே பாராட்டிக்கொண்டு, சமயத்தில் உணர்ச்சிவசப்பட்டு அழுது, சடாரென எழுதுவதை நிறுத்திவிட்டு எழுந்து நின்று, ‘டேய், என் உசிர இறக்கி வெச்சிருக்கேண்டா இதுல!’ என்று கண்ணீர்ப் படலத்தோடு பேசும்போது அப்படியே கட்டிப்பிடித்து ஆசுவாசப்படுத்தியிருக்கிறேன்.

யோசித்துப் பார்த்தால் எழுதும்போது நான் என்றுமே நிதானமாக இருந்ததில்லை என்று தோன்றுகிறது.  அடுத்த சொல் தோன்றாமல் போய்விடுமோ என்கிற  பதற்றமும் அச்சமும் எப்போதும் இருக்கிறது.

சொற்களை நகர்த்தி வைத்துவிட்டால் நான் ஒன்றுமேயில்லை.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter