ருசியியல் – 21

இந்த வருஷத்து வெயில் ஒரு வழி பண்ணிவிடும் போலிருக்கிறது. வெளியே தலைகாட்ட முடியவில்லை. யாரையாவது எதற்காவது பார்த்தே தீரவேண்டுமென்றால் பிரம்ம முகூர்த்தத்தில் சந்திக்கலாமா என்று கேட்க ஆரம்பித்திருக்கிறேன். நடு நிசி நாயாகக்கூட இருந்துவிட்டுப் போய்விடலாம். நடுப்பகல் வேளைகளில் வெளியே போக நான் தயாரில்லை.

இந்த வெயில் காலங்களின் பெரிய பிரச்னை, வேலை கெட்டுவிடும் என்பது. நூறு சதம் ஒழுங்கான காரியம் ஒன்றை இப்பகல்களில் கண்டிப்பாகச் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். ஏசி அறைக்குள் பதுங்கிக்கொண்டாலும் நம்மையறியாமல் ஒரு சோர்வு ஒட்டிக்கொள்ளும். ராத்திரி பத்து மணிக்கு வரவேண்டிய அலுப்பும் களைப்பும் மத்தியானமே வந்து தொலைக்கும்.

நிறையத் தண்ணீர் குடியுங்கள் என்று சொன்னால் சரி என்போம். ஆனால் குடிக்கிற அளவு ஏறவே ஏறாது. மிஞ்சிப் போனால் நாளொன்றுக்கு இரண்டில் இருந்து மூன்று லிட்டர் நீர் அருந்துவோம். இந்த வெயிலுக்கு அதெல்லாம் எந்த மூலைக்கு?

என் நண்பர் குமரேசன் ருசி மிக்க குடிநீர் ரெசிபி ஒன்று சொல்லுவார். கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஆனால் பிரமாதமாக இருக்கும்.

ஒரு நாலைந்து லிட்டர் தண்ணீரை நன்றாகக் காய்ச்சி எடுத்து வைத்துவிட வேண்டும். இரண்டு எலுமிச்சங்காய், இரண்டு எலுமிச்சம்பழம், இரண்டு வெள்ளரி எடுத்துக்கொள்ளுங்கள். எலுமிச்சங்காய்களை இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டுவிடுங்கள். பழங்களைப் பிழிந்துவிட வேண்டும். வெள்ளரியைத் தூள் தூளாக நறுக்கிப் போட்டு மூடிவிடுங்கள். விரும்பினால் கொஞ்சம் புதினா சேர்க்கலாம்.

இதை அலங்கரிப்பதற்கு இன்னொன்றும் செய்யலாம். நாட்டு மருந்துக் கடைகளில் பெருமாள் கோயில் தீர்த்தப் பொடி என்று கேட்டால் ஒரு பொடி தருவார்கள். மெல்லிய பச்சைக் கற்பூர வாசனையோடு ஜோராக இருக்கும். அதில் இரண்டு சிட்டிகை தூவி, அப்படியே தண்ணீரை மூடி வைத்துவிடுங்கள். முழு ராத்திரி மூடியே இருக்கட்டும். மறுநாள் காலை இந்நீரை வடிகட்டி பாட்டில்களில் எடுத்துக்கொண்டு வெளியே போகலாம். ருசி, மணம் என்பதைத் தாண்டி சட்டென்று சக்தி கொடுக்கும் நீர் இது.

ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. கண்ணராவியான ஒரு கோடைகாலத்தில் பதேபூர் சிக்ரியைப் பார்க்கப் போயிருந்தேன். தெரியுமல்லவா? பேரரசர் அக்பர் கட்டிய கோட்டை நகரம். ஒரு காலத்தில் ரொம்ப அழகான ஊராக இருந்திருக்குமோ என்னமோ. நான் போனபோது கோயம்பேடு மார்க்கெட்டின் சற்றே விரிந்த வடிவமாகக் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் குப்பை. எல்லா பக்கங்களில் இருந்தும் துர்நாற்றம். பாதை எது, ப்ளாட்ஃபாரம் எது என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்குக் கடைகள் ஆக்கிரமித்த நகரமாக இருந்தது அது. எங்கெங்கிருந்தோ வந்து குவிந்துகொண்டே இருந்த சுற்றுலாப் பயணிகள் யாரும் அந்த ஊரை விட்டு நகரவே மாட்டார்களா என்று நினைக்கத் தோன்றும் அளவுக்குக் கூட்டம் இறுகிக்கொண்டே போனது.

வெயிலோ, வந்தாரை வறுத்தெடுக்கும் பணியில் வெகு மும்முரமாக இருந்தது. எத்தனை தண்ணீர் குடிப்பது? எவ்வளவு குளிர்பானம் அருந்துவது? காலை எட்டு மணிக்கு சுற்ற ஆரம்பித்தவனுக்குப் பதினோரு மணி அளவில் லேசாக மயக்கம் வந்துவிட்டது. வியர்வைக் கசகசப்பும் ஜனக்கூட்ட நெரிசலும் சகிக்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் அக்பரின் கோட்டை எத்தனை அழகாக இருந்து என்ன? ஒரு கல்லைக் கூட ரசிக்க முடியவில்லை.

பத்து நிமிஷம் ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்தேன். சற்றுத் தூரத்தில் யாரோ வியாபாரி பானையில் மோர் விற்றுக்கொண்டிருந்தான். அங்கும் கூட்டம். க்யூவில் நின்றுதான் மோர் வாங்கியாக வேண்டும். கொஞ்சம் கூட்டம் குறைந்தபின் வாங்கலாம் என்று எண்ணி அமைதி காத்தேன். ஆனால் கூட்டம் குறைவதாக இல்லை. சரி, இதிலெல்லாம் ரோஷம் பார்க்கலாகாது என்று எழுந்து போய் வரிசையில் நின்றுகொண்டேன்.

மேலும் பத்து நிமிடங்களுக்குப் பிறகே மோர் வியாபாரியை நெருங்க முடிந்தது. அவன் முன் இரண்டு பானைகள் இருந்தன. ஹிந்தி என்ற ஒரு மொழி இருந்தது. இரண்டில் எது வேண்டும் என்று அவன் கேட்டான். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று நானறிந்த மொழிகளிலே இனிதானதான தமிழில் கேட்டதற்கு பதில் இல்லை. சரி போ என்று ஆங்கிலத்தில் அதையே திரும்பக் கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் இல்லை. ஆனால் ஹிந்தியில் மட்டுமே சொன்னான். கேவலம் ஒரு தம்ளர் மோருக்கு இத்தனை சொற்களை விரயம் செய்ய வேண்டுமா என்று தோன்றியது. இரண்டிலொரு பானையைச் சுட்டிக்காட்டி, ‘அதையே கொடு’ என்று சொல்லிவிட்டேன்.

அவன் பானையைத் திறந்தான். நீண்ட கரண்டி ஒன்றை அதன் உள்ளே விட்டு லாகவமாக இந்தப் பக்கம் ரெண்டு, அந்தப் பக்கம் ரெண்டு கலக்கு. எடுத்து ஒரு கோப்பையில் ஊற்றி நீட்டினான். வாங்கிக்கொண்டு, அடுத்த பிரகஸ்பதி வாங்கிய மறு பானை மோரை எட்டிப் பார்த்தேன். அதில் மட்டும் கருவேப்பிலை, பச்சை மிளகாய், கடுகு வகையறாக்கள் இருந்தன. ஓஹோ, அது மசாலா மோர்; இது சாதா மோர் போல இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு, வாங்கிவிட்டபடியால் ஒரு வாய் அருந்தினேன்.

மோசமில்லை. மோர் நன்றாகவே இருந்தது. அந்த மறுபானை மோர் இன்னுமே நன்றாக இருக்கக்கூடும். அதை ருசிக்க வேண்டுமென்றால் மீண்டும் வரிசையில் நின்றாக வேண்டும். எனவே அந்த ஆசையை விலக்கிவிட்டு என் கோப்பை மோரை அருந்தி முடித்தேன்.

கொஞ்சம் தெம்பு வந்துவிட்டதோ? அக்பரின் கோட்டைக்குள் பிரவேசித்தேன். சிவப்பு வண்ணக் கட்டடக் காவியம் அது. என்னமாய்த்தான் உட்கார்ந்து ப்ளூ ப்ரிண்ட் போட்டிருப்பார்களோ தெரியவில்லை. அங்குலம் அங்குலமாக ரசித்து ரசித்துக் கட்டப்பட்ட கோட்டை.

பார்த்தபடியே உப்பரிகைப் பக்கம் போய்ச் சேர்ந்தபோது எனக்குள் என்னவோ நிகழ்ந்துகொண்டிருப்பது போல் இருந்தது. ஆனால் என்னவென்று சரியாகத் தெரியவில்லை. தொண்டை வறண்டது. தாகமென்றால் கொலை தாகம். இத்தனைக்கும் இரண்டு லிட்டர் தண்ணீர் உள்ளே போயிருக்கிறது. மேலுக்கு ஒரு கோப்பை மோர். அதெப்படி பத்தே நிமிடங்களில் இப்படியொரு தாகம் வரும்? தாகம் தவிர, என் எதிரே போய்க்கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் இரண்டு தலைகள் இருப்பது போலத் தெரிந்தது. பதினாறாம் நூற்றாண்டில் புதைந்த மனிதர்களா இவர்கள்? எல்லோரும் எப்படி உப்பரிகையின் கைப்பிடிச் சுவரைத் தாண்டி அந்தர வெளியில் பறக்கிறார்கள்? அட நாமும் பறந்து பார்த்தால்தான் என்ன?

கைப்பிடிச் சுவர் அருகே வந்து நின்றேன். நின்றேனா, படுத்தேனா என்று சரியாக நினைவில்லை. ஒரு மணி நேரமோ, ஒரு நாளோ, ஒரு வருடமோ கழித்துக் கண்விழித்தபோது நடந்தது புரிந்தது. மறுபானையில் இருந்ததல்ல; எனக்கு அவன் எடுத்துக் கொடுத்த பானையில் இருந்ததுதான் மசாலா மோர். சனியன், என்னத்தைப் போட்டுக் கலக்கியிருந்தானோ? உயிரே போய் வந்தாற்போலாகிவிட்டது. கரணம் தப்பினால் பீர்பால் மடியில்போய் உட்கார்ந்திருப்பேன்.

திரும்பும்போது மறக்காமல் அந்த மோர்க்காரனிடம் விசாரித்தேன். அடேய் அதில் என்னத்தைப் போட்டுத் தொலைத்திருந்தாய்?

பதில் சொன்னான். இந்தியில்தான் சொன்னான். ஆனால் புரிந்தது. அன்று எடுத்த முடிவுதான். எப்பேர்ப்பட்ட தாகமாயினும் வெளியே எதையும் வாங்கிக் குடிப்பதில்லை.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி