கோவிந்தசாமியின் நிழல் இந்த அளவுக்கு முட்டாள்தனமாக இதற்குமுன்
இருந்ததாகத் தெரியவில்லை. அது தன் எஜமானனின் உண்மையான குணத்தைக் கொண்டிருப்பதை இந்த அத்தியாயத்தில் வெளிப்படுத்திக் கொண்டுவிட்டது.
காதலில் அனைத்தும் மறக்கும்தான். ஆனால் நிழலோ தன்னுடைய காதலால் இன்னொரு காதலை முற்றிலும் மறந்துபோவது மட்டுமன்றி அந்தக் காதலிக்கு அறவே பிடிக்காத ஒரு செயலையும் செய்கிறது.
செம்மொழிப்பிரியாவின் காதலை அது வெண்பலகையில் வெளிப்படுத்திவிட்டது. அதை தனக்கான ஆயுதமாக உபயோகப்படுத்திக்கொள்ளும் அவள் வேலை முடிந்தவுடன் அதனை கழற்றிவிட்டு போகிறாள்.
நிழலின் மூலமாக பெரிய பெரிய காரியங்கள் சாதிக்க வேண்டும் என நீலவனம் வந்த சாகரிகாவின் நினைப்பில் மண் விழுந்துவிட்டது. அது மட்டுமல்ல, நிழலும் தனித்துவிடப்பட்டது. சாகரிகாவுடனோ அல்லது கோவிந்தசாமியுடனோ இனி அது சேரமுடியாது.
சூனியனின் இலக்குதான் என்ன? யாரை குறிவைத்து இதையெல்லாம் நடத்துகிறான்? சாகரிகாவையோ கோவிந்தசாமியையோ அல்லது பா.ரா.வையோ வீழ்த்துவதால் அவனுக்கென்ன லாபம்? அவன் நீல நகரத்தில் தன்னுடைய ஆட்சியை உருவாக்க இவையெல்லாம் எந்த வகையில் பயன்படும்?
இப்படி பல கேள்விகள் எனக்குள்ளே முளைக்கின்றன. ஒருவேளை லாஜிக்கெல்லாம் பார்க்காமல்தான் இதை படிக்க வேண்டுமோ? இல்லையெனில் அடுத்துவரும் அத்தியாயங்களில் இவைகளுக்கெல்லாம் விடை தெரியுமோ? படைத்தவன் பா.ரா.தான் பதில் சொல்ல வேண்டும்.