மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா

முதலில் எனக்குத் திருமணம் நடந்தது. பிறகு முதல் புத்தகம் வெளிவந்தது. அப்போதெல்லாம் நான் பகுதி நேரம் நல்லவனாகவும் இருந்ததால் போனால் போகிறதென்று என் மனைவி மெனக்கெட்டு ‘மூவர்’ தொகுதிக்கு ஒரு வெளியீட்டு விழா ஏற்பாடு செய்தாள். அக்காலத் தமிழ்ச் சூழலில் என்னைத் தவிர வேறு எவனுக்கும் விழா நடந்த மாலையிலேயே செய்தித் தாளில் புகைப்படத்துடன் செய்தி வந்திருக்க வாய்ப்பில்லை. போதாக் குறைக்கு மறுநாள் காலை பேப்பரிலும் மூன்று காலச் செய்தி. என்னவோ நோபல் பரிசே கிடைத்துவிட்ட மாதிரி. இதெல்லாம் அவள் தினசரிப் பத்திரிகையில் பணியாற்றியவள் என்பதால் சாத்தியமானது.

அதன் பிறகு 78 புத்தகங்கள் வெளியாகிவிட்டன. வேறு எந்தப் புத்தகத்துக்கும் நான் விழா வைத்ததில்லை. பதிப்பாளர்களும் அதற்கெல்லாம் மெனக்கெட்டதில்லை. அது பாட்டுக்கு வரும். விற்கும். மறு பதிப்பு வரும். விற்கும். மீண்டும் வெளியாகும். போகும். மதிப்புரைகளுக்கு அனுப்ப மாட்டேன். போட்டிகளுக்கு அனுப்ப மாட்டேன். ஆசிரியர் பிரதி என்று ஒவ்வொன்றிலும் பத்து பத்துப் பிரதிகள் எனக்குத் தரப்பட்டாலும் (என் மாணவர்கள் நீங்கலாக) யாருக்கும் புத்தகங்களை இலவசமாகத் தரமாட்டேன். படித்தாயா, எப்படி இருந்தது என்று கேட்க மாட்டேன். ஒன்றும் நஷ்டமில்லை. நன்றாகத்தான் இருக்கிறேன்.

வாழ்வில் முதல் முறையாக இப்போது என் மாணவர்களுக்காகவும் மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்காகவும் ஒரு விழா ஏற்பாடு செய்கிறேன். ஜனவரி 11ம் தேதி, புதன் கிழமை டிஸ்கவரி புக் பேலஸில் இது நடக்கிறது.

இவர்கள் எழுத்துக்குப் புதியவர்கள். ஆனால் முறைப்படி எழுதக் கற்றுக்கொண்டு எழுதுகிறவர்கள். முற்றிலும் காட்சி ஊடகங்களால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் சமூகத்தை எழுத்தாலும் தொட்டு அசைத்துப் பார்க்க முடியும் என்று விடாப்பிடியாக நம்புகிறவர்கள். இவர்களில் பலரை நான் நேரில் கண்டதில்லை. எல்லாம் ஆன்லைன் வகுப்புகளில் பார்த்ததுதான். (பத்மா, கோகிலா போன்ற சிலர் அந்த வகுப்பிலும் முகம் காட்டாமல் பொம்மை காட்டியிருக்கிறார்கள்.) முதல் முறையாக இப்போதுதான் இவர்கள் அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள். மத்தியக் கிழக்கு, சிங்கப்பூர், இலங்கை என எங்கெங்கிருந்தோ வருகிறார்கள்.

ஜூன் முதல் தேதி முதல் நீங்கள் மெட்ராஸ் பேப்பர் படிக்கிறீர்கள். ஒவ்வொரு வாரமும் இந்தக் கரங்கள் உங்களை மானசீகத்தில் தொட்டுக்கொண்டிருக்கின்றன. உடன்பட்டும் முரண்பட்டும் பாராட்டியும் விமரிசித்தும் எழுத்து வடிவில் மட்டுமே உரையாடிக்கொண்டிருந்திருக்கிறீர்கள். வாருங்கள், நாம் நேரில் சந்திக்கலாம்.

இந்த விழாவின் முதன்மை நோக்கமே வாசகர்களையும் எழுத்தாளர்களையும் நேரே கலந்துரையாட வைப்பதுதான். புத்தக வெளியீடு என்பது ஒரு நிமித்தம் மட்டுமே. அன்றைக்கு வரச் சாத்தியமுள்ள வாசக நண்பர்கள் ஒவ்வொருவரும் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

சிறப்பு விருந்தினர்கள் யாராக இருக்கும் என்றெல்லாம் சிந்திக்க அவசியமே இல்லை. என் ஆசிரியர்களுள் ஒருவர் இருப்பார். என் மாணவர்களுள் ஒருவர் இருப்பார். நான் இருப்பேன். நீங்கள் இருப்பீர்கள். போதாது?

ஜனவரி 11, புதன்கிழமை. டிஸ்கவரியில் ஒரு டிராஃபிக் ஜாம் செய்வோம். வாருங்கள்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி