மெகா சீரியல்களை யார் பார்க்கிறார்கள்?

மெகா சீரியல்கள் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளிவருகின்றன. சீரியல்களைக் கிண்டல் செய்வதும், நான் சீரியல் பார்ப்பதில்லை என்று சொல்வதும் ஒருவித மேல் தட்டு மனோபாவமாகச் சமீபகாலமாக நிலைநிறுத்தப்பட்டு வருவதைக் காண்கிறேன். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை முப்பத்து ஐந்து வயதுக்கு மேற்பட்ட பெண்களில் சுமார் எழுபது சதவீதம் பேர் சீரியல்களையே உலகமாக எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. புரியும் விதத்தில் சொல்வதென்றால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்போர் சதவீதத்துக்குச் சற்றேறக் குறைய சமமான அளவு.

சீரியல்கள் நன்றாக இல்லை என்று சொல்லப்படுவது சினிமா நன்றாக இல்லை, பத்திரிகைகள் தரம் தாழ்ந்துவிட்டன, கல்வி நிறுவனங்களின் தரம் விழுந்துவிட்டது, விலைவாசி ஏறிவிட்டது என்றெல்லாமும் சொல்லப்படுவதன் தொடர்ச்சிதான். எல்லா துறைகளிலும் நல்லதும் அல்லதும் இருக்கத்தான் செய்யும். சீரியல் துறையும் அப்படித்தான்.

2004ல் கெட்டிமேளம் என்ற மெகா தொடருக்கு எழுத ஆரம்பித்ததுதான் எனக்கு இத்துறையில் ஆரம்பம். இன்று நிறைவடைந்த வாணி ராணியுடன் சேர்த்து இதுவரை 16 மெகா தொடர்களில் நான் பங்கு பெற்றிருக்கிறேன். ஒரு குத்து மதிப்பாக இதுவரை பத்தாயிரம் எபிசோடுகள் – ஐம்பதாயிரம் காட்சிகளுக்கு எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். இவற்றுள் கெட்டி மேளம், முத்தாரம், வாணி ராணி மூன்றில் மட்டும் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை பங்கேற்றிருக்கிறேன். செல்லமே இறுதிக் காட்சி வரை எழுதினேன் என்றாலும் ஆரம்பித்தது பாதியில்தான். [சிவசங்கரியும் அப்படித்தான்.] முந்தானை முடிச்சில் சுமார் 900 எபிசோடுகள் எழுதினேன். ஆனால் பாதியில் ஆரம்பித்து, முக்கால் வாசிவரை மட்டும். இப்போது எழுதிக்கொண்டிருக்கும் கல்யாணப் பரிசிலும் முதல் ஐம்பது எபிசோடுகளுக்கு நான் இல்லை. ஆனால் அதன்பின் இன்று வரை [1400 தொடுகிறது என்று நினைக்கிறேன்] தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இந்த அனுபவம் எனக்குச் சில உண்மைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதில் முதலாவது, சீரியல்கள் ஆண்களுக்கானதல்ல. ஆண்கள் தொடராக ஒன்றைத் தொடர்ச்சியாக அமர்ந்து பார்ப்பதைப் பெரும்பாலும் விரும்புவதில்லை. அவ்வப்போது பார்ப்பார்கள். அதிலேயே ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கிக்கொண்டு அதை மட்டுமே இறுதிவரை சொல்லிக்கொண்டிருப்பார்கள். இரண்டாவது, படித்த, வேலைக்குப் போகிற பெண்கள் விடாமல் பார்ப்பார்கள். ஆனால் பார்க்கிற எதையும் பிடித்ததாகச் சொல்ல மாட்டார்கள். மூன்றாவது ஐம்பது வயதுக்கு மேற்பட்ட, ஓய்வு பெற்ற ஆண்களும் பெண்களும். இவர்களும் பிடிக்கவில்லை என்றே சொல்வார்கள். ஆனால் விடவே மாட்டார்கள். டிஆர்பி என்பது இவர்கள் தயவில் கிட்டுவதுதான். சீரியல்களை ரசித்துப் பார்ப்பது 30-50 வயதுக்கு இடைப்பட்ட, வேலைக்குப் போகாத குடும்பத் தலைவிகள் மட்டுமே. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன்னோடும் தன்னைச் சார்ந்தோரும் ஒப்பிட்டுப் பார்ப்பது இவர்களுடைய பொழுதுபோக்கு; இயல்பு.

முற்காலத்தில் ராணி முத்து போன்ற மாத நாவல்களிலும் வார இதழ்த் தொடர்கதைகளிலும் வாழ்ந்துகொண்டிருந்தவர்களான இவர்கள், கால மாற்றத்தில் சீரியல்களுக்குப் பெயர்ந்து வந்தார்கள். அந்தக் கதைகளின் மொழி, கதைக் களன்களின் லகுத் தன்மை, எளிய சஸ்பென்ஸ், பழிவாங்கும் உணர்ச்சி, குடும்ப செண்டிமெண்ட், சிறிது கண்ணீர், சிறிது சாகசம், கொஞ்சம் நேர்மறை போதனைகள், எப்போதாவது புன்னகை இவ்வளவுதான். மிகச் சமீப காலமாக, கதை கூட அநாவசியம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஒரு எபிசோட் என்பது 22-23 நிமிடங்கள் என்றால் அந்த நேரத்துக்குள் ஒரு சம்பவம் போதும்; அந்தச் சம்பவம் சுவாரசியமாக இருந்தால் போதும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. மூலக் கதையுடன் அது பொருந்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை. கதாபாத்திரங்கள் அணிந்து வரும் ஆடைகள், நகைகள், மேக்கப், அவர்கள் வசிக்கும் வீடு, பயன்படுத்தும் கார், புழங்கும் படுக்கை அறைகள், சமையல் அறைகள், அதிலுள்ள பொருள்கள் இவை இன்று முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. கதை அல்ல. திரைக்கதையோ வசனமோ அல்ல.

நாளை இந்நிலை மாறலாம். விருப்பம் வேறாகலாம். அதற்கேற்ப சீரியல்களும் வேறு தோற்றம் கொள்ளலாம். ஆனால் எளிய கதை, எளிய உணர்ச்சிகள், பொழுதுபோக்கு என்கிற ஆதார அம்சங்கள் மாற்றம் கொள்ள வாய்ப்பில்லை.

இந்தக் குறிப்பை இன்று எழுதத் தோன்றியதன் காரணம் இதுதான். இன்று ஒளிபரப்பான வாணி ராணியின் இறுதிக் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். உள்ளத்தைத் தொடும் விதமாகவெல்லாம் ஒன்றும் பிரமாதமாக இருந்திருக்காது. ஒரு கதைக்கு ஒரு முடிவு. அவ்வளவுதான். இடையில் வந்த பல கிளைக்கதைகள் அந்தரத்தில் நின்றது பற்றிச் சிலர் கவலைப்பட்டுக் கேட்டார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிந்த வினாடியில் இருந்து இந்தக் கணம் வரை தொலைபேசி அழைப்புகளும் மெசஞ்சர் அழைப்புகளும் வந்தவண்ணம் உள்ளன. அத்தனை பேரும் இன்றைய எபிசோடின் ஒரு வசனத்தைத் தவறாமல் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். ‘யாரையும் அழிக்கற உரிமை நம்ம நாட்ல எந்த சிவிலியனுக்கும் கிடையாது. முடிஞ்சா வாழவெச்சிப் பாரு. இல்லன்னா வாழ விட்டுட்டுப் போயிடு.’

இதில் என்ன இருக்கிறது? உண்மையிலேயே ஒன்றுமில்லாத, மிக எளியதொரு வசனம்தான். ஆனாலும் இதுதான் தாங்குகிறது. இதுதான் எல்லோருக்கும் நினைவில் மிஞ்சுகிறது.

என் கணிப்பு சரியென்றால், தீவிரமான, ஆர்வமுள்ள சீரியல் விரும்பிகள் யாரும் சமூக வலைத்தளங்களில் அது குறித்து எழுதுவதில்லை. எழுதுகிற யாரும் எந்த சீரியலையும் முழுக்கப் பார்த்ததில்லை.

இதை எழுதுகிற நான் இதுவரை ஒரு சீரியலையும் முழுதாகப் பார்த்ததில்லை என்பதை இங்கு பதிவு செய்கிறேன் – வாணி ராணி உள்பட.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி