மாமியும் சுண்டலும்

நவராத்திரி. கிடைத்த சான்ஸை விடாதே என்று உள்ளுணர்வு குரல் கொடுக்க, பச்சை கலர் பட்டுப்புடைவை அணிந்த குண்டு மாமி, பக்கத்து வீட்டு கொலு பொம்மைகளுக்கு எதிரே உட்கார்ந்து கர்ண கொடூரமாகப் பாட ஆரம்பிக்கிறார். ஆலாபனை, பல்லவி, அனு பல்லவி, சரணம், சிட்ட ஸ்வரம், கெட்ட ஸ்வரம் எல்லாம் போட்டு, தவறியும் சுதி சேராமல் அவர் பாடிக்கொண்டே போக, ஒரு மரியாதைக்குப் பாடுங்கள் என்று சொல்லிவிட்ட அந்தப் பாவப்பட்ட பக்கத்து வீட்டுப் பெண்மணி, என்ன செய்து உலக அழிவை நிறுத்தலாம் என்று யோசிக்கிறார்.

முப்பெரும் தேவியரை அவர் வணங்கி வேண்டியதும் புத்தியில் பல்பு எரிகிறது. அடடா, சுண்டல்!
உடனே எழுந்து சென்று நாலு கரண்டி சுண்டலை கப்பில் போட்டு எடுத்து வந்து மாமியின் எதிரே வைக்கிறார். சாப்ட்டுட்டுப் பாடுங்கோ மாமி.

அண்ட கோளங்களும் சுண்டலுக்குள் அடக்கம். நல்லதொரு சுண்டல் இன்றி நவராத்திரி நிறைவு பெறுவதில்லை. மகிஷனைக் கொல்லப்போகுமுன் தேவி, இருடா வரேன் என்று ஒரு க(ல்)ப் சோமபானம் அருந்திவிட்டுத்தான் போனாள் என்று தேவி பாகவதம் சொல்கிறது. தொட்டுக்கொள்ள அவசியம் சுண்டல்தான் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நவராத்திரிக்கு எப்படி அது வந்து சேர்ந்திருக்கும்?

அது நிற்க. நமது குண்டு மாமியின் சங்கீத சங்கடத்தை நிறுத்துவதற்குப் பக்கத்து வீட்டுப் பெண்மணி கொடுத்த சுண்டலுக்கு வருவோம்.

சுண்டலைப் பார்த்ததும் மாமி சட்டென்று பாட்டை நிறுத்திவிட்டு இரண்டு எடுத்து வாயில் போட ஆசை ஆசையாய்க் கை நீட்ட, சட்டென்று ஒரு கொண்டைக்கடலை எழுந்து, மாமியின் மூக்கில் ஒரு கும்மாங்குத்து விட்டது.

‘வாழ்நாளில் இதுவரை நூற்றுக்கணக்கான கிலோ சுண்டல் கபளீகரம் செய்த குண்டு மாமியே! உன்னை ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டுச் சாப்பிடக் கடவாய். கார்பான்ஸோ பீன், செஸி பீன், பெங்கால் க்ராம், காபூலி சானா, சனக பாப்பூ, ஷிம்ப்ரா, கடலே காலு இவற்றுக்கும் உனக்குத் தெரிந்த கொண்டைக்கடலைக்கும் என்ன சம்பந்தம்?’

இது ஏதடா வம்பாப் போச்சு என்று மாமிக்குக் கவலையாகிவிட்டது. சனியன், சாப்பிட விடாதோ?

‘ம்ஹும். விடமாட்டேன். உனக்கு செஸ்டர் கார்மனையாவது தெரியுமா? ஹவாய்க்காரன். தென்கிழக்கு ஆசிய விவசாயம் பத்தி ஆராய்ச்சி பண்ணவன். அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னாவது சொல்லு.’

மாமிக்குக் குழப்பமாகிவிட்டது. பேசுவது கொண்டைக் கடலையா? அல்லது தனக்குள்ளிருந்தே ஏதாவது குட்டிச் சாத்தான் சத்தம் கொடுக்கிறதா?

‘பதில் சொல்லுங்கள் மாமி. நான் எங்கிருந்து வந்தேன் என்று தெரியுமா? நான் பீன்ஸ் இனத்தின் பைங்கிளி என்பதாவது தெரியுமா? எனக்கு வயசு ஏழாயிரம் என்று தெரியுமா? என்னை நீ நூறு கிராம் சாப்பிட்டால் ஒரு நாளைக்கு சோறே வேண்டாம் என்பதாவது தெரியுமா? கொண்டை போட்டுக்கொள்வதால் மட்டுமே கொண்டைக்கடலை சுண்டல் சாப்பிடத் தகுதி வந்துவிட்டதாக நினைக்காதே மாமி! கொஞ்சம் சரித்திரம் தெரிந்துகொண்டு அப்புறம் சாப்பிடு’ என்று மூச்சு விடாமல் பேசிவிட்டு உட்கார்ந்தது சுண்டல்.

அந்தக் கணம் முதல் வாழ்வில் சுண்டலைத் தொடேன் என்று சபதம் செய்துவிட்டு, மேற்கொண்டு பச்சைப்புடைவை குண்டு மாமி விட்ட இடத்திலிருந்து பாட்டைத் தொடங்க, விதியை நினைத்து அழத் தொடங்கியது கொண்டைக்கடலை சுண்டல்.

எத்தனை பெரிய சரித்திரம் அதற்கு! கணக்கிட முடியாத காலம் தொடங்கியே மனிதன் கொண்டைக்கடலையைச் சாப்பிட்டிருக்கிறான். ஆனால் பயிரிடத் தொடங்கியது கி.மு. ஏழாம் நூற்றாண்டில். தாய்லாந்தில்தான் அந்த முயற்சி நடைபெற்றது. அதற்குச் சற்றேரக் குறைய சம காலத்தில் துருக்கியிலும் கொண்டைக்கடலை பயிரிட ஆரம்பித்துவிட்டார்கள். கி.மு. 3500லேயே துருக்கிப் பக்கம் பீன்ஸ் வகையைச் சேர்ந்த கொண்டைக்கடலை முளைத்து, மனிதர்கள் சாப்பிட்டிருக்கக் கூடும் என்று சொல்கிறார், மேலே பார்த்த ஆராய்ச்சியாளர் செஸ்டர்.

இத்தாலியிலும் கிரீஸிலும் தோலை உரித்துவிட்டு, பச்சைக் கொட்டைகளை மட்டும் படி படியாகத் தின்று தீர்க்கும் வழக்கம் ஆதியில் இருந்திருக்கிறது. கடலையை வறுப்பது (கடலை போடுவதல்ல.) என்னும் வழக்கத்தைத் தொடங்கியவர்கள் ரோமானியர்கள்.

இவர்கள்தான் முதல் முதலில் மண் சட்டியில் கொண்டைக் கடலையைப் போட்டு நெருப்பில் இட்டு வாட்டி, மேலுக்கு உப்பு சேர்த்து சாப்பிடும் வழக்கத்தைக் கண்டுபிடித்தது. இதில் கொஞ்சம் எண்ணெயும் சேர்த்தால் நன்றாயிருக்கும் என்று கண்டு பிடித்தவர்கள் தாய்லாந்துக்காரர்கள்.

காப்பி கண்டுபிடிக்கப்படாத காலத்தில் காப்பி மாதிரி என்னவாவது ஒரு பானம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த ஆப்பிரிக்கர்கள், கொண்டைக் கடலையைக் காயவைத்து, பொடித்து பாலில் கலந்து குடித்து அனுபவித்திருக்கிறார்கள். கிட்டத்தட்டப் பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது.

கொண்டைக் கடலை, மனித குலத்தின் ஆதி உணவுகளுள் ஒன்று. பீன்ஸ் இனத்தைச் சேர்ந்த இது கண்டுபிடிக்கப்பட்டு, இதன் சத்துகள், வல்லமைகள் தெரியவந்த பிறகுதான் அநேகமாக மனிதன் முதல் முதலில் காய்கறிகளில் உள்ள சத்துப் பொருள்கள் பற்றி ஆராயவே ஆரம்பித்திருக்கிறான்.

கொண்டைக்கடலையில் கார்போஹைட்ரெட் கொஞ்சம் ஜாஸ்தி. அறுபத்தி நாலு சதவீதம். சோற்றுப்பண்டாரங்களுக்கு மாற்று உணவாக இதனைக் கொடுக்கலாம். காரணம், அரிசியில் இல்லாத இருபத்தி மூன்று சதவீத ப்ரோட்டீன் இதில் இருப்பதுதான். தவிரவும் நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், இரும்பு போன்ற மினரல் சத்துக்களும் கொண்டைக்கடலையில் உண்டு.

மனிதன், தான் உண்ணும் உணவுகளைப் பற்றி ஆராயத் தொடங்கிய காலத்தில் கொண்டைக்கடலையைப் பார்த்து மிகவும் வியந்து போயிருக்கிறான். ஒரு சின்ன உருண்டை. அதன் தலையில் ஒரு குடுமி. உள்ளுக்குள்தான் எத்தனை சக்தி! தொடர்ந்த ஆராய்ச்சிகளில், இரண்டு விதமான கொண்டைக்கடலைகளை உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டுபிடித்தார்கள்.

வழக்கமான கருப்பு நிற, சிறு கடலை ஒன்று. வெளேரென்று செம குண்டாக இன்னொரு ரகம். இரண்டிலும் சத்து ஒன்றுதான். ஆனால் கால நிலைக்கேற்ப, மண்ணின் தன்மைக்கேற்ப இந்த இரு ரகங்களும் விளையும். வெளேர்க் கடலைக்கு காபூலி என்று பெயர். ஆப்கனிஸ்தான் இதன் அன்னை பூமி என்பதனால். மலைப் பகுதிகளில் பாத்தி கட்டி, வேலி போட்டு விதைத்துவிடுவார்கள். நாற்பதிலிருந்து ஐம்பது செண்டிமீட்டர் உயரம் வரை இந்தச் செடி முளைக்கும்.

ஆப்கனிஸ்தான் தவிர, தெற்கு ஐரோப்பாவில் பல இடங்கள், சிலி, வடக்கு ஆப்பிரிக்காவிலும் இந்த வெளேர் குண்டு கடலை உண்டு. சிலுவைப் போர் காலத்தில் வீரர்களுக்கு இந்த குண்டு வெள்ளை கொண்டைக்கடலையை வறுத்து பாக்கெட் பாக்கெட்டாகக் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள், ரோமானியர்கள். சிரியாவின் தெற்குப் பகுதியில் நடந்த ஒரு யுத்தத்தில் மரண அடி பட்டு ஒரு புதருக்குள் விழுந்த ஒரு ரோமானிய வீரன், பதினெட்டு நாள் வெறுமனே கொஞ்சம் கொஞ்சம் கொண்டைக் கடலையைச் சாப்பிட்டே உயிர் பிழைத்து எழுந்து வந்திருக்கிறான்.

இவ்வளவு சொல்லிவிட்டு சன்னா மசாலாவைப் பற்றி நாலு வார்த்தை எழுதாவிட்டால் கொண்டைக்கடலை மன்னிக்காது.

இன்றைக்கு உலகம் முழுக்க இது பிரபலமான ஓர் உணவு. ருசிக்கு ருசி, போஷாக்குக்குப் போஷாக்கு. பிரெட் சன்னா, சமோசா சென்னா, கட்லெட் சன்னா என்று கண்ட கசுமாலங்களும் சன்னா இல்லாமல் சனங்களுக்கு உள்ளே இறங்குவதில்லை.

கொண்டைக் கடலையைக் கொண்டு இப்படியொரு அதி அற்புத ருசி கொண்ட உணவைக் கண்டுபிடித்த பெருமை இந்தியர்களுக்குத்தான். இல்லை, பாகிஸ்தானியர்களுக்கே என்று அவர்கள் கொடி பிடித்தால் ஆமாம் என்று கேட்டுக்கொண்டாக வேண்டியிருக்கும்.

ஏனென்றால் சன்னா மசாலாவின் பிறப்பிடம் அன்றைய இந்திய, இன்றைய பாகிஸ்தானிய சிந்து மாகாணம்.
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் (அதெல்லாம் இல்லை ஏழாம் நூற்றாண்டு, இல்லை எட்டாம் நூற்றாண்டு என்று சில பண்டித சிரோன்மணிகள் சண்டைக்கு வருவார்கள். கண்டுகொள்ளாதீர்கள்!) இங்கே ஆண்டாள் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி, மார்கழி முப்பது நாளுக்கும் பொங்கல் சாப்பிட லைசென்ஸ் கொடுத்துக்கொண்டிருந்த சமயம், சிந்து மாகாணத்தில் சன்னா மசாலா முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு நெடுஞ்சாலையோர, பயணியர் சத்திரத்தின் சமையல்காரர் குழம்புக்குக் காய்கறி இல்லாமல், நிறைய கொண்டைக் கடலையைப் போட்டுக் கொதிக்க வைத்திருக்கிறார். கிளறிக் கிளறி அது பேஸ்ட் மாதிரி ஆகிற அளவுக்கு வேகவிட்டு, பிறகு பலான பலான மசாலா ஐட்டங்களைச் சேர்த்து என்னவோ புதிதாக முயற்சி செய்திருக்கிறார்.

தற்செயலாக அதன் ருசி அபாரமாக இருந்துவிட, என்ன பெயர் வைப்பதென்று தெரியாமல் சன்னா வித் மசலா ஐட்டம்ஸ் என்பதால் அதையே பெயராக இட்டுவிட்டார். நெடுங்காலம் இந்த உணவு பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் மட்டுமே புழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகுதான் – அவர்கள் வழியே இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சன்னா மசாலா திக்விஜயம் செய்ய ஆரம்பித்தது.

பிறகு அதே ஆங்கிலேயர்கள் மூலமாகவே இங்கிலாந்துக்கும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் சென்றது.
மத்திய ஆசியக் குடியரசுகள் என்று சொல்லப்படும் முன்னாள் சோவியத்தின் இன்னாள் உதிரி பாகங்களில் இந்த சன்னா மசாலா இன்னொரு விதமான சுவையில் அறியப்படுகிறது. அங்கே காரத்துக்கு மிளகாய் அல்லாமல்  மிளகு, சீரகம் இரண்டையும் அள்ளிப்போட்டு அரைத்துவிடும் வழக்கம் உண்டாம்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, அந்தப் பச்சைப்புடைவை மாமியிடம் கொண்டைக்கடலை கடைசியாகக் கேட்ட ஒரு கேள்வி இன்னும் மிச்சமிருக்கிறது. நவராத்திரிக்கு ஏன் கொண்டைக்கடலை சுண்டல்?

மேலும் ருசிக்க.

Share

9 comments

 • கொண்டைக்கடலை அதிகம் சாப்பிட்டா LPGக்கு கேஸ் சப்ளையரா ஆகும் வாய்ப்பு இருகிறதே அது ஏன்? ஏன்? ஏன்?

 • பிரமாதம்.

  Pixars தயாரித்த சில அருமையான டாக்குமெண்ட்ரிகளைப் பார்த்திருக்கிறேன். அது போல் மிக சுவாரசியமாக சொல்கிறீர்கள்.

 • //அதன் தலையில் ஒரு குடுமி.//

  கொண்டக்கடலையின் சிறப்புக்கு இதுதான் காரணமா?

 • சபாஷ்!அப்படி போடு!!தொடரட்டும் ருசியின் வரலாறு.சரியான எழுத்து மிகச் சரியான நபரிடம் இருந்து.வாழ்த்துக்கள் பாரா சார்.இன்று புத்தகத்தை படித்துவிட்டு தான் மத்த வேலை.

 • ஒரு குட்டி கடலைகுள்ள இம்மா விஷயம் இருக்குதா!!!!!!!

  நன்றி சார்

 • கோவையில் இருந்து திரும்பியதும் கற்றதும் பெற்றதும் ஒரு கட்டுரையை எதிர்பார்க்கின்றேன். வருகின்ற அத்தனையும் குறை அல்லது கும்மி என்பதாகத்தான் மிதந்து விருகிறது. மொத்த நிகழ்வுகளையும் எழுதுங்கள்.

  உருவாகும் ஒவ்வொரு தடங்களும் பின் தொடர்ந்து வரும் ஓட்டத்தை அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

 • நவராத்திரி அதற்குள் எப்படி வந்ததுன்னு பார்த்தேன்.:)
  கொண்டைக்கடலை மாதிரி நவராத்திரி நாயகி யார் இருக்க முடியும்.

  இவ்வளவு தகவல்களா? குசும்பன் சொல்லி இருப்பது போல இது ஒரு காஸ் ஃபாக்டரி தான்.
  அளவோட (5 ஸ்பூன்). அளவுதான் என் லிமிட்.
  அதற்கு மேல் கடபுடா:)

  நன்றாக வறுத்திருக்கிறீர்கள் பா.ரா.

 • நான் முடிவு பண்ணிட்டேன் ராகவன் சார். என் புள்ளைங்களுக்கு இனிமே கொண்டை கடலையே குடுத்து பழக்க போறேன் ஏன் தெரியுமா ? எப்படியானாலும் இன்னும் 20 வருஷத்துக்கப்புறம் அரிசியே பாக்க முடியாதாம் அப்படியா ? வயலே இருக்காதாம் !! சரியான மாற்று ஏற்பாடு கொண்ட கடல தானே !!

 • குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுபவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளுபவர்கள் கொண்டக்கடலையை முதல் நாளே நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டுவிட்டு பயிற்சிக்கு செல்லுவது வழக்கம்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter