முடிந்தது யுத்தம்; அடுத்தது என்ன?

மெஜாரிடி – மைனாரிடி, சிங்களர் – தமிழர் வேறுபாடு இனி இல்லை. தேசப்பற்றாளர்கள் – தேசத்துரோகிகள். தீர்ந்தது விஷயம்.   தமிழர்கள் இனி நிம்மதியாக வாழலாம். அச்சமில்லாமல் வாழலாம். அவர்களது சகவாழ்வுக்கு நான் பொறுப்பு.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்‌ஷே ஆற்றிய உரையில் குறிப்பிட்டது இது. இலங்கை சுதந்தரம் அடைந்த நாளாக (அப்போது மாண்புமிகு அதிபருக்கு மூன்று வயது) தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருப்பதே இதற்காகத்தான் அல்லவா? பிரபாகரன் துப்பாக்கி எடுத்ததெல்லாம் எழுபதுகளின் பிற்பகுதியில் தானே? அதற்கு முன்னால் இந்த மெஜாரிடி, மைனாரிடி பாகுபாடுகள், அடக்குமுறைகள், அத்துமீறிய குடியேற்றங்கள், இன ஒழிப்பு நடவடிக்கைகள் இல்லாதிருந்திருந்தால் பிரபாகரன் சமர்த்தாகப் படித்து ஏதாவது உத்தியோகத்துக்குப் போயிருப்பாரே? அவருக்கு முந்தைய தலைமுறையினர் அமைதியாகப் போராடிப் போராடி ஓய்ந்து போனதைப் பார்த்துவிட்டல்லவா பிரபாகரன் தலைமுறையினர் ஆயுதம் எடுத்தார்கள்? வேறு வழி தெரியாமல்தானே மக்களும் ஆதரித்தார்கள்? அதிபர் இப்படியெல்லாம் சகவாழ்வு, சுக வாழ்வு என்று பேசினால் சிங்களப் பேரினம் சும்மா இருந்துவிடுமா?

சரித்திரம் அப்படித்தான் இருக்கிறது. தமிழர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு சிறு நடவடிக்கை அரசால் எடுக்கப்பட்டாலும் அரசையே ஒழித்துக்கட்டுமளவுக்குத்தான் சிங்கள மக்களும் பவுத்தத் துறவிகளும் இலங்கையில் இதுநாள்வரை நடந்துகொண்டிருக்கிறார்கள். செல்வா – பண்டா ஒப்பந்தம், செல்வா – சிறிமாவோ ஒப்பந்தம் பற்றியெல்லாம் நாம் யுத்தம் சரணம் தொடக்க அத்தியாயங்களில் பார்த்திருக்கிறோம். எது ஒன்றும் உருப்பட்டதாக வரலாறில்லை.

இந்நிலையில் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்ட காரணத்தினாலேயே சிங்கள மக்கள் தமிழர்களைச் சொந்த சகோதரர்களாக ஏற்றுக்கொண்டுவிடுவார்கள், சம உரிமை கொடுத்துவிடுவார்கள், சகோதரத்துவம் மேலோங்கிவிடும் என்று எதிர்பார்க்கலாமா? அதிபருக்கு இது தெரியாதா? தமிழர்களுக்கு இப்போது ஆறுதலும் நம்பிக்கையும் சொல்லவேண்டியது அவசியம்தான். அதற்காகத் தமது சொந்த இன மக்களை, தேசத்தின் பெரும்பான்மை வாக்காளர்களைப் பகைத்துக்கொள்ள அவர் விரும்புவாரா? எதிர்க்கட்சிகள்தான் தமிழர்களுக்குச் சம உரிமை கொடுக்கச் சம்மதித்துவிடுவார்களா? ராஜபக்‌ஷேவுக்கே அப்படியொரு எண்ணம் இருக்குமானால், அவர் ஆட்சிக்கு வந்த உடனேயே செய்திருக்க முடியுமே? மொழி முடக்கம், கல்வி முடக்கம், வேலை வாய்ப்புகளில் முடக்கம் என்று தொடங்கி சரித்திரம் முழுதும் தமிழர்களைக் கொத்தடிமைகள் மாதிரி வைத்திருந்ததன் விளைவல்லவா இத்தனை பெரிய அவலம்?

எனில் அதிபரின் பேச்சுக்கு என்ன அர்த்தம்?

பாகுபாடு இல்லை, வித்தியாசம் இல்லை என்று சொல்வதன்மூலம் இனம் சார்ந்த அடையாளத்தை முதலில் மறைக்க விரும்புகிறார் அதிபர். இந்த அடையாள மறைப்பு அல்லது அழிப்பு நிச்சயமாக சிங்கள இனத்தவர்களுக்கு இல்லை. தமிழர்களுக்கு மட்டுமே. நீங்கள் தமிழர்கள் இல்லை, இலங்கையின் குடிமக்கள் என்று சொல்வதன்மூலம் அதிபர் திணிக்கும் அடையாள அழிப்பு நடவடிக்கையை வலுக்கட்டாயமாக ஏற்றாக வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இல்லையா? என்னதான் தனது சொற்பொழிவில் நாலு வரி அவர் தமிழில் பேசி, தனக்கு எந்த வித்தியாசமும் இல்லை என்று காட்டிக்கொண்டாலும் நோக்கம் தெளிவானது.

எதிர்த்து நின்று போராட இனி யாருமற்ற சூழலில் தமிழரின் இன அடையாளத்தை இல்லாமல் செய்வதன்மூலம் அவர்களுடைய பலத்தை மேலும் குறைக்க நினைக்கும் உத்தியாக இது கருதப்பட வாய்ப்புள்ளது.

இரண்டாவது, என் மக்களுக்கு என்ன வேண்டுமோ அதை நான் செய்வேன், வெளிநாடுகள் இனி இதில் தலையிட வேண்டாம் என்கிற மறைமுக எச்சரிக்கை. இதுவும் அவரது உரையில் வெளிப்பட்டதுதான்.

மிகவும் கவனமாக உலகத்தின் பார்வையிலிருந்து சிறுபான்மைத் தமிழர்களைத் துண்டிக்க இது ஒரு முயற்சி. எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் ஓரினம். இது முதல் வரி. எல்லோரும் என் மக்கள். இது அடுத்தது. நான் பார்த்துக்கொள்வேன், நீ தலையிடாதே என்பது மூன்றாவது.

எப்படியும் இன்னும் சில தினங்களுக்குள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிடும். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி, இழந்த வீடுகளைப் புதுப்பித்துத் தருதல், உணவு, உடைக்கான அடிப்படை வசதிகள், சாலைகள் சீரமைப்பு, குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய வசதிகளைப் புதுப்பித்தல் என்று எதிலும் குறையிருக்கப் போவதில்லை. இந்தியாகூட வரிந்துகட்டிக்கொண்டு உதவி செய்ய இப்போதே தயார்.

யுத்த நிலவரம் பார்க்க மீடியாவை உள்ளே விடாத சிங்கள அரசு, இப்போது அவசியம் கப்பல் கப்பலாகப் பத்திரிகைக்காரர்களை ஏற்றி வந்து சுற்றிக்காட்டும். சந்தேகமே இல்லை. எல்லாம் கொஞ்சநாள். பிறகு? உலகின் கவனத்திலிருந்து இலங்கை மெல்ல மெல்ல நகரத் தொடங்கியபிறகு சிறுபான்மைத் தமிழர்கள் அதே சகவாழ்வை ஆயுசுக்கும் தொடர இயலுமா? கல்வி, வேலை வாய்ப்புகளில் சிங்களர்களுக்குச் சமமான உரிமை அவர்களுக்குக் கிடைத்துவிடுமா? தமிழர் பகுதிகள், தமிழர் பகுதிகளாகவே இருக்குமா?

வாய்ப்பில்லை. வித்தியாசமே கூடாது. எல்லாம் சமம். எல்லோரும் சமம். இதன் சரியான பொருள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னைக்காட்டிலும் அதிகமான சிங்களக் குடியேற்றங்கள் இருக்கும் என்பதுதான்! இப்போது எதிர்ப்பு சக்தி என்ற ஒன்று இல்லாத நிலையில் இந்தக் குடியேற்றங்கள் இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் வாழ்வாதாரங்களை – அப்படியேதும் மிச்சமிருந்தால் ஒட்டுமொத்தமாகக் கபளீகரம் செய்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையின் தமிழர் பிரதேசங்களாகச் சொல்லப்படும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக இப்போது சுமார் பதினைந்து லட்சம் பேர் வசிக்கிறார்கள். இந்த இரு மாகாணங்கள் நீங்கலாக, மலையகத்தில் சுமார் பத்து லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். கொழும்பு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை அநேகமாக அறுபதாயிரம் இருக்கக்கூடும். இவர்களைத் தவிர தமிழ் பேசும் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 18-20 லட்சம். எப்படிப் பார்த்தாலும் இன்றைய தேதியில் உயிருடன் இருக்கும் சிறுபான்மைச் சமூகத்தினரின் எண்ணிக்கை நாற்பது, நாற்பத்தி ஐந்து லட்சத்தைத் தாண்ட வாய்ப்பில்லை.

இதில் மலையகத் தமிழர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம்களை நாம் கழித்துவிடலாம். பிரச்னையின் மையத்துக்கும் அவர்களுக்கும் பெரிய தொடர்புகள் இல்லை. அவர்களுடைய வாழ்க்கை முறை, அவர்களுடைய அரசியல், அவர்களுடைய யதார்த்தம் வேறு. அவர்களும் சிங்கள மேலாதிக்கத்துக்கு உட்பட்டு அவதிப்படுபவர்களே என்றாலும், வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்கள் அளவுக்கு அல்ல. (வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்கள் கொழும்பில் வசிப்பதென்றால் இன்றளவும் தம் பெயரை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்துகொண்டாகவேண்டும்! தங்குவதற்குச் சரியான காரணம் சொல்லவேண்டும். விசா வாங்கிக்கொண்டு வெளிநாடு போவது போலத்தான்.) தவிரவும் வேறு வேறு தளங்களில் அவர்களால் சிங்களர்களுடன் சமரசம் செய்துகொண்டுவிட முடியும். அடிபணிந்து போய்விட முடியும். அதனாலேயே வடக்குப் பகுதி, கிழக்குப் பகுதி மக்கள் அளவுக்கு மலையக மற்றும் முஸ்லிம் மக்கள் கஷ்டப்படவில்லை என்று சொல்லலாம்.

மாட்டிக்கொண்டவர்கள் வடக்கு, கிழக்குத் தமிழர்கள்தாம். கிழக்குக்கு ஒரு கருணா, பிள்ளையான்  கிடைத்ததுபோல வடக்குக்கும் எளிதில் யாராவது (அநேகமாக டக்ளஸ் தேவானந்தா!) ராஜபக்‌ஷேவுக்கு அகப்படுவார்கள். அரசின் முடிவுகளை அப்படியே செயல்படுத்தக்கூடிய ஆட்சியாளர்கள். அது பிரச்னையில்லை. ஆனால், தனி ஈழம், சுயாட்சி அதிகாரம் போன்ற விருப்பங்களுக்கு இனி வழியில்லை என்றாலும் சக வாழ்வுக்கான உத்தரவாதமாக இந்த பொம்மை ஆட்சியாளர்களால் நாளை எதைக் கொடுக்க இயலும்?

ஓர் ஐந்தாண்டு காலத்துக்குள் தமிழர் பகுதி என்று எதுவுமில்லாமல், எங்கும் சிங்களர்கள் பரவிப் படர்ந்து விட்டபிறகு அடையாள ஒழிப்பு முழுமை பெற்றுவிடுவதைத் தவிர்க்க முடியாது. இப்போதைய, எல்லோரும் சமம் என்கிற அறிவிப்பு அன்றைக்கும் இருக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இன ஒழிப்பு நடவடிக்கைகள் அப்போது மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கினால் என்னாகும்? அப்படி ஏதும் நடக்காது என்பதற்கு என்ன அல்லது யார் உத்தரவாதம்?

இலங்கையின் தேசியக்கொடிஐந்தாண்டுகள் என்பதே அபத்தம். திங்களன்று பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்னும் செய்தி வெளியான உடன் கொழும்பு வீதிகளில் மக்கள் சிங்களக் கொடி பிடித்து ஆடிப்பாடியதைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அந்தக் கொடிகளைச் சற்று உற்றுப்பார்த்தால் ஓர் உண்மை புரியும்.

அனைத்தும் இந்தக் கொண்டாட்டங்களுக்காகவே புதிதாக அச்சிடப்பட்டு அரசால் விற்பனை செய்யப்பட்ட கொடிகள். சிங்கள தேசியக் கொடி.

சிங்களக் கொடியில் மூன்று வண்ணங்கள் இருக்கும். பிரதானமான கருஞ்சிவப்பு வண்ணம், பெரும்பான்மை மக்களான சிங்களர்களைக் குறிப்பது. பச்சை வண்ணம், இலங்கையின் முஸ்லிம்களைச் சுட்டுவது. அதன் அருகே இருக்கும் செம்மஞ்சள் நிறம் தமிழர்களுக்கானது. கொடியை உருவாக்கியபோது இது சுட்டிக்காட்டப்பட்டு, விளக்கம் தரப்பட்டது. நேற்றைக்கு வரை சிங்களக் கொடி இப்படித்தான் இருந்தது.

புதிய கொடிஆனால் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார், புலிகளை ஒழித்தாகிவிட்டது என்று அறிவித்ததும் சடாரென்று உருவாக்கப்பட்ட இந்தப் புதிய கொடிகளில் மிகக் கவனமாக தமிழர்களுக்கான செம்மஞ்சள் நிறக் கோடே இல்லை. பச்சை, சிவப்பு. தீர்ந்தது விஷயம்!

அரசால் வெளியிடப்படும் தேசியக் கொடியில், கவனக்குறைவாக இது நேர்ந்திருக்கலாம் என்றெல்லாம் அபத்தமாக நினைத்துவிட முடியாது. மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையின் புதிய அத்தியாயத் தொடக்கம் இது. இந்த அபாயம் இன்னும் எங்கெங்கு கொண்டு போகுமோ என்று இப்போதே பல இலங்கைத் தமிழர்கள் அச்சம் கொண்டிருக்கிறார்கள்.

‘ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மக்கள் என்கிறார் அதிபர். ஆனால் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஓரினம் உரத்து அழக்கூடத் தெம்பில்லாமல் தேம்பிக்கிடக்கிறது. இன்னோர் இனம் இனிப்பு வழங்கி, ஆடிப்பாடிக் கொண்டாடுகிறது. எப்படி இந்த இருவரும் ஒன்றாக இருக்கமுடியும்?’ என்று என்னிடம் கேட்டார் ஓர் இலங்கைத் தமிழ் நண்பர்.

இல்லை. இது தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே இல்லை. புலிகளுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமே. தெளிவாகச் சொன்னார் ராஜபக்‌ஷே.

இருக்கலாம். ஆனால் இறந்தது மொத்தம் சுமார் முப்பதாயிரம் விடுதலைப் புலிகளும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களுமே அல்லவா? இதுநாள் வரை இறந்த அத்தனைபேருமே விடுதலைப் புலிகள்தான் என்று சொல்லிவிட முடியுமா?

வன்னிப் பகுதியில் முக்கிய இடங்களுக்கு, போரில் வெற்றி பெற உதவிய சிங்களத் தளபதிகளின் பெயர்கள் வைக்கப்படும் என்று ராஜபக்‌ஷே சொல்லியிருக்கிறார். இது திணிப்பின் இன்னொரு வடிவம். இனி புதுக்குடியிருப்பு, பொன்சேகா குடியிருப்பாகும். கரிய முள்ளிவாய்க்கால், கோத்தபய முள்ளிவாய்க்காலாகும். வடகிழக்கு மாநிலங்களே ராஜபக்‌ஷே பீடபூமியாகலாம். யார் கண்டது?

எப்படிப் பார்த்தாலும் யுத்தத்துக்குப் பிறகு தமிழர்களுக்கு நிம்மதி, சகவாழ்வு என்பதெல்லாம் தாற்காலிகக் கண் துடைப்பு சந்தோஷங்களாக மட்டுமே இருக்கும் என்று தோன்றுகிறது. இந்நிலையில் இலங்கையில் வசிக்கிற தமிழர்களும், புலம் பெயர்ந்து வாழ்கிற சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களும் இனி செய்யக்கூடியவை என்ன?

* இந்தியா உதவும் என்று இனி ஒருபோதும் எண்ணிக்கொண்டிராமல் சர்வதேச சமூகத்தின்முன் தமது கோரிக்கைகளின் நியாயத்தை அமைதியான முறையில் எடுத்துச் செல்லலாம். புலிகள் இப்போது இல்லை என்னும் நிலையில் அரசியல் ரீதியிலான – இரு தரப்புக்கும் நியாயமான தீர்வுகளை நோக்கி இலங்கை அரசைச் செலுத்த இலங்கைத் தமிழர்பால் அக்கறைகொண்ட மேற்கு நாடுகள் உதவ முன்வரக்கூடும்.

* இலங்கை அகதிகளைப் பெருமளவு ஆதரித்து, வாழவைத்துக்கொண்டிருக்கும் கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலிய அரசுகளைத் தமிழர்கள் தமக்கான குறைந்தபட்ச நியாயங்களுக்காகப் பேசவைக்க முயற்சி மேற்கொள்ளலாம். தனி ஈழம் என்றெல்லாம் பேசாமல், நிம்மதியான, சுதந்தரமான, அடிப்படை உரிமைகளுக்குப் பிரச்னையில்லாத வாழ்வுக்கான உத்தரவாதங்களை ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளின்மூலம் கோரிப் பெறலாம். புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

* தங்களுக்கான சரியான அரசியல் பிரதிநிதிகளைத் தேடிப்பிடித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இலங்கைப் பிரச்னையை முழுக்கப் புரியவைக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும். ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை இனத்திலிருந்து வந்து அதிபராகியிருக்கும் ஒபாமாவுக்கு ஈழத் தமிழர்களின் பிரச்னை புரியாமல் போக வாய்ப்பில்லை. இலங்கை விவகாரத்தில் இதுநாள்வரை அமெரிக்கா தலையிடாதிருப்பதற்கான ஒரே காரணம், அதற்கு அங்கே லாபம் ஒன்றுமில்லை என்பதுதான். ஆனால் ஒபாமா மனிதாபிமான அடிப்படையில் ஏதேனும் செய்யக்கூடும்.

[குமுதம் ரிப்போர்ட்டர்]
Share

7 comments

 • //இப்போதைய, எல்லோரும் சமம் என்கிற அறிவிப்பு அன்றைக்கும் இருக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.//

  Poor assumption! India would act. USA is watching! 😉

  Also those tamed guys moved abroad would re surge.

  Yugoslavia model makes sense.

 • இலங்கை தமிழர் பற்றி நீங்கள் சொல்வது எதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் நாம் வேறு கோணத்தில் நோக்கலாமே, நம் இந்தியா போன்று அனைவரும் சிறிலங்காவினர் என்ற உணர்வை வளர்த்துவிட்டால் அவர்களுள் சிங்களர் , தமிழர் என்ற பிரிவு குறைக்கப்படுமே. சிங்களர் , தமிழர் என்று தனி ஒதுக்கீடு , பாகுபாடு என்றில்லாமல் ஒரு சமுதாயம் வளர்ந்தால் இரு பிரிவினருக்கும் நண்மை தானே

  நன்றி,
  ராம்குமரன்

 • சிங்கள பேரினவாதத்தின் இயற்கையான போக்கை மிக தெளிவாக எழுதியிருக்கும் பதிவு…

  அங்கே கடைசி தமிழனின் அடையாளத்தை ஒழித்து விட்டு… மொத்த இனமும் அடிமையாக்குவதே சிங்கள பேரினவாத அரசின் நோக்கம்… இந்த உயரிய நோக்கத்திற்கு துணை போன இந்தியா, சீனா,
  பாகிஸ்தான் மற்றும் உலக சமுதாயம்… சிங்கள பாசிசத்திற்கு எப்போதும் ஆதரவாக இருக்கும்…

  உங்களின் நேர்மையான பதிவிற்கு நன்றி….

 • இனியும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், இந்த பாவம் இந்தியாவை சும்மா விடாது. வட நாட்டவருக்கு என்ன தெரியும், தமிழர்கள் பிரச்சினை பற்றி? வெளிநாட்டில் இருந்து வந்த அன்டோனியோவிற்கு என்ன தெரியும், ஈழப்பிரச்சினை பற்றி? இனியாவது அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அரசியல்வாதிகளை நம்பினது போதும். கால் காசிற்கு தேற மாட்டார்கள்.

  ஒரு இலட்சம் மக்களின் உயிர் என்பது சாதாரணம் இல்லை. ஆனால், இவ்வளவு பேர் மாண்டபிறகும், எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல், தமிழனை டாஸ்மாக்கிற்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும் இந்த திராவிஷக் கட்சிகள் இனியாவது சிந்துக்குமா, அல்லது தமிழர்களை சிந்திக்கவாவது விடுமா?

  மானங்கெட்ட பொழப்பு…

 • Dear Rahavan

  I read all your books one by one. I request you to just write Tamil peoples life styles (like Madhan’s vanthargal & ventrargal).

 • posted by Ramesh on 05.24.09 at 7:36 PM

  posted by ramkumaran on 05.25.09 at 9:17 AM

  Ramesh & Ramkumaran what is your openion now. Pranab went to srilanka immediately after Fonseko spoke some thing.

  But from Jan to May how many requests has been made, was he ready to hear that.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி