பொலிக! பொலிக! ராமானுஜர்-1000

பொலிக! பொலிக! 45

திருமாலையாண்டான் நெடுநேரம் வைத்த கண் வாங்காமல் ராமானுஜரையே பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பேசத் தோன்றவில்லை. உலகில் உதிக்கும் ஒவ்வொரு உயிரும் இன்னொன்றின்மீது தன்னையறியாமல் உறவும் தொடர்பும் கொண்டுவிடுகின்றன. அது கண்ணுக்குத் தெரியாத நூலிழையில் கட்டப்படுகிற பந்தம். பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள், தெரிந்தவர்கள், அக்கம்பக்கத்தார் வரை புத்தியில் நிலைக்கிறது உறவு. பிறவற்றை எண்ணிப் பார்ப்பதில்லை பெரும்பாலும். உலகை வீடாகவும் பரம புருஷனைக் குடும்பத் தலைவனாகவும் எண்ண முடிந்துவிட்டால் புழு பூச்சிகளில் தொடங்கி சகலமானவற்றுடனும் நமக்குள்ள உறவு புரிந்துவிடுகிறது. அது வசுதேவ குடும்பம். வையமெங்கும் உறவுகள்.

ஏகலைவன் கூட எட்டி நின்று வித்தை கற்றவன். ஆனால் ஆளவந்தார் பரமபதம் அடைந்த தருணத்தில்தானே ராமானுஜர் திருவரங்கத்துக்கே வந்தார்? ஆனால் சட்டென்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டார். ‘நான் அவருக்கு ஏகலைவன்.’

என்ன கற்றிருப்பார்? எப்படிக் கற்றிருப்பார்? வேதப் பிரவாக நுட்பங்களை மனம் கடத்துமா? திருவாய்மொழியை, சொல்லிக் கொடுத்தாலே அதில் பூரண ஞானம் எய்துவது சிரமம். இவர் அள்ளிக்கொண்டிருக்கிறாரே அவரிடம்? எப்படி நிகழ்ந்திருக்கும்?

பிரமிப்பில் வாயடைத்து நின்றார் திருமாலையாண்டான்.

‘சுவாமி, அடியேன் காஞ்சியில் இருந்தபோது திருக்கச்சி நம்பிகளை தினசரி சந்திப்பேன். துயரமோ, மகிழ்ச்சியோ எனக்குள் நிகழ்கிற அனைத்தையும் அவரது திருவடிகளில்தான் அவ்வப்போது சேர்த்து வைப்பேன். துறவு கொள்வது என்ற வைராக்கியம் பிறந்தபோது, மறுகணமே அவரைத் தேடித்தான் ஓடினேன். எனக்குச் சில வினாக்கள் அப்போது இருந்தன. அதைக்காட்டிலும் பாரமாக வீட்டில் என் பார்யாள் இருந்தாள்…’

ராமானுஜர் தன்னை மறந்து நடந்த சம்பவத்தை விவரித்துக்கொண்டிருந்தார். திருமாலையாண்டான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

‘அவள் ஆசார்ய அபசாரம் செய்துவிட்டாள் சுவாமி. என்னால் தாங்க முடியவில்லை அதை. விட்டுவிடுவோம் என்ற தீர்மானம் வந்தபோது என் மனத்தில் இருந்த ஆறு வினாக்களுக்கு விடை வேண்டியிருந்தது. திருக்கச்சி நம்பிகள்தாம் அவற்றைப் பேரருளாளனிடம் எடுத்துச் சொல்லி என் குழப்பத்தை நீக்கும் பதில்களைப் பெற்றுத் தந்தார்.’

‘அப்படியா? இது எனக்குத் தெரியாதே. பெரிய நம்பிகூட சொல்லவில்லை.’

‘நான் தெரிவித்ததில்லை சுவாமி. இத்தனைக்கும் என் மனத்தில் இருந்த வினாக்களை நான் திருக்கச்சி நம்பியிடம் சொல்லவில்லை. எனக்கு இருக்கும் சந்தேகங்களுக்குப் பேரருளாளனிடம் பதில் பெற்றுத் தாருங்கள் என்றுதான் சொன்னேன்.’

‘பிரமாதம்! கேட்காத கேள்விக்குக் கிடைத்த பதில்கள். அப்படித்தானே?’

‘ஆனால் நினைத்த கேள்விகள். மனத்தை உறுத்திக்கொண்டிருந்த கேள்விகள்.’

‘நல்லது. அருளாளன் என்ன சொல்லி அனுப்பினான் நம்பியிடம்?’

‘நானே பரம்பொருள் என்பது முதல் பதில். ஜீவன் வேறு, பரமாத்மா வேறு என்பது இரண்டாவது வினாவுக்கான பதில். அவனைச் சரணடைவதே முக்திக்கு மார்க்கம் என்பது மூன்றாவது. பகவானைச் சரணடைந்தவர்கள் அந்திமக் காலத்தில் அவனை நினைக்கவேண்டிய தேவையில்லை என்பது நான்காவது. அவர்கள் சரீரத்தை விடுத்துக் கிளம்புகிறபோது மோட்சம் நிச்சயம் என்பது ஐந்தாவது…’

உணர்ச்சி மேலிட்ட ராமானுஜரின் கண்களில் இருந்து கரகரவென நீர் வழிந்துகொண்டிருந்தது.

‘எம்பெருமான் திருவருள் உமக்கு என்றும் உண்டு உடையவரே. அந்த ஆறாவது வினாவுக்கான விடையும் கிடைத்துவிட்டதா?’

‘ஆம் சுவாமி. யாதவப் பிரகாசரிடம் மாணாக்கனாக இருந்து வந்தேன். என்ன காரணத்தாலோ என்னால் அவரோடு ஒத்துப் போக முடியவில்லை. மாயாவாதத்தை என் மனம் ஏற்க மறுத்தது. திருக்கச்சி நம்பியைச் சரணடைந்தபோது, நான் உனக்கு குருவல்ல என்று சொல்லிவிட்டார். அப்படியானால் யார்தாம் என்னை ஆட்கொள்வார் என்று அறிந்துகொள்ள விரும்பினேன். அதற்கான பதிலைத்தான் பேரருளாளன் சொன்னான்.’

‘என்ன பதில்? தயவுசெய்து சொல்லுங்கள்.’

‘பெரிய நம்பியை குருவாகக் கொள்ளச் சொல்லி அப்போதுதான் எனக்கு உத்தரவானது.’

வியப்பில் வாய் பிளந்து நின்றார் திருமாலையாண்டான்.

‘இப்போது புரிகிறது எனக்கு. நீர் ஆளவந்தாருக்கு ஏகலைவனான சூட்சுமம் இதுதானா? சரிதான். அது பேரருளாளன் சித்தம் சுவாமி! பெரிய நம்பி சம்மந்தம் வாய்த்துவிட்டதென்றால் ஆளவந்தார் சம்மந்தமும் சேர்ந்து வாய்த்ததாகத்தான் அர்த்தம்.’

‘இது என் பிறவிப் பயன் சுவாமி! ஆளவந்தாருக்கு நான் ஏகலைவன் என்றாலும் அவரது அத்யந்த சீடர்களான நான்கு பேரிடம் நான் பாடம் கேட்டுவிட்டேன். அறியா வயதில் பெரிய திருமலை நம்பிகள். அதன்பின் பெரிய நம்பி. அவர் மூலம் திருக்கோட்டியூர் நம்பி. இன்று தாங்கள். ஒரு குரு கிடைக்காமல் ஏங்கிக்கொண்டிருந்தவனுக்குத் தகுதி மிக்க நான்கு பேர் வாய்த்தது அவனருள் அன்றி வேறில்லை.’

‘நான்கல்ல ராமானுஜரே! ஐந்தென்று திருத்திக்கொள்ளுங்கள்.’

‘அதென்ன?’

‘ஆம். நீங்கள் ஐந்தாவதாகச் சென்று பயிலவேண்டியவர் ஒருத்தர் இருக்கிறார். அவர் திருவரங்கப் பெருமாள் அரையர். ஆசாரியரான ஆளவந்தாரின் திருமகன். நாங்கள் ஐந்து பேரும் ஆளவந்தாரிடம் ஒன்றாகப் பாடம் கேட்டோம். குருவானவர் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்புக் கல்வியை ஆசீர்வதித்தார்.’

‘ஆஹா! அத்தனையும் என்னை வந்து சேரும்படி அரங்கன் விதித்திருக்கிறானா? இது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!’

‘இதைத்தான் திருக்கோட்டியூர் நம்பி என்னிடம் வேறு விதமாகச் சொன்னார். இளவரசனுக்கு கிரீடம் சூடும் வயது வருகிறவரை மன்னனானவன் தமது மந்திரிகளிடம் பொறுப்பைக் கொடுத்து, இளவரசனைப் பதவியேற்கத் தயார் செய்யும்படிச் சொல்லிவிட்டுக் காலமாவது போல, உம்மைத் தயாரிக்கச் சொல்லி மௌனமாக எங்களுக்கு உத்தரவு கொடுத்துவிட்டு ஆளவந்தார் கண்மூடிவிட்டார்!’

நெகிழ்ந்து போய் அவர் பாதம் பணிந்தார் ராமானுஜர்.

‘எழுந்திரும் ராமானுஜரே. திருவரங்கப் பெருமாள் அரையரிடம் ஆசார்ய நிஷ்டை என்னும் பொக்கிஷம் ஒன்று உள்ளது. அத்தனை எளிதாக அவர் அதை யாருக்கும் சொல்லித்தந்துவிட மாட்டார். அவர் மனத்துக்கு உகந்தாற்போல நீங்கள் அவருக்குப் பணிவிடைகள் செய்து அன்புக்குப் பாத்திரமானால்தான் உமக்கு அது கிடைக்கும்.’

‘இனி எனக்கு இதைக்காட்டிலும் வேறு பணியில்லை சுவாமி. இன்றே அரையர் பெருமான் இல்லத்துக்குச் செல்கிறேன்!’

‘இன்னொரு விஷயம். திருக்கோட்டியூர் நம்பி தமது குமாரனையும் குமாரத்தியையும் தங்களிடம் மாணாக்கர்களாகச் சேர்த்துவிட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.’

‘ஆம் சுவாமி. ஞான சூரியனின் பிள்ளைகள் மட்டும் வேறெப்படி இருப்பார்கள்? எதைச் சொன்னாலும் உடனே பற்றிக்கொண்டுவிடுகிறார்கள்.’

‘நல்லது உடையவரே. என் மகனையும் உம்மிடமே அனுப்பி வைக்கிறேன். அவனுக்கும் நீரே ஆசாரியராக இருந்து அனுக்கிரகிக்க வேணும்.’

கரம் கூப்பி ஏற்றுக்கொண்டார் ராமானுஜர்.

(தொடரும்)

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி