பொலிக! பொலிக! ராமானுஜர்-1000

பொலிக! பொலிக! 44

சேரன் மடத்துக்குத் திருமாலையாண்டான் வந்திருந்தார். ஆளவந்தாரின் ஐம்பெரும் சீடர்களுள் ஒருவர். திருக்கோட்டியூர் நம்பி சொல்லி, ராமானுஜருக்குத் திருவாய்மொழி வகுப்பெடுக்க ஒப்புக்கொண்ட பெரியவர்.

ராமானுஜருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. திருக்கோட்டியூர் நம்பியின் ஆசியும் அணுக்கமும் கிடைத்ததே ஒரு வரமென்றால் அவர்மூலம் ஆளவந்தாரின் மற்றொரு சீடரிடம் பாடம் கேட்கக் கிடைத்த வாய்ப்பை அவர் கிடைத்தற்கரிய பெரும் வாய்ப்பாகவே கருதினார்.

‘உம்மைப் பற்றி நம்பி ரொம்பப் பிரமாதமாக நிறைய சொன்னார். நாம் பாடத்தை ஆரம்பிக்கலாமா?’

‘காத்திருக்கிறேன் சுவாமி!’

திருவாய்மொழிப் பாடம் தொடங்கியது.

ராமானுஜர் தம்மை மிகத் தெளிவாக இருவேறு நபர்களாக்கிக் கொண்டிருந்தார். தாம் குருவாக இருந்து தமது சீடர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறபோது அவர் பேசிப் பழகும் விதம் வேறு. அதில் அன்பும் கம்பீரமும் கலந்திருக்கும். இதுவே, அவர் மாணாக்கராகி, ஆசிரியரின் தாள் பணிந்து பயிலும் நேரங்களில் அவரது வடிவம் வேறாகியிருக்கும். பணிவுக்கும் பக்திக்கும் மட்டுமே அங்கு இடம் உண்டு. மனத்தின் வாயிலை விரியத் திறந்து வைத்து ஆசிரியரின் ஞானத்தின் பூரணத்தை அப்படியே ஏந்தி எடுக்கப் பார்ப்பார்.

அது உபநிஷத நிலை. உபநிஷத் என்றால் பிரம்ம வித்யை. முழுமையின் மூலப் பொருளை அடைவது. உப என்ற சொல்லுக்கு குருவின் அருகில் செல்லுதல் என்று பொருள். நி என்றால் எந்தச் சந்தேகமும் இன்றி அறிவை அடைதல். ஷத் என்ற மூன்றாவது சொல்லுக்கு நாசம் செய்தல் என்று பொருள்.

இதென்ன பயங்கரம்? குருவின் அருகே சென்று சந்தேகமின்றி அறிவை அடைந்து எதை நாசம் செய்வது?

அது துயரங்களின் நாசம்.

ஒரு குருவிடம் எவ்வளவோ கற்க முடியும். ஆனால் சற்றும் சந்தேகமின்றி எதைக் கற்றால் துயரங்களை நாசமடையச் செய்ய முடியுமோ அதைக் கற்பதைத்தான் உபநிஷத் என்பார்கள். பிரம்ம வித்யை என்பது அதுதான்.

உபநிஷத் என்பது ஒரு பிரதியல்ல. அது ஒரு நிலை. பெரிய நம்பியிடம் பாடம் கேட்டபோது அப்படித்தான். திருக்கோட்டியூர் நம்பியிடம் கேட்டபோதும் அப்படித்தான். சொல்லித்தருபவர் கற்பகத் தரு. ஏந்திக்கொள்பவரின் தரம் சரியாக இருந்தால் போதுமானது. ராமானுஜர் நிகரற்ற பாண்டம். கொட்டக்கொட்டக் கொள்ளளவு விரிந்துக்கொண்டே செல்லும் பேரற்புதம்.

திருமாலையாண்டானுக்கு அது பெரும் மகிழ்ச்சியளித்தது. ஒரு சரியான மாணவரைத்தான் திருக்கோட்டியூர் நம்பி தமக்கு அளித்திருக்கிறார் என்கிற திருப்தி. அவரும் உற்சாகமாகத் திருவாய்மொழிப் பாசுரங்களைச் சொல்லி விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.

ஆனால் அந்த மகிழ்ச்சி அவருக்கு வெகுநாள் நீடிக்கவில்லை. சட்டென்று ஒருநாள் பாடம் நின்றது.

அன்றைக்குத் திருமாலையாண்டான், திருவாய்மொழியின் இரண்டாவது பத்தில், ‘அறியாக் காலத்துள்ளே’ என்று தொடங்கும் பாசுரத்தை ஆரம்பித்தார்.

“அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியாமா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறள் ஆய், நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய், எனது ஆவியுள் கலந்தே”

என்பது பாசுரம்.

‘பொருள் சொல்கிறேன் கேளும். அறியாப் பருவத்தில் என்னை அன்பாக உன் பக்கத்தில் வைத்திருந்தாய். பிறகு புத்தி தெளியும்போது சம்சார சாகரத்தில் தள்ளி வஞ்சித்துவிட்டாயே என்று வருத்தப்படுகிறார் ஆழ்வார்.’

ராமானுஜர் திடுக்கிட்டுப் பார்த்தார். ஒரு கணம் அவர் மனத்துக்குள் யாதவப் பிரகாசர் வந்து போனார்.

‘சொன்னது விளங்கிற்றா உடையவரே?’

‘மன்னிக்கவேண்டும் சுவாமி. பொருள் சற்றுப் பிழையாக உள்ளது போலப் படுகிறது.’

‘பிழையா? இதிலா?’

‘ஆம் சுவாமி. இந்தப் பாசுரத்துக்கு முன்னாலும் பின்னாலும் வருகிற பாசுரங்கள் அனைத்தும் எம்பெருமானின் பெருங்கருணையைப் போற்றிப் புகழ்வது போல வருகின்றன. சட்டென்று இந்த ஒரு பாசுரத்தில் எப்படி ஆழ்வார் குறை சொல்லுவார்?’

‘புரியவில்லையே?’

‘சம்சார சாகரத்தில் அவன் தள்ளினான் என்று எடுத்துக்கொள்ள முடியாது சுவாமி. நான் அறியாமையில் பிழைபுரிந்துவிட்டேன்; அப்போதும் நீ வந்து என்னை ஆட்கொண்டாய் என்பதாகத்தான் இருக்க வேண்டும்.’

திருமாலையாண்டான் எழுந்துவிட்டார்.

‘ஓஹோ, உமக்குத் தோன்றும் நூதன விளக்கமெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது, புரிகிறதா? என் குரு ஆளவந்தார் எனக்கு என்ன விளக்கம் சொன்னாரோ அது மட்டும்தான் எனக்குச் சரி. வருகிறேன்.’ என்று சொல்லிவிட்டுப் போயேவிட்டார்.

ராமானுஜருக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. ஆனால் கோபித்துக்கொண்டு போய்விட்டவரை என்ன செய்ய முடியும்?

விஷயம் திருக்கோட்டியூர் நம்பிக்கு எட்டியது. யோசித்தார். சட்டென்று புறப்பட்டு திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்தார்.

‘என்ன பிரச்னை சுவாமி? ராமானுஜருக்கு நீங்கள் திருவாய்மொழிப் பாடம் சொல்லித்தருவதில்லையா?’

‘ஆம். அவர் பாசுரங்களுக்கு வழக்கில் இல்லாத அர்த்தங்களைச் சொல்லுகிறார். எனக்கு அது உவப்பாக இல்லை. நமது ஆசாரியர் ஆளவந்தாருக்கு மேல் ஒருத்தர் வியாக்கியானம் தர முடியுமோ?’

‘அப்படியா? நீங்கள் என்ன சொன்னீர்கள், அதற்கு ராமானுஜர் என்ன புதிய வியாக்கியானம் சொன்னார் என்று சொல்லுங்கள்?’

திருமாலையாண்டான் சொன்னார். அமைதியாகக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி புன்னகை செய்தார்.

‘ஆண்டான் சுவாமிகளே! ராமானுஜர் சொன்ன இந்த விளக்கத்தை நமது ஆசாரியர் ஆளவந்தார் சொல்ல நானே கேட்டிருக்கிறேன்!’

திடுக்கிட்டுப் போனார் திருமாலையாண்டான். அப்படியா, அப்படியா என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

‘எம்பெருமானார் சாதாரணத் துறவியல்ல சுவாமி. ஜகத்குருவான கிருஷ்ண பரமாத்மா, சாந்திபீனி முனிவரிடம் பாடம் கேட்டது போலத்தான் ராமானுஜர் உம்மிடம் பாடம் கேட்பது. புரிகிறதா?’

ஒரு கணம்தான். கண் மூடித் திறந்த திருமாலையாண்டானுக்கு அது புரிந்துவிட்டது.

‘நம்மிடம் அவர் பயிலவேண்டும் என்பது நியமிக்கப்பட்டது. அதனால் இது நிகழ்கிறது. வாரும். மீண்டும் வகுப்பைத் தொடங்கியாகவேண்டும்.’

திருக்கோட்டியூர் நம்பியே அவரை ராமானுஜரிடம் அழைத்துச் சென்றார்.

மீண்டும் பாடங்கள் ஆரம்பமாயின. மீண்டும் அர்த்த பேதங்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. ஆனால் இம்முறை ஆண்டான் கோபித்துக்கொள்ளவில்லை.

‘ராமானுஜரே, உம்மை ஒன்று கேட்கிறேன். பாசுரங்களுக்கு நீர் சொல்லும் சில விளக்கங்கள், எனக்குப் புதிதாக உள்ளன. உமக்கு இவை எங்கிருந்து கிடைத்தன?’

‘சுவாமி, ஆளவந்தார் சுவாமிகள் இப்பாசுரங்களுக்கு எவ்வாறு வியாக்கியானம் செய்திருப்பார் என்று எண்ணிப் பார்ப்பேன். அப்போது என் மனத்தில் உதிப்பதைத்தான் உடனே சொல்லிவிடுகிறேன்.’

வியந்துபோனார் திருமாலையாண்டான்.

‘உண்மையாகவா? ஆனால், நீங்கள் ஆளவந்தாருடன் ஒருமுறை கூடப் பேசியது கிடையாது.’

‘ஆம் சுவாமி. ஆனால் என் மானசீகத்தில் நான் அவருக்கு ஏகலைவன்.’

(தொடரும்)

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி