புதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்

தொலைக்காட்சி நெடுந்தொடர் கட்டுமானத்தில் சமீபகாலமாக நிகழ்ந்துவரும் மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். அந்தத் துறையில் இருப்பவன் என்பதால் அல்ல. எழுதுபவனாக நான் இங்கு வேறு ஆள். அது என் வருமானம் சார்ந்தது. ஆனால் என்றைக்கும் ஒரு ரசிகனாக மட்டுமே சீரியல்களையும் சினிமாக்களையும் தனிப்பட்ட முறையில் அணுக விரும்புவேன். தொழிலுக்கு அப்பால் நான் எழுத்தில் செய்ய விரும்பும் பணிகளுக்கு இடையூறு இருக்கக்கூடாது என்றுதான் திரைக்கதைப் பக்கம் நான் போவதில்லை. வசன எழுத்து கூடுதல் உடலுழைப்பைக் கோருவது என்றாலும் இதுதான் எனக்கு சௌகரியமாக உள்ளது. நேரம் முற்றிலும் என் வசமாக இருப்பது முக்கியக் காரணம். ஒப்பீட்டளவில் இதில் விவாதங்களுக்கும் சந்திப்புகளுக்கும் குறைவான நேரமே தரவேண்டியிருக்கும் என்பது இன்னொரு காரணம். திரைக்கதைக்குள் புகுந்துவிட்டால் நாவல் எழுத இயலாது என்பது அனைத்திலும் முக்கியக் காரணம்.

ஆனால் சமீப காலமாக செம்பருத்தி, நேற்றுத் தொடங்கிய சத்யா, சிறிது காலமாக வந்துகொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற நெடுந்தொடர்களில் திரைக்கதை அமைப்பின் நுணுக்கமான மாற்றங்கள் என்னைக் கவர்கின்றன. பரபரப்பாகக் காட்சிகளை நகர்த்தும் அவசரம் இப்போது யாரிடமும் இல்லை. எளிய, matter of fact காட்சிகளைக் கூட நிறுத்தி நிதானமாகச் சொல்லும் வழக்கம் உருவாகியிருக்கிறது.

சத்யா என்ற துடிப்பான இளம் பெண்ணின் பாத்திரப் படைப்பை இன்று அறிமுகம் செய்தார்கள். படித்தவள். லோன் பாக்கிக்காக வண்டிகளை மடக்கிப் பிடித்து எடுத்துச் செல்பவள், விளையாட்டுத்தனம் மிக்கவள், நிறைய ஆண் நண்பர்கள், பிராந்தியவாசிகள் அத்தனை பேருக்கும் விருப்பமான பெண், வீட்டில் அக்காவின்மீது பாசம் கொண்டவள், அவளது விருப்பத்துக்கு விரோதமான திருமண ஏற்பாட்டை சாமர்த்தியமாகத் தடுத்து நிறுத்துபவள், பாட்டி மீது பேரன்பு கொண்டவள், தடாலடிப் பேர்வழி, ஆனாலும் அம்மாவுக்கு பயப்படுபவள் அல்லது அப்படி நடிப்பவள் – இவை அனைத்தும் இன்றைய இருபது நிமிடங்களில் தெளிவாக்கப்பட்டுவிட்டன. பின்னணியில் அவளது நடுத்தரக் குடும்பம், எம்மாதிரியான சுற்றுச் சூழலில் வசிக்கிறாள் என்பதும் பதிவு செய்யப்பட்டுவிட்டன. கதாநாயகன் வந்துவிட்டான். மோதலில் தொடங்கப் போகிறது என்பது தெரிந்துவிட்டது. அனைத்துமே ஒரு மெல்லிய நகைச்சுவை இழையில் கோக்கப்பட்டிருந்தது.

புராதன முறையில் மேற்சொன்ன விஷயங்கள் அனைத்தும் வசனங்களில் நகருவதே தொலைக்காட்சித் தொடர்களின் வழக்கம். ஆனால் காட்சி ரூபமாக இவை ஒரு எபிசோடுக்குள் அடைக்கப்பட்டிருப்பதும், அது அலுப்பூட்டாத விதத்தில் படமாக்கப்பட்டிருப்பதும் பிடித்திருந்தது.

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸில் ஒரு புருஷன் பெண்டாட்டிக்கு இடையிலான ஊடலைத் தீர்த்து வைப்பதற்காக வீட்டில் அவர்களைத் தனியே இருக்கவிட்டு, அவனது சகோதரர்களும் அவரவர் மனைவியும் கோயிலுக்குச் சென்று படுத்துக்கொள்கிறார்கள். கோயிலுக்குப் போன இடத்தில் ஒரு ஜோடி பிணக்கு கொண்டு உறங்காதிருக்கிறது. வீட்டில் அவர்கள் தனியே விட்டுவந்த ஜோடி சேருகிறதா, இங்கெ புதிய பிணக்கில் சிக்கிய ஜோடி மேலும் விலகவிருக்கிறதா என்ற கேள்வியுடன் நகர்ந்திருக்கிறது.

நாடகங்கள்தாம். ஆனால் வாழ்வுடன் நெருங்கச் செய்யும் முயற்சிகள் தொடர்களில் ஆரம்பமாகியிருக்கின்றன என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஒப்பீட்டளவில் நான் இதுநாள் வரை பார்த்து வந்த செம்பருத்தி முற்று முழுதான நாடகப் பாணி திரைக்கதை அமைப்பில் நகர்வதுதான். பார்த்த கண் நகராத விதத்தில் ஒரு கதாநாயகி அவர்களுக்குச் சிக்கியது மட்டுமே அதன் மிகப்பெரும் பலம். அநேகமாக இது பழைய பாணி நெடுந்தொடர்களின் கடைசிக் கண்ணியாக இருக்கக்கூடும்.

ஒரு விஷயம். ஒரு நெடுந்தொடர் ஒருபோதும் சினிமாவைப் போல இருக்க இயலாது. நடைமுறைச் சிக்கல்கள் இதில் அதிகம். ஆனால் சினிமாவுக்கும் நாடகத்துக்கும் இடைப்பட்ட ஒரு வெளி இருப்பதை இன்று வரத் தொடங்கியிருக்கும் தொடர்கள் சுட்டுகின்றன. நெடுந்தொடர்கள் சார்ந்த கிண்டல் கேலிகளும் வெறுப்பு கலந்த விமரிசனங்களும் இனி மெல்ல மெல்ல இல்லாது போகும் என்று தோன்றியது.

இம்மாற்றங்களின் பின்னணியில் அயராது உழைக்கும் புதிய தலைமுறையினரை மனமார வரவேற்கிறேன். மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி