ரஜினி: நடிகரும் தலைவரும்

என் நண்பர்களில் சிலர் தீவிரமான ரஜினி ரசிகர்கள். அவரைத் தலைவர் என்று குறிப்பிடுபவர்கள். பன்னெடுங்காலமாக அவர் அரசியலுக்கு வருவார், வருவார் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள். ஒவ்வொரு முறை ரஜினி கூட்டம் கூட்டி விரைவில் முடிவெடுப்பேன் என்று சொல்லும்போதும் என்னமோ திட்டமிருக்கு என்று சொல்வார்கள். கேலி கிண்டல்களை விலக்கி, இம்மனநிலையைப் புரிந்துகொள்ள விரும்புகிறேன்.
ரஜினி ஒரு நடிகர் என்பதைவிட, ஸ்டைல் மூலமாக லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர். அதுவும் ஒரு திறமைதான். எல்லோருக்கும் எளிதில் கைவந்துவிடுவதில்லை. 1996ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் கலைஞர்ஜி, மூப்பனார்ஜி என்று அவர் சொன்னதில் இருந்து ‘ரஜினி வாய்ஸ்’ என்று ஒரு பேசு பொருள் உண்டானது. அவ்வப்போது ஏதாவது சொல்வார். தமது திரைப்படங்களில் அரசியல் சார்ந்து ஒரு வரி, ஒன்றரை வரி வசனம் வைப்பார். அதையே சிரித்து மழுப்பியும் விடுவார். பட வெளியீடுகளின்போது விரைவில் தாம் அரசியலுக்கு வரப் போவதாக அறிவிப்பார். பிறகு இமயமலைக்குச் சென்றுவிடுவார். திரும்பி வந்ததும் அடுத்தப் பட வேலைகளை ஆரம்பிப்பார். இப்போதுகூட டிசம்பரில் அவரது அடுத்தப் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவிருப்பதாக ஒரு தகவல் கேள்விப்பட்டேன். அவரது வயதில் வேறு யாரும் இந்தளவு தொழிலில் தீவிரமாகவும் நேர்மையாகவும் ஆர்வத்துடனும் இருக்க முடியாது. ஒரு திரைப்பட ரசிகனாக எனக்கு இது போதுமானதாக உள்ளது. ஆனால் அவரது ரசிகர்கள் ஏன் அவர் அரசியலுக்கு வர விரும்புகிறார்கள்?
எனக்குத் தோன்றும் எளிய காரணம், இந்த விருப்பத்தின் பின்னணியில் ஒரு சிறு தாழ்வு மனப்பான்மை உள்ளது. விஜயகாந்த், சரத்குமார், கமல் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்துவிட்டார்கள். தேவையோ இல்லையோ. வெற்றியோ இல்லையோ, சினிமாவில் கொடி நாட்டியவர்களுக்கு ஒரு சொந்தக் கட்சி என்பது ஒரு வாழ்தகைக் குறியீடு (status symbol – தமிழ்ச் சொல்: நன்றி – மகுடேசுவரன்) என்று அவர்கள் எண்ணிவிட்டார்கள். பணக்காரர்கள் என்றால் கார், பங்களா இருந்தே ஆகவேண்டும் என்பதைப் போல. சினிமாவில் ஒன்றும் செய்ய முடியாத சீமான்கூட தனிக் கட்சி தொடங்கி மாநிலமெங்கும் அறிந்தவராகிப் போனார். எங்கே நாளை விஜய், சூர்யா போன்றவர்களும் கட்சி தொடங்கிவிடுவார்களோ, அதற்குள்ளாகவேனும் முந்திக்கொண்டுவிட வேண்டும் என்ற ரசிகர்களின் பதற்றம்தான் பிரச்னையின் அடிப்படை என்று கருதுகிறேன். ஆனால் இது தேவையே இல்லாத பதற்றம். திரைத்துறையில் ரஜினியின் இடம் இன்னொருவர் நெருங்க இயலாதது. அவர் அங்கேயே நிரந்தர சூப்பர் ஸ்டாராக இறுதிவரை இருக்க முடியும். அவர் வயதில் சிவாஜி, என்.டி.ஆர், விஷ்ணுவர்த்தனெல்லாம் திரையில் பார்க்க பயங்கரமாகிவிட்டார்கள். ரஜினி வெறுமனே முடிக்கு மை பூசினால் போதும். இளமை திரும்பிவிடுகிறது. அப்படி இருக்கையில், அவரை அங்கேயே நிம்மதியாகப் பணியாற்ற விடலாம். முன்சொன்ன மனப்பான்மைப் பிரச்னைதான் தடுக்கிறது.
ரஜினியின் படங்கள் சமீப காலமாக போரடிக்கின்றன என்பது உண்மைதான். அதற்குக் காரணம் அவர் அல்ல. அவர் தேர்ந்தெடுக்கும் இயக்குநர்கள். எஸ்பி முத்துராமனில் இருந்து கேஎஸ் ரவிகுமார் வரையிலான வெகுஜன திரைப்பட விற்பன்னர்களின் படங்களில் நடித்துக்கொண்டிருந்த வரை அவர் நிகரற்ற வெற்றிகளின் உரிமையாளராகவே இருந்திருக்கிறார். அவரது பரீட்சார்த்த முயற்சிகளை அவரது ரசிகர்களேதான் தோல்விக்குள்ளாக்குகிறார்கள். அவர்களே இப்போது அரசியல் பரீட்சைக்குத் தயாராகச் சொல்வது நியாயமில்லை. தமது ஆராதனைக்குரிய தலைவனை கேலிப் பொருளாக்க விரும்புவது சரியான மனநிலையல்ல. இது ஒரு கூட்டுக் கருத்தாகத் திரண்டெழுந்து அவரை சஞ்சலப்பட வைக்கும் அளவுக்கு ஊடுருவியிருக்கிறது. அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னால்தான் படம் ஓடும் என்று எண்ணும் எல்லைக்குக் கொண்டுபோயிருக்கிறது. இதைக் கலைஞனின் வீழ்ச்சி என்று எப்படிச் சொல்ல முடியும்? கலைஞன் தனது படைப்பு வெல்லவேண்டும் என்றுதான் விரும்புவான். அதற்காகவே பாடுபடுவான். எனவே இது ரசிகரின் வீழ்ச்சி மட்டும்தான்.
ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி வற்புறுத்துவது எனக்கு சரியாகப் படவில்லை. மாறாக முன்பு செய்ததைப் போல நல்ல கேளிக்கைப் படங்களை வழங்கச் சொல்லிக் கேட்கலாம். தனது ஒவ்வொரு துளி வியர்வையும் ரசிகர்களுக்குத்தான் என்று சொல்லியிருக்கிறார். அரசியல் வேண்டாம், மீண்டும் உற்சாகமளிக்கும் படங்களில் நடியுங்கள் என்று அந்த ரசிகர்கள் கேட்டால் மாட்டேன் என்றா சொல்வார்?
சிந்திக்க வேண்டியது ரஜினி அல்ல. அவரது ரசிகர்கள்தாம்.
Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading