மீண்டும் தாலிபன்
இன்று மாலை நான்கு மணிக்கு #bynge-வில் வெளியாகத் தொடங்கும். ISISக்குப் பிறகு நேற்று வரை அரசியல் எழுதாதிருந்தேன். இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு. அதெல்லாம் என் தனிப்பட்ட விவகாரம். ஆனால் நூற்றுக் கணக்கான வாசகர்கள் தொடர்ந்து இது குறித்துக் கேட்டுக்கொண்டே இருந்ததை நீங்கள் இங்கே வெளியாகும் கமெண்ட்களிலேயே பார்த்திருக்கலாம். தினமும் மின்னஞ்சல்கள். சந்திக்க நேரும் போதெல்லாம் விசாரிப்புகள். அவர்களுக்கெல்லாம் இந்தத் தொடர் வரப் போகிறது என்று அறிவித்ததும் எவ்வளவு மகிழ்ச்சி, எவ்வளவு எதிர்பார்ப்பு, எத்தனை எத்தனை ஆரவாரம்! இந்த அன்புக்கு நான் வேறென்ன செய்ய முடியும், சிறப்பாக எழுதுவதைத் தவிர?
ஆப்கனிஸ்தானில் மீண்டும் வந்திருக்கும் தாலிபன், பழைய ஓமர் காலத்து தாலிபன் அல்ல. மத முரட்டுத்தனத்துக்கு அப்பால் அரசியல் சூழ்ச்சிகளும் கற்றுத் தேர்ந்து வந்திருக்கும் புத்தம் புதிய பதிப்பு. 2001ல் அமெரிக்கா, தாலிபன்களை ஒழித்துவிட்டதாக அறிவித்துவிட்டு ஆப்கன் மறு கட்டுமானப் பணியில் கவனம் செலுத்தப் போவதாகச் சொன்ன பிறகு அதே மண்ணில் அவர்கள் கண்ணெதிரிலேயே பிறந்து வளர்ந்து இன்று ராட்சத சக்தியாக வளர்ந்து நிற்கிறார்கள். எப்படி இது அவர்களுக்கு சாத்தியமானது என்பதை இந்தத் தொடர் விளக்கும்.
அத்தியாயத் தொடக்கத்துக்கு முன்னால் ஒரு சிறிய அறிமுகக் கட்டுரை தந்திருக்கிறேன். அது பழைய தாலிபன் காலத்து சரித்திரத்தைச் சுருக்கமாக நினைவுபடுத்தும். என்னுடைய தாலிபன் புத்தகம் படிக்காதவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்த நேரத்தில் இப்படி ஒரு தொடரை எழுதலாம் என்ற யோசனை எனக்கு வரக் காரணம், என்னுடைய நீண்ட நாள் வாசகரும் நண்பருமான ஜாஃபர் அஹமது. கொழும்பில் வசிக்கும் அவரை ஒரே ஒரு முறை சென்னை புத்தகக் காட்சியில் சந்தித்திருக்கிறேன். அவ்வளவுதான். ஆனால், எப்போது எந்த தேசத்தில் என்ன விவகாரம் வெடித்தாலும் உடனே என்னை அழைத்துப் பேசுவார். குறிப்பிட்ட விஷயத்தில் என் கருத்து என்னவென்று கேட்பார். நான் ஏன் அதைப் பற்றி எழுதக் கூடாது என்று ஆதங்கப்படுவார். நிலமெல்லாம் ரத்தம், ஆயில் ரேகைக்கெல்லாம் பாகம் 2 எழுதச் சொல்லி நீண்ட நெடுங்காலமாக என்னை வற்புறுத்திக்கொண்டிருப்பவர்.
எவ்வளவோ தீவிர வாசகர்கள், இப்படி தினமும் விசாரிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எதனாலோ ஜாஃபர் எனக்குச் சிறிது விசேடம். வாசிப்பில், வெளிப்பாட்டில் அவருக்குள்ள கூருணர்வு காரணமாயிருக்கலாம். எனவே, இந்தத் தொடர் அவருக்குக் கடமைப்படுகிறது.
வாசக நண்பர்கள் இன்று முதல் நாள்தோறும் #bynge-வில் தினசரி மாலை நான்கு மணிக்கு இந்தத் தொடரைப் படிக்கலாம். உங்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும் கேளுங்கள். பதில் சொல்வேன். தகவலை உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். தொடர்ந்து உரையாடலாம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.