போரும் பரபரப்பும்

ஹமாஸ்-இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது இருபது யூ ட்யூப் சானல்களில் இருந்தும், அநேகமாக அனைத்து செய்தி டிவிக்களில் இருந்தும் அது குறித்துப் பேசுவதற்கு அழைத்தார்கள். தனிப் பேட்டி, வல்லுநர்களுடன் கலந்து பேசுவது, விவாதங்கள் எனப் பலவிதமான நிகழ்ச்சி அழைப்புகள். ஒரு டிவிக்காரர்கள், போர் முடியும்வரை தினசரி பத்து நிமிடங்கள் அவர்களுடைய காலை நிகழ்ச்சியில் ஓரங்கமாகப் போரினைக் குறித்துப் பேசச் சொன்னார்கள். இதில் எனக்குச் சிறிது வியப்பளித்த அழைப்பு, இரண்டு ஆங்கில டிவி சானல்களில் இருந்து அழைத்தது. நீங்கள் யாரென்று தெரியாது, உங்கள் புத்தகம் படித்ததில்லை; ஆனால் இந்த சப்ஜெக்டில் நீங்கள் சரியாகப் பேசுவீர்கள் என்று தமிழ்நாட்டில் உள்ள மீடியா நண்பர்கள் சொன்னதால் அழைக்கிறோம் என்று வெளிப்படையாகச் சொன்னார்கள்.

அத்தனை அழைப்புகளையும் அன்போடு நிராகரித்தேன். ஒரே காரணம்தான். ஒரு பத்திரிகையாளனாகப் போர் நடக்கும் களத்தில் நேரடியாக நில்லாமல் போரினைக் குறித்துப் பேசுவது தவறு. இது என் பிரத்தியேக இதழியல் ஒழுக்கம். ஆனால் போர் முற்றிலும் நின்ற பிறகு நடந்த அனைத்தையும் அலசி ஆராய்ந்து பேசுவதென்றால் சரி என்பேன்.

இக்காரணத்தைச் சொன்னபோது சிலர், உக்ரைன் போர் நடக்கும்போது அது குறித்து எழுதினீர்களே என்றார்கள். நீங்கள் நான் எழுதியதைப் படித்தீர்களா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. உக்ரைன் மட்டுமல்ல. முன்னர் ஆப்கனிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தபோது எழுதியிருக்கிறேன். இராக் மீதான படையெடுப்பின்போதும் எழுதியிருக்கிறேன். இப்போதுகூட இந்து தமிழ் திசையில் கணை ஏவு காலம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஆனால் கவனியுங்கள். இவை எதுவுமே நடந்துகொண்டிருக்கும் போரினைப் பற்றியவை அல்ல. பண்டைய சரித்திரம் மட்டுமே.

போர் என்பது ஒரு காரணி. பல்வேறு நிலங்களின் அரசியலையும் வரலாற்றையும் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கையையும் பேசுவதற்குப் போர்க்காலங்களில்தான் நமது ஊடகங்கள் இடம் தருகின்றன. ஒன்றுமே நடக்காத நாள்களில் நாம் உலக அரசியல், வரலாறு பேசுவதைப் பொதுவாக விரும்புவதில்லை.

எனக்கு இந்த அனுபவமும் உண்டு. தமிழ்நாட்டின் மிகப் பெரிய பத்திரிகை ஒன்றிலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் அழைத்தார்கள். நீங்கள் முன்னர் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடர்களைப் போல எங்களுக்கு ஒரு தொடர் வேண்டும், எழுத முடியுமா என்று கேட்டார்கள். அப்போது ஹமாஸ் ஒரு போரைத் தொடங்கும் என்பதற்கான அறிகுறி கூட வந்திருக்கவில்லை. ஆப்கனிஸ்தானில் போர்க்காலம் முடிந்து தாலிபன் ஆட்சிக்கு வந்துவிட்டிருந்தது. இராக்கில் அமைதி போல ஒன்று நிலவ ஆரம்பித்திருந்தது. அனைத்திலும் விசேடம், மத்தியக் கிழக்கின் பெரும் துயரமாக உருப்பெற்றுக்கொண்டிருந்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பெருமளவு ஒடுக்கப்பட்டு இராக், சிரியா பிராந்தியங்களில் அழிவு வேகம் மட்டுப்பட ஆரம்பித்திருந்தது. இலங்கையில்கூடப் பொருளாதாரச் சரிவுகளைச் சிறிது இழுத்துப் பிடிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

பரபரப்புக்கு எந்த சாத்தியமும் இல்லாத அச்சூழலில் அந்தப் பத்திரிகை என்னைத் தொடர் எழுதக் கேட்டபோது, தொடர்ச்சியான உள்நாட்டு யுத்தங்களால் சீரழிந்து போன சிரியாவின் பண்டைய வரலாற்றை எழுதலாம் என்று சொன்னேன். சிரியாவுக்கு மிக வளமான சரித்திரப் பின்னணி உண்டு. பல்வேறு மதங்கள், இனக் குழுக்களின் அரசியல் எப்போதும் இருந்தாலும் வலுவான கலாசார பலத்தினால் பல நூற்றாண்டு காலம் பிராந்தியத்தின் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக இருந்து வந்திருக்கிறது.

ஆனால் அந்தப் பத்திரிகை இந்த யோசனையை ஏற்கத் தயங்கியது. நன்றாக இருக்கும்; ஆனால் பரபரப்பாக இருக்காதே என்றார்கள். வேறொரு யோசனையைக் குறிப்பிட்டு, அதனை எழுதக் கேட்டார்கள். அது பரபரப்பாக இருக்கும். ஆனால் நன்றாக இராது. எனவே இன்னொரு சமயம் பார்த்துக்கொள்ளலாம் என்று வந்துவிட்டேன்.

ஒரு போர் என்பது எவ்வளவு பெரிய அவலம் என்பதையும் எத்தனை லட்சம் பேரின் துயரம் என்பதையும் ஈழத்தில் நடந்ததை நெருக்கமாக நின்று நாம் கவனித்திருக்கிறோம். ஆனால் அது குறித்த உணர்ச்சி அறவேயில்லாமல் டெல் அவிவ் நகத்து விடுதியின் பால்கனியில் நின்றுகொண்டு நேரடி ரிப்போர்ட் செய்தாலும் கேள்வியில்லாமல் வாய் பிளந்து பார்க்கத் தயாராக இருக்கிறோம். எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் அப்படியொரு போர்க்கள வருணனை செய்ய என்னால் முடியாது.

நான் எழுதுவது சரித்திரம் மட்டுமே. அதுவுமே முறையான சரித்திரம் அல்ல. சரித்திரத்தின் சில புள்ளிகளைத் தொட்டுக் காட்டி, சமகால நடப்பினைக் கேள்விக்குள்ளாக்கும் எளிய பணியை மட்டுமே செய்கிறேன். நிலமெல்லாம் ரத்தம் வெளியானபோது பாலஸ்தீன் பிரச்னை என்றால் என்னவென்றே இப்போதுதான் தெரிந்துகொண்டோம் என்று என் கையைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்கப் பேசியவர்கள் பலர். இன்று கணை ஏவு காலம் வெளியாகும்போதும் இதே விதமான எதிர்வினைகள் வருகின்றன. இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு வாசிக்கத் தொடங்கிய தலைமுறைக்குச் சரித்திரத்தின் முக்கியத்துவத்தைப் புகட்டுவதன் மூலம் நிகழ்காலப் போர் அரசியல் அவலங்களை அவர்களே சரியாகப் புரிந்துகொள்ள மறைமுகமாக உதவுவது ஒன்றே இப்பணியில் என் நோக்கம்.

கடந்த வாரம் என் அலுவலகத்துக்கு அருகே உள்ள ஒரு டீக்கடையில் ஓர் உதவி இயக்குநரைத் தற்செயலாகச் சந்தித்தேன். இந்துவில் இந்தத் தொடரை வாசித்து வருவதாகச் சொன்னவர், சட்டென்று உணர்ச்சிவசப்பட்டவராக, ‘ஹமாஸ்தான் சார் ஆரம்பிச்சிது. அதுல டவுட் இல்ல. ஆனா ஏன் அவன் அப்படி செஞ்சான்னு இத படிக்க ஆரம்பிச்சப்பறம்தான் சார் புரியுது’ என்றார்.

தொடக்கம் முதல் என்னுடைய அரசியல் வரலாற்று ஆக்கங்களின் அடிப்படை இது ஒன்றுதான். தொடங்கும்போது இருந்த நோக்கம் இன்றுவரை தடம் மாறவில்லை என்பதே இப்பணியில் எனக்குக் கிடைக்கும் நிறைவு.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!