இது வேறு அது வேறு

ஒரு விடுதலை இயக்கத்துக்கும் தீவிரவாத இயக்கத்துக்கும் என்ன வேறுபாடு?

மேலோட்டமான பார்வையில் இரண்டும் ஒரே மாதிரியான தோற்றத்தையே கொண்டிருக்கும். சப்பாத்தியும் புல்காவும் போல. ஊத்தப்பமும் செட் தோசையும் போல. ஆனால் இரண்டும் ஒன்றல்ல.

கண்ணுக்குத் தெரியாத தொலைவில் ஒரு லட்சியம். அதை அடைவதற்கு ஆயுத வழியே சரி என்கிற தீர்மானம். அந்தத் தீர்மானத்துக்கு வந்து சேர்ந்ததன் பின்னணியில் ஒரு ரத்த சரித்திரம்.

அரசுகள் கடுமையாக எதிர்க்கும்; ஆனால் மக்களின் ஆதரவு இருக்கும். இயக்கம் நடைபெற மக்கள் பணம் தருவார்கள். வெளிநாடுகளில் இருந்து திருட்டு வழியில் ஆயுதங்கள் வரும். ஆதரவாளர்கள் உள்ள நாடுகளில் நிதி வசூல் நடக்கும். அரசியல் கொலைகள் செய்வார்கள். கொலைகள் நியாயப்படுத்தப்படும். பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவார்கள். அதற்கும் ஒரு காரணம் சொல்லப்படும். குற்றங்களுக்குப் பொறுப்பேற்பார்கள். ஆனால் நீதிமன்ற விசாரணை போன்ற சம்பிரதாயங்களுக்கு உடன்படமாட்டார்கள். கூடுமானவரை கைதாவதைத் தவிர்க்கவே முயற்சி செய்வார்கள்.

இன்னும் பலவற்றை அடுக்க முடியும். ஆனால், இரண்டுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. விடுதலை இயக்கங்கள் எப்போதாவது, எந்த நாட்டிலாவது ஒருசில முறை வெற்றியடையும். தீவிரவாத இயக்கங்கள் தோற்று மட்டுமே போகும்.

இக்காலக்கட்டத்தில் நாளிதழ்களும் இதர ஊடகங்களும் எந்த இயக்கத்தைப் போராளி இயக்கம் என்றும் எதனைத் தீவிரவாத இயக்கம் என்றும் குறிப்பிடுகின்றன என்பதில் திட்டவட்டமான அரசியல் கலந்துவிடுகிறது. இந்து தமிழ் திசையில் நான் எழுதிக்கொண்டிருக்கும் கணை ஏவு காலம் தொடரைப் படிப்பவர்களால் இதனைப் புரிந்துகொள்ள முடியும். என்னுடைய அத்தியாயங்களில் ஹமாஸை ஒரு தீவிரவாத இயக்கமாக நான் முன்வைத்ததில்லை. அது ஒரு விடுதலை இயக்கம். ஆனால் மிகக் கவனமாக ஒவ்வொரு நாளும் அத்தியாயத்துடன் இணைத்துப் பிரசுரிக்கப்படும் புகைப்படக் குறிப்பில் அது ஒரு தீவிரவாத இயக்கமாக மட்டுமே சித்திரிக்கப்படும்.

தினமும் காலை கண் விழித்ததும் நான் புன்னகை செய்துகொள்ள இது ஒரு சந்தர்ப்பம் என்ற அளவோடு இதனைக் கடந்துவிடுவேன். என்னை எப்படி மாற்ற முடியாதோ அப்படித்தான் ஊடகங்களையும் மாற்ற இயலாது.

எண்ணிப் பாருங்கள். இந்திய சுதந்தரப் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் சுபாஷ் சந்திரபோஸ் ஒரு தீவிரவாதி. பால கங்காதர திலகர் ஒரு தீவிரவாதி. பகத் சிங், சுகதேவ் முதல் இங்கே வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி வரை எத்தனையோ பேர் தீவிரவாதிகள். வங்காளத்தில் இருந்தவரை அர்விந்த் கோஷ் ஒரு தீவிரவாதி. பாண்டிச்சேரிக்கு வந்த பிறகு அவர் ஒரு மகான்.

ஆனால் இந்தியா சுதந்தரம் பெற்றது. அதற்கான போராட்டத்தை காந்தி ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். அவர் தீவிரவாதியல்ல என்று அத்தனை பேரும் சொல்வார்கள். எண்ணிப் பார்த்தால் வன்முறை ஒன்றுதான் அவரிடம் இல்லையே தவிர மற்ற அனைத்து விதங்களிலும் அவரளவு தீவிரம் காத்தவர்கள் உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது. நோக்கத்தில், செயல்பாட்டில் தீவிரமின்றி எந்தப் பெருஞ்செயலும் வெற்றி பெறாது. தீவிரம் என்பது ஆயுதம்தானா என்பது மட்டும்தான் இங்கே வினா.

சரி. பிரச்னை, ஆயுதம் தானே தவிர கொள்கையல்ல என்று இதனைக் கொள்ளலாமா? அதிலும் சிக்கல். லெனின், ஸ்டாலின், டிராஸ்ட்கி போன்ற ரஷ்யப் புரட்சியாளர்களை நாம் தீவிரவாதி என்று சொல்வதில்லை. இன்றல்ல. 1917லேயே அப்படி யாரும் குறிப்பிட்டதில்லை. ரஷ்யப் புரட்சி என்பது அமைதிப் புரட்சியா? நிச்சயமாக இல்லை. எனில் க்யூபாவில் நடந்தது என்ன? வியட்நாம்? சே குவேராவைத் தீவிரவாதி என்று ஒருவரென்றால் ஒருவர்கூடச் சொன்னதில்லை. அவர் புரட்சியாளர். போராளி. அவர் மட்டும் அப்படி என்ன செய்தார்?

சிக்கல், நமது புரிதலில் உள்ளது.

ஒரு குண்டு வெடித்து நூறு பேர் இறந்தால் ஐயோ என்று மனம் பதறும். அப்பாவி மக்களைக் கொன்றுவிட்டார்களே என்று குமுறுவோம். கொலைக்குக் காரணமானவர்களைத் தீவிரவாதிகள் என்று சொல்லிவிடுவதில் எந்தச் சிக்கலும் இராது. இதனை ஓர் அரசே செய்யும்போது தீவிரவாதிகளைத்தான் நாங்கள் குறி வைக்கிறோம், அவர்கள் பொது மக்களோடு கலந்து இருப்பதால் அவர்களும் சேர்ந்து பாதிக்கப்பட்டுவிடுகிறார்கள் என்று சொல்லிவிட முடிகிறது.

நாம் என்ன செய்கிறோம்? ஹமாஸ் தீவிரவாத இயக்கத்துக்கும் இஸ்ரேல் அரசுக்கும் நடக்கும் யுத்தம் என்று சொல்லிவிடுகிறோம். இந்த இடத்தில் ஓர் அரசே தீவிரவாத இயக்கம் போலத்தான் செயல்படுகிறது என்பதைச் சிந்திக்கத் தவறிவிடுகிறோம்.

அரசு என்னும் அமைப்பு தருகிற பலமும் வசதிகளும் அப்படிப்பட்டவை. இருக்கட்டும். ஒரு விடுதலை இயக்கத்தையும் தீவிரவாத இயக்கத்தையும் வேறுபடுத்தும் காரணிகள் எவை?

1. விடுதலை இயக்கம் என்பது தேச எல்லைகளுக்கு உட்பட்டது. எந்த மண்ணின் (உண்மையான) பிரச்னைக்காக அவர்கள் போராட நினைக்கிறார்களோ, அதைத்தான் இறுதி வரை செய்வார்கள். அவசர ஆத்திரத்துக்குக் கூட அந்நிய நாட்டின் அரசியலுக்குள் நுழைய விரும்ப மாட்டார்கள். அங்கே குழப்பம் விளைவிக்க மாட்டார்கள்.

2. விடுதலை இயக்கங்கள் தமது செலவுக்காக மக்களிடம் பணம் வசூலிப்பது உண்டுதான். பல நாடுகளில் கட்டாய வசூலும் நடைபெறுவது. வழக்கமே. ஆனால் இத்தகைய இயக்கங்கள் எக்காரணம் கொண்டும் போதைக் கடத்தல், ஆள் கடத்தி மிரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடாது. உல்ஃபா தொடங்கி, நமது வடகிழக்கு மாநில இயக்கங்கள் அனைத்தும் தீவிரவாத இயக்கங்களாக மட்டுமே தேங்கிப் போனது இதனால்தான். இயக்கம் நடைபெறப் பணம் அவசியம்தான். ஆனால் பணம் வரும் வழி என்பது அதனினும் முக்கியம்.

3. விடுதலை இயக்கங்கள் கட்டாய ஆள் சேர்ப்பு செய்யாது. தம்மைத் தற்காத்துக்கொள்ளப் பொது மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்த மாட்டார்கள். மாறாக, பொது மக்கள் தாமே விரும்பி முன்வந்து இயக்கத்தவர்களைக் காப்பாற்ற உயிரைக் கொடுப்பார்கள். அது நாள்பட்ட நம்பிக்கையின் விளைவு.

தொண்ணூறுகளின் இறுதியில் ஹமாஸின் தற்கொலைப் படையில் சேருவதற்குப் பல பெண்கள் தன்னிச்சையாக முன்வந்தபோது, ஹமாஸ் கமாண்டர்கள் அவர்களைக் கிட்டே சேர்க்காதீர்கள் என்று இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு ஓடிப் போகத்தான் பார்த்திருக்கிறார்கள். அன்றைய ஹமாஸ் தலைவர் ஷேக் அகமது யாசின், ‘பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் திருப்பித் தாக்கும் உரிமை உண்டு. இதில் ஆண் என்ன, பெண் என்ன? விருப்பப்பட்டு வருவோரை நிராகரித்து அனுப்பாதீர்கள்’ என்று சொன்னார். ஹமாஸில் பெண்கள் பிரிவு என்பதே அதன் பிறகு உருவானதுதான்.

4. விடுதலை இயக்கங்களின் நோக்கம், இறுதிவரை திசை மாறாது. பெரிய சமரசங்கள் இருக்காது. பேச்சுவார்த்தைகள், வரையறுக்கப்பட்ட ஆட்சி அதிகார வாய்ப்புகள் உள்ளிட்ட பிற சலுகைகள் அவர்களை சலனமடைய வைக்காது. தானாகக் கிடைக்கும் எந்த உதவியையும், வசதி வாய்ப்புகளையும் மறுக்காமல் ஏற்பார்கள். எதிரியிடமிருந்தேகூட உதவி கிடைத்தால் பெறத் தயங்க மாட்டார்கள். ஆனால் அதற்காகக் கொள்கையை விட்டுத்தர விரும்ப மாட்டார்கள். பெற்ற உதவியைக் கொண்டு, கொடுத்தவரையே அழிக்கவும் அவர்களுடைய சித்தாந்தம் இடம் தரும். இயக்கம் மொத்தமும் கூண்டோடு அழியும்வரை போராடிக்கொண்டுதான் இருப்பார்களே தவிர, ஓய்வு பெற்ற முன்னாள் போராளிகளாக மாட்டார்கள்.

தீவிரவாத இயக்கங்கள் என்பவையும் தொடக்கத்தில் விடுதலை இயக்கங்களாகத்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கும். ஒரு நல்ல கொள்கை, சரியான இலட்சியம், நேர்மையான அணுகுமுறை எல்லாம் இருக்கும். ஆயுத வழியை விடுங்கள். அதுதான் அவர்களுக்கு அடிப்படை. ஆனால் காலப்போக்கில் இவர்கள் பணம், பதவி, புகழ் உள்ளிட்ட காரணிகளால் களவாடப்பட்டுவிடுவார்கள்.

சமீபத்தில் ஒரு நீயா நானாவில் ‘கெத்து காட்டுவது’ குறித்துச் சில பொறுக்கி இளைஞர்கள் பேசியதைப் பார்த்தேன். பொது இடங்களில் ஆரவாரமாக ஒரு கலாட்டாவில் ஈடுபடுவதன் மூலம் பிராந்தியவாசிகளின் பயம் கலந்த மரியாதை கிடைப்பதைப் பெரிய விஷயமாக அதில் சிலர் குறிப்பிட்டார்கள். இதே பயம் கலந்த மரியாதை, கப்பத் தொகையுடன் பெரிய அளவில் கிடைக்கத் தொடங்கி, அதை ரசிக்கவும் ஆரம்பிக்கும்போது விடுதலை இயக்கங்கள் தரம் தாழ்ந்து, தீவிரவாத இயக்கங்களாகிவிடும். ‘கெத்து’ காட்டுவதற்காகவே வன்முறைச் செயல்களில் ஈடுபட ஆரம்பிப்பார்கள். பிறகு வன்முறை மட்டுமே அவர்களது பிழைப்பாகிப் போகும்.

உண்மையான விடுதலை இயக்கங்கள் அப்படிப்பட்டவை அல்ல. தங்கள் நோக்கம் நிறைவேறுவதற்கு எந்த வழி சரியானதென்று தோன்றினாலும் அதைச் செய்து பார்க்கவே விரும்புவார்கள். ஃபத்தா, ஹமாஸ், ஹிஸ்பொல்லா போன்ற இயக்கங்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற அரசியலையும் பரிசீலித்துப் பார்த்தது போல.

என்ன பிரச்னை என்றால், அந்த வழிப் பாதை தொண்ணூற்றொன்பது சதவீதம் அவர்களுக்கு ஒத்துவராமல் போய்விடுகிறது. மீண்டும் ஆயுதமேந்திவிடுகிறார்கள். அந்தந்த நிலத்தின் அரசியலே அவர்களை அங்கே கொண்டு சேர்க்கிறது.

இருக்கும்போதும் இறந்த பிறகும் ஒசாமா பின் லேடனை ஏன் நம்மால் வில்லனாகவே பார்க்க முடிந்தது என்பதையும், இருக்கும்போதும் இறந்த பின்பும் ஷேக் அகமது யாசின், யாசிர் அர்ஃபாத் போன்றோரை சுதந்தரப் போராட்ட வீரர்களாகவே பார்க்கிறோம் என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரிந்துவிடும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி