சலம் – எடிட்டிங்

சலம் எடிட்டிங் பணியை இன்று ஆரம்பிக்கிறேன். தோராயமாகத் தொண்ணூறாயிரம் சொற்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். இன்னும் ஒரே கோப்பாக மாற்றவில்லை என்பதால் சரியான அளவு தெரியவில்லை. யதியைவிட அளவில் சிறியதுதான். இருபது முதல் முப்பது நாள்களுக்குள் முடிக்க வேண்டும் என்பது திட்டம்.

ஒரு நீர்நிலை இல்லாமல் போவதற்கான இயற்கை மற்றும் இயற்கை சாராத காரணங்களை இன்று நாம் அறிவோம். வறண்ட பாலாறு, வறண்ட வைகையெல்லாம் நாம் பார்த்துப் பழகியவை. ஆனால், ஒரு நதி பூமிக்குள் ஓடித் தன்னை மறைத்துக்கொண்டதாக நிலைத்துவிட்ட தொன்மக் குறிப்பின் வசீகரமே என்னை இதன்பால் இழுத்துப் பொருத்தியது.

சரஸ்வதி நதியின் இருப்பைக் குறிப்பிடும் பெரும்பாலான பழம்பிரதிகளில் இருந்து சிந்து சமவெளி நாகரிகத்தின் வரலாற்றைத் தொட்டு, அந்நதியின் இருப்பையும் இல்லாமையையும் அறிவியல்-நிலவியல் காரணங்களுடன் தெளிவாக ஆராய்ந்து முடிவுகளை முன்வைக்கும் மிஷல் தனினோவின் புத்தகம் வரை இதற்காகப் படித்தேன். அதிர்ஷ்டவசமாக நான்கு வேதங்களும் நமக்குத் தமிழில் கிடைக்கின்றன. புரியாத பகுதிகளை ஒப்பிட்டு விளங்கிக்கொள்ள கிரிஃபித்தின் ஆங்கில மொழியாக்கம் உள்ளது. அவரே தந்திருக்கும் விளக்கக் குறிப்புகள் உள்ளன. மூடி மறைத்து வைக்கப்பட்ட ஏராளமான-முக்கியமான உண்மைகளைப் போட்டு உடைப்பதையே வாழ்நாள் பணியாகச் செய்திருக்கும் சுவாமி தயானந்தரின் (ஆர்ய சமாஜம்) சத்தியார்த்தப்பிரகாசத்தைத் திரும்பத் திரும்பப் படித்தேன் (இதுவும் தமிழில் கிடைக்கிறது).

வினோதம் என்னவென்றால் நாவலை எழுதத் தொடங்கிய பின்பு இவை எதுவும் பத்து சதவீதம்கூடத் தேவைப்படவில்லை. சலம் தனது பாதையைத் தானே தீர்மானித்துப் பெருகியோடத் தொடங்கியது. எண்ணிப் பார்த்தால் சிறிது அதிர்ச்சியாகக்கூட இருக்கிறது. ஆகக் குறைந்தபட்சம் எண்ணூறு பக்கங்கள் வரப் போகிற நாவலில் மூன்றே கதாபாத்திரங்கள், மூன்று துணைக்கதாபாத்திரங்கள்தாம் மொத்தமாகவே வந்திருக்கின்றன. அதில் ஒருவன் கதை நிகழும்போது பிறந்திராதவன். இரண்டு பாத்திரங்கள், தமது இறப்புக்குப் பிறகு வருபவர்கள்.

வேதகாலம் என்று சொல்லப்படுகிற காலக்கட்டத்துக்கு மிகவும் முந்தைய சிந்து வெளி நாகரிகக் காலக்கட்டத்துக்கு நம்மிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. வேதகாலத்துக்கான ஆதாரமென்பது வேதங்கள் மட்டுமே. ஆனால் காலத்தால் மூத்த முதல் மூன்று வேதங்களும் பெரும்பாலும் துதிப்பாடல்களால் ஆனவை. கடவுள் துதி இல்லாத இடங்களில் அந்நாளைய ஆரிய மன்னர்களின் அருமை பெருமைகளைப் போற்றுபவை. ஆரியர் அல்லாத பிற இனத்தவர்களை அரக்கர்களாகச் சித்திரித்து, அவர்களை வெற்றிகொள்ள ஆரிய மன்னர்களுக்கு அந்நாளைய ரிஷிகள் எப்படியெல்லாம் உதவினார்கள் என்று சுட்டுபவை. முதல் மூன்று வேதங்களிலிருந்து அக்கால மக்களின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை.

மாறாக, அதர்வ வேதம் ஒன்றுதான் கடவுள்களுக்காகவும் மன்னர்களுக்காகவும் அல்லாமல் சாதாரண மனிதர்களுக்காகப் பேசுகிற படைப்பாக உள்ளது. தவிர இது ஒன்றுதான் பெரும்பாலும் அதர்வன் என்கிற ஒரே ரிஷியினால் பாடப்பட்டதாக உள்ளது. (சில பகுதிகள் – குறிப்பாகத் தாந்திரீகம் சார்ந்தவை அங்கீரசன் என்கிற இன்னொரு ரிஷியின் வழி வந்தவை.)

மதத்துக்குக் கடவுள்கள் அவசியமானவர்கள். துதிகள் வசதியானவை. ஏற்றுப் போற்றுவதில் சிக்கல் இல்லை. இதனாலேயே மனித குலத்தை நோக்கியே பெரும்பாலும் பேசுகிற அதர்வம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். பைசாச வேதம் என்று சொல்லி நெருங்கவிடாமல் செய்திருக்கலாம். உண்மையில் மனித குலத்தைப் பல பைசாசங்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் வழியைத்தான் அந்த வேதம் சுட்டிக்காட்டுகிறது.

அதர்வ மகரிஷி என்றொருவர் இருந்தார்; அவர் மூலமாக ஒரு வேதம் வழங்கப்பட்டது என்பதற்கு அப்பால் அம்மனிதரைப் பற்றிய ஒரே ஒரு குறிப்புகூட எங்கும் கிடையாது. அவர் மனிதரேகூடக் கிடையாது; சரீர சம்பந்தமின்றி பிரம்மத்தினால் நேரடியாகப் படைக்கப்பட்டவர் என்பாரும் உண்டு. ரிக் வேதத்தில் வருகிற வசிட்டர், விசுவாமித்திரர், அகத்தியர் உள்ளிட்ட பல முனிவர்களுக்குப் பிற்காலப் புராணக் கதைகளில் க்ளோனிங் உண்டு. அதர்வனுக்குக் கிடையாது.

எனவே, கறுப்பா, வெள்ளையா, உயரமா, குட்டையா, ஒல்லியா, குண்டா, எப்போது வாழ்ந்தார், எத்தனை வயது வரை வாழ்ந்தார், எங்கே வாழ்ந்தார் என்கிற எந்தக் குறிப்பும் இல்லாத, பிற்காலத்திலும் எந்தக் கதையிலும் மறு அவதாரம் எடுத்திராத அந்த ரிஷிக்கு அவர் வழி வந்த வேத மந்திரங்களின் தன்மையையே எலும்பாகவும் நரம்புகளாகவும் சதையாகவும் ரத்தமாகவும் வைத்து ஓர் உருவைச் சமைத்து சரஸ்வதி நதிதீரத்தில் உலவவிட்டுப் பார்த்தேன். அதுதான் சலம் ஆனது.

அதர்வ வேதம் தோன்றிய காலத்தில் இந்நாவல் தொடங்குகிறது. சரஸ்வதி நதி ‘இல்லாமல் போன’ தருணத்துக்கு நியாயமாக இருந்திருக்க வேண்டிய காரணங்களை அடித்தளமாக அமைத்துக் கொண்டு இதனை எழுதினேன். யதி எழுதுவதற்கு முன்பே மனத்தில் தோன்றிய கரு இது. வடிவம் பெறுவதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

இன்று எடிட் செய்யத் தொடங்குகிறேன். திட்டமிட்டபடி எல்லாம் நடக்குமானால் மார்ச் இறுதியில் புத்தகமாக வரலாம்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading