பொலிக! பொலிக! 55

ரங்க நாச்சியார் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் கூட்டமான கூட்டம் திரண்டிருந்தது. ஒருபுறம் ராமானுஜரும் அவரது சீடர்களும் அமர்ந்திருக்க, எதிர்ப்புறம் யக்ஞமூர்த்தியும் அவரது சீடர்களும் இருந்தார்கள். யக்ஞமூர்த்தியின் ஓலைச் சுவடிகளை அடுக்கி வைத்துக்கொண்டு தலைமைச் சீடன் தயாராக இருந்தான். ஆதாரங்களுக்கும் ஒப்பீடுகளுக்கும் அவை முக்கியம். மேற்கோள் இல்லாமல் அவரால் பேச முடியாது.

‘உடையவரே, நீங்கள் ஓலைச் சுவடிகள் ஏதும் கொண்டு வரவில்லையா? நாம் வாதம் புரிய வந்திருக்கிறோம். சொற்பொழிவாற்ற அல்ல.’ என்றார் யக்ஞமூர்த்தி.

‘சமைக்கப்பட்டவற்றுக்குக் குறிப்புகள் அவசியம். இயல்பாக இருப்பதற்கு அது எதற்கு?’ என்றார் ராமானுஜர்.

ஒரு விருந்து தயாராகிறது. பலவிதமான ருசி மிக்க உணவு வகைகள் அணிவகுக்கின்றன. உண்ண உண்ண இன்னும் இன்னும் என்று ஆவல் எழுகிறது. எத்தனை பிரமாதமான விருந்து! இதை எப்படிச் செய்தீர்கள்? என்னவெல்லாம் சேர்த்தீர்கள்? என்று கேட்டால் குழம்பில் இன்னின்ன சேர்த்தேன், பாயசத்தை இப்படிச் செய்தேன், வடை மாவு இந்தப் பதம், அக்கார அடிசில் இப்படிச் செய்யவேண்டும் என்று விளக்கலாம்.

இதுவே கடும் தாகமெடுக்கும் நேரம் ஒரு குவளை நீர் கொடுத்து ஆற்றுப்படுத்துகிறவரிடம், ‘இந்தத் தண்ணீரை எப்படிச் சமைத்தீர்?’ என்று கேட்பார்களா?

ராமானுஜர் அதைத்தான் சொன்னார். வைணவம் இயல்பானது. காற்றையும் நீரையும் நெருப்பையும் போன்று அநாதியானது. ஏனெனில் பரம்பொருள் அவ்வாறானது. பிரம்மம், கர்மத்தால் தீண்டப்படுவதில்லை. அதற்கு தோஷங்கள் இல்லை. மூப்பில்லை, இறப்பில்லை, பிறப்பில்லை, சுக துக்கங்களோ, பசி தாகமோ இல்லை. அநாதியாக இருக்கிற அதனுள்ளேதான் அனைத்தும் அடங்கியிருக்கிறது.

‘அனைத்தும் என்று எதைச் சொல்வீர்? ஞானமயமான பிரம்மம் ஒன்றே மெய். இந்த உலகம் பொய். காட்சிகள் பொய். அனுபவங்கள் பொய். வெறும் மாயை. இந்தப் பொய்களும் மாயையும் எவ்வாறு பிரம்மத்தில் ஒடுங்கும்?’ என்றார் யக்ஞமூர்த்தி.

‘மாயை என்று அத்வைதம் சொல்வதையும் உற்பத்தி செய்தது அந்த பிரம்மமே அல்லவா? மாயையும் பிரம்மத்துக்குள் அடங்கியிருப்பதுதான். ஒரு நோக்கம் உள்ளது ஐயா. படைப்பதும் காப்பதும் நிர்மூலம் செய்வதும் தொடர்ந்து நடைபெறுவதற்காகவே பிரம்மம் மாயையைத் தனக்குள் வைத்திருக்கிறது. ஜீவனும் ஈசனும் மெய்யென்றால் மாயை என்று நீங்கள் சொல்லும் உலகமும் மெய்யானதே. பிரம்மம் படைக்கும் ஒன்று எவ்வாறு பொய்யாகும்? முழு உண்மை பிரம்மமே என்றால் அது படைப்பதும் உண்மையே அல்லவா? பரம்பொருள் எப்படி பொய்யான ஒன்றைப் படைத்துக் காட்டும்?’

வேதங்களை ஆதாரமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது, ஹிந்து மதம். த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று அதிலுள்ள மூன்று பிரிவுகளும் சந்தேகமற ஒப்புக்கொள்ளும் ஒரே விஷயம் பிரம்மம் அநாதியானது என்பது. பிரம்மத்துக்கும் ஜீவனுக்கும் உள்ள தொடர்பு சார்ந்துதான் வாத விவாதங்கள் அனைத்தும். ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறல்ல என்பது அத்வைதம். இரண்டும் வேறு வேறுதான்; எந்நாளும் சேராது என்பது த்வைதம். இரண்டும் வேறுதான்; ஆனால் இரண்டும் இணைந்திருக்கும் என்பது விசிஷ்டாத்வைதம்.

‘சுவாமி, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்குமான தொடர்பு பக்தியின்மூலம் கட்டி எழுப்பப்படுவது. பக்தி செய்வதே ஜீவனின் கடன். பக்தியின் மூலம் பரமாத்மாவை நெருங்கிச் செல்கிறோம். நாம் நெருங்கலாம், ரசிக்கலாம், அனுபவிக்கலாம், ஆனால் ஜீவன் ஒருபோதும் பரமாத்மாவாகாது. பரமாத்மாவாகிவிட்டால் ஜீவனுக்கு சொர்க்க நரகங்கள் எதற்கு? அவற்றை அனுபவிக்க வேண்டிய அவசியம்தான் எதற்கு?’

‘இல்லை. இதை ஒப்புக்கொள்ள முடியாது. தத்வம் அஸி ஸ்வேதகேதோ என்று வருணன் ஸ்வேதகேதுவைப் பார்த்துச் சொன்னதைப் பொய் என்பீரா? பிரபஞ்சத்தைப் படைத்த ஈஸ்வரனும் நீயும் ஒன்றே என்றல்லவா இதற்குப் பொருள்?’

‘இப்படிப் பாருங்கள். ஒரு மீனுக்குக் கடலின் ஆழம் தெரியும். அகலம் தெரியும். பிரம்மாண்டம் தெரியும். ஆனந்தமாக அது நீந்திக் களிக்கிறது. கடலுக்குள் இருக்கப் பணிக்கப்பட்டது அது. ஆனால் மீன் தான் கடலா? இல்லை அல்லவா? மீனாக இருப்பதால்தான் அது கடலை அனுபவிக்கிறது. ஜீவாத்மா அப்படித்தான். பரமனுக்குள் ஒடுங்கி அனுபவிக்கவே படைக்கப்பட்டவன் அவன். நீங்கள் சொல்லுவது எப்படி என்றால், உப்பும் கடலில்தான் உள்ளது. மீனைப் போல் அல்லாமல் அது கடல் நீரில் இரண்டறக் கலந்திருப்பது. அதனால் கடலை அனுபவிக்க முடியுமா? உப்புக்குக் கடலின் ஆழ அகலங்கள் தெரியுமா? பிரம்மாண்டம் தெரியுமா? கடல் வேறு, உப்பு வேறு என்பதை ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா? ஜீவாத்மாவும் சரி, இந்தப் பரந்த உலகமும் சரி. பரம்பொருளின் அங்கங்கள்தாம். பரமாத்மா என்றும் பிரம்மம் என்றும் இன்னும் பலவாகவும் சொல்லப்படுகிற எம்பெருமானின் அருள்தான் நமக்கு வேண்டியது. அதன்மூலம் சரீரத் தொடர்பை விடுத்து அவன் பாதாரவிந்தங்களை எட்டிப் பிடிப்பதே மோட்சம் என்று சொல்லப்படுகிறது. மோட்சத்துக்கு பக்தி ஓர் உபாயம். சரணாகதி மிகச் சிறந்த உபாயம். வைணவம் இதைத்தான் சொல்கிறது.’ என்றார் ராமானுஜர்.

யக்ஞமூர்த்தி ஏற்கவில்லை. வாதம் விடாமல் தொடர்ந்தது. ஒரு நாள். இரண்டு நாள். ஒரு வாரம். இரண்டு வாரம். மூன்றாவது வாரமும் முடிந்துவிடும் போலிருந்தது. ஆனால் வாதம் முடியவில்லை.

யக்ஞமூர்த்தி பேசிய அத்வைதம், வேதங்கள் விரிக்கும் ஞான காண்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் சடங்குகளுக்கும் யாகங்களுக்கும் பெரிய இடம் கிடையாது. அது தத்துவங்களின் வெளி. அறிவின் கூர்மையால் அலசிப் பார்க்கப்படுவது. ஆத்மானுபவம் சேராது.

ஆனால் ராமானுஜர் பேசிய விசிஷ்டாத்வைதம் சராசரி மனிதர்களுக்கான கதி மோட்ச உபாயம். மண்டை உடைக்கும் தத்துவச் சிக்கல்களுக்குள் புகாமல் மிக நேரடியாகச் சரணாகதியைச் சுட்டிக்காட்டுகிற பெரும்பாதை. சேருமிடம் குறித்த தேர்ந்த தெளிவும் சென்றடையும் வழி பற்றிய துல்லியமும் கொண்ட உபாயம்.

யக்ஞமூர்த்தி அதை ஏற்கவில்லை. பதினேழு தினங்கள் தொடர்ந்து விவாதம் நடந்துகொண்டே இருந்தது. யார் வெல்லப் போகிறார் என்றே புரியாமல் மக்கள் தினமும் சபைக்கு வந்து அலுத்துத் திரும்பினார்கள்.

அன்றைக்கு ராமானுஜருக்கே அலுப்பாகிவிட்டது. வறட்டுத் தத்துவ வாதங்களில் என்ன இருக்கிறது? பரம்பொருளான நாராயணனைச் சரணமடைவது ஒன்றே மோட்சத்துக்கு வழி என்பதை எப்படி இந்தப் பண்டிதருக்குப் புரியவைப்பது?

களைத்துப் போய் மடத்துக்குத் திரும்பியவர், தமது திருவாராதனப் பெருமாளான பேரருளாளனிடம் கைகூப்பிக் கேட்டார். ‘ஏனப்பா இப்படிச் சோதிக்கிறாய்? எதற்கு இந்த வீண் விவாதங்கள்? நீதான் எல்லாம் என்பதை அந்த யக்ஞமூர்த்திக்கு நீயே புரியவைக்கக் கூடாதா?’

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter