பொலிக! பொலிக! 35

காலை எழுந்தவுடன் வாசல் பெருக்க வேண்டும். பிறகு ஆற்றுக்குச் சென்று நீர் எடுத்து வருதல். வீடு பெருக்கிச் சுத்தமாக்கிய பிறகு துணிமணிகளைத் துவைத்துப் போடவேண்டும். சமையலறை சார்ந்த நானாவித காரியங்கள். மழைக்குக் குடை. பசி நேரத்துக்கு உணவு. வாழ்வினுக்கு எம்பெருமானாரின் திவ்ய நினைவுகள்.

முதலியாண்டான் அத்துழாயின் புகுந்த வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து மாதங்கள் ஓடிவிட்டன. அவளது மாமியாருக்குப் பெரிய திருப்தி. அப்படி வா வழிக்கு. சொல்லிக்காட்டினால்தானே காரியம் நடக்கிறது? இல்லாவிட்டால் அந்தப் பெரிய நம்பியிடம் இருந்து எதைப் பெற முடிகிறது?

அவர்களுக்கு முதலியாண்டான் யார் என்று தெரியாது. அவனது புலமை தெரியாது. தெளிவுகளும் தீர்மானங்களும் தெரியாது. ஒரு தவமாக ஏற்று அவன் அத்துழாயின் இல்லத்தில் சேவை புரிய வந்ததன் பின்னணி தெரியாது.

அவனுக்கென்ன அதனால்? பணியில் இழிவென்று எதுவும் இல்லை. தவிரவும் அது குரு உத்தரவு. குருகைப் பிரான் சொன்னதை அடிக்கடி எண்ணிப் பார்த்துக்கொள்வான். மூன்று ஆணவங்கள். பிறப்பால், கல்வியால், செல்வத்தால் வருகிற சிக்கல்கள். எண்ணிப் பார்த்தால் ராமானுஜர் மிகச் சரியான பணியைத்தான் கொடுத்திருக்கிறார் என்று தோன்றியது. மூன்றையும் மொத்தமாகக் களைய இது ஓர் உபாயமல்லவா? மகா பண்டிதனானாலும் மடைப்பள்ளி உத்தியோகத்துக்குக் கைப்பக்குவமே முக்கியம். அள்ளிப் போடுகிற உப்புக்கும் மிளகுக்கும், கிள்ளிச் சேர்க்கிற வாசனாதி திரவியங்களுக்கும் அவனது படிப்பு முக்கியமல்ல. பதமே பிரதானம். நிதானம் அதனினும் முக்கியம்.

அத்துழாய்க்கு ஒரு கவலை விட்டது. மாமியாரின் வாயை அடைத்தாகிவிட்டது. இனி அவளால் என்ன பேச முடியும்? முதலியாண்டானின் பணி செய்யும் வேகம் எண்ணிப் பார்க்க இயலாததாக இருந்தது. எதையும் சொல்லி முடிப்பதற்குள் செய்து முடிக்கிற வித்தகன் அவன். தவிரவும் ஓய்வுப் பொழுதில் எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்கிற ஆசிரியராகவும் விளங்குகிறவர். ஜீயர் அண்ணா அனுப்பிய ஆள் என்றால் சும்மாவா?

ஒருநாள் வீட்டுக்குச் சில பண்டிதர்கள் வந்திருந்தார்கள். அத்துழாயின் மாமனாருக்கு வேண்டப்பட்டவர்கள். வால்மீகி ராமாயணத்தில் கரை கண்டவர்கள் என்று வீட்டில் பேசிக்கொண்டார்கள்.

‘ஓய் தாசரதி! விருந்து தடபுடலாக இருக்கவேண்டும். வந்திருக்கிறவர்கள் மகா பண்டிதர்கள். காலட்சேபம் முடிந்ததும் இலை போட்டாக வேண்டும்!’ என்று சொல்லிவிட்டு அவர்களோடு உட்கார்ந்துவிட்டார் அத்துழாயின் மாமனார். குடும்பமே கூடத்தில் இருந்தது. வந்த பண்டிதர்கள் ராமாயணம் சொல்ல ஆரம்பித்தார்கள்.

சமையலறையில் முதலியாண்டான் வேலையை ஆரம்பித்தான். காது மட்டும் வெளியே இருந்தது. உபன்னியாசத்தைக் கேட்டுக்கொண்டே வந்தவனுக்கு ஓரிடத்தில் சுருக்கென்றது. பண்டிதரானவர் வால்மீகி முனிவரின் ஒரு குறிப்பிட்ட பாடலுக்குத் தவறான பொருள் சொல்லிக்கொண்டிருந்தார். அது ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பெருமைக்குக் களங்கம் சேர்க்கும் விதமான பொருளாக இருந்தது.
தாங்க முடியவில்லை அவனால். கதவோரம் வந்து நின்று கவனிக்க ஆரம்பித்தான். உதடு துடித்தது. ஆனால் அவர்களிடம் எப்படிச் சொல்லுவது? இது அபசாரம். மிகப்பெரிய பாவம். ஒரு தவறான பொருள் நாலு பேருக்குப் பரவினால் அது அவ்வண்ணமே நாநூறு பேருக்குப் போய்ச் சேரும். நாநூறு நாலாயிரமாகும். மேலும் பரவும்.

தாங்க முடியாமல் மெல்ல விசும்பினான்.

சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த அத்துழாயின் மாமனாருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்ன ஆயிற்று தாசரதி? ஏன் அழுகிறீர்?’

‘தாங்க முடியவில்லை சுவாமி. மகாகவி வால்மீகியின் சுலோகங்களுக்கு இச்சபையில் மிகத் தவறான பொருள் தரப்பட்டுக்கொண்டிருக்கிறது.’

அதிர்ந்துவிட்டார்கள் வந்திருந்த பண்டிதர்கள். ‘ஓஹோ. சமையல்காரனுக்கு சாஸ்திரம் தெரியுமோ? எங்கள் விளக்கத்தில் குற்றம் கண்டுபிடிக்கும் அளவுக்கு நீர் தேர்ச்ச் பெற்றவரோ?’

‘நான் அற்பன் ஐயா. ஆனால் எனது ஆசாரியர் ஓர் ஞானக்கடல். அதன் ஓரத்தில் நின்று கால் நனைத்தவன் அடியேன். அதனால்தான் பிழை பார்த்தபோது பதைத்துவிட்டது. தவறாக எண்ணாதீர்கள்.’

‘எங்கே, சொல்லுங்கள் பார்ப்போம்! நீர் சொல்லும் விளக்கத்தை நாமும் கேட்போம்!’

முதலியாண்டான் ராமானுஜரை மனத்தில் வேண்டிக்கொண்டு குறிப்பிட்ட சுலோகத்தின் பொருளைத் தாம் அறிந்தவாறு எடுத்துச் சொன்னான். திகைத்துப் போனது கூட்டம். பண்டிதர்களுக்குப் பேச்செழவில்லை.

‘இது மகாபாவம் ஐயா. இப்பேர்ப்பட்ட ஞானஸ்தனை நீர் உமது சமையற்காரனாக வைத்திருப்பது பெரும்பிழை. நரகத்தில்கூட உம்மை நுழைய விடமாட்டார்கள் பார்த்துக்கொள்ளுங்கள்!’ என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்கள்.

திகைத்துப் போனது அத்துழாயின் குடும்பம்.

‘ஐயா, உண்மையைச் சொல்லும். நீங்கள் யார்?’ அப்போதுதான் முதல் முறையாகக் கேட்டார் அத்துழாயின் மாமனார்.

‘அவர் பெயர் முதலியாண்டான். என் ஜீயர் அண்ணாவின் சீடர்!’ என்றாள் அத்துழாய்.

கலவரமாகிப் போய் தடாலெனக் காலில் விழுந்தார் அந்த மனிதர். ‘மன்னித்துவிடுங்கள் சுவாமி! உங்கள் தகுதி தெரியாமல் நடந்துகொண்டுவிட்டோம். நீங்கள் கிளம்பிவிடுங்கள். இனியும் எங்கள் இல்லத்தில் நீங்கள் சமைத்துக்கொண்டிருப்பது தகாது.’

‘சாத்தியமில்லை ஐயா. இது என் குருவின் உத்தரவு. அவர் சொல்லாமல் நான் இங்கிருந்து நகரமாட்டேன். தவிர, ஒரு சீதன வெள்ளாட்டி வராத காரணத்தால்தானே பெரிய நம்பியின் குழந்தை இங்கே சீண்டப்பட்டது? அத்துழாயின் நிம்மதியும் மகிழ்ச்சியும் எனக்கு முக்கியமானது. நான் பண்டிதனானால் என்ன? என் சமையல் ருசிக்கிறதல்லவா? அதை மட்டும் பாருங்கள்.’

‘முடியவே முடியாது. இது எங்களது பாவக்கணக்கைக் கூட்டும் ஐயா. நீங்கள் இந்தப் பணியைச் செய்ய வேண்டாம்.’

‘என் குரு சொல்லாமல் நான் நிறுத்தமாட்டேன்’ என்று முதலியாண்டான் சொல்லிவிட்டதால் அந்த மனிதர் தலைதெரிக்க திருவரங்கத்துக்கு ஓடினார். ராமானுஜரைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்தெழுந்தார். ‘பெரிய மனசு பண்ணுங்கள் சுவாமி! முதலியாண்டானைத் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள்! இனி பெரிய நம்பியின் மகளுக்கு எமது இல்லத்தில் எந்தக் குறையும் இராது. அதற்கு நான் உத்தரவாதம்.’

ராமானுஜர் புன்னகை செய்தார். ‘என்ன அத்துழாய், முதலியாண்டானை நானே திரும்ப அழைத்துக்கொள்ளட்டுமா?’

‘ஓ! நீங்கள் என்ன செய்தாலும் சரிதான் அண்ணா’ என்றாள் அத்துழாய்.

தமது மூன்று கர்வங்களும் அழியப்பெற்ற முதலியாண்டானுக்கு அதன்பிறகு ராமானுஜரே ரகஸ்யார்த்தங்களை போதித்தார்.

(தொடரும்)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!