இரவு ஒரு கொடுங்கனவு. கொங்கு நாடு உதயமாகிவிடுகிறது. வலிமை அப்டேட் வானதி சீனிவாசனுக்கு லெஃப்டினண்ட் கவர்னர் காயத்ரி ரகுராம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் போகிற நேரம், ‘நிறுத்துங்கள்!’ என்று கூவிக்கொண்டு ராஜகுரு ஜக்கி வாசுதேவ் உருவிய வாளுடன் அரண்மனைக்குள் நுழைகிறார். கடலுக்குள் மூழ்கிய துவாரகையை மீட்டு வெளியே கொண்டு வந்து, கடல் இல்லாத பாதுகாப்புப் பிராந்தியமான கொங்கு நாட்டில் மறு புதைப்பு செய்து ஶ்ரீ கிருஷ்ணருக்கு வானளாவிய கோயில் எழுப்பி, அதன் ஆயிரங்கால் அர்த்த மண்டபத்தில்தான் பிரமாணம் நிகழ வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். உடனே, ராஜகுரு திமுகவின் கைக்கூலி ஆகிவிட்டார் என்று வலிமை அப்டேட் வானதி சீனிவாசன் ஆவேசப்பட, ராணுவத் தளபதி அண்ணாமலை, துணை ராணுவத் தளபதி எச். ராஜா உள்ளிட்ட சேனைக் கிழங்கினர் ராஜகுருவின் மீது பாய்ந்து தாக்கத் தொடங்குகிறார்கள். தேசத்தில் திடீர்ப் புரட்சி ஏற்பட்டுவிட்டதாக கொங்கு எஃப்.எம். அறிவிப்பாளர் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும் கூடையில் என்ன பூ பாடலை நிறுத்திவிட்டு அறிவிக்கிறார். மறு கணமே மக்கள் சபை ஒன்றுகூடி ஒண்டிப்புதூரில் புரட்சியம்மனுக்குக் கோயில் கட்டி, அரிசிம்பருப்பு நைவேத்தியம் செய்து வழிபடுகிறது. புரட்சியாளர்களை சமாதானப்படுத்த இந்திரப் பிரஸ்தத்தில் இருந்து சிறப்பு தூதுக் குழு ஒன்று வருகிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வலிமை தியேட்டரில் ரிலீஸாகி 100 நாள் ஓடி நிறைவு செய்யும்போது பதவிப் பிரமாணத்தை வைத்துக்கொள்ளலாம்; அதற்குள் துவாரகையை மீட்டுவிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அனைவரும் சமாதானமாகிவிட்டதால், பரஸ்பர மகிழ்ச்சித் தெரிவிப்பின் அடையாளமாக ஐநா புகழ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டு புரட்சி முடித்து வைக்கப்பட்டது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
ஐஸ்வர்யா நடனம். உங்களுக்கு மறதி என்பதே கிடையாதா?!
Governer.. ராணுவ தள.. உபதளபதி சரி..முதல்வர்!!? நாராயணசாமி போல் ..புரட்சி முடக்கப்பட்ட விதம்..ஹா ஹா..