இந்த உலகில் ஆகச் சிரமமான காரியம் ஒன்று உண்டென்றால் அது சுய விமரிசனம் செய்துகொள்வதுதான். ஆனால், பெரும்பாலும் நமக்கு ரொம்பப் பிடித்த நபர் நாமேவாகத்தான் இருப்போம். பிடித்துவிட்டால் விமரிசனம் எங்கிருந்து வரும்?
ஆனால் ஓர் எழுத்தாளன், விமரிசனக் கலை பயில விரும்பினால் அதற்கு மிகவும் சௌகரியமான, பாதுகாப்பான வழி தன்னைத்தானே விமரிசித்துக்கொள்வது. ஒரு பயலும் நாயே பேயே என்று நாலு பக்கத்துக்குத் திட்ட முடியாது பாருங்கள்.
அன்சைஸ் மறு பதிப்பு இன்று ஜீரோ டிகிரியில் வெளியாகி உள்ளது. இந்தப் புத்தகத்தைப் படித்தவர்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தேன், கண்ணில் நீர் வரச் சிரித்தேன், கதறிக் கதறிச் சிரித்தேன், உருண்டு புரண்டு சிரித்தேன் என்று பல நூறு விதமாகச் சொல்லிவிட்டார்கள். மனித குலம் எவ்வளவு மோசமானது என்பதை நான் உணர்ந்த தருணம் அதெல்லாம். ஏனெனில், இந்தப் புத்தகம் பேசுவதெல்லாம் எனக்குத் துன்பம் வந்த வேளைகளைப் பற்றி. எனது எல்லா துன்பங்களுக்கும் நானே எப்படிக் காரணமாக இருந்திருக்கிறேன் என்று கண்டடைந்த கதையைத்தான் இதில் எழுதியிருக்கிறேன்.
பழியைத் தூக்கிப் பத்து பேர் மீது போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கத் தெரியாதா? நான் மிகவும் நல்லவன் என்பதால் (சந்தேகமில்லை.) அதைச் செய்யவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் புதிய பதிப்பைப் புரட்டும்போது ஒன்று தோன்றியது.
என்னால் என்னை விமரிசனம் செய்துகொள்ள முடிகிறது. என் குறைகளை அடையாளம் காணத் தெரிந்திருக்கிறது. அதை நகைச்சுவையாக எழுதவும் முடிகிறது.
ஆனால் எக்காலத்திலும் நான் என்னை மாற்றிக்கொள்பவனாக இருக்கப் போவதில்லை.
பிகு 1: இங்கே புத்தகம் வாங்கும் லிங்க் உள்ளது.
பிகு 2: அன்சைஸ்க்குப் பிறகு, முற்று முழுதான நகைச்சுவைத் தொடர் ஒன்றை வரும் இதழ் உயிர்மையில் ஆரம்பிக்கிறேன். தலைப்பு – வீட்டோடு மாப்பிள்ளை.