நீலக் கல்லே, என் அன்பே!

2017க்குப் பிறகு எனக்கு சோதிடத்தின் மீதிருந்த நப்பாசை சார்ந்த சிறு பற்றுதல் ஆட்டம் காணத் தொடங்கியது. எப்போதாவது நல்லவனாக இருக்கும்போது ‘நம் எதிரிக்கும் இது நடக்கக் கூடாது’ என்று சிலவற்றை நினைப்போமல்லவா? அதெல்லாம் என்னையே எதிரியாக முன்வைத்துக் கோலாட்டம் ஆடிக் காட்டிவிட்டன.

இத்தனைக்கும் அந்தக் காலக்கட்டம் தொடங்கி ஒவ்வொரு சோதிடரும், ஒவ்வொரு பருவத்துக்கும் ஆஹா ஓஹோ என்று அள்ளி அள்ளி விட்டுக்கொண்டிருந்தார்கள். சுமார் பத்து சோதிடர்களின் தின, வார, மாத, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு, தமிழ் ஆண்டு, ஆங்கில ஆண்டு, குருப் பெயர்ச்சி, ராகு-கேதுப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சிப் பலன்களைத் தவறாமல் கேட்டிருப்பேன். சொல்லி வைத்த மாதிரி அத்தனை பேரும் என்னை நித்யானந்தா தனிநாடு கண்டது போலச் சிறந்து வாழ்வேன் என்று சூடம் அணைத்திருந்தார்கள். எல்லாம் புருடா.

தொழிலில் உயர்தரம் என்று நான்கு பேர் சொன்னார்கள் என்றால், அதுவரை சரியாகப் போய்க்கொண்டிருக்கும் ஏதாவது ஒன்று அப்போது பணாலாகும். வண்டி வாகன அனுகூலம் என்று ஒருவர் சொல்வார். அன்று மாலைக்குள் குறைந்தபட்சம் ஒரு பஞ்சரையாவது எதிர்கொள்ள வேண்டி வரும். தேக ஆரோக்கியம் அமோகமாக இருக்கும் என்பார்களானால் என் பிறவிக் கோளாறான மூச்சுப் பிடிப்புக் கல்யாணம் அப்போதுதான் கன ஜோராக நடக்கும். உறவுகள் வலுப்படும் என்பார்கள். கொலைப் பழி, வெட்டுக் குத்துப் பழி அளவுக்கு யாராவது சண்டை போட்டுப் பிரிந்து போவார்கள்.

உண்மையைச் சொல்கிறேன். எனக்கு மட்டும் எழுத வராது போயிருந்தால், கடந்த சில ஆண்டுகளில் நடந்த நாராசங்களில் இருந்து தப்பிக்க வழியின்றிப் பைத்தியமாகியிருப்பேன். பிரசுரிக்கிறேனோ இல்லையோ. எதையாவது எழுதிக்கொண்டே இருப்பதில்தான் வண்டி இன்னும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில் நிகரற்ற பெருந்துயர் ஒன்றுண்டு. என் நண்பர்கள் வட்டத்திலும் சில சோதிடர்கள் இருக்கிறார்கள். வேலை மெனக்கெட்டு அவர்களுக்கு என் ஜாதகத்தை அனுப்பி, சீரியல் கதாநாயகியைப் போல ‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் ஆகிறது?’ என்று கேட்கப் பார்த்தால், அனுப்பிய ஜாதகத்தை வாங்கி வைத்துக்கொண்டு அதோடு காணாமல் போய்விடுகிறார்கள். சிலர் நீச்சலடித்து இலங்கைக்கேகூடத் தப்பிச் சென்றிருக்கிறார்கள். எதற்குச் சொல்கிறேன் என்றால் பெண்ணென்றால் பேய் அஞ்சுமோ என்னவோ. இந்நாள்களில் ரிஷபம் என்றால் சோதிடர்கள் பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிடுகிறார்கள்.

ஏனென்றால் அவர்கள் படித்த இலக்கணப்படி நேரங்காலம் அமோகமாகத்தான் இருக்கிறது. கூட்டிக் குறைக்காமல் அதைத்தான் சொல்கிறார்கள். அதில் சந்தேகமில்லை. ஆனால் சுக்கிரனும் புதனும் சனியும் கொஞ்சிக் குலாவுகிற வேகத்தில் சகட்டு மேனிக்கு ஆசனங்களைச் சேதாரம் செய்துவிட்டுப் போய்விடுகிறார்கள். குருவுக்கு அர்ச்சனை, சனீஸ்வரனுக்கு எள் விளக்கு, பிரதோஷ கால சிறப்பு வழிபாடு, சிவன் அன்னாபிஷேக தரிசனம் என்று என்னவெல்லாம் சொல்கிறார்களோ எல்லாவற்றிலும் ஒரு சுற்று வந்து பார்த்துவிட்டேன். காளையைக் கட்டிப்போட இன்னும் ஒரு வழி கிடைத்தபாடில்லை.

சரி ஒழிகிறது எல்லாம் பழகினால் மறந்துவிடும் என்று ஐந்தாண்டுத் திட்டம் வைத்துப் பழகிக்கொண்டிருக்கையில் திடீரென்று இன்றொரு யூட்யூப் சோதிடர் 2023 அதிரடியாக இருக்கப் போகிறது என்று திரும்பவும் ஸ-ப-ஸ தொடங்கினார். அதுவும் எப்படி? சனி பகவான் எண்பது சதமானம் சகாயம் செய்யப் போகிறார்.

இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? நமக்கு எண்பது சதமானமெல்லாம் வேண்டாம். ஒரு எட்டு போதும். ஆனால் அவரோ ஏழரைக் கடந்து எட்டிப் பார்க்கக் கூட முடியாது என்கிறார்.

அதெப்படி? ரிஷப ராசிக்காரரான நீங்கள்தான் அவரை இழுத்து முடிந்துகொள்ள வேண்டும். ஒரு நீல சஃபையர் கல் வைத்த மோதிரத்தை வலது நடு விரலில் போட்டுப் பாருங்கள். சுக்கிரன் ஆதிக்கத்தில், புதன் உச்சத்தில், சனி சகாயமும் சேர்ந்து சொகுசு சுந்தரனாகிவிடுவீர்கள் என்று அடித்துச் சொன்னார்.

முன்னொரு காலத்தில் வேறொரு சோதிட நண்பர் கனக புஷ்பராகக் கல் வைத்த மோதிரம் அணியச் சொல்லி ஆலோசனை சொன்னது நினைவுக்கு வந்தது. அதுதான் இதுவா என்று சரியாகத் தெரியவில்லை. அன்றே சொன்ன பேச்சைக் கேட்டிருந்தால் ஒருவேளை உருப்பட்டிருக்குமோ என்று கணப் பொழுது தோன்றவே, ‘இந்த ப்ளூ சஃபையர்ன்றது….’ என்று நாநுனி நப்பாசையுடன் என் மனைவியைப் பார்த்தேன்.

‘அதெல்லாம் முடியாது. ஜாதகத்துல அவர் எங்க உக்காந்திருக்கார்னு திட்டவட்டமா யாராவது பார்த்து சொல்லாம கல்லு வெச்ச மோதிரமெல்லாம் கூடாது’ என்று தீர்ப்பளித்துவிட்டார்.

திட்டவட்டமாகப் பார்த்துச் சொல்லும் மகானுபாவர்கள். அவர்களுக்கென்ன. நிறையப் பேர் இருக்கிறார்கள். ஜாதகத்தை அனுப்புவதும் எளிது. ஆனால் –

ஐந்தாவது பத்தியை மீண்டும் படித்து முற்றும் போட்டுக்கொள்ளுங்கள்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter