பெண்ணிய விரோதக் கட்டுரை எழுதுவது எப்படி?

பொதுவாக ஆண்களுக்கு இது எளிதே என்றாலும் எழுதுவது என்னும் தொழிற்படும்போது அவர்கள் சிறிது எச்சரிக்கையாகிவிடுவார்கள். பொது புத்தி என்று பொதுவில் முன்வைக்கப்படும், காதல் சந்தியாவின் மூக்கு நிகர்த்த குற்றச்சாட்டுக்கு அஞ்சி, தம்மையொரு நடுநிலைவாதியாகக் காட்டிக்கொள்ளும் ஆயத்த உணர்வு ஆரம்பத்தில் ஏற்படும். ஆனால் அது தேவையற்றது. எப்படி என்பதைப் படிப்படியாகப் பார்க்கலாம்.

கட்டுரையின் முதல் பத்தியில் பெண்களின் மீது நமக்குள்ள மதிப்பு, மரியாதை, அன்பு, பாசம், காதல், நேசம், கடுப்பு, குரோதம், குரோதம் 2 அனைத்தையும் வெளிப்படுத்தும்படியானதொரு சம்பவத்தைச் சொல்லிவிட வேண்டும். அதாவது நமக்குப் பெண்கள் நெருக்கமானவர்கள்; பெண்ணியப் பெண்கள்தாம் ஆகாது என்பதை அழுத்தமாகப் பதிய வைத்துவிட வேண்டும்.

இப்படிச் செய்வதன் முதற்பலன் என்னவாக இருக்குமென்றால், கட்டுரையை வாசிக்கும் பெண்களில் தொண்ணூறு சதவீதமானோர் தாம் பெண்ணா, பெண்ணியப் பெண்ணா என்னும் சுய பரிசீலனையில் உடனே இறங்கிவிடுவார்கள். பெண்ணைக் குறித்த தெளிவே உலகத்தாருக்கு இன்றுவரை உண்டாகாதபோது பெண்ணியப் பெண்கள் குறித்த தெளிவு – அதுவும் பெண்களுக்கு எப்படி உண்டாகியிருக்கும்?

எனவே, இவன் ஏதோ சொல்ல வருகிறான் என்று அவர்கள் இரண்டாம் பத்திக்கு இடம் பெயர்வார்கள். இந்த இடத்தில் பெண்ணியம் அல்லது பெண் என்ற பதங்களை அறவே தவிர்த்துவிட்டு உங்களுக்கு உங்கள் சம்சாரம் அல்லது சம்சாரங்களுடன் உண்டான அனுபவங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து விரிவாக விவரிக்கவும். உதாரணத்துக்கு ஒரு சம்பவம்:-

//நானும் என் மனைவியும் திருநீர்மலைக்கு சாமி கும்பிடச் சென்றோம். கோயில் வாசலில் ஏழெட்டுப் பேர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள். உள்ளே நுழையப் போகும்போது ‘அம்மா புண்ணியவதீ…!’ என்று என் மனைவியை இருவர் ஒரே சமயத்தில் அழைத்தார்கள். அச்சமயம் என் மனைவி பூக்காரியிடம் பேரம் பேசிக்கொண்டிருந்ததால் பிச்சைத் தொழிலாளிகளின் குரலுக்குச் செவி மடுக்க முடியவில்லை. இதனைப் புரிந்துகொள்ளாத அவ்விளிம்புநிலைக்குக் கீழே வசிக்கும் மாந்தர்கள், ‘ஐய மூதேவி! மூஞ்சப் பாரு! இதெல்லாம் வந்துடுதுங்க ஆட்டிக்கினு’ என்று திட்டிவிட்டு, ‘ஐயா தர்மதுரை…!’ என்று என்னைப் பார்த்துக் கைநீட்டினார்கள். மிகச் சரியாக அதே கணத்தில் ‘என்னங்க, சில்ற இருந்தா எடுங்க’ என்று என் மனைவி பூக்காரி பேரத்தை முடித்து வைப்பதற்காகக் கைநீட்டப் போக, நான் பாக்கெட்டுக்குள் கையை விட்டு இருந்ததை வெளியே எடுத்தேன். இந்தப் பக்கம் பிச்சைத் தொழிலாளர்கள். அந்தப் பக்கமோ என் மனைவி. இருவருக்கும் தருமளவு என் பாக்கெட்டில் உள்ள சில்லறை போதுமானதுதான் என்றாலும் இருவரில் யாருக்கு முதலில் தருவது என்னும் இருப்பியல் வினா எனக்குள் எழுந்தது. அக்கணத்தில் கோயிலை மறந்தேன். மனைவியை மறந்தேன். அவள் வாங்கி, கையில் வைத்திருந்த சாமந்திப் பூவை மறந்தேன். பிச்சைத் தொழிலாளர்களை மறந்து, என்னையும் மறந்து தேரடியை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கினேன்…//

இந்தப் பத்தியைப் படிக்கும் வாசக வாசகியர் ஒரு தனியொருவனின் தர்ம சங்கடச் சூழலைத் துல்லியமாகப் புரிந்துகொண்டுவிடுவார்கள். சே பாவம் என்று உச்சுக் கொட்டவும் வாய்ப்புண்டு. மேற்படி காட்சி ஜேஜே சில குறிப்புகளில் பிச்சைக்காரனுக்குப் பத்து காசு போடுவதற்கு இரண்டு மணி நேரம் யோசித்துவிட்டு, தின்ற பன் பட்டர் ஜாமுக்கும் காசு கொடுக்காமல் ஓடிய அயோக்கியனிடமிருந்து சுட்டது என்பதெல்லாம் அவர்களுக்கு ஞாபகம் வராது.

இப்படியாக நம்மைப் பாதுகாப்பான ராணுவத் தளத்தில் நிறுத்திக்கொண்டு, முதற்கண் மேற்படி பிச்சைக்காரர்களில் ஒருவரைப் பெண்ணாக்கி முதல் பழியைத் தூக்கி அவர்மீது போட்டுவிட வேண்டும். அதாவது மனைவிக்கு முதலில் சில்லறை கொடுத்துவிட்டு மீந்ததைப் பிச்சைக் கலைஞர்களுக்குத் தரப்போக, அதற்கும் அவர்கள் வசவுச் சொற்களை வீசுவதாகக் காட்சியைச் சித்திரிக்க வேண்டும். அவ்வசவுச் சொற்கள் எழுதுந்தரத்தில் இருக்கக் கூடாது என்பது முக்கியம். இருந்தாலும் எழுதிவிட வேண்டும். (உதா: ‘ஐய, மூஞ்சப் பாரு. இதுங்களுக்கெல்லாம் அந்த ஆண்டவன் காச குட்த்ததுக்கு, கள்ளிப்பால்ல பால்கோவா கிண்டி, மொதொ பொறந்த நாளப்ப துண்ணவெச்சிருக்கலாம்.’)

கவனிக்கவும். ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் இடம்பெற்ற (அல்லது கற்பனையில் இடம்பெறவிருக்கிற) ஒரு பெண்ணை, பெண்ணென்று சொல்லாமல் பிச்சைக்காரியாகவும் தடாலடிப் பேச்சுக்கலை விற்பன்னியாகவும் மட்டுமே குறிப்பிட்டு, அவளது ஆணவப் போக்கை விலாவாரியாக (ஆனால் உணர்ச்சிவசப்படாமல் நம்மைத் தாழ்த்திக்கொண்டு) விவரித்தால் ஆதிக்க மனோபாவத்தின் பூரண எழிலின் முதல் சொட்டு அங்கே வந்து உட்காரும்.

இதை மெல்ல மெல்ல ஆணாதிக்க மனோபாவத்தின் இன்றியமையாமையாக உருமாற்றி (வேறென்ன. சம்பவங்களின் மூலம்தான்.), அப்படியே பெண்களை மறைமுகமாக ஒவ்வொரு படியாகக் கீழே இறக்கிக்கொண்டே வர வேண்டும். எல்லை தாண்டுகிறோமோ என்னும் ஐயம் வரும்போது சட்டென்று முதலில் சொன்ன ஆயுதத்தை மீண்டும் எடுத்துவிட வேண்டும். (பெண்ணல்ல பிரச்னை; பெண்ணியம்தான் பிரச்னை.)

இவ்வளவுக்கும் பிறகு இறுதியாக பெண்ணியம் என்பது அகம்பாவம், பெண்ணியம் என்றால் திமிர், பெண்ணியம் என்றால் தெனாவட்டு, பெண்ணியம் என்றால் உருப்படாதது என்று போல்டு+இடாலிக்ஸில் சொல்லிவிட்டு, ‘எப்படி பார்ப்பனியம் என்பது அந்தணர்களிடம் மட்டும் இல்லையோ, அதே போலத்தான் பெண்ணியம் என்பது பெண்களிடம் மட்டும் இல்லை’ என்று சொல்லி முடித்துவிடுங்கள்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter