எனக்கு சமைக்கத்தான் வராதே தவிர, சாப்பிடும் கலையில் சந்தேகமின்றி வாகை சூடியவன். குவாலிடி கண்ட்ரோல் என்றொரு பணி இனத்தையே எவனோ என்னை ஒளிந்திருந்து பார்த்துத்தான் உருவாக்கியிருக்கிறான் என்ற ஐயம் எனக்குண்டு. சாதாரண சாம்பார், ரசமானாலும் ருசியில் அரை சிட்டிகை முன்னப்பின்ன இருந்தால் அந்தராத்மா அலாரம் அடித்துவிடும். இது வெறும் உப்பு-காரம் குறைபாடு சார்ந்தது மட்டுமல்ல. ஒரு ரசப்பாத்திரத்தைத் திறந்தால் வருகிற வாசனையைக் கொண்டு, வெறும் எண்ணெயில் தாளித்திருக்கிறதா, எண்ணெய்-நெய் கலந்து தாளித்திருக்கிறதா, அல்லது நெய்யில் மட்டும் தாளித்ததா, அப்படியானால் அது ஆவின் நெய்யா இதர உதிரி நெய்யினங்களைச் சேர்ந்ததா, தாளிப்பில் கடுகு எண்ணிக்கை அதிகமா, சீரக எண்ணிக்கை அதிகமா, உள்ளே நசுங்கிக் கிடப்பது நாட்டுத் தக்காளியா, பெங்களூர் தக்காளியா, காரம் அதிகமா, உப்பு குறைவா, உள்ளுறைப் புளியின் தராதரம் என்ன, கொட்டைப்பாக்கு அளவு போட்டிருப்பார்களா அல்லது டென்னிஸ் பந்து அளவுக்கு எடுத்துக் கரைத்துக் கொட்டியதா என்பதெல்லாம் கணப் பொழுதில் மனக்கண்ணில் ஓடி நிற்கும்.
ரத்தப் பரிசோதனை மையங்களில் ஒரு சொட்டு ரத்தம் எடுத்துக்கொண்டு ஏழெட்டு பரிசோதனை முடிவுகளை அச்சிட்டுக் கொடுப்பார்கள் அல்லவா? அந்த மாதிரிதான். ஒரு வினாடி மோப்பம் போதும். மொத்தமும் தெரிந்துவிடும். இது ஆயகலை இல்லாவிடினும் ஒரு தூய கலைதான்.
பன்னெடுங்காலமாக இக்கலையை நானே எனக்குள் வளர்த்து, அதன் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ந்து, நெகிழ்ந்து, பாராட்டி, பத்திரமாக யார் கண்ணுக்கும் தென்படாமல்தான் வைத்திருந்தேன். கொஞ்ச காலமாகத்தான் ஒரு பெரிய இருப்பியல் நெருக்கடி. யாரிடம் சொல்வது, எப்படி எடுத்துச் சொல்வது என்றுகூடப் புரியவில்லை.
என் மனைவி நன்றாகச் சமைப்பாள். நன்றாக என்றால், உண்மையிலேயே நன்றாக. என்றோ ஒருநாள் ருசி பங்கம் உண்டாகும், அளவுகள் தாறுமாறாகும் என்பதுகூடக் கிடையாது. எப்போதும் ஒரே தரம். அதுவும் சந்தேகமின்றி உயர்தரம். அப்பேர்க்கொத்த சமையற்கலை விற்பன்னரின் சமையலில் திடீரென்று சில நாள்களில் மட்டும் ஸ்டைல் மாறுபாடு தென்பட்டது. ஏதோ நடந்திருக்கிறது என்று தெரிந்தது. ஆனால் என்ன அசம்பாவிதம் என்று புரியவில்லை.
அவள் நகர்ந்து செல்லும் நேரங்களில் சமையற்கட்டுக்குள் சென்று ஆராய்ச்சி செய்து பார்த்தேன். ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்போதும் போல சமைத்த சுவடு தெரியாமல் மேடையைத் துடைத்து, அடுப்பைத் துடைத்து அழகூட்டிவிட்டுத்தான் போயிருந்தாள். ஸிங்க்கில் கிடக்கும் பாத்திரங்களைக் கொண்டும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் உணவில் ருசி மாற்றம் இருந்தது. அதில் சந்தேகமில்லை.
நாம் என்ன தினசரி நானாவித பட்சண பலகாரங்களுடன் ராஜ விருந்தா உண்கிறோம்? அதே சாம்பார், அதே ரசம், அதே கூட்டு-பொரியல்தான். மனைவியையும் மாற்றவில்லை. மளிகை சாமான் வாங்குகிற கடையையும் மாற்றவில்லை. பிறகெப்படி ருசி மாறும்?
மிகவும் யோசித்து, விடை கிடைக்காததால் அவளிடமே கேட்டேன். என்ன நடக்கிறது?
நேற்று சமைத்ததா? அது யூட்யூப் சாம்பார் என்று சொன்னாள்.
முருங்கைக்காய் சாம்பார், வெங்காய சாம்பார், முள்ளங்கி சாம்பார் தெரியும். யூட்யூப் சாம்பார் என்றால் என்னவென்று சிற்றறிவுக்கு எட்டவில்லை. பிறகு அவளே விளக்கம் சொன்னாள். அடுப்பில் குக்கரை வைத்து, ஒரு சாம்பாருக்கு வேண்டிய அனைத்தையும் ஒன்றாக அதில் கொட்டி, பருப்பையும் அதிலேயே போட்டு, தண்ணீரைக் கொட்டி மொத்தமாக மூடி வைத்துவிட்டால் போதும். ஒரு சில விசில்களில் யூட்யூப் சாம்பார் தயாராகிவிடும்.
யூட்யூபில் யாரோ ஒரு சமையற்கலை தாலிபன் இந்த ரெசிபியைச் சொல்லியிருக்க வேண்டும். வேலைச் சுருக்கம் கருதி தர்ம பத்தினிகள் இப்படித்தான் அதர்ம பத்தினிகளாகிறார்கள்.
எனக்கெல்லாம் யூட்யூப் என்றால் தினசரி காலை நடையின்போது ஒரு மணி நேர இளையராஜா பாடல்கள். இரவு எழுத உட்காருவதற்கு முன்னால் பத்து நிமிடம் குலாம் அலி அல்லது பத்து நிமிடம் மதுரை சோமு அல்லது பத்து நிமிடம் துவாரம் வெங்கடசாமி நாயுடு. வெட்டியாக இருக்க நேர்ந்தால் கவுண்டமணி செந்தில், வடிவேலு காமெடித் தொகுப்புகள். இதற்கு அப்பால் யூட்யூபைப் பயன்படுத்தியதேயில்லை. எவ்வளவு பெரிய காலப் பிழை!
அன்று முதல் யூட்யூப் என்னும் வேற்று கிரகத்தை அகழ்ந்தெடுத்துவிடுவது என்று முடிவு செய்துகொண்டேன். சரி ஆனது ஆயிற்று, சமையல் சானல்களிலேயே தொடங்குவோம் என்றால், என் மனைவி ஏராளமான சமையல் சேனல்களுக்கு ஏற்கெனவே சந்தாதாரி ஆகியிருந்தாள். நன்கு சமைக்கத் தெரிந்தவளுக்கு இதெல்லாம் எதற்கு?
கேட்டால், சும்மாதான் என்றொரு இலக்கியத்தரமான பதில் கிடைத்தது. சில சும்மாக்கள் ஆபத்து மிகுந்தவை. அவற்றைச் சும்மா விட்டுவிட முடியாது. சரி, என்னதான் இருக்கிறது பார்ப்போம் என்று அவள் சந்தா செலுத்தி வைத்திருந்த சில சானல்களை சும்மா ஓட்டிப் பார்க்க ஆரம்பித்தேன்.
ஒரு பையன். மிஞ்சிப் போனால் இருபத்திரண்டு, இருபத்து மூன்று வயது இருக்கும். அவன் ஒரு சமையற்கலை விற்பன்னன். அவனது சானலுக்கு பல லட்சக் கணக்கில் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். பார்க்க லட்சணமாக, கொழுகொழுவென்று வேகவைத்துத் தோலுரித்த பெரிய சைஸ் உருளைக்கிழங்கு போல இருக்கிறான். சீர்காழி பக்கத்தில் கண்டமங்கலமோ என்னவோ ஒரு ஊர். அங்கே அரண்மனை போல அவன் வீடு. அம்மா, அப்பா, சில மாடுகள், பெரிய காய்கறித் தோட்டம் எல்லாம் அங்கே இருக்க, இவன் இங்கே சென்னையில் தனியே ஒரு வீட்டில் தங்கி படித்துக்கொண்டோ, உத்தியோகம் பார்த்துக்கொண்டோ இருக்கிறான். தனக்கு வேண்டியதைத் தானே சமைத்துக்கொண்டு, அதை விடியோ எடுத்து சானலில் போட்டுக்கொண்டு சௌக்கியமாக வாழ்ந்து வருகிறான்.
இந்த முன்கதையைச் சொல்லி, அவனது விடியோ ஒன்றை என் மனைவி ஓடவிட்டாள்.
எளிய முறையில் மெதுவடை சுடுவது எப்படி?
இதுதான் சப்ஜெக்ட். மேற்படி பயலானவன் வடைக்குப் பருப்பை ஊறவே போடாதீர்கள் என்று சொன்னான். அரிசி களைந்து குக்கரில் வைப்பது போல, பருப்பை நன்றாகக் களைந்து அப்படியே மிக்சியில் போட்டு அடித்துவிடச் சொன்னான். மற்றபடி இதர சேர்மானங்களில் மாற்றம் ஏதுமில்லை. உள்ளங்கையில் தட்டி நடுவே ஒரு ஓட்டை போட்டு, எண்ணெய்யில் இட்டுப் பொரித்தெடுத்துக் காட்டினான். மட்டுமல்லாமல், தானே அந்த வடையை ஒரு கடி கடித்து, ‘வா….வ்! க்ரிஸ்ப்ப்ப்ப்பி!’ என்றும் சொன்னான்.
பிடித்தது சனி. அதைப் பார்க்கும்போதே என் மனைவியின் மனத்தில் ஒரு வடைப் புரட்சிக் காட்சி ஓடத் தொடங்கியிருக்க வேண்டும். எண்ணி இரண்டு தினங்களில் ஏதோ ஒரு விசேடப் பண்டிகை வந்து சேர, மேற்படி யூட்யூப் வடை ஃபார்முலாவை அன்றைக்கு அப்ளை செய்தாள். ஊற வைக்காமல் ஓட்டி எடுத்த பருப்பில் சுட்ட நெருப்பு வடை.
சுட்டெடுக்கும்போது பார்க்கப் பளபளவென்று நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கடிக்கும்போது கைமுறுக்கு கடிப்பது போல இருந்தது. கருமம் பிடித்த க்ரிஸ்பினஸ் இந்தளவுக்கு இருக்க வேண்டுமா? வடைக்கென்று ஒரு லட்சணம் இல்லையா? மேல் தோலின் கரகரப்பை உணரும்போதே மெத்தென்று ஒரு சுகம் பரவி, மாவு கரைந்துவிட வேண்டாமா?
சமையற்கலையில் பார்டர் பாஸ் பண்ணி உத்தியோகத்துக்கு வந்த யாரோ சில தண்ட பிரகஸ்பதிகள்தாம் மெதுவடைக்கு மிளகை அள்ளிப் போடும் வழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் மெதுவடையின் ருசி என்பது மிளகால் கூடுவதல்ல. மாறாக, இஞ்சியும் கொத்துமல்லியும் ஒன்று சேர்ந்து உள்ளே ஒரு வேதிவினை புரியும்படியாக வைத்து, சாஸ்திரத்துக்கு இரண்டு மூன்று மிளகைத் தட்டிப் போட்டால் போதுமானது. இதையெல்லாம் சொன்னால் யார் கேட்கிறார்கள்? யூட்யூப் விற்பன்னர்கள் கொத்துமல்லி சேர்ப்பதே இல்லை.
இந்த லட்சணம் இப்படியே தொடர்ந்தால் இந்தியா எப்படி வல்லரசாகும்?
இருக்கட்டும். இது இன்னொரு பெண்மணியின் யூட்யூப் சானல். அம்மணி தினசரி அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, மங்களகரமாக மேக்கப் போட்டுக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்துவிடுகிறார். அவரது பாடிகார்ட் முனீஸ்வரனான அவரது கணவர் பின்னாலேயே கேமராவைத் தூக்கிக்கொண்டு உடன் வந்துவிடுகிறார். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் பொறியியல் படிக்கிறான். சின்னப் பெண் ப்ளஸ் டூவோ என்னவோ. அது சரியாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு நாளும் ஒரே விதமான அறிமுகத்தைத்தான் அந்தப் பெண்மணி சொல்லி ஆரம்பிப்பார். இன்று எழுந்ததே தாமதம். ஆறு மணிக்குப் பையன் கல்லூரிக்குக் கிளம்பியாகவேண்டும். அதற்குள் காலை டிபன், மதியச் சாப்பாடு இரண்டையும் சமைத்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு கவலைப்பட்டு இரண்டு வரி பேசிவிட்டு, புருஷனும் பெண்டாட்டியுமாக டீ போட்டு எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குப் போய்விடுவார்கள். அங்கே நின்ற வாக்கில் டீ குடித்துக்கொண்டு இயற்கையைச் சிறிது ரசிப்பார்கள். டீ காலியாகும் நேரத்தில் புருஷோத்தமர் பதறுவார். தாமதமாகிவிட்டதே. பையன் கிளம்பவேண்டுமே? இன்றைக்கு என்ன சமைக்கப் போகிறாய்?
அவர் தவறாமல் கேட்கும் இக்கேள்விக்கு அம்மணியும் தவறாமல் ஒரே பதிலைத்தான் சொல்வார்.
‘தெரியலியே. பாப்போம். எதையாவது ஒண்ண செஞ்சி அனுப்பி வெப்போம்.’
மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்ததும் நான்கு வெங்காயங்களைப் பொடிப்பொடியாக நறுக்குவார். நான்கு தக்காளிப் பழங்களை நறுக்குவார். குக்கரில் அரிசி போட்டு நீரூற்றி அடுப்பில் வைப்பார். இன்னொரு அடுப்பில் சிக்கன் அல்லது மீன் அல்லது மட்டன் வேகும். அதில் மஞ்சள் பொடி போடுவார். மசாலாப்பொடி போடுவார். இஞ்சி பூண்டு பேஸ்ட் போடுவார். ஏதாவது ஒரு காய் நறுக்குவார்.
இந்தப் பணிகள் நடக்கும்போதே கணவருடன் லொடலொடவென்று என்னத்தையாவது பேசிக்கொண்டிருப்பார். அவரும் சலிக்காமல் மொக்கை ஜோக்குகள் சொல்வார்.
வாரத்தில் மூன்று நாள்களாவது பிரியாணி செய்துவிடுவார். ஒரு நாள் சிக்கன் குழம்பு. ஒருநாள் மட்டன் குழம்பு. ஒரு நாள் மீன் குழம்பு. மீன் சமைக்கும் தினங்களில் பாதி மீன்கள் குழம்பில் மிதக்கும். மீதி மீன்கள் வறுபட்டு வாழும். தவிர சப்பாத்தி, பூரி, இட்லி என்று நாளுக்கொரு டிபன்.
இங்கேதான் கவனிக்க வேண்டும். கல்லூரிக்குக் கிளம்பும் பையனுக்காகச் சமைக்கிறேன், பள்ளிக்குப் போகும் பெண்ணுக்குப் பிடித்ததைச் சமைக்கிறேன் என்றுதான் சொல்லுவார். ஆனால் சமைத்து முடித்ததும் அனைத்தையும் தட்டில் எடுத்துப் போட்டுக்கொண்டு அவரே உட்கார்ந்து சாப்பிட்டு முடித்துவிடுவார்.
இது ஏதடா நூதன வினோத அன்னையாக இருக்கிறாரே என்று முதலில் வியப்பாக இருந்தது. இதனினும் கொடூரம் ஒன்றுண்டு. இப்படி ரவுண்டு கட்டிச் சாப்பிட்டும் தான் மட்டும் எப்படி குண்டடிக்காமல், கட்டுடல் குலையாமல் அப்படியே இருக்கிறோம் என்பதில் ஒரு ரகசியம் உண்டு என்று பல காலமாகச் சொல்லி வருகிறார். நானும் பத்துப் பதினைந்து விடியோக்கள் அவருடையதைப் பார்த்துவிட்டேன். அந்த ஒரு ரகசியத்தை மட்டும் சொல்ல மாட்டேனென்கிறார். மற்றபடி பண்டைய ராஜ்கிரணுக்கு நிகராக எலும்பு கடிப்பதில் ஆரம்பித்து, தானே சமைத்துத் தானே உண்ணும் கலையின் சகல சாத்தியப்பாடுகளையும் சொல்லிக்கொடுத்துவிடுகிறார்.
ஊரறிந்த சமையற்கலைஞர் வெங்கடேச பட்டரும் ஒரு சானல் வைத்திருக்கிறார். உள்ளதிலேயே ப்ரொஃபஷனலான கிச்சன் என்று அவருடையதைத்தான் சொல்ல முடியும். வெங்கடேஷ் பட் சமைப்பதுடன் நிறுத்திக்கொள்வதில்லை. அவரே ஒரு சமையல் பாத்திரக் கடையும் வைத்திருக்கிறார். காய்கறி நறுக்கும் மணைப் பலகைகள், கத்தி கபடா வகையறாக்கள், காப்பி டிக்காஷன் போடும் ஃபில்டர், டபரா தம்ளர் தொடங்கி விதவிதமான பாத்திரம் பண்டங்களை ஒவ்வொரு விடியோவிலும் அறிமுகப்படுத்துவார்.
என்ன இருந்தாலும் நட்சத்திரக் கலைஞர் அல்லவா? அடுப்பு ஒரு கம்பெனி, எண்ணெய் ஒரு கம்பெனி, பருப்பு ஒரு கம்பெனி, மிக்சி ஒரு கம்பெனி என்று ஒரு சமையல் மேடையில் நானாவித ஸ்பான்சர்களும் வந்து உட்கார்ந்திருப்பார்கள். என் மனைவி சொன்னாள். வெங்கடேஷ் பட் சமைப்பதைப் பார்த்து ரசிக்கலாமே தவிர, செய்ய முயற்சி செய்யக்கூடாது.
என்ன அக்கிரமம் இது. அவர் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் சமைக்கப்படும் அற்புதங்களைத் தேடித் தேடிச் செய்து காட்டுகிறார். பஞ்சாபி, குஜராத்தி, ராஜஸ்தானி சமையல் முதல் நமது பாரம்பரிய உணவு வகைகள் வரை எதையுமே விடுவதில்லை. தவிரவும் வெங்கடேஷ் பட்டின் செய்முறை பார்க்கச் சுலபமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் ஏன் முடியாது? அல்லது கூடாது?
இதற்கு இன்னும் எனக்கு விடை வந்தபாடில்லை. எனவே என்றைக்காவது அவள் வெளியே போயிருக்கும் நேரத்தில் நானே ஒரு பரீட்சை அல்லது விஷப் பரீட்சை செய்து பார்த்துவிட உத்தேசித்திருக்கிறேன்.
இக்கட்டத்தில் ஒரு முக்கியமான குடும்பத்தை உங்களுக்கு நான் அறிமுகம் செய்தே தீரவேண்டும். இந்தக் குடும்பத்தின் ரேஷன் கார்டு உறுப்பினர்கள் மொத்தம் ஐந்து பேர். ஆனால், இவர்கள் வெளியிடும் சமையல் வீடியோக்களில் கௌரவ நடிகர்களாக ஒவ்வொரு நாளும் பலப்பல உறவினர்கள் வருவார்கள். ரெசிபியோ, இதர நூதன விசேடங்களோ இவர்களது நிகழ்ச்சியில் இருக்காது. ஒவ்வொரு நாளும் வீட்டில் என்ன சமைத்தோம் என்பதை மட்டும் சொல்லிக்கொண்டே, சமைத்த பாத்திரங்களைத் திறந்து காட்டுவார்கள்; அவ்வளவுதான். இதற்கு அவர்களுக்கு நான்கு லட்சம் சந்தாதாரிகள் இருக்கிறார்கள்.
ஒரு சாம்பிள் விடியோ காட்சியைப் பாருங்கள்:
‘அம்மா, இன்னிக்கென்ன தளிகை?’
‘சுட சுட சாதம்.’
‘ஓகே?’
‘கத்திரிக்கா, குடமிளகாய் போட்டு அரைச்சுவிட்ட சாம்பார்..’
‘ஓ…’
‘வெண்டைக்காய் போட்டு மோர்க்குழம்பு.’
‘யம்மீஈஈஈஈஈ.’
‘பீன்ஸ் பருப்புசிலி.’
‘வாவ்.’
‘அப்பளம்..’
‘சரி..’
‘அவ்ளதான் இன்னிக்கு நம்மாத்து தளி…கை.’
இது அம்மா சமைத்தால் மகள் கேட்டு விசாரித்துப் போடுகிற விடியோ. இதே மாதிரி ஒருநாள் அந்த அம்மாளின் மருமகள் சமைப்பாள். அதை மாமியாரே என்கொயரி செய்வார். இன்னொரு நாள் மாமனார் சமைப்பார். மருமகள் கேட்டுப் பட்டியலிடுவார். வேறொரு நாள் சம்மந்தி வீட்டுக்குப் போய் அங்கேயும் இதே ஆட்டம் போடுவார்கள். இன்னொரு நாள் அச்சம்மந்தியானவர் இங்கே வருவார், அவரும் இதே பாட்டைப் பாடுவார்.
அதெப்படிக் குடும்பம் குடும்பமாகக் கூடி கும்மியடிக்கிறார்கள் என்று ஒவ்வொரு விடியோவிலும் வியந்து வியந்து பார்க்கிறேன். இதில் விசேடம் என்னவென்றால் அந்தப் புதிய மருமகள் ஆந்திராக்காரி. அவளது சமையலில் காரம் சிறிது தூக்கலாக இருக்கும். ஒருநாள் அவள் எதையோ சமைப்பதை அருகே இருந்து பார்த்துக்கொண்டிருந்த மாமியாராகப்பட்டவர், அவள் கடாயில் உடைத்துப் போட்ட குண்டு மிளகாய்களின் எண்ணிக்கையைப் பார்த்தே கண்ணீர் சிந்தினார். ‘நாங்கல்லாம் இவ்ளோ காரம் சாப்பிடுறதில்லம்மா’ என்று நல்லவிதமாகத்தான் சொன்னார். அந்தப் பெண் ஒரு உத்தம விவரசாலி. ‘அப்படியாம்மா? ஆனா நான் சாப்டுவேன்’ என்று சொல்லிவிட்டது.
ஓர் உத்தேசமான கணக்கெடுப்பில் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐம்பது முதல் எழுபத்தைந்து தமிழ்ப் பெண்மணிகள் யூட்யூபில் சமையல் விடியோக்களைப் போடுகிறார்கள் என்று தோன்றுகிறது. அதாவது அன்று அவர்கள் வீட்டில் என்ன சமைக்கிறார்களோ, அதை அப்படியே படமெடுத்துப் போடுவது. இவர்கள் அனைவருக்கும் ஆகக் குறைந்தது ஒரு லட்சம் சந்தாதாரர்கள் எப்படியோ சேர்ந்துவிடுகிறார்கள்.
இன்னொரு ஜாதி இருக்கிறது. இது வார இறுதி உணவுப் புரட்சியாளர்கள் கூட்டம். இவர்கள் சமைப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு விடுமுறை நாளிலும் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மெஸ்கள், கையேந்தி பவன்களுக்குச் சென்று சாப்பிட்டுப் பார்த்துவிட்டு, வடை வாவ், அரிசி உப்புமா அருமை, சூப் சூப்பர், வெங்காய பக்கோடா வேற லெவல் போன்ற நற்செய்திகளை அறிவித்துவிட்டு வருகிறார்கள். இதில் ஒன்றிரண்டு பயங்கரவாதிகளும் உண்டு. கார் எடுத்துக்கொண்டு திருச்சி, திருவானைக்கோயில், கோயமுத்தூர், குனியமுத்தூர், சேலம், நாமக்கல் என்று பிராந்தியவாரியாகச் சென்று பீறாய்ந்து உண்டு திரும்புகிறவர்கள்.
நான் பார்த்த சமையல் விடியோக்களில் ஒருவர் மட்டும் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கிறார். அவர் பெயர் தீனா. யாரிடமெல்லாம் அபூர்வமான சமையல் ரெசிபிகள் உள்ளன? புராதனமானதாகவும் இருக்கலாம், புத்தம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால் அபூர்வமானதாக இருக்க வேண்டும். அப்படி என்னத்தையாவது ரகசியமாகப் பாதுகாத்து வருபவர்கள் அவருக்கு எழுதி அனுப்பினால், எந்த ஊரானாலும் அவர் தேடி வருவார். சம்பந்தப்பட்ட பெண்களையே சமைக்கச் சொல்லிப் படமெடுத்துப் போடுகிறார். இந்தச் சிறிய மெனக்கெடல் அந்நிகழ்ச்சியை அலங்கரித்துவிடுகிறது.
நிற்க. இந்தக் கட்டுரையின் இக்கட்டத்தை எழுதிக்கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் அழைத்தார். ஏதேதோ பேசிக்கொண்டிருந்தவர் சட்டென்று ஒரு சங்கதி சொன்னார்.
‘இப்பல்லாம் வீட்ல யாரும் சமைக்கறதே இல்ல தெரியுமா? ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது ஸ்விகி, ஸொமட்டோல ஆர்டர் போட்டுடறாங்க.’
சிறிது யோசித்துப் பார்த்தேன். எந்தச் சாலையில் சென்றாலும், எந்த சிக்னலில் நின்றாலும் மேற்படி உணவு சப்ளை ஊழியர்கள் நாலைந்து பேரையாவது பார்க்காதிருப்பதில்லை. நான் வசிக்கும் அடுக்குமாடி அச்சுவெல்ல அப்பார்ட்மெண்ட் வளாகத்திலேயே நிமிடத்துக்கொரு உணவு சப்ளையர் வந்து போகிறார். யாருக்கும் சமைக்க விருப்பமில்லை அல்லது சமைக்க நேரமில்லை அதுவும் இல்லாவிட்டால் சமைக்கத் தெரியவில்லை.
அதுதான் உண்மை என்றால் முன்சொன்ன யூட்யூப் சமையல் பயில்வான்களுக்கு எங்கிருந்து அல்லது எதற்காக அத்தனை லட்சம் சப்ஸ்கிரைபர்கள் வருகிறார்கள்?
அதுதான் தெரியவில்லை. இத்தலைமுறைக்கே பார்த்தால் பசி தீர்ந்துவிடுகிறது போலிருக்கிறது.
நன்றி: விகடன் தீபாவளி மலர் 2023