அறுக்கமாட்டாதவன்

எழுதத் தொடங்கிய காலத்தில் பெரும்பாலும் நானொரு கைவலிய நவநீதனாகத்தான் இருப்பேன். என் அளவுக்கே குண்டான பேனாக்களைப் பிடிக்க முடியாமல் பிடித்துக்கொண்டு நான்கைந்து மணி நேரம் இடத்தை விட்டு நகராமல் அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். வலி, விரல்களில் இருந்து முழங்கை வரை நீண்டு தொடும்போது சிறிது நேரம் ஓய்வு. பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தால் தோள்பட்டை வலிக்கும்வரை எழுதுவேன். கைவலி உச்சம் தொடும்போது அது கழுத்து வலியாக உருமாற்றம் பெறும். பின்னர் அது முதுகு வலியாகும். இறுதியில் இடுப்பு வலியாகி இறங்கிச் செல்லும்.

முதலில் சிறிது சிரமமாக இருந்தது. பிறகு வலி என்பது எழுதுவது என்ற செயல்பாட்டின் ஓரங்கம் என்று எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டேன். கம்ப்யூட்டரில் எழுத ஆரம்பித்த பிறகு விரல் வலி, முழங்கை வலி போன்றவை இல்லாமல் போயின. அது அளித்த ஆசுவாசம் விவரிக்க முடியாதது. ஆனால் கழுத்து வலி இருந்தது. இரண்டு முதல் மூன்று மணி நேரம் இடைவெளியின்றி எழுதிக்கொண்டிருக்கும்போது வலிக்கத் தொடங்கும். ஆறேழு மணி நேரம் தாண்டினால் கொன்று எடுத்துவிடும்.

ஒரு கட்டத்தில் என்னுடைய எழுதும் மேசையின் உயரத்தைக் குறைத்துவிட வேண்டும் என்று தோன்றியது. அதாவது, உலக மேசை இலக்கண உயரம் என்பது இரண்டே கால் அடி என்றால் நான் அந்தக் காலடியை நீக்கிவிட முடிவு செய்தேன். ஏனென்றால் கம்ப்யூட்டர் மேசைகளில் கீபோர்ட் இருக்கும் டிரேவின் உயரம் இரண்டடி. அதற்கு மேலே ஓரடுக்கில்தான் டெஸ்க்டாப் வைப்பார்கள். சாதாரண மேசையில் லேப்டாப் வைத்து எழுதும்போதும் அதே இரண்டடி உயரம்தானே இருக்க வேண்டும் என்பது என் லாஜிக்.

இதன்படி வீட்டிலும் அலுவலகத்திலும் என் மேசையின் கால்களைக் காலடி வெட்டிக் கழித்தேன். இதன்மூலம் கைகளை அதிகம் அசைக்காமல் பிள்ளையார் தனது தொந்திக்கு அருகே மோதகக் கிண்ணம் வைத்திருப்பது போலவே கரங்களை வைத்திருக்கவும், விரல்களை மட்டும் அசைத்து வேலை பார்க்கவும் வசதி உண்டானது.

மேசை இரண்டடி என்பதால் நாற்காலியின் இருக்கைப் பகுதி ஒன்றே முக்காலடி உயரத்தில் இருக்கும்படி அமைத்துக்கொண்டேன். புத்தி எங்கே பறந்தாலும் கால் தரையில் நிற்க வேண்டும் என்கிற தத்துவத்தை நம்புபவன் என்பதால் இந்த ஏற்பாடு.

இந்த முன்னேற்பாடுகள் அனைத்தும் நல்ல பலனளித்தன. சந்தையில் காணக்கிடைக்கும் என்னுடைய எழுபத்திரண்டு புத்தகங்களில் அநேகமாக அறுபது புத்தகங்கள் இதன்பிறகு எழுதப்பட்டவைதாம்.

ஆனால் பல்லாண்டு காலப் பயன்பாட்டில் இந்த இரண்டடி உயர ஏற்பாடு வேறு விதமான சிக்கல்களை உண்டாக்கத் தொடங்கிவிட்டன. முன்னர் கழுத்து வலி, முதுகுவலி, இடுப்பு வலி என்று பிராந்தியவாரியான பிரச்னைகளைத் தனித்தனியே கவனித்துச் சரி செய்ய முடிந்தது. இப்போது வலி மிகும் இடங்களென ஒரு சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடிவதில்லை. வலிக்கத் தொடங்கினால் எல்லா இடங்களிலும் வலிக்கும். வலிக்காவிட்டால் எங்கும் இல்லை.

என்ன சிக்கல் என்றால் வலிக்காத நாள்கள் மாதம் ஒன்றோ இரண்டோதான் இருக்கும். அநேகமாக அன்றைக்கு அரை மணி நேரம்கூட எழுதியிருக்க மாட்டேன்.

வீட்டில் இது குறித்துக் கடும் கண்டனங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. மரியாதையாக மேசையின் உயரத்தை அதிகரிக்கும்படியாக மேலிடம் சொல்கிறது. வெட்டி எடுப்பதில் இருந்த எளிமை, வைத்துத் தைப்பதில் நிச்சயம் இருக்காது. மேசைகளை மாற்ற வேண்டும். ஆல்டர் செய்த மேசைகளும் அடுத்தவர்களுக்குப் பயன்படாது. என்னைப் போல் யாராவது கிறுக்கன் கிடைக்காமல் போகமாட்டான் என்றாலும் காலக்கிரமத்தில் அவனுக்கு வரக்கூடிய வலிகளின் பாவக் கணக்கை நான் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.

முன்னொரு காலத்தில் தரையில் கால் நீட்டி அமர்ந்து ஒரு கணக்குப் பிள்ளை மேசையின்மீது தாள் வைத்து எழுதுவேன். அந்தத் தரை மேசையைக் கூட ஆள் வைத்துப் பிரத்தியேகமாக என் தொப்பை இடிக்காத உயரம் பார்த்துத்தான் செய்தேன். மீண்டும் அப்படியொரு ஏற்பாட்டுக்கே சென்றுவிடலாமா என்று இப்போதெல்லாம் அடிக்கடித் தோன்றுகிறது.

அறுக்க மாட்டாதவனுக்கு ஆயிரத்தெட்டு அருவாள், ஆடத் தெரியாதவளுக்குக் கூடம் கோணல் போன்ற பழமொழிகளெல்லாம் தமிழில் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரமே அதையும் செய்து பார்த்திருப்பேன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter