ஒரு நபர் கமிஷன்

ஒரு முழு நேர எழுத்தாளனாக இருப்பதில் எழுத்து-வருமானத்துக்கு அப்பால் வேறு சில அசௌகரியங்கள் இருக்கின்றன. நானாக யாரிடமும் சென்று எப்போதும் பேசுவதில்லை என்றாலும் வம்படியாக வந்து பேசுவோருக்கு பதில் சொல்ல வேண்டியதாகிவிடுகிறது.

கடந்த வாரம் ஒரு நாள் காலை நடைப் பயிற்சியின்போது (அன்றைக்குப் பார்த்து எட்டரைக்கு நடக்கச் சென்றேன்.) ஒருவர் வேகவேகமாக அருகே வந்து வணக்கம் சொன்னார்.

‘சார், அன்னிக்கு ஒரு நாள் ஆபீஸ் போயிட்டிருக்கேன்னு சொன்னிங்களே…’

‘ஆமா?’

‘இன்னிக்கு வியாழன் தானே? லீவு போட்டுட்டிங்களா?’

‘அது என் ஆபீஸ் சார். நான் போனால்தான் ஆபீஸ். இல்லாவிட்டால் மூடியிருக்கும்’ என்று சொன்னது அவருக்குப் புரியவில்லை. எனவே, ‘இன்னிக்கு நைட் டூட்டி சார். ஈவ்னிங் போவேன்’ என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டேன்.

இது பரவாயில்லை. தீபாவளி அன்று இரவு மகளுடன் புஸ்வாணம் வைக்க வீட்டை விட்டு வெளியே வந்தேன். வளாகத்தில் வசிக்கும் ஒரு முதியவர் வேலை மெனக்கெட்டு அருகே வந்து, ‘இப்பத்தான் என் மருமக சொன்னா நீங்க ஒரு ரைட்டர்னு. எனக்கு யாராவது ரைட்டர்னு சொன்னாலே கல்யாணப் பரிசு தங்கவேலுதான் ஞாபகத்துக்கு வருவார். பைரவன் சேவை நாட்டுக்குத் தேவை!’ என்று சொல்லிவிட்டு அவரே ஹஹஹா என்று சிரிக்கவும் செய்தார்.

ஏற்கெனவே என் அப்பா காலம் தொட்டு என்னைப் பல சந்தர்ப்பங்களில் கல்யாணப் பரிசு தங்கவேலு என்று வீட்டார் அழைத்துக் கடுப்பாகியிருக்கிறேன். இந்த முன்பின் தெரியாத கிழவனாரை என்ன செய்யலாம்?

‘எக்ஸாட்லி. நானும் அவர மாதிரிதான் சார். வீடு போரடிச்சா பார்க் போயிடுவேன். பார்க் போரடிச்சா ஓட்டலுக்குப் போயிடுவேன். எல்லாமே போரடிச்சா வீட்டுக்கு வந்துடுவேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன்.

நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதம் மனிதத் தொடர்பே இல்லாமல் விலகித்தான் இருக்கிறேன். நண்பர்கள், உறவினர்கள், சினிமா, மால் எதுவுமில்லை. யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பதுமில்லை, யாருக்கும் எதுவும் செய்வதுமில்லை. என் எழுத்து, என் பத்திரிகை, அது தொடர்பான வேலைகளுடன் சரி. அது தொடர்பானவர்களுடன் உரையாடுவதுடன் சரி. கதவோரம் ஊர்ந்து செல்லும் ஒரு மரவட்டை போல, காம்பவுண்ட் சுவரோரம் நகர்ந்து போகும் ஒரு நத்தையைப் போலத்தான் இருக்கிறேன். அப்படியும் விடாப்பிடியாக வந்து வம்பு வளர்க்கும் நல்லவர்களை என்ன செய்ய?

இன்றைக்குக் காலை மெட்ராஸ் பேப்பரை வெளியிட்டுவிட்டு ஆபீஸ் போகக் கிளம்பினேன். ஒன்றிரண்டு மீட்டிங்குகள் இருந்தன. தவிர சில எழுத்து வேலைகள். வங்கி வேலைகள். பொறுமையாக எல்லாவற்றையும் எடுத்துப் பையில் வைத்துக்கொண்டு எதையும் மறந்துவிடவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு புறப்பட்டபோது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. பாண்ட்ஸ் சிக்னல் தாண்டும்போது திடீரென்று மழை பிடித்துக்கொண்டது.

போதாக் குறைக்கு மீனம்பாக்கம் அருகே ஒரு லாரி விபத்தாகியிருப்பதாக ஒருவர் போகிற போக்கில் சொல்லிச் செல்ல, மழையில் எதற்குக் கஷ்டப்பட வேண்டும் என்று அப்படியே திருநீர்மலை சாலையில் திரும்பி, இரட்டை மலை சீனிவாசன் சந்து வழியாக வீட்டுக்கு வந்துவிட்டேன்.

இதனை இயற்கை தந்த விடுமுறை என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்காவது வெளியே கிளம்பினானே என்று மகிழ்ச்சியடைந்திருந்த மனைவியை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கிய கோபம் நிச்சயமாக இருக்கும். அதைப் பெரிதாக்கும் விதமாக ஒன்றும் சொல்லிவிடக் கூடாது என்பதால் நல்லவன் போலவே, ‘உனக்கு எதாவது ஹெல்ப் பண்ணட்டுமா? நீ என்ன சாப்பிடப் போற? ரெண்டு தோசை சுட்டுத் தரட்டுமா?’ என்று கேட்டேன். அதெல்லாம் வேண்டாம், வேலையைப் பார் என்று சொல்லிவிட்டாள்.

நான் பார்ப்பதற்கு இருக்கும் வேலைகளைப் பற்றிய தெளிவு அவளைத் தவிர இந்த உலகில் வேறு எவருக்கும் இல்லை.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி