மங்கலப் பற்றாக்குறை

திருமணங்களுக்குச் செல்லும்போதும் அதைப் போன்ற பிற மங்கல நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போதும் புத்தகங்களையே பரிசுப் பொருளாகத் தர வேண்டும் என்று விரும்புவேன். கடைக்குச் சென்று நல்ல புத்தகமாகத் தேடிப் பார்த்து வாங்கிப் பரிசளித்த தருணங்கள் ஒன்றிரண்டு உண்டு. பெரும்பாலும் அதற்கு நேரம் இருக்காது என்பதால் கடைசி நேரத்தில் என்னுடைய புத்தகம் ஏதேனும் ஒன்றை வண்ணத்தாளில் சுற்றித் தரும்படி ஆகிவிடும்.

என்னுடைய புத்தகங்கள் படிப்போரை ஏமாற்றாதவை என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் பரிசளிப்பதற்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் அவற்றுக்குக்கு உண்டா என்பதில் எப்போதும் ஐயம் ஏற்படும். உறவினர் திருமணங்கள் என்று வருமானால் யோசிக்கவே அவசியமில்லை. நிச்சயமாகப் புத்தகம் கிடையாது. ஏனெனில் அவ்வளவு பெரிய தகுதி என் தரப்பில் எந்த உறவினருக்கும் கிடையாது. சிக்கலெல்லாம் உறவல்லாத பிற நல்லவர்கள் வீட்டுத் திருமணங்களின்போது வருவதுதான்.

நண்பர்கள் வீட்டுத் திருமணங்களுக்கு நான் பொலிக பொலிகவைப் பரிசுப் புத்தகமாகத் தருவதை வழக்கமாக வைத்திருந்தேன். அந்தத் தலைப்பின் மங்கலம் கருதி. ஒருநாள் என் மகள் அந்தப் புத்தகத்தை இனிமேல் திருமணப் பரிசாகக் கொடுக்காதே என்று சொன்னாள். அதிர்ச்சியாகி, ஏன் என்று கேட்டேன்.

‘தலைப்பா முக்கியம்? பெண்டாட்டியைத் தவிக்க விட்டுவிட்டு சன்னியாசியாகி ஓடியவர் எத்தனை பெரிய ஆள் ஆனாலும் பொறுப்பற்ற மனிதர் அல்லவா? புதிதாகத் திருமணமானவர்களுக்கு அவர் வாழ்க்கை எதற்கு?’ என்று கேட்டாள்.

நெடுநேரம் எனக்குப் பேச்சே வரவில்லை. பிறகும்கூட அவளுக்குப் பதில் சொல்லவில்லை. ஆனால் அடுத்தத் திருமணத்துக்குச் சென்றபோது யதியைப் பரிசுப் பொதியாக்கி எடுத்துக்கொண்டு சென்றேன். இம்முறை என் மனைவி சொன்னாள், ‘அது திருமணப் பரிசுக்கு லாயக்கே இல்லாத புத்தகம். நான்கு அயோக்கிய ராஸ்கல்களின் கதை. நான்கு பேரும் ஒரே பெண்ணைத் திருட்டுத்தனமாகக் காதலித்தவர்கள். அதில் ஒருவன் திருமணம் வரை சென்று ஏமாற்றியவன். அவளது தற்கொலைக்கே காரணமாக இருந்துவிட்டுப் பிறகு வாழ்க்கை முழுக்க ஹரே கிருஷ்ணா ஹரே ராமா என்று சொல்லிக்கொண்டிருக்கிறான். அவனையெல்லாம் கட்டி வைத்து உதைக்க வேண்டாமா?’

இதுவும் அதிர்ச்சியளித்தது. இதற்கும் நான் பதில் சொல்லவில்லை. இறவானைச் சிந்தித்துப் பார்த்தேன். அருமையான இசைக்கலைஞனின் வாழ்க்கை. ஆனாலும் தோற்ற கதை. தவிர அவனும் ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்திருக்கிறான். கபடவேடதாரியைத் தரலாம் என்றால் தலைப்பே புதிய கணவனின் கல்யாண குணங்களைச் சொல்வதாக மணப்பெண் நினைத்துவிடும் அபாயமுண்டு. பூனைக்கதை, கொசு, அலகிலா விளையாட்டு போன்ற நாவல்களில் பிழியப் பிழிய உக்கிரமும் அக்கிரமங்களும்தான் கொட்டும்.

வம்பே வேண்டாம் என்று நான் ஃபிக்‌ஷன்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க நினைத்தால் எல்லாம் ரத்த வகையறா. டாலர் தேசம் வட கொரியா போன்ற புத்தகங்களில் ரத்தம் கிடையாதென்றாலும் அதைக் காட்டிலும் கொடூரங்கள் அதிகமுண்டு.

எண்ணிப் பார்த்தால், சாத்வீகமாக எதையுமே எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஒன்றே ஒன்று இருக்கிறது. வீட்டோடு மாப்பிள்ளை. படிக்கத் தொடங்கினால் முடிக்கும்வரை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும். தலைப்பும்கூட பரிசாகக் கொடுப்பதற்கு ஏற்றாற்போலத்தான் உள்ளது. சிக்கல் என்னவென்றால் மணப்பெண்ணோ அவளது தந்தையோ அதைப் படிக்கக் கூடாது. படித்துவிட்டால், புதிய மாப்பிள்ளையின் வாழ்க்கை நிச்சயமாகக் கேள்விக்குறியாகிவிடும். அவன் ஒரு லட்சியவாதியாகவும் இருந்துவிடுவானேயானால் செத்தான்.

ஜெயமோகன், தன்னுடைய ஒரு நாவலை மங்கல நாவல் என்றே குறிப்பிடுகிறார். மனுஷ்யபுத்திரனின் பல கவிதைத் தொகுப்புகள் திருமணப் பரிசாகத் தருவதற்குத் தகுதி வாய்ந்தவை. எஸ்ராவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். கெட்டத்தனமே இல்லாத புத்தகங்கள். அசோகமித்திரன், வண்ணதாசன், பாவண்ணன், மகுடேசுவரன் என்று ஜீவகாருண்ய எழுத்துக் கலைஞர்கள் பலர் தமிழில் உண்டு. நான் மட்டும்தான் திருமணப் பரிசாக அளிப்பதற்கு ஏற்ற ஒரு புத்தகத்தைக்கூட இதுவரை எழுதவேயில்லை. இம்மாதம் அடுத்தடுத்து நிறையத் திருமணங்கள் வருகின்றன. ஒவ்வொரு வார இறுதியிலும் குறைந்தது ஒரு திருமணத்துக்காவது போகவேண்டியிருக்கிறது. எனவே வாரம்தோறும் இது குறித்த குற்ற உணர்வும் அவமான உணர்வும் மேலோங்கிவிடுகின்றன.

சலம் வெளியானதும் இந்தப் பிரச்னை தீர்ந்துவிடுமா என்றால் அதிலும் சந்தேகமாக இருக்கிறது. என் மனைவி அதற்கும் தடை சொல்லலாம்.

‘அந்நாவலில் பெண்களே இல்லை. ஏவல், வசியம் எல்லாம் வருகிறது. தவிர இரண்டு பெண் பேய்கள் வருகின்றன. அது வேண்டாம். வேறு எழுது.’

வாட்சப் சேனலில் எழுதிக்கொண்டிருக்கும் ‘குறளும் பொருளும்’ நிறைவடைந்தாலொழிய இந்தச் சிக்கலுக்குத் தீர்வில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அது முடிய இன்னும் நான்கு வருடங்களாகிவிடும்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading