நகைச்சுவை

நான் மில்லியனர் ஆகப் போகிறேன்.

அன்பின் மூசா முகமது,

உங்கள் அஞ்சலுக்கு நன்றி. சர்வதேச வர்த்தக ஆய்வு நிறுவன டைரக்டரிக்கு என் மின்னஞ்சல் எப்படிச் சென்றது என்று தெரியவில்லை. பாருங்கள், நான் எவ்வளவு பெரிய அப்பாடக்கார் என்பது எனக்கே தெரியாதிருக்கிறது.

அது நிற்க. இருபத்திரண்டு மில்லியனில் நாற்பத்தைந்து சதமானப் பங்கு என்பது பெரிய தொகை மட்டுமல்ல. உங்கள் பரந்த உள்ளத்தையும் காட்டுகின்றது. இந்தப் பணம் எனக்குக் கிடைத்துவிடும் பட்சத்தில் கன்யாகுமரியில் கொஞ்சம் நிலம் வாங்கி தோட்டம் போட்டு (பம்ப் செட்டுடன்) வீடு கட்டிக்கொண்டு போய்விடுவேன். அல்லது கொடைக்கானல்கூட எனக்குப் பிரச்னை இல்லை. என்றாவது தமிழக அரசு வீடு தர முடிவு செய்து விருப்பமான இடம் எதுவென்று கேட்டால் இதைத்தான் சொல்ல இருக்கிறேன்.

நீங்கள் அனுப்புவதில் மிச்சப் பணத்தைத்தான் இங்கே வங்கியில் போட அச்சமாக இருக்கிறது. என்றைக்கு எந்த வங்கி திவாலாகும் என்று தெரியவில்லை. சரி, பணமாகவே மூட்டை கட்டிப் பரணில் வைத்திருக்கலாம் என்றால் ஜி அவர்கள் எப்போது செல்லாது என்று அறிவிப்பார் என்றும் தெரியாது.

ஒரு மாற்று வழி தோன்றுகிறது. அமெரிக்கா, இந்தியா நீங்கலாகப் பிற தேசங்களின் கிண்டில் புத்தக ராயல்டித் தொகை சேதாரமில்லாமல் எனக்கு வந்து சேர ஒரு விர்ச்சுவல் வங்கிக் கணக்கு வைத்திருக்கிறேன். மாதத்துக்குப் பத்திருபது உரூபாய்கள் அதன் வழியே வரும். வரத்து குறைவென்றாலும் வழி பாதுகாப்பானது. நீங்கள் உங்கள் நிஜ வங்கியில் இருந்து என் விர்ச்சுவல் வங்கி பணம் எடுத்துக்கொள்ள அனுமதி மட்டும் அளித்துவிட்டால் போதும். உங்களுக்கு சிரமமே இல்லாமல் அதுவே மொத்தத் தொகையையும் இடம் மாற்றிவிடும். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். நீங்கள் குறிப்பிடும் ஐந்து சதமானத் தற்செயல் செலவுகளுக்கும் இடம் இருக்காது.

அப்படி எனது விர்ச்சுவல் வங்கிக்கு உங்கள் பணம் வந்து சேர்ந்த பிறகு உங்கள் பங்கான ஐம்பத்தைந்து சதமானத் தொகையை நீங்கள் குறிப்பிடும் இந்தியக் கணக்குக்கு முதலில் மாற்றிவிட்டு, என் பங்கை சௌகரியத்துக்கேற்ப நான் எடுத்துக்கொள்வேன். இரு தரப்புக்கும் பாதுகாப்பான இந்தப் புதிய ஏற்பாட்டை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

பிகு: இந்த ஆப்பிரிக்காக்காரர்கள் மட்டும் ஏன் 2021லும் வயசுக்கு வராமலேயே இருக்கிறார்கள் என்று இங்கே உள்ள என் சிநேகிதர்கள் கேட்கிறார்கள். எல்லாம் பொச்சரிப்பு. விடுங்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா? க்ஷேம லாபங்களை மறு கடுதாசியில் தெரியப்படுத்தவும்.

இங்ஙனம்
பாரா

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி