ஞானப்பழம்

ஒரு தர்பூசனிப் பழம் வாங்கச் சென்றேன். கடைக்காரப் பெண்மணியிடம் ஒன்றை எடுத்துக் காட்டி, ‘எவ்ளம்மா?’என்று கேட்டேன்.

அவர் ‘பதினைந்து ரூபாய்’ என்று பதில் சொல்லி முடிப்பதற்குள் எங்கிருந்தோ பாய்ந்தோடி வந்த ஒரு வாசகர் திலகம், ‘சார், நீங்க பாராதானே?’

ஆமாம் என்று பதில் சொன்னேன்.

‘உங்க புக்ஸ் நிறைய படிச்சிருக்கேன் சார். பூனைக்கதை ரொம்ப பிடிக்கும். இறவான் கொஞ்சம் புரியல. ஆனா, ஃபேஸ்புக்ல உங்கள ஃபாலோ பண்றேன் சார். அங்க எழுதறதெல்லாம் தமாஷா இருக்குது. என் வீட்ல என் ஒய்ஃபும் உங்க ஃபேன் சார். உங்கள மீட் பண்ணேன்னு சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவா. ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?’

காலை நடைப் பயிற்சி முடித்து, என் மதன மாளிகையை மாப் போட்டுத் துடைத்து சுத்தம் செய்துவிட்டு, ஆவினுக்குப் போய் பனீர் வாங்கிக்கொண்டு, ஒரு காய்கறியம்மாவிடம் கீரைக் கட்டு தேற்றிக்கொண்டு, பூஜைக்குக் கொஞ்சம் பூ வாங்கிக்கொண்டு, கோயில்பட்டி கடலை மிட்டாய்க்காக நாலைந்து கடைகள் ஏறி இறங்கி, வெயிலில் வியர்த்துத் துவண்டு ஒரு ஈரக் கோணி போல இருப்பதாக உணர்ந்தேன். இருங்கள், போய் குளித்துவிட்டுக் கொஞ்சம் பார்க்கும்படியாக வருகிறேன் என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் அணிந்திருந்த பனியனிலேயே முகத்தைத் துடைத்துக்கொண்டு அவரோடு சேர்ந்து நின்று ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டேன். வாசகத் திலகம் மேலும் சிலபல நல்வார்த்தைகள் பேசிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பழக்காரம்மாவுக்கு என்னால் முடிந்த ஒரு புன்னகையைத் தந்துவிட்டு, விட்ட இடத்திலிருந்து மீண்டும் ‘எவ்ளம்மா?’ என்றேன்.

அவர் அந்தப் பழத்தை எடை போட்டு, ‘இருவது ரூவா சார்’ என்றார்.

அதிர்ந்துபோய், ‘பதினஞ்சுன்னு சொன்னிங்களே.’

‘ஆமா சார். கிலோ பதினஞ்சு. இது ஒண்ர கிலோவுக்குக் கொஞ்சம் கம்மியா நிக்குது பாரு . எல்லாஞ்சரியான வெலதான்.’

‘தர்பூஸும் கிலோ கணக்கா? இத நீங்க முதல்லயே சொல்லியிருக்கணும். நான் கேட்டப்ப பதினஞ்சுன்னு சொல்லிட்டு இப்ப மாத்தி சொல்றிங்க.’

‘இஸ்டம் இருந்தா எடு. இல்லன்னா நடைய கட்டு. காலில ரோதன பண்ணாத சார்.’

நல்லது. வாழ்க்கை பகுதியளவு மட்டுமே மாய யதார்த்தமாகியிருக்கிறது. way to go.

‘வோணுமா வோணாமா? அத சொல்லு மொதல்ல.’

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter