அன்பின் பாரா, நீங்கள் ஏன் ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கக்கூடாது?
நேற்று ஒரு வாசகர் மெசஞ்சரில் இதனைக் கேட்டார். நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கும்போது எழுத்தாளர்கள் செய்யக்கூடாதா? தாராளமாகச் செய்யலாம். ஆனால் அதற்கெல்லாம் ஒரு வக்கு வேண்டும். இதுவே ஜெயமோகனைச் சொல்கிறீர்களா? நியாயம். மய்யத்தைவிட அதிகமான தொண்டர் பலம் கொண்டவர் அவர். கொரோனா கஷ்ட காலத்தில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடையாளத்துடன் மட்டும் (பெயர் சொல்லாமல்) அவர்கள் செய்த இரண்டு மிக முக்கியமான உதவிப் பணிகளைக் குறித்துக் கேள்விப்பட்டேன். பிரமித்துப் போனேன். கட்சி தொடங்கச் சரியான குழுமம்.
சாருவைச் சொல்வீர்களென்றாலும் நியாயம். பன்னெடுங்காலமாக வயதே ஏறாத ஒரு முரட்டு இளைஞர் படையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். ஆராதகர்கள் மட்டுமல்ல. அவரது பழைய கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக்குவதற்கு உதவி செய்யக்கூடியவர்களே பதினைந்து பேர் இருப்பதாகச் சொல்கிறார். ஒரு கட்டுரைத் தொகுப்பைத் தயார் செய்வது எத்தனை பெரிய காரியம் என்பது தெரிந்தால் இதன் முக்கியத்துவம் புரியும். நமது முதலமைச்சருக்கே பதினைந்து புத்திசாலி சகாக்கள் இல்லை என்பதை நினைத்துப் பார்க்கவும். இது தவிர அவருக்கு இன்னொரு தகுதியும் உண்டு. சாருவே மேனகா காந்தி போல பிராணிகள் நலனில் அக்கறை கொண்டவராகவும் உள்ளார் என்பதே அது.
பவா செல்லத்துரைகூட முயற்சி செய்யலாம். வக்கணையாகக் கதை சொல்லும் ஒரு சிறந்த ஆண் பாட்டியாக ஆயிரக்கணக்கானோரைத் தம் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார்.
எஸ்ராவுக்கு இவர்கள் அனைவரையும்விடப் பெரிய கூட்டம் உண்டு. ஆனால் அவர்களெல்லாம் ஸ்லீப்பர் செல்கள். வெளியே வரமாட்டார்கள்.
ஆனால் பாருங்கள், பாவப்பட்ட பாரா ஒரு தனி மனிதன். கிஞ்சித்தும் தொண்டர் பலம் இல்லாதவன். இயக்கமாக வக்கற்றவன். இங்கே வருகிற கமெண்ட்களுக்கு ஒரு பதிலோ லைக்கோ போடக்கூட நேரமின்றி அவதிப்படுபவன். நண்பர்களே நாலைந்து பேருக்குமேல் தேற மாட்டார்கள் என்னும்போது தொண்டர்களுக்கு எங்கே போவான்? கிண்டிலில் அவன் ஒரு புத்தகம் வெளியிட்ட உடனேயே ‘எப்போது இலவசமாகத் தருவீர்கள்?’ என்று கேட்கக்கூடிய மங்குனிகளை மட்டுமே சம்பாதித்து வைத்திருப்பவன். அவன் கட்சி ஆரம்பித்தால் அது எஸ்.ஏ. சந்திரசேகர் ஆரம்பித்த கட்சி போலத்தான் இருக்கும். தடை செய்யக்கோரி முதலில் வழக்குத் தொடர்பவர் அவனது அட்மினாக இருப்பார்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.