யாராவது சோம்பிக் கிடந்தால் என் பாட்டி ஒரு வசைச் சொல்லைப் பயன்படுத்துவார். ‘திண்டுமலாரி.’ சிறு வயதில் பலமுறை இதனைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அர்த்தம் தெரியாது. இன்று வரையிலுமே தெரியாது. ஆனால் ஒரு திண்டுமலாரி எப்படி இருப்பான்/ள் என்று இப்போது புரிந்துவிட்டது.
டிவியில் ஒரு விளம்பரம் பார்க்கிறேன். காப்பி விளம்பரம்.
வேலைக்காரம்மாள் போன் செய்கிறாள். ஊரிலிருந்து வந்துவிட்டதாகவும் மறுநாள் காலை முதல் வேலைக்கு வந்துவிடுவதாகவும் சொல்கிறாள். சரி என்று சொல்லிவிட்டு போனை வைக்கும் பெண்ணின் முகம் சுருங்கிவிடுகிறது. ஏனென்று கேட்கும் கணவனிடம் சொல்கிறாள்: ‘நீங்கள் போடும் காப்பி பழகிவிட்டது. நாளை முதல் அது இருக்காதே.’ அதனாலென்ன. நானே தொடர்ந்து காப்பி போடுகிறேன் என்று அந்த நல்லவன் சொல்கிறான்.
வேலைக்காரி வராத லாக் டவுன் காலம் முழுவதும் அவன்தான் காப்பி போட்டிருக்கிறான். அவன்தான் சமைத்திருப்பான். துணி துவைத்திருப்பான். வீடு பெருக்கியிருப்பான். கூடவே அலுவலக வேலையையும் வீட்டிலிருந்தே செய்திருப்பான். அவளும் வேலைக்குப் போகிறவள்தான். (முதல் ஷாட் முடியும்போது லேப்டாப்பை மூடுகிறாள்.) கணவன், இனியும் தானே காப்பி போட்டுத் தருவதாகச் சொல்லும்போது, வேறு என்னவெல்லாம் செய்வாய் என்று உடனே கேட்கிறாள்.
பின்வரும் வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்:
1) கணவன் மனைவி இரண்டு பேர் மட்டும் இருக்கும் குடும்பத்தில் ஒரு வேலைக்காரியின் தேவை என்ன?
2) வீட்டு வேலைகளைச் செய்வதில் கணவனுக்குச் சுணக்கமோ தயக்கமோ இல்லை. வேலைக்குப் போகும் பெண்களுக்கு அதில் என்ன கௌரவக் குறைவு?
3) ஒன்று வேலைக்காரி செய்ய வேண்டும்; அல்லது கணவன் செய்ய வேண்டும் என்பதுதான் இன்றைய வேலைக்குப் போகும் பெண்களின் நிலைபாடா?
4) லாக் டவுன் காலங்களில் வேலை பார்த்த ஆண்கள் எல்லோரும் இப்படித்தான் இருந்தார்களா?
5) வேலைக்குப் போகும் பெண்களெல்லாம் இப்படி திண்டுமலாரிகளாகவேதான் இருக்கிறார்களா?
6) இந்த விளம்பரத்தை ஏன் ஆண் வர்க்கம் எதிர்க்கவில்லை?
7) இந்த விளம்பரத்தை ஏன் பெண் வர்க்கம் கொண்டாடவில்லை?
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.