பொலிக! பொலிக! 75

‘போதாயன விருத்தியின் சுருக்கப் பிரதி கிடைக்காது போனால் என்ன? நமக்குக் கூரத்தாழ்வான் கிடைத்திருக்கிறார்! பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதும் பணியை இனி தொடங்கிவிடுவோம்!’ என்றார் ராமானுஜர்.

திருவரங்கம் திரும்பி, நடந்ததை அனைவருக்கும் விவரித்தபோது அத்தனை பேரும் வியந்து போனார்கள்.

‘ஆழ்வான்! உமது கூர்நோக்கும் கவனமும் ஆசாரிய பக்தியும் நிகரற்றது. இந்தப் பணி சிறப்பாக நடந்தேற நீர் உடையவருக்குப் பக்கபலமாக இரும்!’ என்றார் முதலியாண்டான்.

வேதங்களின் மிக முக்கியப் பகுதி, வேதாந்தம் எனப்படுகிற உபநிடதங்கள். பிரம்ம சூத்திரம், உபநிடதங்களுக்கான திறவுகோல். பிரம்ம சூத்திரத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள போதாயணரின் உரையே சரியான வழி என்பது ஆளவந்தார் கருத்து. போதாயணரின் உரையை அடியொற்றியே ராமானுஜர் தமது ஶ்ரீபாஷ்யத்தை எழுதத் தொடங்கினார். அவர் சொல்லச் சொல்ல எழுத்தில் வடிக்கிற வேலையைல் கூரத்தாழ்வான் செய்ய ஆரம்பித்தார்.

‘ஆழ்வான், நான் சொல்லிக்கொண்டே போவேன். நீர் எழுதிக்கொண்டே வாரும். ஏதேனும் ஓர் இடத்தில் நான் சொல்லுகிற பொருள் ஏற்கவில்லையென்றால் சட்டென்று நிறுத்திவிடும்.’ என்று சொல்லிவிட்டு ஆரம்பித்தார் ராமானுஜர்.

விறுவிறுவென்று உரை வளர்ந்துகொண்டிருந்தது. ஒருநாள். ஓரிடம். ராமானுஜர் சொல்லிக்கொண்டே இருக்க, ஆழ்வான் எழுதாமல் வெறுமனே அமர்ந்திருந்தார்.

‘என்ன ஆயிற்று ஆழ்வான்?’

பதில் இல்லை.

‘சொல்லும், என்ன பிரச்னை?’

மீண்டும் பதில் இல்லை.

‘சரி, நான் சொல்வதை எழுத உமக்கு விருப்பமில்லை போலத் தெரிகிறது. நீரே எழுதிக்கொள்ளும்’ என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார் ராமானுஜர்.

விஷயம் பரவி சீடர்கள் பதற்றமானார்கள். ‘உடையவருக்குக் கோபம் வந்துவிட்டதா? அதுவும் கூரத்தாழ்வானிடமா? நம்பவே முடியவில்லையே?’ என்று கூடிக்கூடிப் பேசிக்கொண்டார்கள்.

‘இது சிறிய விஷயம். சொல்லுகிற பொருளில் உடன்பாடில்லையென்றால் எழுதுவதை நிறுத்திவிட்டுச் சும்மா இரும் என்று ஆசாரியர் என்னிடம் சொன்னார். உரை எழுதும் சிந்தனையில் இருக்கும்போது முன் சொன்னதை மறந்திருப்பார். நாளைக்குத் தெரிந்துவிடும் பாருங்கள்’ என்று சொல்லி கூரத்தாழ்வான் அவர்களை அமைதிப்படுத்தினார்.

அன்றிரவு ராமானுஜர் நடந்ததை எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தார். வழக்கத்தில் இல்லாத வினோதம் அது. சட்டென்று தனக்கு ஏன் கோபம் வந்துவிட்டது? ஆழ்வானைப் போய்க் கடிந்துகொண்டுவிட்டேனே?

சொல்லிக்கொண்டு வந்த வரியின் பொருளைச் சிந்தித்துப் பார்த்தார். பகவத் சேஷ பூத: இது ஜீவாத்மாவின் சொரூபத்தை விளக்குகிற இடம். ஜீவன், பகவானின் அடிமை என்பதே இதன் பொருள். ஜீவாத்மாவின் அடிப்படை லட்சணமே அதுதான். ஆனால் உரை விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தபோது ஜீவனின் அறிவை முன்னிலைப்படுத்தி உடையவர் விளக்கியிருந்தார். ஜீவனே பகவானின் அடிமை என்னும்போது அறிவென்று தனியே ஒன்று ஏது? அதுவும் பகவானுக்குள் ஒடுங்குவதே அல்லவா?

அடடா, இது தவறான விளக்கமல்லவா? இதனால்தான் கூரத்தாழ்வான் எழுதாமல் நிறுத்திவிட்டார் போலிருக்கிறது.

மறுநாள் ராமானுஜர் கூரத்தாழ்வானை அழைத்தார். ‘ஆழ்வான், நான் சொன்ன பொருள் தவறு. இதோ மாற்றிக்கொள்ளும்’ என்று சரியான பொருளை மீண்டும் சொல்ல, கூரத்தாழ்வான் மீண்டும் எழுத ஆரம்பித்தார்.

இந்த விஷயம் திருவரங்கம் முழுதும் பரவிவிட்டது. ‘உடையவரின் சீடர்கள் எப்பேர்ப்பட்ட ஞானச்சுரங்கங்களாக இருக்கிறார்கள்! உடையவர் உரைக்கே திருத்தம் கேட்கிற அளவுக்குக் கூரத்தாழ்வானின் கல்வி பெரிது!’ என்று ஊரார் பேசியபோது கூரத்தாழ்வான் அதைப் பணிவுடன் மறுத்தார். ‘இந்தக் கல்வியும் அவர் அளித்ததுதான் சுவாமி!’

ஒருபுறம் ராமானுஜருடன் அமர்ந்து ஶ்ரீபாஷ்யப் பணி. மறுபுறம் வீட்டில் தனியே ராமாயணம் வாசித்துக்கொண்டிருந்தார் கூரத்தாழ்வான். வாசிப்பது என்றால் வேகமாக ஓட்டுவதல்ல. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் புரிந்து உள்வாங்குவது. பிறகு அதைத் தாம் உள்வாங்கிய விதத்தில் எழுதி வைப்பது.

கோவிந்தன் திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்து எம்பாராகி, அவரோடு பேசிப் பழகத் தொடங்கியபிறகு கூரத்தாழ்வானுக்கு ராமாயணம் வாசிப்பதில் கட்டுக்கடங்காத பேராவல் எழுந்தது. உடையவரோடு செலவிட்ட நேரம் போக மிச்சப் பொழுதுகளையெல்லாம் வால்மீகியுடனேயே கழிக்கத் தொடங்கினார்.  வீட்டில் ஆண்டாள் எப்போதும் தனியே இருந்தாள். அவளைக் கவனிக்கக்கூட கூரேசனுக்கு நினைவின்றிப் போய்விடும். ராமானுஜரே அடிக்கடி நினைவுபடுத்தி வீட்டுக்கு அனுப்பிவைப்பார்.

‘கூரேசரே, ஆண்டாள் நலமாக இருக்கிறாள் அல்லவா? அவளை பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறீர் அல்லவா?’

ஆழ்வான் வெறுமனே தலையாட்டுவார். ஒன்றும் சொல்லமாட்டார். என்ன சொல்வது? ஆண்டாளைப் பக்குவமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அவருக்கும் ஆசைதான். ஆனால் மனம் ராமாயணத்திலும் உடையவர் சொல்லும் உரையிலும் அல்லவா மூழ்கிக் கிடக்கிறது?

‘சுவாமி, கூரேசரைக் கேட்காதீர்கள். அவர் மழுப்பிவிடுவார். இந்த மனிதர் அவளைப் பொருட்படுத்துவதேயில்லை’ என்று மற்ற சீடர்கள் அன்பும் கோபமும் கலந்த ஆதங்கத்தை முன்வைப்பார்கள்.

‘ஆண்டாள் கர்ப்பவதியானால் அடுத்தக் கணம் எனக்குச் சொல்லுங்கள்!’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார் ராமானுஜர். அவர் ஒரு தீர்மானம் செய்திருந்தார். வெளியே சொல்லவில்லை. இது ஆளவந்தாரின் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறத் தொடங்கியிருக்கும் தருணம். பரம பாகவதனான கூரத்தாழ்வானின் வாரிசும் அதனை நிறைவேற்றும் பணியில் ஈடுபடும் என்று அவர் திடமாக நம்பினார். காரணம், ஒரு சம்பவம்.

பெரும் பணக்காரராக இருந்த கூரத்தாழ்வான் அனைத்தையும் தானம் செய்துவிட்டு உடையவரே கதி என்று வந்த நாளாகப் பிட்சை எடுத்துத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். அன்றன்றைய தேவைக்கு மட்டுமே பிட்சை. மறுநாளுக்கு என்று ஒரு அரிசியைக் கூடச் சேர்த்து வைக்கிற வழக்கமில்லை. ஒருநாள் இருநாளல்ல. ஆண்டுக்கணக்காக. ஆண்டாளுக்கு அதில் பிரச்னை ஏதும் இருக்கவில்லை. அவள் கூரத்தாழ்வானைக் காட்டிலும் இந்த விஷயத்தில் தீவிரமாக இருந்தவள்.

ஆனால் ஶ்ரீபாஷ்ய உரை எழுதுவதில் ராமானுஜருக்கு உதவி செய்ய ஆரம்பித்து, அதே காலக்கட்டத்தில் ராமாயண வாசிப்பிலும் கூரத்தாழ்வான் ஈடுபட்டிருந்தபோது ஒருநாள் பிட்சைக்குப் போக மறந்துவிட்டார். விடிந்ததில் இருந்து வேலையில் மும்முரமாக இருந்தவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று ஆண்டாளும் சும்மா இருந்தாள். மதியப் பொழுதாயிற்று. மாலை ஆயிற்று. இருட்டவும் தொடங்கிவிட்டது. ஆழ்வான் எழுந்திருக்கவேயில்லை. உலக கவனமே இன்றி வேலையில் மூழ்கியிருந்தார்.

பணியிருந்தால் பசியிருக்காதா? ஆண்டாளுக்குக் கவலையாகிவிட்டது. என்ன செய்வதென்று புரியவில்லை.

‘ஆண்டாள், இன்று உன் வீட்டில் இருந்து சமைக்கிற வாசனையே வரவில்லையே? என்ன சாப்பிட்டாய்?’ அக்கம்பக்கத்தில் கேட்டார்கள். என்ன சொல்லுவதென்று அவளுக்குத் தெரியவில்லை.

‘ஐயோ, கூரேசர் இன்று பிட்சைக்குச் செல்லவேயில்லையா? அப்படியென்றால் நீயும் பட்டினிதானா?’

சட்டென்று கோயில் மணிச்சத்தம் கேட்டது. அது அரங்கன் அமுது செய்யும் நேரம்.

(தொடரும்)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!