பொலிக! பொலிக! 76

அது பெருமான் அமுது செய்யும் நேரம். திருவரங்கப் பெருமானுக்கு இரவு நேர உணவு, அரவணை. அரங்கனுக்கு மட்டுமல்ல. அவனைத் தாங்கிக் கிடக்கும் ஆதிசேஷனுக்கும் அதுவே அமுது. வேகவைத்த பச்சரிசியைக் கெட்டியான வெல்லப்பாகில் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கும்போது நெய்யைச் சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். சமைப்பது மண் பாண்டத்தில்தான் என்பதால் கொட்டக் கொட்ட நெய்யை அது உறிஞ்சிக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட பதத்தில் சட்டென்று இறக்கி வைத்து ஏலம், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறினால் அது அரவணை. இதற்குக் குங்குமப்பூ, நாட்டுச் சர்க்கரை சேர்த்த பசும்பால் துணை. இந்த இரண்டும் தினமும் உண்டு. எனவே அன்றும் இருந்தது.

கோயில் மணிச் சத்தம் கேட்டதும் ஆண்டாளுக்கு அரங்கன் இரவு உணவுக்குத் தயாராகிவிட்டது புரிந்தது. விறுவிறுவென்று உள்ளே வந்தாள். பூஜையில் இருக்கும் அரங்கனின் முன்னால் நின்று ஒரு பார்வை.

‘இது உனக்கே நியாயமா? உன் பக்தர் இங்கே காலை முதல் ஒரு பருக்கை சோறும் இல்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். நீ மட்டும் வேளை தவறாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? அன்னசாலை நிறுவி தினமும் ஆயிரம் பேருக்கு உணவிட்டுக்கொண்டிருந்தவர் அவர். பசியோடு இப்படி நாளெல்லாம் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கிறாரே, அவர் இன்னும் உண்ணவில்லையே என்று ஒருக் கணம் எண்ணிப் பார்த்திருப்பாயா? என்ன பெருமாள் நீ?’

அது நெருக்கத்தால் வந்த கோபம். ஊரை விட்டுத் திருவரங்கம் வந்த பிறகு அரங்கனைத் தவிர வேறு உறவு கிடையாது அவளுக்கு. கொஞ்ச வேண்டுமானாலும் அவன்தான்; திட்ட வேண்டுமானாலும் அவன்தான். ஆண்டாளுக்குத் தன் பசி பொருட்டல்ல. கணவர் உண்ணாதிருப்பதுதான் உறுத்திக்கொண்டிருந்தது. ஒரு வார்த்தை கேட்டுவிடலாம். ‘பசிக்கவில்லையா?’

என்றால், இன்று உஞ்சவிருத்திக்குச் செல்லவில்லையே என்று அர்த்தம். நீ உணவு கொண்டு வராததால் நானும் உண்ணாதிருக்கிறேன் என்று அர்த்தம். அந்த நினைவு வந்துவிட்டால் அப்புறம் வேலை கெட்டுவிடும். குற்ற உணர்ச்சி கூடிவிடும். கேவலம் தன் பசியா பெரிது? பணி புரிந்துகொண்டிருப்பவர் பசியோடிருப்பது மட்டும்தான் ஆண்டாளுக்குக் கவலை. அதுதான் கோபமானது.

கோயில் சன்னிதியில் அரங்கனுக்கு அமுது செய்விக்க அரவணையும் பாலும் கொண்டு வந்து வைத்தார்கள். உத்தம நம்பி அதற்குப் பொறுப்பாளி. சன்னிதிக்குள் அவர் நுழைந்ததுமே அரங்கன் குரல் கொடுத்தான். ‘உத்தம நம்பி! நமக்கு அமுது செய்விப்பது இருக்கட்டும். அங்கே ஆழ்வான் பட்டினி கிடக்கிறான். அவன் மனைவி என்னைப் பிடித்துத் திட்டிக்கொண்டிருக்கிறாள். முதலில் அவனுக்குப் பிரசாதத்தை எடுத்துச் செல்லும்!’

திடுக்கிட்டுப் போனார் உத்தம நம்பி. என்ன நடக்கிறது இங்கே?

‘கேள்வியெல்லாம் அப்புறம். முதலில் பிரசாதம் ஆழ்வான் வீட்டுக்குப் போகட்டும். அவன் சாப்பிட்ட பிறகு இங்கே வந்தால் போதும்.’

உத்தம நம்பி அரவணை பிரசாதத்தை எடுத்துக்கொண்டு கூரத்தாழ்வான் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினார்.

‘யார்?’

‘கூரேசரே, உத்தம நம்பி வந்திருக்கிறேன். கதவைத் திறவுங்கள்.’

இந்நேரத்தில் இவர் எதற்கு இங்கே வரவேண்டும் என்ற யோசனையுடன் கூரத்தாழ்வான் கதவைத் திறக்க, கோயில் பிரசாதங்களுடன் நம்பி நிற்பது கண்டு குழப்பமானார்.

‘என்ன விஷயம் நம்பி?’

‘ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்தாரும் பிரசாதம். முதலில் சாப்பிடுங்கள். பிறகு பேசுவோம்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

கூரேசருக்கு ஒன்றும் புரியவில்லை. ’எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது ஆண்டாள். காலை முதல் நான் உணவின் நினைவே இன்றிக் கிடந்திருக்கிறேன். என்னால் பாவம், நீயும் எதையுமே சாப்பிடவில்லை. சொல்லி வைத்த மாதிரி அரங்கன் பிரசாதம் வருகிறது பாரேன்!’

ஒரு கணம் அமைதியாக இருந்த ஆண்டாள், நடந்ததைச் சொல்லிவிட்டாள். ‘தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் சாப்பிடாமல் வேலை செய்துகொண்டிருந்தீர்கள். எனக்கு அது பொறுக்கவில்லை. அரங்கனுக்கு அமுது செய்விக்கும் நேரம் நெருங்குவதை உணர்த்தும் மணிச்சத்தம் கேட்டதும் கொஞ்சம் முறையிட்டு, கடிந்துகொண்டுவிட்டேன்!’

திடுக்கிட்டுப் போனார் கூரத்தாழ்வான். ‘நீ செய்த வேலைதானா!’

‘இல்லை சுவாமி. இது அவன் செய்த வேலை.’

‘சரி, நீ முதலில் சாப்பிடு!’ என்று அன்போடு பிரசாதத்தை எடுத்து அவளுக்குக் கொடுத்தார்.

அன்று உண்ட அரவணைப் பிரசாதமே ஆண்டாளின் வயிற்றில் கருவாக உருக்கொண்டது.

ராமானுஜருக்கு இது தெரியும். கூரத்தாழ்வானே சொல்லியிருந்தார். அதனால்தான் ஆண்டாளுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அரங்கனின் ஆசியாக வந்து உதிக்கவிருக்கிற குழந்தை. கூரத்தாழ்வானின் வித்து. ஞான சூரியனாக இல்லாமல் வேறெப்படி இருந்துவிடும்?

பத்து மாதங்கள் பிறந்து கடந்தபோது செய்தி வந்தது. ஆண்டாளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

பூரித்துப் போனார் ராமானுஜர். ‘நான் குழந்தையைப் பார்க்க வேண்டுமே!’ என்று முதலியாண்டானிடம் அவர் சொல்லிக்கொண்டிருந்தபோதே எம்பார் மடத்துக்குள் நுழைந்தார். ‘சுவாமி, இதோ ஆழ்வானின் பிள்ளை!’

எங்கே எங்கே என்று ஆவலுடன் கையில் ஏந்திய ராமானுஜரின் முகம் சட்டென்று வியப்பில் ஆழ்ந்தது.

‘என்ன இது, குழந்தையின் மீது த்வயம் மணக்கிறதே!’

சுற்றியிருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை. எம்பார் புன்னகை செய்தார். ‘ஆம் சுவாமி! குழந்தைக்குக் காப்பாக இருக்கட்டுமே என்று வருகிற வழியில் அதன் காதில் த்வய மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே வந்தேன்.’

‘பிரமாதம்! நான் செய்ய நினைத்த காரியத்தை நீர் செய்து முடித்தே வீட்டீர். இவன் அரங்கனின் அருளோடு பிறந்தவன். விஷ்ணு புராணம் இயற்றிய பராசரரின் பெயரை ஏந்த எல்லாத் தகுதிகளோடும் உதித்தவன். இவனுக்குப் பராசர பட்டர் என்று பெயரிடுகிறேன்!’

பரவசமாகிப் போனார்கள் உடையவரின் சீடர்கள். எப்பேர்ப்பட்ட தருணம்! ஆளவந்தாரின் நிறைவேறாத மூன்று ஆசைகளில் அதுவும் ஒன்று. தகுதி வாய்ந்த ஒருவருக்கு வியாச பராசர ரிஷிகளின் பெயர்களை இடுவது. ஆனால் பெயரிட்டதன் மூலமே ராமானுஜர் அந்தக் குழந்தையின் பிற்காலத் தகுதியைத் தெரியப்படுத்திவிட்டாரே.

‘தசரதன் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து பிரசாதம் பெற்றுத்தான் கோசலை ராமனைப் பெற்றாள். அதன்பின் ஆண்டாள் மட்டுமல்லவா இப்படி அரவணைப் பிரசாதம் உண்டு பிள்ளை பெற்றிருக்கிறாள்? ராமன் எப்படியோ அப்படித்தான் இந்தப் பிள்ளை!’ தீர்மானமாகச் சொன்னார் ராமானுஜர்.

பிறகும் கூரத்தாழ்வானுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு வேதவியாச பட்டர் என்று பெயரிட்டார்.

பிரம்ம சூத்திர உரை எழுதும் பணியும் அப்போது நிறைவுற்றிருந்தது.

(தொடரும்)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!