ராமானுஜருக்குத் தமது சீடர்களின் மன ஓட்டம் புரிந்தது. இதற்குமேல் நீட்டித்துக்கொண்டிருந்தால், மல்லனின் மனம் சுருங்கும்படி யாராவது ஏதேனும் சொல்லிவிடும் அபாயம் இருக்கிறது. நல்லது. முடித்துவைத்துவிடுவோம் என்று முடிவு செய்தார்.
‘மல்லனே, பேரழகியான உன் மனைவியின்மீது வெயிலும் காற்றும் படுவதுகூட உனக்குச் சகிக்கவில்லையென்றால் அவளை வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? எதற்கு இத்தனை சிரமப்பட்டு வெளியே அழைத்து வருகிறாய்?’ என்று கேட்டார்.
‘நான் என்ன செய்யட்டும் சுவாமி? பொன்னாச்சிக்கு வசந்த உற்சவத்தைக் காணவேண்டும் என்று ஆசை. இதற்காகவேதான் திருவெள்ளறையில் இருந்து புறப்பட்டு வந்தேன். உற்சவம் முடிகிறவரை விடுமுறை கேட்டு நேற்றே மன்னர்பிரானுக்கு விண்ணப்பித்துவிட்டேன். அவரும் ஒப்புக்கொண்டுவிட்டதால் உடனே கிளம்பிவிட்டேன்.’
‘ஓ. அப்படியென்றால் உனக்கு உற்சவத்தில் பெரிய இஷ்டம் இல்லை என்று சொல்.’
‘எனக்குத்தான் எப்போதும் உற்சவமாயிருக்கிறதே. பாருங்கள் என் தேவியின் விழிகளை! என் பிரியை எனக்காகவே ஏந்திக்கொண்டிருக்கிறாள் பாருங்கள்!’
இப்படியும் ஒருத்தன் இருப்பானா? என்ன வார்ப்பு இது!
ஆனால் ராமானுஜர் காட்டிக்கொள்ளவில்லை. மிகவும் அமைதியாகச் சொன்னார், ‘நீ சொல்வதெல்லாம் சரிதான் அப்பனே. உன் மனைவியின் விழிகள் அழகானவைதான். கவிதை பொங்கச் செய்பவைதான். அதில் சந்தேகமில்லை. ஆனால் இதைக் காட்டிலும் பேரழகும் எதைக்காட்டிலும் ஒளி பொருந்தியதுமான விழிகளை நீ காண நேரிட்டால் என்ன செய்வாய்?’
அவன் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான். சட்டென்று கோபம் வந்துவிட்டது.
‘என்ன உளறுகிறீர்கள்? இவளது விழிகளைவிடச் சிறந்த விழிகள் இந்த உலகில் யாருக்குமே இருக்க முடியாது.’
‘ஒருவேளை இருந்துவிட்டால்?’
‘நாந்தான் முடியாது என்கிறேனே.’
‘அட ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். அப்படியொரு விழியை நானே உனக்குக் காட்டுகிறேன் என்று வைத்துக்கொள். அப்போது என்ன செய்வாய்?’
ஒரு கணம் அவன் யோசித்தான். பிறகு சொன்னான். ‘இவளது விழிகளைக் காட்டிலும் பேரெழில் படைத்த விழிகளைக் காண்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை சுவாமி. அப்படிக் காண நேரிட்டால் அவ்விழிகளுக்கு அடிமையாகிப் போவேன்.’
‘நல்லது வில்லி. என்னோடு வா, இப்போதே காட்டுகிறேன். ஆனால் அதற்குமுன் நீ நதியில் குளித்துவிட்டு வந்துவிடு.’
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. உடையவர் அப்படி யாருடைய விழிகளைத் தனக்குக் காட்டப் போகிறார்? யோசனையுடன் காவிரியில் இறங்கிக் குளித்தான். ஈரம் சொட்டச் சொட்ட எழுந்து வந்து நின்றான்.
‘நான் தயார் சுவாமி. புறப்படலாம் வாருங்கள்!’
ராமானுஜர் அவனை திருவரங்கன் சன்னிதிக்கு அழைத்துச் சென்று நிறுத்தினார்.
அங்கே பச்சைமா மலைபோல் மேனி படுத்துக் கிடந்தது. பவளவாய் முறுவலித்துக்கொண்டிருந்தது. கமலச் செங்கண் திறந்திருந்தது.
‘அச்சுதா, அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! இவனைப் பார். கண்ணிருந்தும் குருடனாக இருக்கிற இம்மல்லன்மீது கொஞ்சம் கருணை காட்டு. கணப் பொழுதில் இல்லாமல் போய்விடக்கூடிய இவ்வுலக வாழ்வில் உன்னை நினைக்கக்கூட நேரமின்றித் தன் மனைவியின் விழிக் குளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறான். இவனது ஆண்மை, இவனது கம்பீரம், இவனது ஆளுமை அனைத்தும் நசுங்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருப்பதைக் கூட உணராதிருப்பவனை என்னால் என்ன செய்ய இயலும்? அதனால்தான் உன்னிடம் அழைத்து வந்தேன். அர்ஜுனனுக்குக் காட்டிய விசுவரூபத்தில் கொசுவளவு இவனுக்கு நீ காட்ட முடிந்தால் போதும். உன் விழி திறக்கிறபோதுதான் உலகம் இயங்குகிறது என்பதை இவனுக்கு உணர்த்தியே தீரவேண்டும். பேரொளியே! பெரும் பொருளே! உன் கருணை பொங்கும் விழிகளின் பேரெழிலுக்கு முன் காண்பதெல்லாம் வெறும் தூசென இவனுக்கு எப்படியாவது புரிய வை.’
கண்மூடிக் கைகூப்பி மானசீகமாக வேண்டினார் ராமானுஜர்.
அந்த அற்புதம் அப்போது நிகழ்ந்தது.
சன்னிதியில் ராமானுஜரின் எதிரே நின்றுகொண்டிருந்த வில்லி மெல்லத் தலை திருப்பி அரங்கனைக் கண்டான். பாதங்கள். முழங்கால். நாபிக் கமலம். திருமாமகள் உறையும் மார்பு. முகவாய். விரிந்த பெரும் இதழ்கள். உலகு சுவாசிக்கும் நாசி. அவனது பார்வை இன்னும் சற்று நகர்ந்து அரங்கனின் விழிகளைத் தொட்டபோது அது விரிந்தது.
கோடி சூரியன்களின் கொள்ளைப் பிரகாசம். கொட்டும் அருவியின் குளிர்ப் பிரவாகம். சுழலும் புவியும் விரியும் வானும் நிலைத்த அண்ட பேரண்டப் பெருவெளியில் நீந்தும் நட்சத்திரங்களும் அங்கே அடங்கியிருக்கக் கண்டான். அது கருணையின் ஜீவ ஊற்று. கனிவின் பெரும்பாற்கடல். கற்பனைக்கெட்டாத பேரெழில் புதையல். பல்லாயிரம் கோடி ஆண்டுகள் தவம் புரிந்தாலும் கிட்டாத மகத்தான் அனுபவத்தில் திக்குமுக்காடிப் போனான் வில்லி.
கண்டேன், கண்டேன், கண்டறியாதது கண்டேன் என்று அவன் நெஞ்சு விம்மி விம்மி வெடித்துச் சிதறியது. கண்ட காட்சியில் தன்னை மறந்து கதறிக் கொண்டிருந்தான்.
‘ஐயோ இதுவல்லவா அழகு! இதுவல்லவா ஒப்பற்ற பெருவிழிகள்! இதுவல்லவா தரிசனம்! இதுவல்லவா பிறவிப் பயன்!’
அணை உடைத்த வெள்ளமெனப் பெருகிய அவன் விழி நீரை ராமானுஜர் பார்த்தார். புன்னகை செய்தார். அவனைக் கலைத்துவிடாமல் அமைதியாக சன்னிதியை விட்டு வெளியேறிப் போனார்.
வில்லி அங்கிருந்து நகரவேயில்லை. காலம் அவனுக்குள் உறைந்து போனது. இரவா பகலா இது? தெரியவில்லை. இன்று வந்தேனா? நேற்று வந்தேனா? புரியவில்லை. எதுவுமே தெரியவில்லை. அங்கே அவன் இருந்தான். அரங்கன் இருந்தான். இடையில் வேறு எதுவும் இருக்கவில்லை.
வெகு நேரம் கழித்துத் தன் நினைவு மீண்டதும் அவன் சன்னிதியைவிட்டு வெளியே வந்தான். இருட்டியிருந்தது. அங்கிருந்த ஒரு காவலரிடம், ‘என்ன நாழி?’ என்று கேட்டான். தன்னை அழைத்து வந்த உடையவர் எப்போதோ திரும்பிச் சென்றுவிட்டதையும் தெரிந்துகொண்டு நேரே சேரன் மடத்துக்கு விரைந்தான்.
‘எம்பெருமானாரே! நான் வில்லி வந்திருகிறேன். உங்கள் அடிமை வந்திருக்கிறேன் சுவாமி, கதவைத் திறவுங்கள்!’ என்று குரல் கொடுத்தான்.
மடத்தின் கதவும் உடையவர் மனத்தின் கதவும் ஒருங்கே திறந்தன. அன்றே, அந்தக் கணமே அவன் ராமானுஜரின் சீடனாகிப் போனான்.
‘சுவாமி, இந்தப் பிறவிக்கு இது போதும். எதைக் கண்டுவிட்டால் வேறு எதையும் காண அவசியமில்லையோ, அதை நான் கண்டுகொண்டேன். இனி இந்த ஜென்மம் அரங்கன் சேவையில் மட்டுமே ஈடுபடும்.’ என்று சொல்லி அவர் தாள் பணிந்தான்.
ராமானுஜர் புன்னகை செய்தார்.
(தொடரும்)