பொலிக! பொலிக! 40

அவள் பேரழகிதான். சந்தேகமில்லை. உச்சந்தலை முதல் பாத நுனிவரை பார்த்துப் பார்த்து வரைந்த பேரோவியம் ஒன்று எழுந்து நடந்துகொண்டிருந்தாற்போல் இருந்தாள். நின்று பார்த்த தூரத்திலேயே அவளது நாசியின் கூர்மை தனித்துத் தெரிந்தது. காற்றில் அசைந்த காதோரக் குழலில் ஒரு கவிதை ஒளிந்திருந்தது. ஒரு தேரில் இருந்து தேவதை இறங்குவது போலிருந்தது அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும்.

மெல்லிய வெட்கமும் மிதமான புன்னகையுமாக நடந்துகொண்டிருந்தவளின் முன்னால் ஒரு மல்லன் குடை பிடித்தபடி பின்புறம் அடியெடுத்து வைத்து நடந்துகொண்டிருந்தான். அவன் கண்கள் அவள்மீதே இருந்தன. குடையுடன் சேர்த்து அவன் மனமும் கவிந்தே இருந்தது. அவனுக்கு முன்னும் பின்னுமாகச் சில வீரர்கள். நடக்கிற தேவதையின் பாதம் மணலில் பட்டுத் தேய்ந்துவிடாதபடிக்கு அவள் கால் படும் பாதையெல்லாம் மென்கம்பளம் விரித்துப் போய்க்கொண்டிருந்தார்கள்.

ராமானுஜர் சுட்டிக்காட்டிய காட்சியைக் கண்ட அவரது சீடர்கள் வெலவெலத்துப் போய்விட்டார்கள்.

‘ஐயோ இதென்ன அக்கிரமம்! பட்டப்பகலில் பெண்டாட்டிக்கு இப்படி ஒருத்தன் குடை பிடித்துப் போவானா!’

‘பார்த்தால் எந்த நாட்டு அரசியாகவும் தெரியவில்லையே. வீரர்கள் அவளுக்குப் பட்டுப்பாதை விரித்துச் செல்வதைப் பாரேன்!’

‘அட அரசியாகவே இருக்கட்டுமே. எந்த நாட்டு அரசிக்கு வீதியெங்கும் விரிப்பு வாய்க்கிறது?’

‘ஆளைப் பார்த்தால் ஆஜானுபாகுவாக இருக்கிறான். ஆனால் இப்படியா ஒரு பெண் பித்தனாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்வான்? வெட்கங்கெட்டவன்.’

ராமானுஜர் அவர்களைச் சற்று அமைதியாக இருக்கச் சொன்னார். ‘அவன் முகத்தைப் பாருங்கள். அவன் பார்வை அவளது விழிகளைத் தாண்டி நகரவேயில்லை. கண்ணிமைக்காமல் எப்படி அவளைப் பார்த்தபடியே நடக்கிறான்! அதுவும் கால்களைப் பின்னால் அடியெடுத்து வைத்து எத்தனை தூரம் நம்மால் நடக்க முடியும்? அவனால் அது முடிகிறது என்றால் என்ன அர்த்தம்?’

‘அவன் ஒரு கிறுக்கன் என்று அர்த்தம் சுவாமி.’

ராமானுஜர் புன்னகை செய்தார்.

‘வெறும் கிறுக்கனல்ல சுவாமி. பெண் கிறுக்கன். காமக் கிறுக்கன்.’

‘உங்கள் பதற்றம்தான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. சரி, ஒன்று செய்யுங்கள். யாராவது போய் அவனை இங்கே அழைத்து வாருங்கள்’ என்றார் ராமானுஜர்.

சீடனொருவன் அந்த மல்லனை நோக்கி ஓடினான். தொலைவில் இருந்து பார்த்தபோது நினைத்தபடி இழித்துப் பேச முடிந்ததுபோல நெருங்கியபோது முடியாது என்று தோன்றியது. நெருக்கத்தில் அவன் பெரும் பலசாலி என்று தெரிந்தது. தடித்துத் திரண்டிருந்த தோல் அவனது முரட்டுத்தனத்தைப் பறைசாற்றியது. முகம் மீறிய சுருள் மீசையின் அடர்த்தியில் அவனது பேராண்மை புலப்பட்டது. கம்பீரமும் பிரம்மாண்டமும் நிறைந்த விழிகளை உருட்டி அவன் சீடனைப் பார்த்தான்.

‘என்ன?’

‘ஐயா, உடையவர் தங்களை அழைக்கிறார்’ மெல்லிய நடுக்கத்துடன் தொலைவில் சுட்டிக்காட்டினான். அவன் பார்த்தான்.

சட்டென்று அவனது விடைப்பு குலைந்து ஒரு பணிவு கூடியது. ‘ஆஹா, அவரா ராமானுஜர்! என்ன பாக்கியம் செய்தேன் நான்! ஊரெல்லாம் அவரைப் பற்றித்தானே பேச்சாக இருக்கிறது? தரிசிக்கவும் தாள் பணியவும் இன்று எனக்கு வாய்த்திருக்கிறதா? இது என் பேறன்றி வேறல்ல.’

இரு கரம் கூப்பியபடியே அவன் உடையவரை நோக்கி விரைந்தான். நெருங்கியதும் அப்படியே பாதம் பணிந்து நின்றான்.

‘எழுந்திரப்பா. யார் நீ? உன் பெயர் என்ன?’

‘ஐயா, என் பெயர் வில்லி. உறையூர் மன்னன் அகளங்கனிடம் சேவகம் புரிகின்றேன். பிறப்பால் வேடன். பிழைப்பால் மல்லன்.’

‘அப்படியா? எனக்கென்னவோ நீ உறையூர் மன்னனிடம் சேவகம் புரிபவனாகத் தெரியவில்லையே அப்பா. அதோ நிற்கிறாளே, அவள் யார்? உன் ராணியா? அவளது சேவகனோ என்று நினைத்துவிட்டேன்.’

சட்டென்று அவனுக்கு வெட்கம் வந்துவிட்டது. ‘ஒரு நிமிடம் சுவாமி!’ என்று சொல்லிவிட்டு ஓடோடிச் சென்று தனது மனைவியை அழைத்து வந்தான்.

‘பொன்னாச்சி, நமது இன்றைய தினம் உடையவர் தரிசனத்துடன் விடிந்திருக்கிறது. விழுந்து வணங்கிக்கொள்!’

அந்தப் பெண் பணிவோடு ராமானுஜரை வணங்கி எழுந்தாள்.

‘தீர்க்க சுமங்கலியாக இரம்மா. உன் புருஷனுக்குத்தான் உன்மீது எத்தனை அபாரமான காதல்! அப்பப்பா. பொதுவெளி என்றும் பாராமல் இப்படிக் குடை பிடித்து வருகிறானே?’

‘அவர் சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறார் சுவாமி. எனக்குத்தான் வெட்கம் பிடுங்கித் தின்கிறது.’

அப்போதும் அவள் வெட்கப்பட்டாள்.

‘அதனால் பாதகமில்லை. மனைவியை மதிக்கத் தெரிந்த கணவன் அமைவது ஒரு கொடுப்பினை. ஆனால் மல்லனே, உன் மனைவிக்கு இருக்கிற நாணம் உனக்கு ஏன் இல்லை? பார்க்கிறவர்களெல்லாம் எப்படி கேலி பேசிச் சிரிக்கிறார்கள் தெரியுமா?’

‘தெரியும் சுவாமி. ஆனால் நான் அதைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. இந்த உலகில் யாருக்கும் வாய்க்காத ஒரு பேரழகி எனக்கு மனைவியாக வாய்த்திருக்கிறாள். இந்த அழகை சிந்தாமல் சிதறாமல் கணம்தோறும் நான் நெஞ்சில் ஏந்திப் பருகிக்கொண்டிருக்கிறேன். வெயில் பட்டு அவள் மேனி வாடிவிடக்கூடாதே என்று கவலைப்படுகிறேன். கல்லும் மண்ணும் பட்டால் அவள் பாதம் மேலும் சிவந்துவிடுமே என்று அஞ்சுகிறேன். காற்று சற்று வேகமாக வீசினாலும் கவலையாகிவிடுகிறது ஐயா. பொன்னில் குழைத்துச் செய்த மேனியை அது உரசி காயப்படுத்திவிட்டால் என் நெஞ்சே வெடித்துவிடும்.’

ராமானுஜர் புன்னகை செய்தார்.

‘ஓ. நீ வெறும் மல்லன் என்று நினைத்தேன். பெரும் கவிஞனாகவும் இருப்பாய் போலிருக்கிறதே?’

இப்போது அவன் வெட்கப்பட்டான். ‘அதற்குக் காரணம் நானல்ல சுவாமி. என் தேவி பொன்னாச்சியின் கண்கள். வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன். நாளெல்லாம் பொழுதெல்லாம் இவளது கண்களை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஒரு குளத்தைப் போன்ற அதன் அகலத்தில் நான் என்னைத் தொலைத்துவிடுகிறேன். முக்குளித்து மீண்டு வரும்போது மீண்டும் அக்கண்களின் நட்சத்திர ஜொலிப்பில்தான் தலை துவட்டிக்கொள்கிறேன். அவள் இமைக்கிற போதெல்லாம் எனக்குச் சிலிர்க்கிறது. அவள் பார்வை நகரும் போதெல்லாம் நான் பொடிப்பொடியாகிவிடுகிறேன். இந்தக் கண்கள்தாம் என் கலங்கரை விளக்கம். இந்த உலகை நான் என் தேவியின் விழிகளில் மட்டுமே தரிசிக்கிறேன்.’

திகைத்துவிட்டார்கள் ராமானுஜரின் சீடர்கள். ‘இவன் ஒரு முழுப் பைத்தியம்தான்; சந்தேகமில்லை!’ என்று தமக்குள் கிசுகிசுத்துக்கொண்டார்கள்.
(தொடரும்)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!