தவறு நடந்துவிட்டது என்று நினைக்கத் தோன்றவில்லை. விரும்பிச் செய்த ஒன்று எப்படித் தவறாகும்? ஆனால் வீட்டில் எப்படிச் சொல்வது என்பதில் குழப்பம் இருந்தது. ஆறுமுகம் நல்லவன். ‘கட்ன புடவையோட வா. நான் இருக்கேன் ஒனக்கு’ என்றுதான் நேற்றுக்கூடச் சொன்னான். ஆனால் தன் வீடு அவ்வளவு எளிதாக இதை ஏற்காது என்று நினைத்தாள். அம்மா அழுவாள். அப்பா கையில் கிடைப்பதைத் தூக்கிப் போட்டு உடைப்பார். இழுத்துத் தள்ளி மிதிப்பார். ஆனால் அப்போதும் கவனமாக, வெளியே போ என்று சொல்லமாட்டார் என்று தோன்றியது. அனைத்தையும் மறைத்து அவசர அவசரமாக வெளியூரில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பார்.
குடும்ப மானம் என்ற ஒன்றினைப் பற்றி அவளுக்குக் குழப்பம் இருந்தது. விருப்பங்களை விட்டுக் கொடுத்தால் மட்டுமே வாழக்கூடிய ஒன்றை அவ்வளவு பொருட்படுத்த வேண்டுமா என்று நினைத்தாள். இதெல்லாம் தனக்குச் சாதகமானதை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சிந்தனையின் குரளி என்றும் தோன்றியது. அப்பாவோ அம்மாவோ குறை சொல்லும்படியாக இதுவரை நடந்துகொண்டதில்லை. பாசமாகத்தான் இருப்பார்கள். அப்படியே இனியும் இருப்பார்களா என்பதுதான் சந்தேகமாக இருந்தது. எப்படியும் யாருடனோ வாழ அனுப்பத்தான் போகிறார்கள். அது தனக்குப் பிடித்தவனாக இருப்பதில் என்ன பிழை என்று நினைத்தாள்.
சொல்லிவிடலாம் என்று தீர்மானித்து இருவரையும் ஒருசேர வைத்தே சொன்னாள். சிறிது அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் எதிர்பார்த்ததுபோல விபரீதமாக ஒன்றும் நடக்கவில்லை.
‘அவன் வீட்ல இத சொல்ல வேணான்னு சொல்லு. நாங்க போய்ப் பேசி முடிச்சிடுறோம். ஊர்க்காரவுகள நம்பினாலும் உறவுக்காரவுகள நம்ப முடியாது. நாளபின்ன ஒரு சண்டைன்னு வந்தா அசிங்கமா அவங்காத்தாளே இத சொல்லிக் காட்டுவா. நம்ம குடும்ப மானம் சந்தி சிரிக்கும்.’
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.