சென்னை மாநகர நூலக ஆணைக் குழுவின் சார்பில் நவம்பர் 14 ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் எழுத்தாளர்கள்-கலைஞர்களைப் பற்றிய ஆவணத் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது.
கு. அழகிரிசாமி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, வண்ணதாசன், இந்திரா பார்த்தசாரதி, கிரா, சுரேஷ் குமார இந்திரஜித், ஞானக்கூத்தன் உள்ளிட்ட பல தமிழ் படைப்பாளிகளைக் குறித்த ஆவணப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படவிருக்கின்றன.
படைப்பாளிகளைக் குறித்த ஆவணப்படங்களுக்காக ஒரு திரைப்பட விழா நடைபெறுவது அநேகமாக இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். உலக அளவிலேயே. மனுஷ்யபுத்திரன் என்கிற ஒரே ஒரு நவீன கவிஞன் தமிழ்நாடு நூலக இயக்கத்துக்குள் நுழைந்ததால் மட்டுமே இது சாத்தியமாகிறது. இதனாலேயே எழுத்து சார்ந்த ஆர்வமும் அக்கறையும் மிக்கவர்கள் அவரைப் பாராட்ட வேண்டியது அவசியம்.
ஒரு படைப்பாளி எப்படி உருக்கொள்கிறான் என்பது ஒரு புள்ளி என்றால், அவனது படைப்புகள் சமூகத்தில் உண்டாக்கும் தாக்கம் இன்னொரு புள்ளி. இரண்டுமே நமக்கு முக்கியமானவை. மோசமான திரைப்படங்களைப் பார்த்துவிட்டு சமூக ஊடகங்களில் பொங்கித் தணிவதில் பயனில்லை. எப்போதாவது இப்படி முன்னெடுக்கப்படும் சிறந்த செயல்பாடுகள் கொண்டாடப்பட வேண்டும்.
திரைப்பட விழா சென்னை அண்ணாசாலையில்தான் நடைபெறுகிறது. கட்டணம் ஏதுமில்லை. ஆர்வமுள்ள அனைவரும் சென்று கண்டுகளிக்கலாம்.
இது பெருஞ்செயல். இன்னொருவர் சிந்திக்காதது. மனுஷ்யபுத்திரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.