
தேவநேயப் பாவாணர் நூலக வளாகத்தில் நடந்துகொண்டிருக்கும் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் ஆவணப் பட விழாவுக்கு நேற்று சென்றிருந்தேன். ரவி சுப்ரமணியம் இயக்கத்தில் இந்திரா பார்த்தசாரதியின் நாடகத் துறை பங்களிப்புகள் குறித்து ஒரு சிறிய டாக்குமெண்டரி, ஆர்.வி. ரமணியின் இயக்கத்தில் ‘நான் யார்?’ என்கிற சுந்தர ராமசாமியைப் பற்றிய முழுநீள (இரண்டு மணி நேரம்) டாக்குமெண்டரி இரண்டையும் பார்த்தேன். நண்பர் மனுஷ்யபுத்திரன் அழைத்ததால் திரையிடலுக்குப் பிறகு சில நிமிடங்கள் உரையாடலிலும் (பாஸ்கர் சக்தி, ரவி சுப்ரமணியம், ஆர்.வி ரமணி ஆகியோருடன் இணைந்து) பங்குகொண்டேன்.
இது ஓர் அரிதான நிகழ்வு. மீண்டும் சொல்கிறேன், மனுஷ் இல்லாவிட்டால் பொது நூலகத்துறை இப்படியெல்லாம் சிந்திக்கக்கூட வாய்ப்பில்லை. பெருஞ்செயல்கள் புரிந்த படைப்பாளிகளின் வாழ்வையும் பணிகளையும் மொத்தமாகத் திரையிட்டுச் சுட்டுவதன் மூலம் நாம் இன்று இருக்கும் இடத்தையும் செல்ல வேண்டிய தொலைவையும் மிக நேரடியாகக் குறிப்பிட்டுக் காட்டிவிட முடிகிறது.
சுரா குறித்த படத்தை நேற்று மிகவும் ரசித்துப் பார்த்தேன். எண்ணிப் பாருங்கள். இடைவேளை இல்லாமல் இரண்டு மணி நேரம் நம்மால் ஒரு திரைப்படத்தையாவது அமர்ந்து பார்க்க முடியுமா? ஆனால் இந்த ஆவணப்படம் அந்த சாத்தியத்தை அளித்தது. சுந்தர ராமசாமி என்கிற கலைஞன் கருக்கொண்டது முதல் அவரது மரணம் வரை கையைப் பிடித்து உடன் அழைத்துச் சென்று காட்டிவிட்டது. இந்தப் படத்தில் பல திகைப்பூட்டும் தருணங்கள் இருக்கின்றன. அவரது கட்டுரை ஒன்றை முன்வைத்துக் கல்லூரி மாணவிகள் விவாதிப்பது, பிள்ளை கெடுத்தாள் விளை சிறுகதையை முன்வைத்துச் சிலர் விமரிசிப்பது, சடங்குகள் இல்லாமல் நிறைவேறிய அவரது இறுதி யாத்திரை சார்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் மாற்றுக் கருத்து சொல்வது, அனைத்துக்கும் சிகரமாக அதையே குறித்து அசோகமித்திரன் பொட்டிலடித்தாற்போல ஒரு வரியில் அனைத்தையும் காலி செய்துவிடுவது என உணர்ந்து பயில இந்தப் படத்தில் நிறைய இருந்தன.

இந்த டாக்குமெண்டரியின் மிகச் சிறந்த பகுதியாக எனக்குத் தோன்றியது, ஒரு சிறுமிக்கு சுரா அளித்த பேட்டி. ஒரு மேதைக்குள் இருக்கும் குழந்தையும் குழந்தையாக உருமாறுவதன் மூலம் மட்டுமே வெளிப்படுத்த முடிகிற சிலவற்றைச் சரியாக வெளிப்படுத்த முடியும் என்கிற பாடமும் இதில் எனக்குப் பிரத்தியேகமாகக் கிடைதவை.
அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தும் பேசிப் பழக வாய்க்காதவர்களுள் நான் ஒருவன். அது சார்ந்த குறை எனக்கு எப்போதும் உண்டு. இந்த டாக்குமெண்டரி அதைக் கணிசமாக நீக்கிவிட்டது. இயக்குநர் ஆர்.வி. ரமணிக்கு என் மனமார்ந்த பாராட்டும் வாழ்த்தும். இப்படியொரு வாய்ப்புக்கு வழி செய்த மனுஷுக்கு அன்பு.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.