பொலிக! பொலிக! 42

கனவே போலத்தான் எல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் நடந்துவிட்டது. சேரன் மடத்தில் ராமானுஜரோடு இருந்த சீடர்களுக்கு மட்டுமல்ல. திருவரங்கத்து மக்களுக்கே அது நம்ப முடியாத வியப்புத்தான். மல்லன் வில்லியா, உறங்காவில்லி தாசனாகிப் போனான்? அரங்கன் சேவையில் தன்னை முழுதாக அர்ப்பணித்துக்கொண்டு விட்டானாமே? பசி தூக்கம் பாராமல் எப்பொழுதும் எம்பெருமான் சிந்தனையிலேயே இருக்கிறானாமே? உடையவருக்குப் பார்த்துப் பார்த்து சேவை செய்கிறானாமே? அவன் மனைவியும் வைணவத்தை ஏற்று திருப்பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டுவிட்டாளாமே?

அத்தனை வாய்களும் அவனைப் பற்றியே பேசின. நெஞ்சு நிமிர்த்தி, நிலம் அதிர நடந்த வில்லி, மண்ணுக்கு வலித்துவிடாதபடிக்கு பூவடி எடுத்து வைத்து உடையவரின் பின்னால் சென்ற காட்சியைக் கண்ட கண்கள் இமைக்க மறந்து கிடந்தன. அவனது தோரணை மாறிப் போனது. பேச்சு மாறிப் போனது. வாழ்வெனும் மாபெரும் மல்யுத்தக் களத்தில் வெல்ல அரங்கனின் பாதங்களும் ஆசாரியரின் வழிகாட்டுதலுமே அவசியம் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. எனவே தனது பழைய வாழ்க்கையை பாம்பெனத் தோலுரித்துப் போட்டான். பணிவும் சேவையும் அவனது அடையாளங்களாகிப் போயின.

‘தெரியுமா உனக்கு? அவன் மாறிப் போனது பெரிதல்ல. அவனது மருமகன்கள் இரண்டு பேரையும் உடையவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறானாம்.’

‘யார், வண்ட வில்லி, செண்ட வில்லி என்பார்களே.. உறையூர் மன்னன் அகளங்கனின் படையில் முன் வரிசையில் நிற்பார்களே, அவர்களா?’

‘அவர்களேதான். பயல்கள் இருவரும் திருமடமே கதியென்று கிடக்கிறார்களாம். உடையவர் அவர்களுக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைத்து, வண்டலங்கார தாசர், செண்டலங்கார தாசர் என்று வாஞ்சையோடு அழைக்கிறாராம்.’

‘அடக்கடவுளே, அப்படியென்றால் இந்த மூன்று வில்லாதிவில்லர்களும் அகளங்கன் படையில் இப்போது இல்லையாமா?’

‘வில்லிதாசர் நிச்சயம் இல்லை. அது தெரியும். ஆனால் அவரது மருமகன்கள் இருவரும் இன்னும் அகளங்கனிடம்தான் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் திருவரங்கத்தில்தான் இருக்கிறார்கள்.’

என்னென்னவோ பேசினார்கள். பேசிக்கொண்டே இருந்தார்கள்.  ஒரு மூர்க்கனும் முரடனும் பெண்டாட்டிதாசனுமாக இருந்த ஒருவன் சட்டென்று ஒருநாள் தானும் மாறி, தன்னைச் சார்ந்தவர்களையும் மாற்றிய விந்தை அவர்களுக்குப் புரியவில்லை. அதைவிட வியப்பு, வில்லியின்மீது ராமானுஜர் கொண்டிருந்த பேரன்பு.

தினமும் காவிரிக்குக் குளிக்கப் போகிறபோது உடையவர், முதலியாண்டானின் கையைப் பிடித்துக்கொண்டுதான் நடந்து போவார். போகிற வழியெங்கும் பிரபந்த விளக்கங்கள். தத்துவ விவாதங்கள். சீடர்கள் அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடவே மாட்டார்கள். மடத்தில் இருந்து புறப்படுவது முதல், குளித்துக் கரை ஏறுவது வரை மூச்சுவிடாமல் அவர்கள் ராமானுஜரை ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

குளித்து, கரை ஏறிய மறுகணம் ராமானுஜர் வில்லியின் கையைப் பிடித்துக்கொண்டுவிடுவார். நடந்தவாக்கில் அவனுக்குப் பிரபந்தம் சொல்லித்தருவார். பாடலும் பொருளும். பொருளும் அதற்கு அப்பால் உள்ள உண்மைகளும். உண்மையைப் போன்றே பேரெழில் கொண்ட கவி மனத்தின் விரிவும் ஆழங்களும்.

‘வில்லி, பாசுரங்களை பக்தியுடன் மனப்பாடம் செய்வது நல்லதுதான். அதே சமயம் அவற்றின் கவித்துவ அழகை ரசிக்கத் தவறக்கூடாது. ஆழ்வார்கள் மாபெரும் கவிஞர்கள். நிகரே சொல்ல முடியாத ரசனையுள்ளம் கொண்டவர்கள். நீ அவர்களை அப்படியே மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் மனத்துக்குள் அவர்களாகவே மாறி அனுபவிக்கப் பார். இன்னும் புதிய தரிசனங்கள் உனக்கு வாய்க்கும்.’

மடத்துக்கு வந்து சேருகிறவரை அவர் வில்லியின் கையை விடமாட்டார்.  திருவரங்கத்து மக்களுக்கு இது தினசரிக் காட்சியாகிப் போனது. சனாதனவாதிகளுக்கு இதுவே விமரிசனப் பொருளுமானது.

‘உடையவரின் நடவடிக்கை ரொம்பப் பிரமாதம். குளிக்கப் போகிறபோது சுத்தப் பிராமணரான முதலியாண்டான் கையைப் பிடித்துக்கொண்டு போவாராம். நீராடிய பிறகு வில்லியின் கையா? அமோகம். எப்பேர்ப்பட்ட புரட்சி இது! திருமடத்தில் ஆசாரம் செழித்து வளர்கிறது.’

வம்பு விரும்பாத வாய் ஏது? விஷயம் ராமானுஜரின் காதுகளை எட்டியது. சொன்னது சீடர்கள்தாம்.

‘சுவாமி, வில்லிதாசர் அப்படி என்ன ஒசத்தி? அதுவும் முதலியாண்டானைவிட?’

ராமானுஜர் அப்போது பதில் சொல்லவில்லை. அமைதியாக நகர்ந்துவிட்டார். அன்றிரவு அவர் வில்லியை அழைத்தார்.

‘வில்லி, ஒரு காரியம் செய்கிறாயா? நமது சீடர்கள் அத்தனை பேரும் அயர்ந்து உறங்குகிறார்கள். வெளியே முற்றத்தில் அவர்களது மாற்று வேட்டிகள் காய்ந்துகொண்டிருக்கின்றன. போய் அத்தனை துணிகளிலும் அரை முழம் கிழித்துக்கொண்டு வாயேன்.’

ஏன் என்று அவன் கேட்கவில்லை. இதோ என்று அப்போதே முற்றத்தை நோக்கிப் போனான். உடையவர் சொன்ன மாதிரி அங்கே காற்றில் ஆடிக்கொண்டிருந்த அத்தனை வேட்டிகளிலும் அரை முழம் கிழித்துக்கொண்டு வந்து நீட்டினான்.

மறுநாள் விடிந்தபோது மடத்தில் ஒரே கலாட்டாவாகிப் போனது. முற்றத்தில் காய்ந்துகொண்டிருந்த வேட்டிகளை யார் கிழித்தது?

‘சுவாமி, நான் உண்மையைச் சொல்லிவிடவா? கிழித்தது நானே அல்லவா?’

ராமானுஜர் வில்லியை அமைதியாக இருக்கச் சொன்னார். சீடர்களை அழைத்து ஏதோ சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். பிறகொரு நாள் அவர்களில் இரண்டு பேரைக் கூப்பிட்டு, ‘மடத்தில் நிதி வசதி அத்தனை சரியாக இல்லை. ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டுமே?’ என்றார்.

‘சுவாமி, சிவாலயங்களுக்கு மன்னர்கள் அள்ளிக் கொடுக்கிறார்கள். சைவ மடங்கள் செழிக்கின்றன. வைணவத் தலங்களுக்கோ, வைணவ மடங்களுக்கோ ஆதரிப்பார் அதிகமில்லை. நாம் ஜனங்களிடம்தான் கையேந்த வேண்டும்.’

‘ஜனங்களிடமா! அது எனக்குச் சரியாகப் படவில்லை. ஒன்று செய்யுங்கள். நமது வில்லிதாசரின் மனைவி பொன்னாச்சி ஏகப்பட்ட நகை வைத்திருக்கிறாள். அவற்றை விற்றாலே நல்ல தொகை சேரும். அவர்களும் நமது மடத்தைச் சேர்ந்தவர்கள்தானே?’

‘ஆனால் எப்படிக் கேட்பது சுவாமி? அது சரியாக இருக்காதே.’

‘அரங்கனின் கருணை வில்லியின்மீது கேட்டா விழுந்தது? எப்போது அவன் நம்மைச் சேர்ந்தவனாகிவிட்டானோ, அவனது உடைமைகளும் நமது திருமடத்தைச் சேர்ந்தவையே. நீங்கள் அவள் தூங்குகிறபோது வீட்டுக்குள் நுழைந்து நகைகளைக் கழட்டிவந்துவிடுங்கள்.’

அவர்கள் பயந்துவிட்டார்கள். ‘ஐயோ வில்லிக்குத் தெரிந்தால் கொன்றுவிடுவானே? இன்றைக்கு அவன் அரங்கன் சேவையில் இருந்தாலும் அடிப்படையில் அவன் முரடனல்லவா? மல்யுத்த வீரனல்லவா?’

‘அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். நாளைக்கு இரவு நீங்கள் வில்லி வீட்டுக்குப் போகும்போது அவனை நான் இங்கே இருக்க வைத்துவிடுகிறேன். இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியவேண்டாம்.’

‘சரி சுவாமி. அப்படியே.’ என்றார்கள்.

மறுநாள் இரவு அது நடந்தது.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter