பொலிக! பொலிக! 69

ராமானுஜர் திருப்பதிக்கு வருவதற்கு முன்னமே அந்தப் பகுதி மக்களுக்கு அவரது பெயர் பரிச்சயமாக இருந்தது. திருவரங்கத்தில் அவர் செய்துகொண்டிருந்த சமயப் புரட்சி குறித்து திருப்பதி வட்டாரத்தை ஆண்டுகொண்டிருந்த மன்னன் விட்டல தேவன் அறிந்திருந்தான். உடையவர் திருமலைக்கு வரவிருக்கிறார் என்கிற தகவல் பெரிய திருமலை நம்பி மூலம் தெரிய வந்ததுமே மன்னன் அவரை வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தான்.

திருப்பதியில் அவர் கால் வைத்ததுமே மன்னனும் மக்களும் அவரைச் சூழ்ந்துகொண்டுவிட்டார்கள். திருமலைக்குச் செல்வது பற்றி யோசிக்கக்கூட அவகாசமின்றி உடையவர் அவர்களுடன் நாளும் பொழுதும் பேசிக்கொண்டே இருந்தார். பக்தியின் மிகக் கனிந்த நிலையில் இருக்கிற ஒருவர். பரமாத்ம சிந்தனை தவிர இன்னொன்று இல்லாதவர். பார்க்கிற அனைவரையும் சமமாக பாவிக்கிற மனிதர். அரசனும் குடிமக்களும் அவருக்கு ஒன்றே. மன்னனுக்குத் தனி ஆசனம் கிடையாது. உட்கார். சத்விஷயம் கேட்க வந்தாயா? கேள். அவர்களும் கேட்பார்கள். சந்தேகம் கேட்கிறாயா? தாராளமாகக் கேள். ஒரு மனிதன் ஒவ்வொரு விஷயத்திலும் அடைகிற தெளிவானது ஊருக்கு நல்லது செய்யும். அனைத்திலும் தெளிவுறும்போது கண்ணுக்குப் புலப்படாத அமைதிப் பேருலகில் அவன் வசிக்கத் தொடங்குகிறான். அங்கே பகவானுக்கும் பக்தனுக்கும் மட்டுமே இடம்.

இப்படி ஒவ்வொருவரும் அடைகிற அமைதியும் தெளிவுமே ஒரு திருக்கூட்டத்தை சாத்தியமாக்குகிறது. ஊருக்கொரு திருக்கூட்டம். உலகெல்லாம் திருக்கூட்டம். பார்க்குமிடமெல்லாம் பாகவதப் பெருமக்களே நிறைந்திருந்தால் பேதங்கள் இல்லாது போகும். குலமோ செல்வமோ வேறெதுவோ அங்கே அடிபட்டுப் போகும். பக்தன், தனக்கும் பகவானுக்கும் நடுவே உள்ள இடைவெளியை அப்போதுதான் கடக்க முடியும். அவனை நெருங்க அது ஒன்றே வழி. பேதமற்ற பெருவழி.

ராமானுஜரின் சொற்பொழிவுகள் திருப்பதி மக்களைக் கட்டிப் போட்டன. விட்டல தேவன் தன்னை மறந்தான். ஆட்சி அதிகாரங்களை மறந்தான். அகங்காரம் விட்டொழித்தான். ‘உடையவரே, எனக்கு உங்கள் திருவடி சம்பந்தம் அளியுங்கள்’ என்று தாள் பணிந்தான். முப்பது பெரும் வயல்வெளிகள் நிறைந்த இளமண்டியம் என்னும் ஊரையே அவருக்கு எழுதிக் கொடுத்தான்.

‘மன்னா, நிலத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாய், இன்புருகு சிந்தை இடுதிரியாய் நம்பி ஞானத் திருவிளக்கேற்றுவதல்லவா நமது பணி? இந்தக் கிராமத்தை பாகவத உத்தமர்களுக்கு அளியுங்கள். பேதமின்றி அவர்கள் சேர்ந்து வாழட்டும். எந்நேரமும் பிரபந்தம் ஒலிக்கும் திருநகராக அம்மண் விளங்கட்டும்’ என்றார் உடையவர்.

கீழ்த்திருப்பதிக்கு வந்து இதையெல்லாம் கேள்விப்பட்டு அறிந்த அனந்தாழ்வான், மன்னனால்தான் உடையவர் மலையேறி வர மறுக்கிறாரோ என்று சந்தேகப்பட்டான்.

‘இல்லை அனந்தா! இம்மலையை சேஷாசலம் என்பார்கள். ஆதிசேஷன்மீது பாதம் படுவது அபசாரம்.’

‘இது உங்களுக்கு முன்னமே தெரியாதா சுவாமி? என்னை மட்டும் எதற்காக அனுப்பினீர்கள்? அங்கு எதற்கு ஒரு பெருமாள்? எதற்காக அவனுக்கொரு நந்தவனம்? தவிர, நீங்கள் இன்று திருமலைக்கு வர மறுத்துத் திரும்பிச் சென்று விட்டால் நாளை உடையவரே கால் வைக்க மறுத்த இடத்துக்கு நாங்கள் எப்படிச் செல்வது என்று பக்தர்களும் வராதிருந்துவிடுவார்கள் அல்லவா?’

விட்டல தேவனும் மற்றவர்களும் அவர் மலைக்குச் செல்வதில் தவறில்லை என்று திரும்பத் திரும்பச் சொன்னார்கள். ராமானுஜர் யோசித்தார்.  பிறகு ஒரு முடிவுடன் சொன்னார், ‘சரி வருகிறேன். ஆழ்வார்கள் கால் வைக்கத் தயங்கிய மலையில் கண்டிப்பாக என் கால்களும் படாது.’

அது நிகழ்ந்தது. ஏழு மலைகளையும் அவர் தவழ்ந்தே ஏறிக் கடந்தார். உடன் வந்த சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு பக்தி, இப்படியொரு பணிவு, இப்படியொரு தீர்மானம் சாத்தியமாகுமா? ‘இவர் மனிதப் பிறவியே இல்லை. நிச்சயமாக ஓர் அவதாரம்தான்’ என்றான் விட்டல தேவன்.

‘அதிலென்ன சந்தேகம் மன்னா? உடையவர் ஆதிசேஷனின் அம்சம். தன்மீது தானே தவழ்ந்து செல்கிறார் இப்போது!’

இதற்குள் உடையவர் மலைக்கு வந்துகொண்டிருக்கிறார் என்ற விவரத்தை அனந்தாழ்வான் சில வேடர்கள் மூலம் மலைமீதிருந்த பெரிய திருமலை நம்பிக்குச் சொல்லி அனுப்பியிருந்தான். அவரை எதிர்கொண்டு அழைப்பதற்காகத் திருவேங்கடமுடையானின் தீர்த்தப் பிரசாதங்களை எடுத்துக்கொண்டு நம்பி தமது சிஷ்யர்களுடன் மலையை விட்டு இறங்கத் தொடங்கினார். தவழ்ந்து சென்றுகொண்டிருந்த ராமானுஜர் காலி கோபுரத்தை (காலி என்றால் காற்று) நெருங்குவதற்குள், திருமலை நம்பியின் பரிவாரம் ஆறு மலைகளைக் கடந்து இறங்கி வந்துவிட்டிருந்தது.

காலி கோபுர வாசலில் பெரிய திருமலை நம்பியைக் கண்ட உடையவர் திகைத்துப் போனார். சட்டென்று அவர் கண்கள் நிறைந்தன.

‘சுவாமி, என்னை வரவேற்கத் தாங்கள் வரவேண்டுமா? அதுவும் இத்தள்ளாத வயதில்? யாராவது சிறியவர்களை அனுப்பினால் போதாதா?’

திருமலை நம்பி பரவசத்துடன் ராமானுஜரை நெருங்கினார். ‘உடையவரே! யாராவது சிறியவரை அனுப்பியிருக்கலாம்தான். ஆனால் மலைமீது நாலாபுறமும் தேடிப் பார்த்துவிட்டேன். என்னைக் காட்டிலும் சிறியவன் அங்கு யாருமே இல்லை!’ என்று சொன்னார்.

வாயடைத்துவிட்டது கூட்டம்.

‘ஆ, எப்பேர்ப்பட்ட பணிவு! ஆளவந்தாரின் சீடர்கள் அத்தனை பேருமே இப்படித்தானா!’ என்று வியந்தார்கள் ராமானுஜரின் சீடர்கள்.

ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, திருவரங்கத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பேசிக்கொண்டு அவர்கள் திருமலை மீதேறி வந்து சேர்ந்தார்கள். குளத்தில் நீராடி, வராகப் பெருமாளைச் சேவித்துவிட்டு, திருமலையப்பனின் ஆலயத்துக்குள் நுழைந்தார் உடையவர். சட்டென்று அவர் மனத்தில் தோன்றியது நம்மாழ்வாரின் ஒரு வரிதான். ‘புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!’

சன்னிதியில் நின்றபோது பரவசத்தில் அவர் கண்கள் நிறைந்து சொரிந்தன. கிடந்தவனாகத் திருவரங்கத்தில் ஆண்டுக்கணக்கில் கண்டவனை,  நின்றவனாகக் காணக்கிடைக்கிற தருணம். எந்தக் கணமும் ‘இதோ வந்தேன்’ என்று ஓரடி முன்னால் எடுத்து வைத்துக் கைநீட்டி ஏந்திக்கொள்வானோ என்று ஏங்கச் செய்கிற எம்பெருமான். வைத்த கண் வாங்காமல் விழுங்கிக்கொண்டிருந்தார் ராமானுஜர். கருணை தவிர மற்றொன்று அறியா விழிகள். அபயமன்றி இன்னொன்று வழங்காத கரங்கள். துயரம் அனைத்தையும் தூளாக்கிப் புதைக்கிற பாதங்கள்.

‘எம்மானே! ஏறி வருகிற யாவருக்கும் என்றென்றும் ஏற்றம் கொடு!’ என்று மனமுருக வேண்டிக்கொண்டார்.

‘போகலாமா?’ என்றான் அனந்தாழ்வான்.

‘எங்கே?’

‘சுவாமி, நந்தவனம் தங்களுக்காகக் காத்திருக்கிறது!’

புறப்பட்டார்கள்.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter