பொலிக! பொலிக! ராமானுஜர்-1000

பொலிக! பொலிக! 68

இன்று எப்படியும் உடையவர் கீழ்த்திருப்பதிக்கு வந்து சேர்ந்துவிடுவார் என்று கோவிந்தன் சொல்லியிருந்தார். அனந்தாழ்வானுக்கு ஒரே பரபரப்பாகிவிட்டது. சற்றும் உறக்கமின்றி இரவைக் கழித்துவிட்டு அதிகாலை எழுந்து குளிக்கப் போனான்.

இருளும் பனியும் கவிந்த திருமலை. நரம்புகளை அசைத்துப் பார்க்கிற குளிர். உறக்கம் தொலைந்தாலே குளிர் பாதி குறைந்துவிடுகிறதுதான். ஆனாலும் நினைவை அது ஆக்கிரமித்துவிட்டால் வெயிலடிக்கிற போதும் குளிர்வது போலவேதான் இருக்கும். குளிரை வெல்லத் திருமங்கையாழ்வார்தான் சரி. தடதடக்கும் சந்தங்களில் எத்தனை அற்புதமான பாசுரங்கள்!

அனந்தாழ்வான் குளிக்கப் போகிறபோதெல்லாம் திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களைத்தான் சொல்லிக்கொண்டு போவான். உச்சரித்தபடியே ஏரியில் பாய்ந்தால் முதல் கணம் குளிர் நம்மை விழுங்கும். மறுகணம் நாம் அதை விழுங்கிவிடலாம்.

குளித்தெழுந்து அவன் கரைக்கு வந்தபோது விடியத் தொடங்கியிருந்தது. ஈரத் துண்டால் துடைத்தான். காலைத் துடைத்தபோது அந்தத் தழும்பைச் சற்று உற்றுப் பார்த்தான். பாம்பு கடித்து வந்த தழும்பு. அனந்தனுக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது.

நந்தவன வேலை வேகமாக நடந்துகொண்டிருந்தபோது ஒரு நாள் அவனைப் பாம்பு தீண்டியது. கணப் பொழுது வலி. நீரில் குதிக்கிற போது முதல் கணம் தாக்குகிற குளிர்ச்சியின் வீரியம் போன்றதொரு வலி. ஆனால் கணப் பொழுதுதான். கடித்த பாம்பைத் தூக்கி ஓரமாக விட்டுவிட்டு மண்வெட்டியுடன் மீண்டும் வேலையில் ஆழ்ந்துவிட்டான். ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பாம்பு கடித்ததையும் வலி என்ற ஒன்று இருப்பதையும் அவன் முழுதாக மறந்து போனான். மண்ணும் மண்வெட்டியும் மட்டுமே புத்தியில் நின்றது. இங்கே ஒரு சோலை மலரப் போகிறது. வண்ணமயமான மலர்கள் பூத்துக் குலுங்கப் போகின்றன. ஒவ்வொரு மலரும் திருவேங்கடமுடையானின் திருமுடியை, தோள்களை, பாதங்களை அலங்கரிக்கப் போகின்றன. எங்கிருந்து வருகின்றன இம்மலர்கள் என்று கேட்போரிடமெல்லாம் ராமானுஜ நந்தவனத்தைப் பற்றிச் சொல்லப் போகிறார்கள். திருமலையில் எம்பெருமானுக்குப் பிறகு உடையவரின் பெயர் எப்போதும் மணக்க மணக்க நிலைத்திருக்கும்.

எண்ணம் ஒரு தியானமாகி செயலின் வேகம் கூடியது. அவன் பாம்பு கடித்ததை முற்றிலும் மறந்து வேலை செய்துகொண்டிருந்தபோது பெரிய திருமலை நம்பியும் கோவிந்தனும் அந்தப் பக்கம் வந்தார்கள்.

‘வரவேண்டும் சுவாமி! அப்படி உட்காருங்கள்’ என்றான் அனந்தன்.
அவன் கண்கள் சுருங்கியிருப்பதை நம்பி பார்த்தார். என்னவோ தவறென்று பட, சட்டென்று அவன் நாடி பிடித்துப் பார்த்தார். அதற்குள் கோவிந்தன் அவன் காலில் வழியும் ரத்தத்தைக் கண்டு பதறி, ‘சுவாமி, இங்கே பாருங்கள்!’

‘அட, ஆமாம்! ரத்தம் வருகிறதே!’

‘அனந்தா என்ன இது? பாம்பு தீண்டியிருக்கிறது. அதுகூடத் தெரியாமலா நீ வேலை செய்துகொண்டிருக்கிறாய்?’

‘பாம்பு தீண்டியது தெரியும் சுவாமி. அதற்காக வேலையை எதற்கு நிறுத்துவானேன்?’

‘அறிவிருக்கிறதா உனக்கு? பாம்பு கடித்தால் உடனே மருந்திட வேண்டும். இல்லாவிட்டால் உயிர் போய்விடும்!’

அனந்தன் சிரித்தான். ‘உயிர்தானே? சந்தோஷமாகப் போகட்டுமே சுவாமி! இன்றே இறந்தால் சொர்க்கத்தில் உள்ள விரஜா நதிக்கரையோரம் நந்தவனம் அமைப்பேன். இன்னும் சிலநாள் இருந்தால் இங்கே நானே வெட்டிய ஏரிக்கரையோரம் ஏகாந்தமாக எம்பெருமானைத் துதித்துக்கொண்டிருப்பேன். எங்கு போனாலும் என் பணி அதுதானே?’

திகைத்துவிட்டார்கள் இருவரும்.

‘இது தவறு அனந்தா. நீ வா. உடனே உனக்கு பச்சிலை வைத்துக் கட்டவேண்டும்!’

‘இல்லை சுவாமி. அது வெறும் நேர விரயம். எனக்கு வேலை எக்கச்சக்கமாக இருக்கிறது. இந்த மலையே ஆதிசேஷனின் ரூபம்தான். ஏறி வந்தவனை வாரி விழுங்கிவிடுவானா அவன்? அதுவுமில்லாமல் அதே ஆதிசேஷனின் அம்சமான உடையவரின் மாணவன் நான். என் குரு என்னை எப்படி தண்டிப்பார்?’

கடைசிவரை அவன் பாம்புக் கடிக்கு மருந்திடவே இல்லை. அவனது நம்பிக்கை அன்று அவன் உயிரைக் காத்தது.

நடந்ததை நினைத்துப் பார்த்த அனந்தன், இதை உடையவர் வந்ததும் சொல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்.

ஆனால் அன்றைக்கு அவர் திருமலைக்கு வரவில்லை. மறுநாளும் வரவில்லை. அடுத்த நாளும். என்ன ஆயிற்று ராமானுஜருக்கு? இங்குதானே வந்துகொண்டிருக்கிறார் என்றார்கள்? இந்நேரம் மலையேறி வந்திருக்கலாமே? எங்கே சுணங்கிவிட்டார்கள்?

அனந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. பெரிய திருமலை நம்பியிடம் சென்று தன் கவலையைச் சொல்லிக் காரணம் கேட்டான்.

‘தெரியவில்லையே அப்பா! ராமானுஜரின் பரிவாரங்கள் கீழ்த் திருப்பதிக்கு வந்து சேர்ந்துவிட்டதாகப் போன வாரமே சொன்னார்கள். ஒன்று செய். நீ ஒரு நடை கீழே இறங்கிச் சென்றே பார்த்துவிட்டு வாயேன்?’

அவனுக்கும் அது சரியென்று பட்டது. மனைவியிடம் சொல்லிவிட்டு மலையை விட்டு இறங்க ஆரம்பித்தான்.

பாதைகளற்ற ஆரண்யம். ஒன்று இரண்டு மூன்று என்று வரிசையாக ஏழு மலைகளைக் கடப்பது எளிதல்ல. ஒரு கணம் வழி பிசகிப் போனாலும் புறப்பட்ட இடத்துக்கோ, போய்ச்சேரவேண்டிய இடத்துக்கோ சேர முடியாமல் போகும். மாதக் கணக்கில் எத்தனையோ பேர் அப்படி வழி தெரியாமல் தவித்துத் திரும்பிய கதைகள் நிறையவே உண்டு.

அனந்தன் திருமலைக்கு வந்து சேர்ந்தது முதல் ஒருமுறைகூடக் கீழே இறங்கிச் சென்றதில்லை. ஒரு நந்தவனம் அமைத்து, பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்துகொண்டிரு என்று ராமானுஜர் சொன்ன வார்த்தையைத் தாண்டி வேறெதையும் செய்யவில்லை. எனவே, இறங்குவது அவனுக்குச் சிரமமாக இருந்தது. உத்தேசமாக வழியை ஊகித்தே செல்ல வேண்டியிருந்தது.

ஒருவாறாக அவன் கீழே வந்து சேர நான்கு தினங்கள் பிடித்தன. ராமானுஜரும் அவரது பரிவாரங்களும் எங்கே தங்கியிருக்கிறார்கள் என்று கேட்டு விசாரித்துக்கொண்டு ஓடினான். உடையவர் இருக்குமிடத்தை அடைந்தபோதுதான் அவனுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

‘சுவாமி…!’

ராமானுஜர் புன்னகை செய்தார். ‘வா, அனந்தாழ்வான்! நலமாக இருக்கிறாயா?’

நெடுஞ்சாண்கிடையாக அவர் பாதங்களில் விழுந்து பணிந்து எழுந்த அனந்தனின் கண்களில் இருந்து கரகரவென நீர் வழிந்தது.

‘சுவாமி, தங்களைப் பார்த்து எத்தனைக் காலமாகிவிட்டது! இவ்வளவு தூரம் வந்துவிட்டு மலைக்கு வராமல் இங்கேயே தங்கிவிட்டீர்களே!’

ராமானுஜர் ஒரு கணம் யோசித்தார். பிறகு சொன்னார். ‘வரலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இம்மலை ஆதிசேஷன் அம்சம். அதனாலேயே திருப்பதிக்கு வந்த பத்து ஆழ்வார்களும் மலை ஏறாமல் தவிர்த்துவிட்டார்கள். ஆழ்வார்களே கால் வைக்கத் தயங்கிய மலையின்மீது அற்பன் நான் எப்படி வைப்பேன்?’

திகைத்துப் போய் நின்றான் அனந்தாழ்வான்.

(தொடரும்)

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி