சில காதல்களின் கதை

அந்தப் பெண்ணுக்கு என்று ஆரம்பிப்பது அபத்தம். அந்தச் சிறுமிக்கு மிஞ்சிப் போனால் பதிமூன்று வயது. எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். வீடு, வீட்டை விட்டால் பள்ளிக் கூடம், மீண்டும் மாலை வீடு. ஓய்வுக்கு இணையம். ஒப்புக்குத் தோழிகள். எல்லா சராசரி எட்டாம் வகுப்பு மாணவிகளையும் போலத்தான் அவளும் இருந்தாள். அல்லது அப்படி எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.

திடீரென்று ஒரு நாள் பள்ளிக்கூடத்தில் இருந்து கிளம்பியவள் வீடு வந்து சேரவில்லை. எனவே, பெற்றோர் தேடிக்கொண்டு கிளம்பினார்கள். பள்ளியில் இருந்து அவள் கிளம்பி வெளியே சென்ற காட்சிக்கு ஒளிப்பட சாட்சி இருந்தது. ஆனால் வெளியேறிய சிறுமி எங்கே சென்றாள்?

கவலைகள். கலவரம். அச்சம். தோழிகளிடம் விசாரிப்பு. அவளறிந்த, அவளை அறிந்த ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று விசாரணை. காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு. வேறென்ன செய்ய முடியும்? இரண்டு வருடங்களாக வீட்டில் முடங்கிக் கிடந்த சிறுமி. மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட பிறகு மகிழ்ச்சியுடன் போய் வந்துகொண்டிருக்கிறாள். சட்டென்று ஒரு நாள் இப்படி ஆகிவிட்டதென்றால் என்ன பொருள்?

பிள்ளை பிடிக்கிறவர்கள் சென்னையில் இருக்கிறார்களா? தெரியாது. கடத்திக்கொண்டு சென்று பணம் கேட்டு மிரட்டப் போகிறார்களா? தெரியாது. வேறு விதமான அசம்பாவிதங்களுக்கும் சாத்தியம் இல்லாமல் இல்லை. காலம் கலிகாலம். எதுவும் நடக்கும். எப்போதும் நடக்கலாம். ஆண்டவா, தவறாக ஏதும் ஆகிவிடாமல் நீ பார்த்துக்கொள்.

கண்ணீரிலும் கலவர உணர்விலும் இரண்டு நாள்கள் கழிந்த பிறகு காவல் துறை அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். உடன் படிக்காத யாரோ ஒருவனுடன் ஓடிப் போகப் பார்த்திருக்கிறாள். இனி தாயே, உங்கள் சமர்த்து.

பிறகு தெரிய வந்தது, அவள் வீட்டில் இருந்து பணம் துணி மணி முதல் சகல ஆயத்தங்களுடன்தான் கிளம்பிச் சென்றிருக்கிறாள் என்பது.

அதே பள்ளியில் வேறு வகுப்பில் படிக்கிற என் மகள் மூலமாக இந்தத் தகவல் வந்த போது முதலில் அதிர்ச்சியாக இருந்தது. அந்தச் சிறுமியின் பெற்றோருக்கு வந்திருக்கக்கூடிய அதே அதிர்ச்சிதான். அதே கலவர உணர்ச்சி. அதே அச்சம். 96 படம் வெளிவந்தபோது நான் அவ்வளவு ரசித்துப் பார்த்தது தவறோ என்று சம்பந்தமில்லாமல் தோன்றியது. உடனே இன்னொன்றும் தோன்றியது. 96 ஜானு ஒரு கெட்டிக்காரி. ஒழுங்காகப் படித்தாள். பொழுதுபோக்குக்குக் காதலித்தாள். பிறகு தந்தை பார்த்து வைத்த சிங்கப்பூர்க்காரனை மணந்துகொண்டு, தன்னைப் போலவே அழகாக ஒரு பெண் குழந்தையைப் பெற்று, புருஷன் பாதுகாப்பில் விட்டுவிட்டுத்தான் இங்கே திரும்பி வந்து உருப்படாத ராமை உசுப்பேற்றிவிட்டுப் போனாள். ராம்கள் தத்தியாக இருந்தாலும், ஜானுவின் தலைமுறை சரியாகத்தான் இருந்திருக்கிறது. பிறகு வந்ததில்தான் ஏதோ பிசகு.

இந்தச் சம்பவத்துக்குச் சற்றேறக் குறைய முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்தது. அந்தப் பையன் அப்போது எட்டாம் வகுப்பல்ல. பத்தாம் வகுப்பில் இருந்தான். உடன் படிக்கும் ஒரு பெண்ணின் மீது காதல் வந்துவிட்டது. அது வராமல் என்ன செய்யும்? பிறகு வயதுக்கு என்ன மரியாதை? ஆனால் அதே வகுப்பில் அப்போது படித்துக்கொண்டிருந்த எனக்கும் இதர மாணவர்களுக்கும் அது வியப்புக்கும் கிளுகிளுப்புக்கும் உரிய ஒரு சம்பவம். சரியாகச் சொல்வதென்றால், சரித்திரம். நான் ஒரு காதல் சரித்திரத்தின் சாட்சியாகிறேன் அல்லவா? எவ்வளவு பேருக்கு இதெல்லாம் வாய்க்கும்?

அவன் எனக்கு நண்பனும்கூட. ‘டேய், என் ஆளுக்கு தர்ற மாதிரி ஒரு கவிதை எழுதிக் குடேன்?’ என்று கேட்டான்.

பொதுவாகக் கலைஞர்களுக்கு வருவதாகச் சொல்லப்படும் காதலெல்லாம் மாய யதார்த்த வகையறாவைச் சேர்ந்தது. ஓரிரு விதி விலக்குகள் இருக்கலாம். பெரும்பாலும் கற்பனைக் காதல்தான். ஆனால் காதல் சார்ந்த இம்மாதிரி காண்டிராக்ட் வேலைகள் அவசியம் வரும். அந்த வயதில் என்னைப் பொருட்படுத்தி ஆனந்த விகடனா கவிதை கேட்கும்? நண்பன் தான் கேட்பான். எனவே என்னுடைய அதிக பட்சத் திறமையைத் திணித்து, காதல் ரசம் சொட்டும் அறுசீர் விருத்தம் ஒன்றினை அவனுக்கு எழுதிக் கொடுத்தேன். இதிலிருந்தே உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். விருத்தத்தில் காதல் கடிதம் எழுதித் தருபவன் வாழ்வில் எந்தப் பெண்ணும் தற்செயலாகக் கூட எதிர்ப்பட மாட்டாள்.

ஆனால் மேற்சொன்ன நண்பனானவன் நான் எழுதிக் கொடுத்ததை அழகாகத் தன் கையெழுத்தில் பிரதி எடுத்து அவளுக்குக் கொடுத்துவிட்டான். அவளுக்கு அது பிடித்ததா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவனுக்குத் தருவதற்காக நான் எழுதி வைத்த நோட்டுப் புத்தகத்தை என் வீட்டில் எடுத்துப் பார்த்துவிட்டார்கள். படிக்கிற வயதில் காதலா? யார் மீது காதல்? எவ்வளவு நாளாக இது நடக்கிறது? குடும்பப் பெயரைக் கெடுக்க வந்த குலக் கேடே, இதெல்லாம் சரியில்லை. விட்டுத் தொலை.

அறிவுரைகளும் நீதி போதனைகளும். ஆ, அவற்றுக்குத்தான் எத்தனை ஆயிரம் கோரப் பற்கள் நீட்டிக்கொண்டு நிற்கின்றன. மொத்தமாகக் கடித்துத் தின்றுவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் குதறி, ரத்தக் களறியாக்கிவிட்டுக் காணாமல் போய்விடும் காட்டேரி இனத்தைச் சேர்ந்தவை அவை. அன்றைக்கு என் துயரமெல்லாம் அந்த அறிவுரைகளும் போதனைகளும் அல்ல. அவற்றுக்குப் பொருந்தக் கூடிய ஒரு உண்மைக் காதலை என்னப்பன் எனக்கு ஏன் தராமல் போய்விட்டான் என்பதுதான். பின்னொரு நாள் நான் கவிதை எழுதிக் கொடுத்த நண்பனிடம் அந்தச் சோகக் கதையைச் சொன்னபோது சுவாரசியமின்றிக் கேட்டுக்கொண்டான். பிறகு, ‘அவ என் லவ்வ அக்செப்ட் பண்ணிட்டாடா. ஆனா அந்தக் கவிதை நல்லால்லன்னு சொல்லிட்டா’ என்று சொன்னான்.

அந்தச் சம்பவத்துக்குப் பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்பு அவனை மீண்டும் சந்தித்தேன். பழைய காதலை நினைவூட்டியபோது, புன்னகை செய்தான். அந்த வகுப்புடன் அதெல்லாம் முடிவடைந்துவிட்டதாகச் சொன்னான். தற்போது தனக்குத் திருமணமாகிவிட்டதாகவும் மனைவியைத் தனது உறவுக்காரர் யாரோ தேடிக் கொடுத்ததாகவும் தெரிவித்தான்.

‘மறந்தே போயிடுச்சா அந்த டென்த் ஸ்டாண்டர்ட் லவ்வெல்லாம்?’

‘மறக்க முடியுமா? அப்பப்ப நினைச்சிப்பேன். ஆனா, அவ்ளதான்.’

அதே பத்தாம் வகுப்பில் என் மகள் படித்துக்கொண்டிருந்த காலத்தில் உடன் படிக்கும் பலரது காதல்களை என்னிடம் அழகாக விவரித்திருக்கிறாள். மாதம் ஒரு பெண்ணைக் காதலிப்பவனைப் பற்றி. ஒரே சமயத்தில் இரண்டு பெண்களிடம் ப்ரப்போஸ் செய்திருப்பவனைப் பற்றி. கோரிக்கைகளை நிராகரிக்கும் பெண்களைப் பற்றி. ஏற்றுக்கொண்டு ரோஜாப்பூ வாங்கிக்கொள்ளும் பெண்களைப் பற்றி. காதலர் தினத்தன்று பள்ளிக்கு வெளியே நடைபெறும் ரகசியக் கலை நிகழ்ச்சி சந்திப்புகள் பற்றி. டேட் போகிறவர்களைப் பற்றி.

எந்தக் காதலாவது மாணவர்களைத் தாண்டி ஆசிரியர்களுக்கோ, பெற்றோருக்கோ தெரிய வந்திருக்கிறதா என்று கேட்பேன். ஒன்றிரண்டு அப்படியும் ஆகியிருக்கிறது. ஆனால் நண்பனுக்குக் கவிதை எழுதிக் கொடுத்த பாவத்துக்கு நான் வீட்டில் வாங்கிக் கட்டிக்கொண்ட அளவுக்கெல்லாம் எதுவும் கொழுந்துவிட்டு எரிந்ததாகத் தெரியவில்லை. ‘படிச்சி முடிச்சிட்டு லவ் பண்ணிக்கலாம்னு அவங்களே ப்ரேக்கப் பண்ணிப்பாங்கப்பா. அவ்ளதான்’ என்று சொல்வாள். படிக்கும்போதே பல காதல்களும் பல ப்ரேக்கப்களும்கூட நடந்திருக்கின்றன. ஒரே வகுப்பில் இரண்டு ப்ரேக்கப்களும் ஒரு புதிய காதலுமாக மகிழ்ச்சியுடன் வாழ்கிற ஒரு மாணவியைக் குறித்தும் ஒரு நாள் சொல்லியிருக்கிறாள்.

‘உனக்கு யாராவது ப்ரப்போஸ் பண்ணியிருக்காங்களாடா கண்ணு?’

‘ம்ஹும். இது வரைக்கும் இல்ல.’

‘நீ யாருக்காவது பண்ணியிருக்கியா? இல்ல, பண்ணணும்னு தோணியிருக்கா?’

‘ப்ச். இன்னும் தோணினதில்ல.’

‘லவ் பண்ணா தப்பில்ல. நானோ அம்மாவோ ஒண்ணும் சொல்ல மாட்டோம். அந்தக் கவலை உனக்கு வேணாம், சரியா?’

‘வந்தா பாத்துக்கலாம்.’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

வாழ்க்கையை உணர்வுபூர்வமாக அணுகாதிருப்பது நவீன உலகில் ஒரு வகையில் பாதுகாப்பானது. இந்தப் பாதுகாப்புணர்வு இந்தத் தலைமுறைக்கு எப்படியோ மிக எளிதாகக் கைகூடியிருக்கிறது. இருந்தால் சரி. இல்லாவிட்டாலும் சரி. வந்தால் வரட்டும். போனால் போகட்டும். இது இல்லாவிட்டால் இன்னொன்று. அது இல்லாவிட்டால் வேறொன்று. எதுவுமே இல்லாவிட்டாலும் எனக்குப் பிரச்னை இல்லை. செய்வதற்கு ஆயிரம் வேலை இருக்கிறது. பார்ப்பதற்கு நூறு வெப் சீரிஸ். பேசிக் களிக்கக் கணக்கற்ற சங்கதிகள். எதுவுமே இல்லாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது இன்ஸ்டாக்ராமும் வாட்சப் ஸ்டேடஸ்களும். தவிரவும் படிப்பு மற்றும் தேர்வுகள்.

இது பற்றுக பற்றற்றான் பற்றினை வகையறா இல்லை. அதற்குப் பக்கத்து காம்பவுண்ட். பற்றில்லாமல் இல்லை. ஆனால் பற்றிக்கொண்டு எரிகிற அளவுக்கு எதிலும் ஒன்றுமில்லை. இடைவெளியே இல்லாமல் இந்தத் தலைமுறையுடன் எளிதாக ஒன்றிவிட முடியும். அதற்கு நீங்கள் ஊம் சொல்றியா மாமாவுக்கு உள்ளர்த்தம் தேடிக்கொண்டிருக்காமல் ரசிக்கக் கற்க வேண்டும்.

(ஆனந்த விகடனில் வெளியானது.)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter