என்னைப்பார், இட்லி இறங்கும்!

படம் நன்றி: விக்கிபீடியா

அவளை என்னால் ஐந்து நிமிடங்களுக்குமேல் ரசிக்க முடிந்ததில்லை. ஆனால் என் குழந்தை உள்பட எனக்குத் தெரிந்த எல்லா குழந்தைகளுக்கும் அவள் ஒரு ரோல் மாடலாக இருக்கிறாள்.

அவள் முகம் அச்சிட்ட கைக்குட்டைக்கு மவுசு இருக்கிறது. அவள் படம் போட்ட தம்ளரில் பால் கொடுத்தால் உடனே உள்ளே இறங்குகிறது. துணிக்கடைக்குச் சென்றால் குழந்தைகள் கேட்கும் முதல் கேள்வி, டோரா போட்ட கவுன் இருக்கா? டோரா போட்ட ஃப்ராக் இருக்கா?

ஆங்கிலத்தில் அவள் பேசினாலும் நகராமல் பார்க்கிறார்கள். ஸ்பானிஷில் பேசினாலும் பார்க்கிறார்கள். அபத்தம் மேவிய தமிழ் மொழிபெயர்ப்பிலும் அதே அளவு ரசிக்கிறார்கள்.

டோரா சிடி. டோரா பென்சில். டோரா டெலிபோன். டோரா கர்ச்சிப். டோரா தம்ளர். டோரா ப்ளேட். டோரா Bag. இன்னும் இங்கு வரவில்லை, டோரா பொம்மை.

டோரா, புஜ்ஜி, பியாங்கோவை இன்னும் ரேஷன் கார்டுகளில் மட்டும்தான் சேர்க்கவில்லை. மற்றபடி அவர்கள் பேச்சில்லாத ஒரு தினத்தை நான் அனுபவித்துச் சில வருடங்கள் ஆகின்றன.

என் குழந்தையுடன் அமர்ந்து சில எபிசோட்களை முழுவதுமாக கவனித்துப் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் டோரா, தனது குரங்குத் தோழனுடன் எங்காவது புறப்பட்டுப் போகிறாள். அவள் போகாத பிராந்தியமே பூவுலகில் இல்லை.

தான் போகிற இடம், போகும் வழி குறித்து திரும்பத் திரும்பச் சொல்லி, பார்வையாளர்கள் மத்தியில் அதன் முக்கியத்துவத்தை நினைவூட்டியபடியே இருக்கிறாள். ஆற்றைக் கடந்து, பாலங்களைக் கடந்து, முதலைகள் நிறைந்த ஏரிகளைக் கடந்து, பனி மலைகளைக் கடந்து, ஒரு சமயம் தென் துருவத்தையே கடந்து தன் முடிவற்ற பயணத்தை அவள் தொடர்ந்துகொண்டிருக்கிறாள்.

டோராவுக்கு வழியில் பசிப்பதில்லை. ஆகவே எனக்கும் பசிக்காது. டோரா எப்போதும் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே இருக்கிறாள். நானும் இதோ சிமிட்டுகிறேன். டோரா அழகாக நடனமாடுகிறாள். இதோ அவளைப் போலவே நானும். எனக்கும் டோராவுக்கு வாய்த்தது போல் ஒரு புஜ்ஜி அகப்படுமா? ஆனால் டோராவின் ஒரே எதிரியான குள்ளநரி மட்டும் எனக்கு வேண்டாம். அவள் எத்தனை ஊர் சுற்றினாலும் அவளது பெற்றோர் அவளைக் கண்டிப்பதே இல்லை. நான் பக்கத்து வீட்டுக்கு விளையாடப் போவதைக் கூட நீ ஏன் தடுக்கிறாய்?

குழந்தைகள் டோராவில் தன்னையும் தன்னை டோராவாகவும் மானசீகத்தில் பார்க்கின்றன. மார்க் வேய்னரின் குரலில் வரைபடம் பேசத் தொடங்கும்போது வரிக்கு வரி முன்னதாகவே ஒப்பிக்கின்றன. எபிசோட் முடிவடைந்ததும் ஒரு தாளை எடுத்து நாலு கோடுகள் கிறுக்கி, அது பேசுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றன.

நாந்தான் மேப். நாந்தான் மேப். நாந்தான் மேப்.
நீங்கள் போகுமிடத்தைக் கண்டறிந்து சொல்வது நானே
நாந்தான் மேப்.

அறிவுக்கு அதிகம் வேலை கொடுப்பதில்லை. பயணம் என்கிற ஒரு சுவரசியம்தான். இன்றைக்கு டோரா எங்கே போகிறாள்? என்ன அனுபவம் வாய்க்கிறது? அவ்வளவுதான். குள்ளநரி வரும்போதெல்லாம் என் குழந்தை பதற்றமாகிவிடுகிறது. டோரா தோற்கக்கூடாது. குள்ளநரி திருடுவதற்குள் குரல் கொடுத்து அவளை எச்சரித்துவிட வேண்டும்.

டோரா, அங்க பாரு. அது வந்துடுச்சி. திரும்பிப் பாரு. பார்த்துடு சீக்கிரம்.

என்னது? நான் திருடறேனா? ஹாஹாஹா. குள்ளநரி தோற்றுத் திரும்பி ஓடினால் மட்டுமே குழந்தைக்கு அடுத்த வாய் இட்லி இறங்குகிறது.

1999ல் அமெரிக்காவில் அறிமுகமாகி, 2000ம் ஆண்டு தொடங்கி மிகப் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடராக வலம் வரும் Dora The Explorer. 2004ம் ஆண்டு மட்டும் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. முதல் பெரிய தொகை அது. அதன்பின் ஆண்டுதோறும் டோரா சம்பாதித்துக் கொடுக்கும் தொகைக்கு கணக்கு சொல்வது சிரமம். பல மொழிகளில் டோரா இப்போது டப்பிங் உதவியுடன் பேசுகிறாள். பல தேசத்துக் குழந்தைகளின் கனவுக் குழந்தையாக இருக்கிறாள். அந்த உருண்டை முகமும் கிள்ளலாம் போல் கை பரபரக்கச் செய்யும் நுங்குக் கன்னங்களும் முட்டை விழிகளும்தான் முக்கியம்.

ஒரு கார்ட்டூன் தொடரின் வெற்றிக்கு எவையெல்லாம் சரியான காரணங்களாக இருக்கமுடியும் என்று டோராவை முன்வைத்து நாம் கண்டறிவது சுலபம்.

தெளிவான முகபாவங்கள். குழப்பமில்லாத எளிய, குறைவான கோடுகள். அடிக்காத வண்ணங்கள். பார்வையாளர்களைப் பார்த்துப் பேசும் கட்டமைப்பு. [ எப்போதும் ஒரே திசையில் பார்க்கும் டோராவுக்கு ஏன் இன்னும் கழுத்து வலி வரவில்லை என்பது என் நீண்டநாள் சந்தேகம்.] கதை சுவாரசியத்துக்காக அவ்வப்போது சில தாற்காலிகப் பரபரப்புகளை உருவாக்கி, அதிகம் இழுக்காமல் உடனுக்குடன் முடித்து வைத்துக் கொண்டாடும் தன்மை. மனிதர்களையும் பிராணிகளையும் ஒரு நேர்க்கோட்டில் இணைந்து செயல்படவைத்து, எப்போதாவது இது மனிதன், இது பிராணி என்று மெலிதாக இனம் பிரித்துக் காட்டிவிடுகிற தொழில் நேர்த்தி. அதிகம் சிந்திக்கவிடாமல், அதேசமயம் அபத்தக் களஞ்சியமாகவும் இல்லாமல் அறிவுபூர்வமாகச் சில விஷயங்களைச் சொல்லித்தருகிற தன்மை.

இப்போதெல்லாம் காரில் எங்கேனும் வெளியே கிளம்பினால் என் குழந்தை மறக்காமல் சீட் பெல்ட் போட்டுவிடச் சொல்கிறது. டோரா சீட் பெல்ட் இல்லாமல் காரில் செல்வதில்லை. யாராவது ஏதாவது பரிசளித்தாலோ, உதவி செய்தாலோ தவறாமல் நன்றி சொல்கிறது. டோரா சொல்கிறாள். ஏதாவது சிறு தவறு செய்துவிட்டால், வருத்தம் தெரிவிக்கிறது. டோரா சொல்லிக்கொடுத்திருக்கிறாள்.

பதில் சொல்லமுடியாத ஒரே கேள்வி : டோரா பள்ளிக்கூடத்துக்குச் செல்வதே இல்லை. என்னை மட்டும் ஏன் படுத்துகிறாய்?

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter