கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 6

பெருமாள்சாமி ஓர் அயோக்கியன். பெருமாள் சாமி ஒரு பித்தலாட்டக்காரன். பெருமாள் சாமி ஒரு கெட்ட பையன். இது வகுப்புக்கே தெரியும், பள்ளிக்கே தெரியும். ஆனாலும் தமிழ் ஐயா எப்படி அவன் சொன்னதை அப்படியே நம்பினார்?

மறுநாள் தமிழ் வகுப்பு ஆரம்பித்ததும், வகுப்பறைக்கு வெளியே தன்னை அவர் முட்டி போட்டு நிற்கச் சொன்னபோது பத்மநாபன் தீவிரமாக யோசித்தான். முட்டி எரிந்தது. புத்தியில் வன்மம் மட்டுமே மேலோங்கி இருந்தது. என்னவாவது செய்து பழிவாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் ஆன்மா அமைதியுறாது.

ஆனால் வேறு விதமாக யோசித்துப் பார்த்தால் பெருமாள் சாமி தன்னைப் பற்றிச் சொன்ன புகார்களில் பாதிக்குமேல் உண்மையாகவும் இருக்கிறது. சார், பத்மநாபன் வளர்மதிய லவ் பண்றான் சார். உண்மை. அவளுக்கு லெட்டர் குடுத்தான் சார். உண்மை. அவ வயசுக்கு வந்தப்ப மயில் ஜோடிச்சாங்கல்ல? அந்த விசேசத்துக்கு இவன் போனான் சார். சந்தேகமில்லை.

ஆனால் இதற்குமேல் அவன் கூறியவைதான் தவறான தகவல்கள். வகுப்பறையில் எப்போதும் வளர்மதியையே பார்த்துக்கொண்டிருக்கிறான். காதல் கவிதைகளாக எழுதிக் குவிக்கிறான். தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம் என்று பள்ளி முழுதும் செய்தி பரப்பி வருகிறான். வீட்டில் பைசா திருடி வளர்மதிக்கு ஆல்வள்ளிக் கிழங்கு வாங்கிக் கொடுக்கிறான். அவளுடன் ராஜலட்சுமி திரையரங்குக்குப் போகிறான். அவள் தனக்கு முத்தம் கொடுத்ததாக நண்பர்களிடம் சொல்லியிருக்கிறான்.

‘முளைச்சி மூணு இலை விடலை’ என்று தமிழ் ஐயா சொன்னார்.

‘பிச்சுப்புடுவேன் படுவா. நாளைக்கு வரப்ப உங்கப்பாவ கூட்டிக்கிட்டு வரணும். தெரிஞ்சிதா?’

‘சார், இவன் பொய் சொல்றான் சார். அப்படியெல்லாம் நான் சொல்லவும் இல்ல, செய்யவும் இல்ல சார். நீங்கவேணா வளர்மதியையே கேட்டுப்பாருங்க சார்.’

தமிழ் ஐயா முறைத்தார். ஸ்டாஃப் ரூமுக்குள் நுழைந்த வேறு சில ஆசிரியர்கள் விஷயத்தின் சுவாரசியத்தால் கவரப்பட்டு, ‘என்ன பழனி?’ என்று அவரைக் கேட்டார்கள்.

‘பசங்க ஜோடி தேடுறானுக’

‘நைன்த் பி தான? அட்டண்டன்ஸ் ரிஜிஸ்தர்ல இருக்கற அத்தன பேருக்கும் ஆளுக்கொரு டாவு வெச்சிருக்கானுக. வந்து சேந்தானுக பாருங்க.’ என்று தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்தார் பாண்டுரங்கன் சார்.

பத்மநாபனுக்கு அவமானமாக இருந்தது. காதல் எத்தனைக்கு எத்தனை சுகமானதோ, அதே அளவு வலி தரக்கூடியதும். தமிழ் ஐயா உள்ளங்கைகளை நீட்டச் சொல்லி தலா மூன்று அடிகள் கொடுத்தார். ஒரு அடி ஸ்கேலில் ஒழுங்காக அடித்து வலி ஏற்படுத்தத் தெரிந்த ஆசிரியர்கள் குறைவு. தமிழ் ஐயாவுக்கு அந்தக் கலை அத்தனை பரிச்சயமில்லை. அடி விழும்போது லேசாகக் குவித்துக்கொண்டுவிட்டால் போதும். வலிக்காது. மகாலிங்க வாத்தியார் போன்ற வில்லன்கள், பையன்களின் இந்த உத்தியை நன்கறிந்தவர்கள். அவர்கள் புறங்கையைத் திருப்பச் சொல்லித்தான் அடிப்பார்கள்.

‘அசிங்கமா இருக்கு. க்ளாசுல கட்டிப் பொறண்டு அடிச்சிக்கறது; கேட்டா காதல் கத்திரிக்கான்றது. படிக்கிற வயசுல இப்பிடி அலைபாயவிட்டிங்கன்னா பின்னால மூட்ட தூக்கணும் தெரிஞ்சுதா? உப்பு மண்டி தவிர வேற எதுலயும் வேலதரமாட்டான் பாத்துக்கோ’ என்று சொன்னார்.

ஐயா சொல்வதில் தவறேதுமில்லை. பத்மநாபனுக்கு லேசாக அழுகை வந்தது. அவனது அப்பாவும் இதையேதான் அடிக்கடி சொல்லுவார். உப்புமண்டியில் மூட்டை தூக்குதல் பற்றி. அவர் தன் வயசுக் காலத்தில் ஒழுங்காகப் படித்தவர். திரு.வி.க.வின் அழகு என்பது யாதுவையெல்லாம் உருப்போட்டுப் பரீட்சை எழுதி, முதல் வகுப்பில் தேர்வானதன் விளைவுதான் சோழிங்கநல்லூர் மோட்டார் சைக்கிள் கம்பெனியில் அவரால் செக்யூரிடி உத்தியோகம் பார்க்க முடிகிறது. உப்பு மண்டியில் மூட்டை தூக்கினால் மாதம் ரூ. இரண்டாயிரம் கிடைக்காது. தீபாவளிக்கு போனஸ் தரமாட்டார்கள். பொங்கலுக்கு வேட்டி, சட்டையுடன் கரும்பு வைத்துத் தரமாட்டார்கள்.

ஆனால் அப்பா காதலித்ததில்லை. அபூர்வமாக ஒருநாள் கிளம்பி, குடும்பத்துடன் ராஜலட்சுமி திரையரங்கத்தில் அலைகள் ஓய்வதில்லை படத்துக்குப் போனபோது, சற்றும் ரசனையில்லாமல் பாடல் காட்சிகளில் வெளியே போய்விட்டவர். ‘என்னடா எளவு எப்பப்பாரு அந்தக் கறுப்பிய பாத்து நாக்க தொங்கப்போட்டுக்கிட்டு அலையுறான்’ என்று சொன்னார். கடவுள் ஏன் அப்பாக்களுக்குக் காதலைப் புரியவைப்பதேயில்லை?

‘அவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சிடா. அதான் தப்பு’ என்று கலியமூர்த்தி ஒருநாள் சொன்னான். உண்மையாகவும் இருக்கலாம். கல்யாணம் செய்துகொள்வதற்குமுன்னால் கண்டிப்பாகக் காதலித்துவிட வேண்டும். வளர்மதி தன் காதலை ஏற்றுக்கொண்டுவிட வேண்டும். வேறெதுவும் வேண்டாம். புளுகன் பெருமாள் சாமி சொன்னதுபோல் முத்தமெல்லாம் கூட அவசியமில்லை. ஒரு உணர்வு. அது போதும். அவள் என்னை அங்கீகரிக்கிற பெருமிதம் ஒன்றுபோதும். மற்றதெல்லாம் அனாவசியம். மோட்டார் சைக்கிள் கம்பெனியில் மேனேஜராகவே ஆகிவிட முடியும். தமிழ் ஐயாவும் திரு.வி.கவும் பார்த்துப் பொறாமை கொள்ளத்தக்க வகையில் பிறகு வாழ்வில் முன்னுக்கு வந்து காட்டிவிடலாம்.

ஆனால் அதெல்லாம் அப்புறம். நாளைக்கு அப்பாவை அழைத்துவரச் சொல்லியிருக்கிறாரே. அதற்கு என்ன செய்வது? தமிழ் ஐயாவும் ஓர் அப்பாதான். முத்துக்குமாரசாமி என்கிற அவரது தவப்புதல்வனும் இதே பள்ளிக்கூடத்தில்தான் பத்தாம் வகுப்பில் படிக்கிறான். அவன் மீது இப்படியொரு பிராது வந்து, அழைத்து வா உன் அப்பாவை என்று சொன்னால் வந்து நின்று என்ன செய்வார்? யோசிக்க வேண்டாமா? பிள்ளைகளின் தர்மசங்கடங்கள் ஏனோ பெரியவர்களுக்குப் புரிவதே இல்லை. ஆசிரியர்களானாலும் அப்பாக்களானாலும் பெரியவர்களுக்குப் பெரும்பாலும் அறிவே இருப்பதில்லை.

முட்டி போட்டு நின்றவண்ணம் யோசித்துக்கொண்டிருந்தவனுக்குச் சட்டென்று ஓரெண்ணம் தோன்றியது. வகுப்பு முடியும்வரை காத்திருந்தான். மணியடித்து தமிழ் ஐயா வெளியே வந்தபோது ஒரு கணம் நின்று அவனைப் பார்த்தார். தருணம்.

பத்மநாபன் சட்டென்று எழுந்து ஓடி அவர் காலில் விழுந்தான்.

‘மன்னிச்சிருங்க சார். இன்னமே என்னப்பத்தி யாரும் உங்களாண்ட கம்ப்ளைண்டு குடுக்கமாட்டாங்க. முழுப்பரீட்சைல நான் க்ளாஸ் ஃபர்ஸ்டு வந்து காட்டுறேன். என் கண்ண தொறந்துட்டிங்க சார்!’

பரவாயில்லை. சந்தர்ப்பத்துக்கு ஏற்பக் கண்ணில் கொஞ்சம் நீரும் வந்து உதவுகிறது.

தமிழ் ஐயா பரவசமானார். சட்டென்று குனிந்து அவனைத் தூக்கினார். ‘குடுமி? நீயா பேசுறே?’

‘ஆமா சார். என் கண்ண தொறந்துட்டிங்க சார்.’

‘சிங்கம்டா நீயி. எந்திரிச்சி கண்ண தொடச்சிக்க. இந்த மனமாற்றம்தாண்டா வாழ்க்கைல முன்னுக்கு வர உதவும். டேய், பாத்துக்கங்கடா. எல்லாப் பசங்களும் இவனமாதிரி இருக்கோணும். காந்தி கூட இப்பிடித்தான். தப்பு செய்யத் தயங்காமத்தான் இருந்திருக்காரு. அப்பால அரிச்சந்திரன் டிராமா பாத்து திருந்தினாரு. தெரியும்ல?’

பத்மநாபனுக்கு நாக்கு துறுதுறுத்தது. காந்தி தன் பள்ளி நாள்களில் யாரையேனும் காதலித்திருக்கிறாரா? கடிதம் கொடுத்திருக்கிறாரா? அடிக்கடி ஐயா காந்தியை உதாரணம் காட்டுகிறார். என்றைக்காவது கேட்டுவிட வேண்டும். அடிக்கடி அவர் தவறு செய்தார் என்றும் சொல்கிறார். ஆனால் என்ன தவறு என்று சொன்னதில்லை. சிக்கனும் மட்டனும் சாப்பிட்டது ஒரு தவறாக முடியாது. வேறேதாவது பெரிதாகச் செய்திருக்கத்தான் வேண்டும். நூலகத்தில் சத்திய சோதனையைத் தேடிப் பார்த்தாகிவிட்டது. அகப்படவில்லை. சின்ன வயதிலேயே அவருக்குத் திருமணமாகிவிட்டது என்று சொல்லியிருக்கிறார். ஒருவேளை திருமணத்துக்குப் பிறகு யாரையாவது டாவடித்திருப்பாரோ? அப்படியே இருந்தாலும் அதையெல்லாம் சத்திய சோதனையில் எழுதியிருப்பாரா?

இவ்வாறு யோசிக்கும்போதே, காதலிப்பது தவறா என்றும் ஒரு கேள்வி வந்தது. வாய்ப்பே இல்லை. பெரியவர்களுக்கு மட்டும்தான் அது தவறு. தாத்தாவானபிறகு எடுத்த புகைப்படங்களே உலகின் பார்வைக்குப் பெரும்பாலும் கிடைத்தாலும் காந்தி, தன் சின்ன வயதுகளில்தான் அதனைச் செய்திருக்கவேண்டும். என்றைக்காவது அந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டுவிடவேண்டும்.

ஒருவழியாக அப்பாவை அழைத்து வருவது என்னும் பெருந்தொல்லையிலிருந்து தாற்காலிகமாகத் தப்பித்தது பற்றி பத்மநாபன் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருந்தான். அடுத்த வகுப்பில் அடிக்கடி திரும்பித் திரும்பி பெருமாள் சாமியைப் பார்த்துக்கொண்டான். எப்போதும்போல் அவன் முறைத்துக்கொண்டே இருப்பதைக் கண்டவன், ‘மவனே இன்னிக்கி ஒனக்கு இருக்குது பாரு’ என்று மனத்துக்குள் கறுவிக்கொண்டான்.

உணவு இடைவேளையில் அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு நேரே மைதானத்துக்கு ஓடினான். பெருமாள் சாமியும் அவனது நண்பர்களான பிற படிக்காத பசங்களும் அங்கே மாமரத்து நிழலில்தான் உட்கார்ந்து அரட்டையடித்துக்கொண்டிருப்பது வழக்கம். என்னவாவது செய்து அவனைக் கதறவிட்டுவிடவேண்டும் என்று பத்மநாபன் முடிவு செய்துகொண்டான்.

அவன் மைதானத்தை ஒட்டிய மாமரத்தருகே சென்றபோது பெருமாள், மரத்தின் மேலே இருப்பது தெரிந்தது. பெரிய மரம். நிறைய கிளைகள். சீசனுக்கு ஆயிரம் காய்கள் கொடுக்கிற மரம். அனைத்தையும் பங்கு போட்டு ஆசிரியர்கள் அவரவர் வீடுகளுக்கு எடுத்துச் செல்வார்கள். ஹெட் மாஸ்டருக்கு மட்டும் இரண்டு பங்கு. பிரம்புக் கூடையில் குவித்து அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று வைக்கும் வாட்ச்மேன் எட்டியப்பன் அதில் இரண்டு எடுத்து வழியில் கடித்துக்கொண்டே போவான்.

பத்மநாபன் மரத்தடியில் போய் நின்றபோது பெருமாள் சாமியின் நண்பர்கள் அவனை முறைத்தார்கள்.

‘ஏய், என்னா?’

பத்மநாபன் பதில் சொல்லவில்லை. ஒரு கணம் யோசித்தான். விறுவிறுவென்று மரத்தில் ஏறினான்.

‘டேய், அவன் வராண்டா’ என்று கீழிருந்து குரல் கேட்டது. பெருமாள் திரும்பிப் பார்க்கக்கூட பத்மநாபன் அவகாசம் தரவில்லை. அவன் நின்று, பறித்துக்கொண்டிருந்த கிளைக்குத் தாவியேறி பொளேரென்று அவன் கழுத்தில் ஒரு குத்து விட்டான்.

அதிர்ச்சியடைந்த பெருமாள், மாங்காய் பறிப்பதை நிறுத்திவிட்டு பத்மநாபனின் கழுத்தைப் பிடித்தான். இரண்டு பையன்களின் கனம் தாங்கக்கூடிய கிளைதான். ஆனாலும் ஆடியது. இருவரும் விளைவு குறித்துச் சற்றும் சிந்திக்காமல் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளத் தொடங்க, செய்தி பரவி, பையன்களும் பெண்களும் மரத்தடியில் கூடிவிட்டார்கள்.

‘டேய், டேய், கீழ இறங்குங்கடா. இங்க வந்து அடிச்சிக்கங்கடா’ என்று ஜெயலலிதா சத்தம் போட்டாள்.

‘விழுந்தா எலும்பு தேறாதுடா’ என்று வளர்மதி சொன்னாள். பத்மநாபன் அவளைப் பார்த்தான். கோபம் மேலும் பீறிட்டது. தன் முழு பலத்தையும் பிரயோகித்து பெருமாள் சாமியைப் பிடித்துத் தள்ளினான். நியூட்டனின் மூன்றாவது விதிப் பிரகாரம், அவனும் பின்புறமாகக் கீழே விழுந்தான்.

நல்ல அடி.

[தொடரும்]
Share

1 comment

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!