வாடகைப் பை (கதை)

கதை

கருப்பையை வாடகைக்கு விட்டதற்குப் பணம் கிடைத்தது. ஓராண்டுக் காலம் அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு உண்ண முடிந்தது. அவ்வப்போது விரும்பிய எளிய ஆடம்பரங்களையும் அனுபவிக்க முடிந்தது. பெற்றுத் தரப் பணம் கொடுத்துவிட்டு, அடுத்த வருடம் வருகிறோம் என்று சொல்லிவிட்டுப் போன புருஷன் பெண்டாட்டி அமெரிக்கர்கள். அவர்கள் எப்போது வருவார்கள் என்று தெரியவில்லை. குழந்தை பிறந்து இரண்டு மாதங்களாகிவிட்டன. zoom callல் குழந்தையைக் காட்ட வேண்டியிருக்கிறது. தினமும் அவர்கள் நாற்பது நிமிடங்களுக்குக் கொஞ்சுகிறார்கள். சிக்கல்கள் தீர்ந்ததும் பறந்து வந்து எடுத்துச் சென்றுவிடுவோம் என்று அதனிடம் சொல்லும் பாவனையில் அவளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிக்கல்கள் எப்போது தீரும் என்று தெரியவில்லை.

‘குழந்தையை பத்திரமாகப் பார்த்துக்கொள்’ என்று தகப்பன் சொன்னான்.

மேற்கொண்டு பணம் தேவைப்பட்டால் தயங்காமல் கேட்கும்படி தாய் சொன்னாள்.

எவ்வளவு நல்லவர்கள். தன்னைக் கவ்வியது அதனைத் தொடாதிருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

மறுநாள் இறந்தாள்.

இந்தக் குறுங்கதையின் மூலச் செய்தி இங்குள்ளது.