புத்தக அறிமுகம் புத்தகம்

புனைவு என்னும் புதிர் – புதிய தொகுப்புகள்

விமலாதித்த மாமல்லன் மெட்ராஸ் பேப்பரில் எழுதிய புனைவு என்னும் புதிர் இரு தொகுதிகளாக வெளிவர இருக்கிறது.

முதல் தொகுப்பு, ஆர். சிவகுமார் மொழிபெயர்ப்பில் வெளிவந்த உலகச் சிறுகதைகளும் அவற்றின் நுட்பங்களைப் பேசும் கட்டுரைகளும் அடங்கியது. இரண்டாவது தொகுப்பும் உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பும் நுட்பம் பேசும் கட்டுரைகளும்தான். ஆனால் ஆர். சிவகுமார் நீங்கலான பிறர் மொழிபெயர்த்த கதைகள் அடங்கியது.

நிகரற்ற உலக இலக்கியப் படைப்புகளைத் தமிழ் வாசகர்களுக்குச் சரியான முறையில் அறிமுகம் செய்யும் பணியை மாமல்லன் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார். ஒரு சிறுகதையை எப்படி அணுக வேண்டும் என்பது தொடங்கி, அது வெளிப்படுத்தும் கணக்கற்ற புரிதல் சாத்தியங்களின் வெளியைத் திறந்து காட்டுவது வரை எதையுமே அவர் விட்டுவைப்பதில்லை. ஒரு படைப்பு எதனால் மகத்தானதாகிறது என்னும் பொற்கணத்தை வாசகர் கண்டுணரும் கட்டம், வாசிப்பெனும் செயல்பாட்டின் பூரணத்தைச் சுட்டுவது. கருவில் திருவுடையோருக்கு அது தானாக வாய்க்கும். ஆனால், சராசரி வாசகர்களையும் அடுத்தக் கட்டத்துக்குக் கையைப் பிடித்து அழைத்துச் செல்வது ஒரு திருப்பணியே அன்றி வேறல்ல.

மாமல்லனின் இக்கட்டுரைகளும் கதைகளும் மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ச்சியாக வெளிவந்தவை. இவை வெளியானபோது ஒவ்வொரு புதன் கிழமையும் அதிக வாசகர்கள் முதலில் வாசித்ததும் இவற்றைத்தான். இலக்கியத்தைச் சற்றும் சமரசமற்று அணுகும் மாமல்லனின் மனப்பான்மையும் நுட்பங்களைக் குறித்துப் பேசும் கட்டுரைகளை அதிகபட்ச எளிமை கூடிய மொழியில் அவர் விவரித்த பாங்கும் இத்தொகுப்புகளின் ஆதார பலம்.

புனைவு என்னும் புதிர் இந்து தமிழ் திசையில்தான் தொடங்கியது. அது ஒரு தொகுப்பாகி, பிறகு ஷோபா சக்தியின் பன்னிரண்டு சிறுகதைகளை எடுத்துக்கொண்டு பேசிய இன்னொரு தொகுப்பும் வெளிவந்து, இப்போது மூன்றாவது, நான்காவது தொகுப்புகள் வெளியாகின்றன. இந்த இரண்டையும் முதலில் பிரசுரிக்கும் வாய்ப்பு மெட்ராஸ் பேப்பருக்கு அமைந்தது என் பிரத்தியேக மகிழ்ச்சி.

இத்தொகுப்புகளை வழக்கம்போல மாமல்லன் சொந்தமாகத்தான் வெளியிடுகிறார். எனவே பிரதி எண்ணித்தான் அச்சாக்கம் செய்வார். ஆர்வமுள்ள வாசக நண்பர்கள் முன்பதிவு செய்துகொள்வது நல்லது.

புனைவு என்னும் புதிர் 1க்கு அவர் முன்வெளியீட்டுத் திட்டம் அறிவித்திருக்கிறார்.

உலகச் சிறுகதைகள் 1

முன்பதிவு திட்டத்தில் ₹225
தபால் செலவு இலவசம்

(196 பக்கம் ₹250 விலை)

UPI 9551651212

SBI A/c No. 37268627909
IFSC SBIN0014625

இரண்டாவது தொகுப்புக்கும் விரைவில் இது அறிவிக்கப்படலாம். அவர் அறிவித்த பிறகு இங்கே தெரிவிக்கிறேன்.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி