பாதி வித்வான்

[முந்தைய கட்டுரையில் எனது கிரிக்கெட் – வீணை அனுபவங்கள் குறித்து எழுதிய கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சில நண்பர்கள் அந்தக் கட்டுரைகளை இங்கே தரக் கேட்டார்கள். வீணை வாசிப்பு அனுபவம் குறித்த கட்டுரையை இப்போது தருகிறேன். கிரிக்கெட் கட்டுரை நாளைக்கு. சிறு நினைவுத் தடுமாற்றத்தால் இரண்டு கட்டுரைகளும் குமுதத்தில் வெளிவந்தவை என்று சொல்லிவிட்டேன். கிரிக்கெட் கட்டுரை கல்கியில் வெளியானது. இந்தக் கட்டுரை குமுதத்தில். இரண்டுமே என்னுடைய 154 கிலோபைட் புத்தகத்தில் இருக்கின்றன. புத்தகம்தான் விற்பனையில் இல்லை.]

குமுதம் பொறுப்பாசிரியர் ப்ரியா கல்யாணராமன், சமீபத்தில் ஒரு நாள் கத்திமுனையில் என்னிடம் ஒரு சிறுகதை கேட்டார். ஓரிரவு மட்டுமே அவகாசம் இருக்க, முன் தீர்மானங்கள் ஏதும் அற்று கை போன போக்கில் எழுத ஆரம்பித்தேன். உள்ளே கொஞ்சம் சரக்கும் ஒரு சிறிய புற நெருக்கடியும் இருந்தால் எழுத்து எப்படியும் வந்தே தீரும் என்பது என் கருத்து. எனது பெரும்பாலான கதைகள் அப்படி வந்தவை தான்.

இந்தக் கதையை (வெறும் காதல்) எழுத ஆரம்பித்து ஒரு மூணு பக்கம் ஓடியபிறகு கதை என்னையறியாமல் வீணை க்ளாஸில் வந்து நின்றபோது ஒரு கணம் மிகுந்த சந்தோஷமாகவும் வியப்பாகவும் ஆகிவிட்டது.

பதினைந்து வருஷங்களூக்கு முன்னால், ஆர்.கே. சூரியநாராயணாவுக்குப் போட்டியாக உருவாகிவிட வெண்டும் என்று (அவர் தான் என்னைக் கவர்ந்த வித்வான்) வீர சபதத்துடன் தினசரி சாயங்காலம் என் பேட்டையில் இருந்த ஒரு வீணை டீச்சரிடம் நல்ல பிள்ளையாகப் போய்க்கொண்டிருந்தேன்.

வீணை மாதிரி சவாலான வாத்தியம் வேறு உண்டா என்று தெரியவில்லை எனக்குக் கொஞ்சம் புல்லாங்குழல் வாசிக்க அல்ல; ஊத வரும். சுமாராக ஹார்மோனியமும் வரும். அவற்றில் எல்லாம் இல்லாத சிரமங்கள் வீணையில் உண்டு.

முதலாவது அந்தப் பெரிய ஜீவனை வழுக்காமல் மடியில் போட்டுக் கொள்ளப் பழக வேண்டும். பிறகு, இடதுகைப் பெருவிரலும் மோதிர விரலும் நமதல்ல என்று வாத்தியத்துக்கு சுவீகாரம் தந்துவிட ஒரு மன உறுதி வேண்டும். (பழுத்துவிடும்.) அடுத்தது, ‘டொய்ங் டொய்ங்’ என்கிற வீணையின் ஆதாரநாதத்தைக் கேட்கும் விதத்தில் பக்குவமாக மீட்ட (ப்ராண்ட என்பான் என்னுடன் பயின்ற ஒரு நண்பன்) வலது கை விரல்கள் பூத்தன்மை எய்த வேண்டும்.

இதற்கெல்லாம் அப்பால் தான் சங்கீதம்.

இத்தனை பழகிய பிறகும் வாசிக்கும்போது பாட்டாக ஒலிக்காமல் வெறும் சுரங்களாகவே ஒலித்து நம்மை அவமானப்படுத்தும் வழக்கம் அந்தக் கருவிக்கு உண்டு. மற்ற வாத்தியங்களில் கமகம் என்கிற சூட்சுமம், பாடல் வரிகளின் அழகுக்குத் தான் என்றால், வீணையைப் பொறுத்தவரை, பாட்டு கேட்கவே கமகம் தெரிந்தாக வேண்டும்.

ஆனால் பெரும்பாலான வாத்தியார்கள் பத்து கீர்த்தனைகள் தாண்டிய பிறகும் அப்படி ஒரு சங்கதி இருப்பதாகவே காட்டிக் கொள்ளமாட்டார்கள். ‘மாருபல்க குனா நேமிரா’ என்கிற மிக அற்புதமான ஸ்ரீரஞ்சனி ராகத்துக் கிருதியை நான் ரொம்ப நாள் வரைக்கும் Fire in the mountain, run run run ‘ ராகத்தில் தான் வாசித்துக்கொண்டிருந்தேன்.

ஏதோ ஒரு நாள் கமகத்தின் சூட்சுமம் என் விரல்களுக்குப் பிடிபட்டுவிட, அப்புறம் சூரிய நாராயணாவைப் புறமுதுகிடச் செய்யும் வெறி மிகவும் அதிகமாகி, தினசரி பத்து மணி நேரமெல்லாம் அசுர சாதகம் செய்ய ஆரம்பித்தேன். வீட்டில் பயந்துபோய் ஆஞ்சநேயருக்கெல்லாம் வேண்டிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

ஒரு அஞ்சு வருஷம் பயின்ற பிறகுதான் என் வாசிப்பு எனக்கே கேட்கும்படி இருந்தது. துணிச்சல் ஏற்பட்டு உள்ளூர் தியாகராஜ உற்சவங்களில் வாசிக்க ஆரம்பித்தபோது, ஆலாபனை என்னும் விஷயம் மிகவும் பயமுறுத்தியது.

ததரினா என்று பாடுவது சுலபம். ததரினாவை, பாடுவது போலவே வீணையில் கேட்கச் செய்வது மற்ற வாத்தியங்களோடு ஒப்பிடுகையில் சற்றுக் கஷ்டம். ஏனெனில் கற்பனை ஸ்வரங்களில் வாழும்போது, மனத்தின் வேகத்துக்குக் கை ஓடப் பழக வேண்டும். வீணையின் வாசிப்புக் கேந்திரம் எத்தனை கிலோ மீட்டர் என்று தெரியுமில்லையா?

அப்போது தான் ரிஷபத்திலேயே பஞ்சமம் வரை இழுப்பது, மத்திமத்தில் நிஷாதம் வரை பயணம் செய்வது, தவதத்தில் உச்சஸ்தாயி வரை போவது இந்த மாதிரி சூட்சுமங்களை என் டீச்சரம்மா அதுகாறும் எனக்குக் கற்றுத் தரவில்லை என்கிற பேருண்மை புரிந்தது.

நானே முயற்சி செய்ய ஆரம்பித்தேன். தந்திகளை இழுத்தால் எருமை, காகம், கழுதை இன்னபின்ன ஜீவஜந்துமித்ரர்களின் தொண்டையிலிருந்து இசை உருவாவது போலிருந்தது. எந்த சுரத்துக்கு எத்தனை இழுக்க வேண்டும் என்பதை இஞ்ச் டேப் வைத்து அளக்கவெல்லாம் முடியாது. அது கைப்பழக்கம் என்பது மேலும் ஆறு மாதங்கள் கழித்துப் புரிந்தது.

இதற்குள் வகுப்பில் நான் ஜகதானந்தகாரகா வரை (பஞ்சரத்தினத்தில் முதல் ரத்தினம்) வந்துவிட்டிருந்தேன். ஒரு மாதிரி பாட்டைக் கேட்டவுடன் ஸ்வரம் மனத்துக்குள் ஓட ஆரம்பித்தது. ஆச்சர்யம், சினிமாப் பாடல்களூக்கெல்லாம் மிக சுலபமாக மனக்கண்ணில் சுவரங்கள் ஓட ஆரம்பித்துவிட, அந்நாளைய சூப்பர் ஹிட் பாடல்களான மாமா உன் பொண்ணக்குடு, ராக்குமுத்து ராக்கு, ராஜா ராஜாதிராஜனெங்கள் ராஜாவையெல்லாம் வீணையில் வறுத்தெடுக்க ஆரம்பித்தேன்.

இதைப் பார்த்துக் கவலைப்பட்ட என் வீணை ஆசிரியர், சம்பிரதாய சங்கீதத்தின் மேன்மைகள் குறித்து சாங்கோபாங்கமாக எனக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்தார். என்னை யார் தடுத்தாட்கொள்வார் என்று அவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில், தூரத்து உறவினர் ஒருவர் வீட்டுத் திருமண ரிசப்ஷனில் வாசிக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. (‘எதுக்கு ரிசப்ஷனுக்கெல்லாம் தண்ட செலவு பண்ணிட்டு? நம்ம ராகவனை வாசிக்கச் சொல்லிட்டாப் போச்சு. அவன் பாட்டுக்கு வாசிச்சிண்டிருக்கட்டும்.’)

அந்தக் கச்சேரி என் ஞானக்கண்ணைத் திறந்தது என்று சொல்ல வேண்டும். காண்டாக்ட் மைக்கில் நான் வாசித்த தொனியைப் பரிபூரணமாக நானே கேட்க, ஒரு உண்மை உறைத்தது.

இந்த ஜென்மத்தில் நான் சூரிய நாராயணாவை ஜெயிக்கப் போவதில்லை. குறைந்தபட்சம் சிட்டிபாபு, பாலச்சந்தர், காயத்ரியையாவது ஜெயிக்க முடியுமா என்றால் அதுவும் முடியாது.

காரணம், வீணையில் என் மனம் தோய்ந்த அளவு விரல் தோயவில்லை. அந்த லாகவம் தற்செயலாக, இயல்பாக, சிலருக்கு மட்டுமே வரக்கூடியது என்பதை, அந்நாளில் வாசித்துக் கொண்டிருந்த பலரை சாட்சியாக முன்வைத்து எனக்கு நானே தீர்ப்பு வழங்கிக்கொண்டேன்.

ரிஷபத்தில் நின்றுகொண்டு நிஷாதம் வரை பாலச்சந்தர் இழுப்பதைக் கேட்டபோது தற்கொலை செய்து கொள்ளலாமா என்று தோன்றுகிற அளவுக்கு அவமானத்தில் குன்றிப்போனேன்.

காயத்ரியின் பெண்மை மிகுந்த வாசிப்பில் ஆங்காங்கே அரபுக் குதிரைகள் பறப்பதைக் கண்டபோது அவர் இருந்த அடையாறு திசை நோக்கிப் பெரிதாக ஒரு கும்பிடு போட்டேன்.

சிட்டிபாபு காட்டுகிற வர்ணஜாலங்களுக்கு நான் குறைந்தது 108 வருஷங்கள் ஏதாவது இமயமலைக் குகைகளில் போய் தவமிருக்க வேண்டும் என்று தோன்றியது.

அப்புறம் என் வாத்தியார். ஆர்.கே. சூரியநாராயணா. அவரது வாசிப்பு சமயத்தில் சிதார் போலவும் சாரங்கி போலவும் கூட இருக்கும். அந்த விரல்களை மட்டும் கடவுள் மகரந்தத்தால் செய்திருப்பார் என்று நினைத்துக்கொண்டு நின்னைச் சரணடைந்தேன்.

சங்கீதம் ஒரு போதை. போதையில் ஆழ்ந்து போக மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது. போதையிலும் ஸ்டெடியாக நின்று வித்தை காட்டும் வித்தை கைவரப் பெறவில்லை.

பிறகும் ஒருசில முறை ஆல் இண்டியா ரேடியோவின் பாண்டிச்சேரி வானொலி நிலையத்தில் வாசித்துவந்தேன். எனினும் நானொரு வித்வான் ஆவது கஷ்டம் என்கிற உண்மை உறுத்திக் கொண்டே இருந்தது. வீணையில் வித்வான் ஆவதற்கு ராட்சஸ சாதகம் வேண்டும். கூடவே கொஞ்சம் சைண்டிஃபிக் அப்ரோச். நான் சயன்ஸில் பெரிய சைபர் என்பதால் பிறகு வீணையைத் தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். சரஸ்வதி பூஜை தினங்களில் மட்டும் எடுத்து, துடைத்து ஒரு இரண்டு கீர்த்தனைகள் வாசிக்கத் தவறுவதில்லை.

இப்போது கூட மலமலமலவுக்கும் ஓ போடுவுக்கும் ஐயய்யோ ஐயய்யோ பிடிச்சிருக்கு-வுக்கும் எனக்குத் துல்லியமான ஸ்வரக்கட்டு தெரியும். அவை என்னென்ன ராகங்களைக் கொலை செய்து உற்பத்தி செய்யப்பட்டவை என்பதும் தெரியும். ஒரு நாள் எடுத்து வாசித்துப் பார்க்கவேண்டும் என்று ஆசை தான்.

ஆனால் மனச்சாட்சி அனுமதிக்க மறுக்கிறது. பொழுதுபோக்குக்குக் கலையை உபயோகப்படுத்தினால் ரயிலில் உட்கார இடம் கிடைக்காது, வரவேண்டிய ராயல்டி வராது, புஸ்தகம் விற்காது என்று எனக்கு நானே சில ஆயுட்கால ஜோசியங்களைக் கணித்து வைத்திருக்கிறேன்.

எப்போதாவது பாண்டிச்சேரி வானொலி கேட்க வாய்ப்பிருந்து, அவர்கள் பழைய சரக்கு ஒன்றை ஒலிபரப்பி, அது தற்செயலாக நான் வாசித்ததாக இருந்தால் அலைவரிசையை மாற்றிவிடாமல் கேட்டுப் பாருங்கள்.

ஒரு ரேவதி ராகத்தை எப்படி ஓட ஓட ஊரைவிட்டே விரட்டமுடியும் என்பதற்குச் சிறந்த உதாரணம் அது.

Share

6 comments

  • /இரண்டுமே என்னுடைய 154 கிலோபைட் புத்தகத்தில் இருக்கின்றன. புத்தகம்தான் விற்பனையில் இல்லை//

    நல்லவேளை என்னிடம் ஒரு புத்தகம் இருக்கிறது. 🙂 சபரிக்குப் போய் இருக்கும் புத்தகங்களையாவது கொடுங்கள் என்று கேட்டேன், பழைய பேப்பர் விலைக்குப் போட்டாச்சாம். எத்தனை 154 கிலோ பைட் சேர்ந்தால் ஒரு கிலோ கிராம் என அவர்கள் சொல்லவில்லை 😉

  • அய்யா ராசா, சிரிச்சு மாளல! சென்னை வரும்போது வாசிக்கச் சொல்லி கேக்கறேன்!

  • வீணையை வருடுவது போல எழுத்து நடை…எதுக்கு ஆர்கே சூரியநாராயணாவை முந்தனும்..இதுவே நன்னாருக்கு சாமி..

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி