இன்னும் கொஞ்சம் ரசிக்கலாம்

சமீபத்தில் நான் வியந்து ரசித்த இரண்டு கட்டுரைகள் இணையத்தில் எழுதப்பட்டவை. ஒன்று அருள் செல்வனுடையது. அடுத்தது ஆசாத் எழுதியது.

அருளின் நோக்கம் அறிவியல். அதை எளிமையாகப் புரியவைப்பது. அதற்கு ஒரு திரைப்பாடலை அவர் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்கிறார். அதன் மூலம் மெய்யியல் புரிதலுக்கு அஸ்திவாரமிடுகிறார்.

ஆசாத்துக்கு சினிமா ரசனை என்பது தவிர வேறு நோக்கங்கள் இல்லை.

இருவரின் நோக்கமும் என்னவாக இருந்தாலும் திரைப்படங்களில் ரசிப்பதற்கு என்னவெல்லாம் உண்டு, எப்படியெல்லாம் அணுகலாம், ரசிக்கலாம், வியக்கலாம் என்று மறைமுகமாகச் சொல்லித்தரும் ஒரு தோழமை கலந்த ஆசிரியத்துவம் இருப்பதை மிகவும் ரசித்தேன்.

தசாவதாரம் பார்த்தபோது அந்த முதல் சண்டைக் காட்சியை உண்மையில் நான் மிகவும் சங்கடமாகத்தான் கவனித்தேன். கமலஹாசனின் புஜபல பராக்கிரமங்கள் வெளிப்படும் அந்த ரங்கராஜ நம்பி சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சி. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆசாரமான ஐயங்கார் என்னதான் ஒழிந்த நேரத்தில் எக்சர்சைஸ் செய்திருக்கலாம் என்றாலும் இப்படியொரு பீமபுஷ்டி பயில்வான் போலவா இருந்திருப்பார் என்றொரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது. அந்த உடல் திரட்டு மாமிச உணவு உட்கொள்ளாமல் சாத்தியமே இல்லை. தயிர்சாதவாதிகளுக்குத் தொப்பை தான் திரளும். தோள் திரளாது.

இதனாலேயே என்னால் அந்தக் காட்சியில் ஆசாத் சுட்டிக்காட்டும் நுணுக்கங்களை கவனிக்க இயலாமல் போய்விட்டது [இன்னொருமுறை அவசியம் பார்ப்பேன்.] தவிரவும் வெறும் ரசிகனாகப் பார்ப்பதில் உள்ள சௌகரியம் குறித்தும் புரிந்துகொண்டேன். ஆசாத் ஏற்கெனவே பலமுறை சினிமா சண்டைக்காட்சிகளின் நுணுக்கம் பற்றி எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரை, இன்னொரு பரிமாணம்.

*

புன்னகையில் மின்சாரம் பாடலில் கையாளப்பட்டிருக்கும் இரட்டைப் பரிமாண நடன அமைப்பு குறித்த அருள் செல்வனின் கட்டுரைக்கு ஒரு சிறு பின்னிணைப்பு எழுதலாம். பிரபு தேவாவும் இளையராஜாவும் உட்கார்ந்து யோசித்து, திட்டமிட்டு அதனைச் செய்திருப்பார்களோ என்று தோன்றுகிறது.

உண்மையில் நடனத்தில் மட்டுமல்ல. இசையிலும் ராஜா மிகக் கவனமாக இரட்டைப் பரிமாணம் காட்டிய பாடல் அது. பாடல் வரிகளுக்கான இசையமைப்பையும் பின்னணி இசையமைப்பையும் நுணுக்கமாக மனத்துக்குள் பிரித்து தனித்தனியே கவனிக்க இயலுமானால் இது புரியும். இசை வடிவத்தை மட்டும் பாடல் காட்சியை நீக்கிவிட்டு கண்மூடி விஷுவலைஸ் செய்து பார்த்தால் வரிகளுக்கான இசை வடிவம் பெரும்பாலும் ஜண்டை வரிசை சார்ந்தும் வாத்தியச் சேர்க்கைக்கான இசை தாட்டு வரிசை சார்ந்தும் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம் [அல்லது கேட்கலாம்.]. இதிலேயே Base வாத்தியங்கள் ஒரு குறிப்பிட்ட Paceலும் Lead வாத்தியங்கள் வேறொரு Paceலும் இயங்குகின்றன. சுரக்கட்டமைப்பும் அப்படித்தான் உள்ளது.

இந்தப் படமும் பாடலும் வெளியானபோது பல நாள் இப்பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டு, எப்படி இந்த மனிதர் இதனை Conceive செய்திருப்பார் என்று யோசித்து யோசித்துக் குழம்பியிருக்கிறேன். மேலோட்டமாகக் கேட்கும்போதே ஒரு டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் படத்தின் வேகம் மற்றும் ஜெர்க் இதன் ஆதார குணமாக இருப்பதை உணர்ந்துவிட முடியும். ஆனாலும் ரிதத்தில் ஜெர்க் இருக்காது. ‘ஜெர்க்’கை நாம் உணரும் இடமெல்லாம் அதனை இசைதான் வழங்கியிருப்பது புரியும். [ராஜா இதற்கு கீ போர்டையும் கிட்டாரையும் பயன்படுத்தியிருப்பார்.]

காட்சிக்கு மட்டும்தான் முப்பரிமாணம். அதில் ஒன்றைக் குறைப்பது அல்லது கூட்டுவது என்பது கலை மனம் கூடிய தொழில்நுட்பம். ஆனால் இசைக்குப் பல்லாயிரம் பரிமாணம் உண்டு. கவனமாக அதில் இரண்டை மட்டும் ஹைலைட் செய்து வெளிக்காட்டுவதென்பது எளிதில் ஆகக்கூடியதல்ல. ராஜா வெகு அலட்சியமாக அதனை நிகழ்த்தியதைப் பலசமயம் நினைவுகூர்ந்து வியந்திருக்கிறேன். இன்றைக்கு அருள் செல்வனின் கட்டுரையை வாசித்ததும் மீண்டும் ஞாபகம் வந்துவிட்டது.

பி.கு: அதெப்படி அத்தனை நேர்த்தியாக ஓர் இரட்டைப் பரிமாணப் பாடல் காட்சியைக் கொடுத்துவிடலாம் என்று வரிந்து கட்டிக்கொண்டு இடையிடையே இயக்குநர் [அல்லது எடிட்டர்] இணைத்திருக்கும் விஜயகாந்த் க்ளோஸ் அப் காட்சிகளை மட்டும் மன்னித்துவிடுவோம். சில இடங்களில் Depth தெரிகிற மாதிரிகூட அந்த க்ளோசப்கள் வருகின்றன. அருவருப்பாகத்தான் இருக்கும். ஆனாலும் மன்னித்துவிடலாம்.

பி.கு.2: துரதிருஷ்டவசமாக ஒரு பிரச்னை. எனக்கு இணையத்தில் ஒலித்துணுக்கை எப்படி ஏற்றுவது என்பதோ, சவுண்ட் எடிட்டிங்கோ தெரியாது. தெரிந்தால், நான் எழுத்தில் சுட்டிக்காட்டிய விஷயத்தை – பாடலையும் பின்னணி இசையையும் – தனித்தனியே வெட்டி, டிராக் பிரித்து தனித்தனி ஃபைல்களாகப் போட்டுக்காட்ட இயலும்.

என்னுடைய சினிமா நண்பர்களிடம் கேட்டுப்பார்க்கிறேன். எல்லாம் கூடிவந்தால் upload செய்கிறேன்.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!