கோவிந்தசாமி சாகரிகாவின் மீதுகொண்ட காதலால், இறைவனை வணங்கச் சென்றதன் நோக்கத்தை மறந்து சாகரிகாவைத் தன் கண்ணில் காட்டி விடுமாறு வேண்டுகிறான். சாகரிகாவின் மீது கொண்ட பற்றினால் இறைவனுக்கு இரண்டாம் இடத்தைக் கொடுக்கிறான். சாகரிகாவைக் காண தன்னிலை மறந்து அவளைக் காண ஓடுகிறான். அந்தக் காட்சியை நிழலின் வழியே மிக அழகாகக் காட்டியுள்ளார் ஆசிரியர்.
அதன்பின் அவள் தன்னை அலங்கோலமாக இருக்கக் கூடிய காட்சியை அவள் கண்டுவிடக் கூடாது என்று பதறுகிறான். அவன் அவளிடம் உனக்காகவும் தான் இந்தக் கோலம் என்று கூறியிருக்கலாமே. அன்பு செலுத்துபவர்களிடம்கூட தன் இயல்பினை மறைக்கத்தான் மனித மனம் பாடுபடுகிறது. இதே பாட்டைத்தான் கோவிந்தசாமி பட்டான்.
நிழல் கூறும் வருணணைக் காட்சியானது பிறந்த குழந்தையைக் கைகளில் ஏந்தும் பொழுது எத்தகைய எழுச்சி மனத்திற்குள் பரவுமோ அந்த எழுச்சியைக் கொடுத்தது. நிழலானது இந்நாள் வரை கோவிந்தசாமியின் பார்வையில்தான் உலகைக் கண்டு வந்தது. அன்றுதான் தன் பார்வையினால் உலகை இரசித்தது.
மனிதகுலமானது பணம், பொருள், நிலம்…… எனப் பலவற்றைச் சேர்த்துக்கொள்ள மட்டும் எண்ணுவதில்லை. அன்பினையும் பாசத்தினையும் பரிவையும் பிறர் மனத்தினில் சேர்த்து வைக்கும் எண்ணும். தன் மகிழ்ச்சியையோ, வருத்தத்தையோ கேட்பதற்குப் பிற காதும் மனதும் இல்லை எனும்பொழுது மகிழ்ச்சி குறைகிறது. வருத்தம் பல மடங்காகிறது. ஆகவே, பிறருக்கு ஆதரவாக உங்கள் காதுகளையாவது கொடுங்கள் என்று சமூகத்திற்குக் கூறுகிறார் ஆசிரியர். நிழலின் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் யார் கேட்கப் போகிறார் என்ற வரியில் பொருள் பொதிந்த செய்தியையும் கூறுகிறார்.
பிரிந்த இருவர் ஒன்று சேர்கிறார்கள். அந்த வேளையில் கோவிந்தசாமிக்கு மகிழ்ச்சி ஏற்படலில்லை. கோபம் ஏற்படுகிறது. ‘ஆத்திரகாரனுக்குப் புத்தி மட்டு’ என்று கூறுவார்கள். அவன் நிழல் கூறிய எதையும் கேட்கும் மனநிலையில் அவன் இல்லை. பிரிந்த மூவர் ஒன்று சேர்வார்களா?