ஒரு பிளேட் பிரும்மம்

ராமச்சந்திரனுக்கு என்னவோ ஆகிவிட்டதென்று சல்பேட்டா கோவிந்தன் பதைத்து வந்து சொன்னான். தொட்டித் தண்ணீரில், அளவு குறிக்கப்பட்ட கண்ணாடிக் குழாய்களை முக்கி, சளக், புளக் என்று ரகளை பண்ணிக்கொண்டிருந்த ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் விற்பன்னர்கள் கோஷ்டி, பரிசோதனையை விடுத்து, சல்பேட்டாவைச் சூழ்ந்தது.

சல்பேட்டா, சொல்லின் செல்வன். முதல் வரியில் விஷயத்தைச் சொன்னான்.

ராமச்சந்திரனுக்கு போல்ட் கழண்டுவிட்டது.”

என்னடா சொல்றே?”

மெய்யாத்தான் மாமு. என்னவோ ஆயிட்ச்சி அவனுக்கு. முனி அடிச்சிருச்சின்னு நினைக்கிறேன். போப்பாண்டவர் மாதிரி பேசறாண்டா!”

சரிதான் போ. நைட் ஏதாவது பக்திப் படம் பார்த்திருப்பான்.”

இல்லடா! ஆளே மாறிட்டான். வந்து பாரு. வெள்ளை வேஷ்டி, வெள்ளைச் சட்டை, நெத்தி நிறைய விபூதி, மொட்டை அடிச்சிருக்காண்டா…”

மூணு சீட்டுல எவண்ட்டயாவது பெட்டு வெச்சி தோத்திருப்பான். அதான், இழுத்து வெச்சி சிரைச்சிருப்பான்.”

ப்ச், விளையாடாத கிஷ்டா. நான் சீரியஸா பேசறேன்.”

சரி சொல்லு.”

என்ன சொல்றது? மூணு நாளா காலேஜ் வரலை. இன்னிக்கு வந்திருக்கான். ஒர்க் ஷாப்பாண்ட பாலன் கடை பின்னால உக்காந்திருக்கான். உடம்பு சரியில்லேன்னு காலேஜ் வராம இருந்தானே, இன்னாடான்னு கேக்கப் போனா ‘நீ யார்’ங்கிறான்!”

சர்தான்!”

வந்துதே ஆத்திரம்! பேத்துருவன்டா, இந்த சல்பேட்டாவப் போயி யாருன்னா கேக்கறேன்னேன்.”

சரி.”

“‘உன் இட்ட பெயரைக் கேட்கவில்லை. நீ யார் என்பது உனக்குத் தெரியுமான்னான்.”

அட வுடுறா. காசிமேடு ஜுஜுலி ஏத்திக்கினு இருப்பான். அதான், மூளைக்குள்ள இன்னொரு மூளை ஒர்க் பண்ண ஆரம்பிச்சிருக்கும். செந்தமிழ்லயா பேசறான்?”

ஆமாண்டா! ஔவையார் கணக்கா!”

அப்ப சந்தேகமே இல்லை. மால்தான்!”

இல்ல கிஷ்டா. கிட்டப் போயி மோந்து பார்த்தேன். விபூதி வாசனைதான் வருது.”

ஊதுபத்தி, மேரி பிஸ்கட் வாசனை கூட வரும். இப்பல்லாம் எல்லாத்துலயும் ஃப்ளாவர் கலக்கறான்.”

ப்ச். புரியாம பேசற. அவன் மால் எதும் ஏத்திக்கலை. என்னவோ ஆயிடுச்சி.”

அதற்குமேல் நீரின் இயக்கத் தத்துவத்தை ஆராய்ந்து, ரிப்போர்ட் எழுதுவதற்கு எந்த வழுக்கைத் தலையர்கள் அமைப்பும் வாழ்த்தி பொற்கிழி தரப் போவதில்லை என்பதால் நான் சல்பேட்டாவுடன் கிளம்பினேன்.

கூடவே தட்சிணாமூர்த்தி, பிளேடு கஜா, சென்சார் சுப்பிரமணி, தனசேகர்.

ஆய்வுக் கூடத்தை விட்டு வெளியே வந்து, நைஸாக காரிடாரில் நழுவி, எதிர்ப்பட்ட அங்கிள் என்கிற வைஸ் பிரின்ஸிபாலுக்கு சலாம் வைத்து, பின்புறம் கம்பி நீட்டிய சைக்கிள் ஸ்டாண்டில் பதுங்கி, மெஷின் டிராயிங் மகானுபாவர் பார்வையில் சிக்காமல் ஒர்க் ஷாப்பை நெருங்கி, பாலன் கடையில் தஞ்சம் புகுந்தோம்.

பாலா, ராமச்சந்திரன் இங்க வந்தான்?”

வூட்டுக்குப் போயி முழுக்கு போட்ரு கிஷ்டா. அவன் பூட்டகேஸ்.”

பார்த்தியா? நான் சொல்லலை?” என்றான் சல்பேட்டா.

நாலு டீ போடு, சொல்லு. என்ன ஆச்சு?”

யாரோ அவனுக்கு சூன்யம் வெச்சிட்டாங்க போல.”

புரியறா மாதிரி சொல்லு. அந்த வத்திப்பெட்டிய எடு.”

என்ன பேசறான்னே புரியலை தொர. நீ, நீயில்லை; நான் நானில்லை; நாம் அவனாகாத பட்சத்தில் அது நாமாக முடியாதுன்னான் திடீர்னு. உட்டேன் ஒண்ணு, செவுள் மேல; போதை எறங்குமாங்காட்டியும்னு. அழுதுட்டாண்டா! எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சி.”

மூன்று நாள் லீவ் போட்டதில் சந்திரனுக்கு இன்ஸ்டன்ட் ஞானமெல்லாம் சித்தித்திருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. போன வெள்ளிக்கிழமை கூட என்னுடன் பிற்பகல் வகுப்புகளைக் கட் அடித்துவிட்டு ராமகிருஷ்ணாவில் மலையாளப்படம் பார்க்க வந்திருந்தான். இன்டர்வலுக்குப் பிறகு ‘பிட்’ ஏதும் காட்டாத வெறுப்பில், எழுந்து நின்று விஸிலடித்து ரகளை பண்ணிவிட்டான்.

ஞானம்?

வாய்ப்பே இல்லை என்று தோன்றியது.

பிற்பகல் இரண்டு மணி அளவில் எலக்ட்ரானிக்ஸ் விங் வாசலில் நான் ராமச்சந்திரனை மடக்கினேன். தோளில் கைபோட்டு வெளியே கூட்டிப் போனேன். அரச மரத்தடியில் உட்கார வைத்து, “சொல்லு, என்ன ஆச்சு உனக்கு?” என்றேன்.

என்ன ஆச்சு? என்ன ஆகணும்? எதுவும் எதுவாகவும் ஆக முடியாமப் போறதுதான் நம்ம சாபக்கேடு.”

தபார்! இந்த டகிள்பாஜியெல்லாம் வேணாம். ஒழுங்காப் பேசு. நீ ஞானி இல்லை. வெறும் ராமச்சந்திரன்! நாலாவது செமஸ்டர்ல அஞ்சு பேப்பர் அரியர்ஸ் வெச்சிருக்கிற அற்பப்புழு! உனக்கும் எனக்கும் மெய்ஞானமெல்லாம் புடாபெஸ்ட் தூரம். எதனா பொம்பள கேஸ்ல மாட்டிக்கினு இருக்கியா? சொல்லிடு!” என்றேன்.

நான் சற்றும் எதிர்பாராததை அவன் செய்தான். தலையை மரத்தில் மோதிக்கொண்டு, ஓவென்று அழ ஆரம்பித்தான்.

இது ஏதடா ரவுசு என்று அவனை இழுத்து, “சொல்லு மாமு, என்ன ஆச்சு உனக்கு?” என்றேன்.

ராமச்சந்திரன் கண்களைத் துடைத்துக்கொண்டு, என்னை உற்றுப் பார்த்தான். பின் கேட்டான்.

சொல்லு. நாம ஏன் இப்படி இருக்கோம்?”

எப்படி?”

எது நிலைன்னு தெரியாம, என்ன செய்யறோம்னு புரியாம, காலேஜுக்கு வர்றதும், கட் அடிச்சுட்டு டபிள்யூ பி.டி. வாசல்ல தவம் கிடைக்கறதும், மலையாளப் படம் போறதும், சரக்கு அடிக்கறதும்எதுலயாவது முழு சந்தோசம் கிடைச்சுதா? அல்டிமேட் என்னன்னு தெரிஞ்சுதா? சாக்கடையில் புரள்ற பன்னி மாதிரி, இலக்கில்லாம உழண்டுக்கிட்டு இருக்கோம்! பெரிய மெக்கானிக்கல் இஞ்சினீரிங் டிப்ளமாஒழுங்கா முடிச்சா ஆயிரத்தி எரநூறு ரூவா சம்பளம். அப்புறம் கல்யாணம். வருஷத்துக்கு ஒரு குழந்தை. ஆஸ்பத்திரி, நர்ஸரி ஸ்கூல், ரேஷன் கடை, சினிமா தியேட்டர்இதானா வாழ்க்கையோட அர்த்தம்?”

வேற என்னவா இருக்க முடியும்னு நினைக்கறே? இருக்கற வரைக்கும் கிடைக்கறதை அனுபவிக்கணும். இழுக்க, இழுக்க இறுதிவரை இன்பம். தம் அடிக்கிறியா?”

வேணாம். விட்டுட்டேன்.”

சுத்தம். ஒண்ணும் சரியில்லை. வீட்ல எதனா திட்டினாங்களா? அரியர்ஸ் எப்படி முடிக்கப் போறோம்னு பயமா இருக்கா? ஏன் வேஷம் போடறே?”

ராமச்சந்திரன் என்னை முறைத்தான்.

இதுவரைக்கும் போட்டதுதான் வேஷம். இனி தேடல்தான்.”

தபார்தேடல், ஊடல்னு பூச்சி காட்டாத. மார்க்கபந்துசாமி உன் மேல பயங்கர கடுப்புல இருக்கார். ரெக்கார்ட் நோட்டுல மம்தா குல்கர்னி படம் ஒட்டி வெச்சிருக்க. இதான் தேடலா?”

தப்புஎல்லாம் தப்பு. இருபத்தோரு வருஷம்! பாழடிச்சுட்டேன். இலக்கில்லாத நதி மாதிரி. சூறாவளிக் காத்து மாதிரி!”

சரிதான்.”

அன்னிக்கு நைட்டுமுந்தாநேத்துமொட்டை மாடில தம் அடிச்சிட்டிருந்தேன். எவனோ பிச்சைக்காரன்குடுகுடுப்பைக்காரன்பைத்தியக்காரனாக் கூட இருக்கலாம். பாடிட்டுப் போறான்உன்னை அறியாமல், உன் ஆற்றல் உணராமல் தென்னை மரம் போல திசை மறைத்து வளர்ந்ததென்னகள்ளுப் பானையதும் கனி உதட்டு உரசலதும் கொள்ளிக்குப் பின்னால் கூட வரப்போகிறதா…?”

அப்ப, பட்டினத்தார் ஆயிட்டேன்ற?”

யார், யாரா ஆவுறது? எல்லாமாகி இருக்கிற ஏதோ ஒண்ணுஅது என்னன்னு தெரிஞ்சிக்கறதுதான் இனி சோலி.”

நீ எக்கேடும் கெட்டுப் போ. நைட்டு தட்சிணா வீட்ல முகாம் போடறோம். அவுங்க ஆயி, அப்பன் கூடுவாஞ்சேரி போயிடறாங்க. வர்றதா இருந்தா சொல்லு.”

நான் வரலை.”

இப்ப கிளாஸுக்கு?”

அதுக்கும் வரலை.”

அடுத்த வாரம் எக்ஸாம்டா!”

ராமச்சந்திரன் சிரித்தான்.

நான் பிரும்மத்தைத் தேடித் போறேன். அது எக்ஸாம் ஹால்ல கிடைக்குமா சொல்லு, வரேன்!”

எனக்கு பாலன் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வந்தது.

பூட்ட கேஸ்!

ராமச்சந்திரனைப் பற்றிய விஷயம் சி.பி.டி. முழுக்க பரவிப்போக, இதர டிப்பார்ட்மெண்ட் பையன்களெல்லாம் வந்து வந்து அவனைப் பார்த்துப் போனார்கள்.

பிஸிக்ஸ் லெக்சரர் புள்ளியப்பன், “ஹி ஹாட் பெட்டர் கன்ஸல்ட் எ சைக்யாட்ரிஸ்ட்” என்று கருத்துத் தெரிவித்தார்.

காலேஜ் முழுவதற்கும் தான் ஒரு காட்சிப் பொருள் ஆகிவிட்டது குறித்து அவனுக்கு ஏதும் வருத்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

மாறாக, பெரும்பாலான நேரங்களில், மரத்தடியில் வெறுமனே கண் மூடி உட்கார்ந்திருக்க ஆரம்பித்தான். தவிர, விவேக சூடாமணி, த்வித வல்லப புஜங்கம் என்று எழுத்துக் கூட்டிப் படிக்க, வாய் வலிக்கும் தடிமனான பழுப்புப் புத்தகங்களை உருப்போட ஆரம்பித்தான்.

தபார் ராமச்சந்திரா! பிரும்மத்தை புஸ்தகத்துல தேடற மொத ஆளு நீதான்!”

பதில் சொல்ல மாட்டான். தவிரவும், குண்டலினி, ராஜயோகம், சூரியனைக் கைக்கொள்ளுதல் என்று பெரும்பாலும் யாருக்கும் புரியாதபடியே பேசத் தொடங்கினான்.

ஒரு கட்டத்தில் நிஜமாகவே அவன் கண்களில் ஏதோ ஒளி தெரிவதாக எனக்குப் பட்டது. சல்பேட்டாவிடம் சொன்னபோது,

சேச்சே! ‘மெட்ராஸ் ‘ஐ’யா இருக்கும்!” என்றான்.

அட்டன்டென்ஸ் ஷார்ட்டேஜ் என்று அவனை ஃபைனல் செமஸ்டர் எழுத அனுமதிக்க மறுத்து விட்டார்கள்.

மாமு. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. தேசிகருக்கு அம்பது ரூபா தள்ளிடு. தொண்ணூத்தொம்பது பர்ஸென்ட், அட்டன்டென்ஸ் காட்டுவான்.”

ராமச்சந்திரன் மறுத்துவிட்டான். இந்தப் பரீட்சை, பட்டம் எதும் தனக்குத் தேவையில்லை என்று சொன்னான்.

கிருஷ்ணா! என் நடவடிக்கைகள் பைத்தியக்காரத்தனமாப் படலாம். ஆனா நான் பைத்தியம் இல்லை! என் இலக்கு தெளிவா இருக்கு. பாண்டிச்சேரி போய் அரவிந்தர் ஆசிரமத்துல சேர்ந்துடப் போறேன். இல்லை, ராமகிருஷ்ணா மட்! எனக்குத் தெரிஞ்சாகணும்! அது அல்டிமேட்? எதை அடைஞ்சுட்டா அப்புறம் எதுவும் தேவை இருக்காது? எது நாம்? அல்லது யார் நாம்?”

நிஜமாகவே அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக எனக்குத் தோன்றியது.

பிறகு அவனை நாங்கள் சந்திக்கவில்லை. பரீட்சை எழுதாமல், டி.ஸி. வாங்காமல், ஏகப்பட்ட அரியர்ஸ் சொத்தோடு என்ன ஆனான் என்று தெரியவில்லை.

போன வாரம் லஸ் பிளாட்பாரக் கடையில் மேய்ந்து கொண்டிருந்தபோது, எதேச்சையாக ராமச்சந்திரனைச் சந்தித்தேன்.

கடவுளே! ஆறு வருடங்களில் எப்படி மாறிப்போயிருக்கிறான்!

மிகவும் மெலிந்து, கண்கள் குழிவிழுந்து, பழுப்பு நிற ஜிப்பாவும் பத்து நாள் தாடியும், காடு மாதிரி தலைமுடியும், தேய்ந்த செருப்பும்

டேய், ராமச்சந்திரா!”

தோளைத் தொட்டதும் திரும்பினான். உற்றுப் பார்த்து, கண்டுகொண்டான்.

கிருஷ்ணா…!”

எப்படி இருக்கிறாய் என்று கேட்க வாயெடுத்தேன். அபத்தமாகப்பட்டது. நிச்சயம் இவன் நன்றாக இல்லை

நீ என்னடா பண்றே?”

மூவாயிரத்தி எழுநூறு சம்பள உத்தியோகத்தைச் சொன்னேன்.

பிற்பகல் வெயில் உக்கிரமாக இருந்தது.

வா, ஏதாவது கூல் டிரிங்க் சாப்பிடுவோம்.”

இல்லைசாப்பாடே சாப்பிடணும்…”

சரி, வா.”

முருடீஸில் நுழைந்து, உட்கார்ந்தோம்.

சொல்லு, என்ன பண்றே நீ?”

அவன் பேசாதிருந்தான்.

வேலை ஏதும் கிடைக்கலியா?”

அவன் சட்டென்று என் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

போச்சுடா! எல்லாம் போச்சு! என்னைப் பைத்தியம்னே முடிவு பண்ணி, மென்ட்டல் ஆஸ்பத்திரி வரைக்கும் இழுத்துட்டுப் போயிட்டாங்க, என் வீட்டுல. ராவோட ராவா ஓடி வந்துட்டேன். எத்தனை அலைச்சல்! எத்தனை அவமானம்! எத்தனை ஆசிரமங்களுக்குப் போனேன்! மத்தியப் பிரதேசத்து பலார்ஷா வரைக்கும் போய்ச் சுத்தினேன்இங்க துறவிகளுக்கு நடுவுல கூட பாலிடிக்ஸ். பணம். சுத்தி, சுத்தி, சுத்தி…”

சட்டென்று அவனைக் கைகாட்டி நிறுத்தினேன். சர்வர் தட்டுகளை வைத்துவிட்டுப் போனான்.

சாப்பிடு, முதலில்.”

அவன் பேயாகத் தின்ன ஆரம்பித்தான். வாய் முழுக்க சோறோடு, “நாழு நாழா முழுப் பழ்ழினி” என்றான்.

அவன் கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக்கொள்வது தெரிய, எனக்குச் சங்கடமாக இருந்தது.

பேசாம சாப்பிடுடா” என்றேன். ஒரு வேள்வி மாதிரி உண்டு முடித்தான்.

கிருஷ்ணா, நாம நினைக்கறது ஒண்ணும் நடக்கறது ஒண்ணுமா இருக்கறதுக்குப் பேர் தான் வாழ்க்கையோன்னு இப்பல்லாம் எனக்குத் தோணுது. அந்த சுவாரசியத்தை விலகி நின்னு ரசிக்கிற மனநிலை பெரும்பாலும் யாருக்கும் இருக்கிறதில்லை.”

இத்தனைக்குப் பிறகும் அவன் மாறாதது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நாக்கு துடிக்க, சட்டென்று கேட்டுவிட்டேன்.

அதுசரி, பிரும்மத்தைத் தேடி மத்தியப் பிரதேஷ் வரைக்கும் போனதாச் சொன்னியே, கிடைச்சுதா?”

என் கிண்டல் அவனுக்குப் பொருட்டாக இல்லை.

கண்கள் பளபளக்க என் கையைப் பற்றிக்கொண்டு,

தெரிஞ்சுது! பசிதாண்டா பிரும்மம்!” என்றான்.

[1998]

Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter