தாடி ரகசியம்

எனக்கு தாடி வைத்துக்கொள்ளப் பிடிக்கும். தாகூர், ஓஷோ, டால்ஸ்டாய் போன்ற பலரை தாடியைக் கொண்டே முதலில் நெருங்கினேன். படைப்பு அறிமுகமெல்லாம் பிறகுதான். ஆனால் என்ன காரணத்தாலோ, என்னால் நான் விரும்பிய வண்ணம் தாடி வளர்க்க முடிந்ததில்லை. கருகருவென தாடி வளர்ந்த காலத்தில் வீட்டில் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைக்கும் போல இருந்த காலத்தில் எனக்கு வேலை கிடைத்துப் போகத் தொடங்கவேண்டியதானது.

கல்கியில் என் சீனியரும் குருவுமான இளங்கோவன் அசப்பில் ஒரு ஆபீசர் போல இருப்பார். ஒழுங்காக ஷேவ் செய்து, படிய தலைவாரி, கசங்கல் இல்லாத பேண்ட் சட்டை அணிந்து, ஷூ போட்டு, போதாக் குறைக்கு ஒரு சூட்கேஸும் எடுத்து வருபவர். அவரது ஆளுமையால் கவரப்பட்டு, நானும் அவரைப் போலவே இருக்கத் தொடங்கினேன். சூட்கேஸ் உள்பட எதையும் விடவில்லை. விட்டது, தாடிக் கனவைத்தான்.

திருமணத்துக்குப் பிறகு சிலகாலம் நல்ல புருஷனாகக் காட்டிக்கொள்ள வேண்டியிருந்ததால் தினமும் ஒழுக்கமாக ஷேவ் செய்துகொண்டுதான் கிளம்புவேன். பிறகு அதுவே பழக்கமாகி, எழுந்ததுமே ‘ஷேவ் பண்ணு’ என்ற குரல் வரும். முதலில் மனைவியிடம் இருந்து வந்துகொண்டிருந்த அக்குரல் பிறகு எனக்குள் இருந்தே கேட்கத் தொடங்கிவிட்டது. எப்போதாவது மனைவி அம்மா வீட்டுக்கு ஒரு வாரம், பத்து நாள் போனால் அப்போது தாடி வளர்த்துப் பார்க்கலாம் என்றால் எனக்கு அந்தப் பிராப்தம் இல்லாது போனது. சென்னையிலேயே பெண் எடுப்போருக்குத்தான் எத்தனை விதமான சிக்கல்கள்! காலை நான் ஷேவ் செய்துகொள்ளும்போது புறப்பட்டுப் போனால் மாலை முதல் முள்முடி முளைக்கும் நேரத்தில் திரும்பி வந்துவிடுவாள்.

அப்படியும் நான் விடவில்லை. வருடம் ஒருமுறை நவராத்திரி சமயம் விரதம் இருப்பேன். அந்த ஒன்பது நாள்களும் முகச் சவரம் கிடையாது. எவ்வளவு இன்பமான தினங்கள் அவை! ஆனால் ஒன்பது நாள் தாடியெல்லாம் தாடியிலேயே சேர்த்தியில்லை. முகமெங்கும் குச்சி சொருகினாற்போல இருக்கும். அது வளர்ந்து காடாவதற்குள் முகம் மழிக்கப்பட்டுவிடும். சரி போ நமக்கு தாடிக் கொடுப்பினை இல்லை என்று முடிவு செய்து அந்த ஆசையை மறந்து போனேன். நாவல் எழுதும் நாள்களில் மட்டும் பெரும்பாலும் ஷேவ் செய்யாமல் இருப்பேன். அது திட்டமிட்ட சதி நடவடிக்கை அல்ல. இயல்பாகவே தினசரி ஒழுங்குகளில் இருந்து எப்படியோ விலகிவிடுவேன். மூன்று நாள்களுக்கு ஒருமுறை, நான்கு நாள்களுக்கு ஒருமுறைதான் அப்போது ஷேவிங் நடக்கும்.

ஏதோ ஒருநாள் எனக்கு நரைக்கத் தொடங்கியது. அது குமுதத்தில் மூன்றாண்டுகள் இருந்ததன் விளைவு. ஆரம்பத்தில் அது குறித்துச் சிறிது கவலைப்பட்டேன். சலூனுக்குச் சென்று ஒழுங்காக முடி வெட்டி டை அடித்துக்கொண்டேன். கிழக்கில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது மாதம் ஒருமுறை அந்தப் பட்டாபிஷேக வைபவத்தைத் தவறாமல் செய்வேன். ஒரு சமயம் டைபாய்ட் காய்ச்சல் கண்டு இருபது நாள்கள் படுக்கையில் இருக்க வேண்டியதானது. அப்போது கறுப்புச் சாயமும் அடிக்கவில்லை; முகச் சவரமும் செய்யவில்லை. டைபாய்டை முடித்துக்கொண்டு நேரே கிளம்பி நெய்வேலிக்குச் சென்றேன். அங்கே புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது எடுத்த ஒரு புகைப்படத்தில்தான் முதல் முறையாகக் கறுப்பு வெள்ளை தாடி மீசையுடன் வெளிப்பட்டேன்.

எத்தனை காலக் கனவு! இறுதியில் வெண்மை மிகுந்த தாடியுடன்தான் என்னை நான் கண்டு ரசிக்க முடிந்தது. கருந்தாடி வாய்ப்பு இனி என்றுமே இல்லை என்பதும் புரிந்தது. அதன்பின் தலைமுடிக்குச் சாயம் போடுவதை விட்டேன். மீசையும் நரைக்கத் தொடங்கிவிட்டதால் மொத்தமாக முகம் மழிக்கும் வழக்கம் வந்தது. அந்த நெய்வேலி கண்காட்சி முடிந்து, அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சியில் முழுக்க மழித்த முகமும் முக்கால் வெளுத்த தலைமுடியுமாக என்னை நண்பர் குரு (lazygeek) புகைப்படம் எடுத்தார். அந்தப் படம் மர்லின் மன்றோவின் பாவாடைத் தாமரை படத்துக்கு நிகராகப் புகழ் பெற்றுவிடவே அதுவே பிறகு என் நிரந்தரக் கோலமானது.

எவ்வளவோ வருடங்களுக்குப் பிறகு இப்போது சில மாதங்களுக்கு முன்பு ஓர் இயக்குநர் – நண்பர் என்னை தாடி வளர்க்கச் சொன்னார். ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நான் பொருந்தலாம் அல்லது பொருந்துவேன் என்பது அவரது எண்ணம். கதையாவது பாத்திரமாவது? இது தாடி வளர்க்க ஒரு வாய்ப்பல்லவா? தவிர, வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்த தினங்கள் என்பதால் மனைவியும் மகளும் மறுப்பு சொல்லவில்லை. எனவே ஆசை ஆசையாக தாடி வளர்க்கத் தொடங்கிவிட்டேன். சிறிய, ஒல்லி முள்ளாக இருந்த நாள் முதல் இன்றைய இரண்டு அங்குல நீளம் வரை இதன் பரிணாம வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் கண்காணிக்கிறேன். வாழ்வில் என்றுமே இல்லாத வழக்கமாக ஒரு நாளில் பத்து முறையாவது மொபைல் கேமராவின் செல்ஃபி மோடில் என் முகத்தை நானே பார்த்துக்கொள்கிறேன்.

தாடி எனக்கு நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது பற்றியெல்லாம் எனக்குக் கவலையே இல்லை. வெள்ளைத் தாடி வயதைக் கூட்டிக் காட்டுகிறது என்று ஒரு நண்பர் சொன்னார். அப்படியா என்று கேட்டுக்கொண்டேன். அது குறித்து வருத்தமே ஏற்படவில்லை. அந்த தாடிக் கதாபாத்திரத்தில் நடிப்பேனா இல்லையா என்பதுகூட நிச்சயமில்லை. ஏனென்றால் நடிப்பில் எனக்கு அணுவளவு ஆர்வமும் கிடையாது. இது ஒரு வாய்ப்பு. தானாக வந்தது. எனவே என் நெடுநாள் விருப்பமான தாடி வளர்த்துவிட்டேன். ‘போதும்’ என்று வீட்டில் ஒரு குரல் வந்தால் போதும். எடுத்துவிடுவேன்.

ஐயோ ஏன் எடுத்தீர்கள் என்று இயக்குநர் கேட்டால், மீண்டும் வளர்த்துக்கொண்டால் போயிற்று.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!