யதி – வாசகர் பார்வை 4 [பிவிஆர்]

யதி வாசித்து முடித்தேன்.

எங்கே முடித்தேன், அதை விட்டு இன்னும் வெளியே வராமல் அல்லவா கிடக்கிறேன்! சன்னியாசிகளை வியந்துகொண்டும், பிசாசுகளை பயந்துகொண்டும், உறவுச் சிக்கல்களில் உழன்றுகொண்டும், வாழ்வின் பெரும் பகுதியை இழந்துவிடும் அவலத்தில் இருந்து, மிகப்பலரையும் மீட்டெடுக்கும் அருமையான கருவியாகவே பா.ராகவன் எழுதிய யதி எனக்குத் தென்படுகிறது.

அம்மாவின் அன்பும் அரவணைப்பும், வீடு தரும் பாதுகாப்பும் வேண்டாம் என்று நாலு பிள்ளைகளுமேவா வீட்டைவிட்டு ஓடிப்போகும்? தொலையட்டும், அந்த நாலுமேவா சாமியாராகும்? அதுவும் தொலையட்டும் என்றால், அந்த நாலுமே அம்மாவின் சாவுக்கு என மட்டுமேவா வந்து, சந்தித்து, உடனேயே விலகவும் செய்யும்? யார் எழுதிய சுவடி என்றே தெளிவற்ற ஒரு ஓலை நறுக்கில் உள்ளது சூட்சுமம்.

அதில் உள்ளதுதான் யதியில் நிகழ்கிறது. எழுத்தாளரின் திறமை அந்த நான்கு வரிகளில் இருந்து விரிந்து பறந்து தனது சிறகுகளால் என்னைத் தன்னுடன் இறுகப்பற்றி அணைத்து வைத்துக்கொண்டுவிட்டது.

இதோ, அமைதி சூழ்ந்த மிக ரம்மியமான மலைப் பிரதேசத்தில், தாய் மாமனின் ஓங்கிய குரலில் செமத்தியாக வசவு வாங்கும் ஒரு சன்னியாசியையும், வசவு வாங்கினாலும் இம்மியும் அசையாத அவரையும் பாருங்கள்!

‘கேக்கறேன்ல? சொல்லு, உண்மையச் சொல்லு. நீ கடவுள பாத்தியா? அப்படி ஊர் உலகமெல்லாம் திரிஞ்சி என்னத்த கத்துண்டே? ஒன்ன பாத்ததும் இதத்தான் கேக்க சொன்னா உங்கம்மா.’

நான் புன்னகை செய்தேன். ‘அம்மா செத்துப் போனா நான் அவசியம் ஊருக்கு வருவேன் மாமா’ என்று சொன்னேன்.

‘நாலு பெத்தும் நாசமா போகணுன்னு அவ தலைல எழுதினவன் மட்டும் என் கையில கிடைச்சான்னா அவன வெட்டி பொலி போடாம விட மாட்டேண்டா!’ என்று கேசவன் மாமா சன்னதம் வந்தவர் போலக் கண்கள் சிவக்க, உதடு துடிக்கச் சொல்லிவிட்டுப் போனது நினைவில் நகர்ந்து போனது.

0

அப்போதெல்லாம் ‘விட்டலாச்சார்யா’ என்பது ஒரு பிரமிக்க வைக்கும் பெயர். அதிலும் என்னையொத்த, நாலாவது/ ஐந்தாவது/ ஆறாவது படிக்கும் பிள்ளைகளுக்கு. அதிலும் குறிப்பாக சினிமா பார்க்கும் வாய்ப்பு அதிகம் இருந்தவர்களுக்கு.

‘மாயாஜால மன்னன்’ என்று அழைக்கப்பட்ட விட்டலாச்சார்யா, நிறைய தெலுங்குப் படங்கள் எடுத்தார். என் நினைவில் இருப்பதெல்லாம், அவர் படங்களில், அழகான இளவரசனோ அல்லது ஓர் இளவரசியோ திடீரென்று அந்த நாசமாப்போற வில்லனால் ஒரு கிளி அல்லது குரங்காக உருமாற்றம் செய்யப்பட்டு, ஆறேழு மலைகளுக்கும் நாலைந்து கடல்களுக்கும் அப்பால் இருக்கும் குகையில் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டுக் கிடப்பார்கள். தேடிப்போய் வில்லனை அழித்து, சரியான மந்திரத்தைச் சொல்லி பழைய உருவம் கொடுத்து மீட்டு வந்து, கல்யாணம் செய்துக் கொள்வது, மாட்டிக்கொள்ளாத நபரின் வேலை. இந்த ‘ஒன் லைன் டெம்ப்ளேட்’, அனேகமாக அவருடைய எல்லாப் படத்திலும் இருந்தது, ஒவ்வொரு முறையும் என்னைச் சிலிர்க்கவும் வைத்தது.

அன்று அவர் அனாயாசமாக (வருஷத்துக்கு 2-3 சினிமாக்கள் எடுத்து வெளியிடுவார்) எடுத்த ‘ட்ரிக் ஷாட்’களை வாய்பிளந்து பார்த்து வளர்ந்த என்போன்ற ஒரு சனக்கூட்டத்தை, இப்போது ‘சிஜி, எனப்படும் ‘கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ்’ கவர்ந்து இழுக்க வேண்டுமானால், அதுவொரு ‘லைஃப் ஆஃப் பை’ அல்லது நம்ப ஊர் ‘பாகுபலி’ போல மிகவும் உழைத்து மெனக்கெட்டு எடுத்தப் படமாயிருக்க வேண்டும்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது. அப்போது புரசைவாக்கத்தில் நான் வசித்துவந்த வீட்டில் இருந்து, பள்ளிக்கூடம் போகும்போதும் வரும்போதும், இடையில் இருக்கும் கங்காதீஸ்வரர் கோவிலையும், அதன் மிக அருகில் இருந்த விட்டலாச்சார்யாவின் வீட்டையும் நின்று கவனிக்கத் தவற மாட்டேன். என் வழியில் இருந்து சற்றே விலகியிருந்த அவருடைய வீடு, கோவிலை ஒட்டிய ஒரு தெருவில், சரவண பெருமாள் முதலித் தெருவை முட்டும் முனையில், மிக விஸ்தாரமாக இருந்தது. இருப்பினும் போய்ப் பார்ப்பேன். இரண்டுக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒன்று அச்சமூட்டும் பேய்ப்படத் தயாரிப்பாளரின் வீடு, இன்னொன்று வீடுபேறு தரும் அன்பான சிவம் இருக்கும் கோவில்.

என் சிறுவயதில் அம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு ‘ஹா’வென்று திறந்து கிடந்த கோவிலுக்குள் அடிக்கடி போனதால், நாளாவட்டத்தில் பக்தி வளர்ந்து முக்தி கிடைக்காவிட்டாலும், உம்மாச்சி பயம் விலகியது; கடவுள் அன்பானவர், அவரை அச்சத்துடன் அணுகத் தேவையே இல்லை, நட்புடன் பழகலாம் என்று தெளிய முடிந்தது. உறவைத் தொடர்ந்தாலும் புதிய ஆனந்தம் கிடையாது, முடித்துக் கொண்டாலும் கோபப்பட மாட்டார், பழி வாங்க மாட்டார் என்ற ஞானமும் பிறந்தது.

ஆனால், விட்டலாச்சார்யாவின் மிகப் பெரிய வீட்டின் – எப்போதுமே மூடிக்கிடந்த கதவுகளுக்கு அந்தப் புறத்தில் (வல்லின ற – சின்ன ர போட்டு மாட்டிக்கொள்ளக் கூடாது) என்ன இருக்கும் / இருந்தது என்பது இன்னமும் விடையறியாப் புதிரேதான். “டேய் அவர் வீட்டில் ரெண்டு பெரிய புலி, பூனை மாதிரி உலாவிட்டிருக்கும்டா. ரொம்ம்ம்ம்பப் பெரிய்ய்ய கரடியும் இருக்காம். உள்ளே நுழைந்தால் செத்தோம்” என்ற ரீதியில் அச்சமூட்டிய பல தகவல்களும் நிஜமா வதந்தியா என்று இன்றளவும் நானறியேன்.

எல்லா விஷயங்களுமே உடனேயே புரிந்துவிட வேண்டுமா என்ன? சிலது புரியாமலேயே போய்ச் சேர்ந்தாலும்தான் என்ன இப்போ? யதியிலேயே சொல்லியிருக்கு:

…. பதில் சொல்லிக் கொண்டிருந்த வனவாசியும் நீளநீளமாகவே பேசினான். சுமார் ஐந்து நிமிடங்கள் இடைவிடாமல் அவர்கள் உரையாற்றிய பின்பு வனவாசி என்னிடம் திரும்பி ‘தெரியவில்லை’ என்ற பொருளில் இரு கைகளையும் விரித்தான். எளிய பதில். மிகச் சிறியதும்கூட. ஆனால் அதைக் கண்டடைவதற்கு எத்தனை நூறு சொற்களை விரயம் செய்ய வேண்டியதாகிவிட்டது இவர்கள் இருவருக்கும்!

நான் அந்த சாதுவுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு குகையைவிட்டு வெளியே வந்தேன். அவர்கள் சித்தர்களா என்று என் சீடன் ஒருவன் அந்த வனவாசியிடம் கேட்டான். நான் புன்னகை செய்தேன். அவன் கேட்டது அந்த வனவாசிக்குப் புரிந்ததா என்றும் தெரியவில்லை. கேள்வி கேட்ட மரியாதைக்கு அவனும் விரிவாக ஏதோ விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தான். அது நிச்சயம் என் சீடனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்ன காரணத்தாலோ எனக்கு அற்புதங்களின்மீது ஆர்வமில்லாது போய்விட்டது. என் பயணங்களில் நூற்றுக்கணக்கான சித்தர்களை நான் சந்தித்திருக்கிறேன். சில அற்புதங்களை நேருக்கு நேர் எதிர்கொண்டும் இருக்கிறேன். எனக்குத் தெரியாத ஓர் இயல் என்பதைத் தாண்டி அதில் வியக்க ஒன்றுமில்லை என்றே எப்போதும் தோன்றி வந்திருக்கிறது.

0

ஆனால், எப்போதுமே எதிலும் வியக்க ஒன்றுமில்லை என்றும் சொல்லிவிட முடியாது இல்லையா? அப்படிச் சொல்ல எத்தனை எத்தனை அறிந்திருக்க வேண்டும்! தமிழைத் தவிர வேறு மொழிகளையும் கற்றதால் தானே பாரதியாரால், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று சொல்ல முடிந்தது! அனுபவம், நேரடியான அனுபவம்தான் பயமூட்டுகிறது, பதற வைக்கிறது, தேடச் செய்கிறது, பயத்தை விலக்கி, பதற்றத்தைத் தணித்து, தெளிவும் தருகிறது, பக்குவப்படுத்துகிறது. நல் ஆசிரியனாகவும் மாற்றுகிறது.

இதோ யதியில் ஓர் ஆசிரியர் வருகிறார். இன்றைய காலக்கட்டத்தில், இப்படி ஒருவர் இருந்தால், அவருடைய மாணவர்கள் கொஞ்சமும் இரக்கமில்லாமல் அவருக்கு ‘பழம்’ என்று பேரிட்டுவிடுவார்கள். அவர் வகுப்பு எடுக்கையில், வெளியில் சுற்றக் காசில்லாவிட்டால், சில மாணவர்கள் அவருடைய வகுப்பிலேயே ஆனந்தமாகத் தூங்கவும் செய்வார்கள். அப்பேர்பட்ட அந்தப் பழ வாத்தியார் என்ன செய்தார் பாருங்கள்:

எங்கள் பள்ளிக்கூடத்தில் அவர் தறி ஆசிரியராக இருந்தவர். கைத்தொழில் பயிற்றுநர். அமைதியே வடிவான மனிதர் என்று பெயரெடுத்தவர். எப்போதாவது வரலாறு, புவியியல் எடுக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராதிருந்தால் அவரைத்தான் தலைமை ஆசிரியர் அந்த வகுப்புகளுக்கு அனுப்பிவைப்பார். ‘டேய் படிங்கடா’ என்று மட்டும் சொல்லிவிட்டு ஒரு காகிதத்தைக் கிழித்துச் சுருட்டி, காது குடைய ஆரம்பித்துவிடுவார். வகுப்பு முடியும் நேரத்தில் மட்டும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கைத்தொழில் கற்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்து சில வார்த்தைகள் சொல்லுவார். அவரறிந்த வரலாறும் புவியியலும் அதுவாகவே இருந்தது. ஏனோ அந்த சங்கதி தலைமை ஆசிரியருக்குத் தெரியாமலே இருந்தது. நானறிந்து பிரம்பைத் தொடாத ஒரே ஆசிரியர் எங்கள் பள்ளியில் அவர்தான். ஆனால் எத்தனை உக்கிரமாகச் சேவலின் சிரத்தைச் சீவித் தள்ளிவிட்டார்! வெட்டிய பின்பும் அந்தச் சேவலின் உடல் துடித்துக்கொண்டே இருந்தது. அரை இருளில் அந்தக் காட்சி அளித்த அதிர்ச்சியில் இருந்து என்னால் வெகு நேரம் மீளவே முடியவில்லை.

திகைத்துப் போய் நான் வாத்தியாரை நிமிர்ந்து பார்த்தேன். என் முகத்தில் அச்சத்தின் துளிகள் தெறித்திருக்க வேண்டும்.

‘என்ன?’ என்றார் வாத்தியார்.

உடனே நான் ஒன்றுமில்லை என்று தலையசைத்தேன். அந்த இடத்தைவிட்டு ஓடிவிடவேண்டும் என்று ஏனோ தோன்றிவிட்டது. உடம்பெங்கும் சாம்பல் பூசி ஆடிக்கொண்டிருந்த பூசாரியின் ஆட்டத்தை விடவும், பக்தியின் உச்சத்தில், கொண்டாட்டத்தின் உச்சத்தில் தம்மை மறந்து குரலெழுப்பிக்கொண்டிருந்த ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தை விடவும் அந்த ஒரு சிறு கழுத்துச் சீவலின் உக்கிரம் என்னை வெகுவாகத் தாக்கியது.

0

நாங்கள் இருந்த ஒண்டுக் குடித்தனத்திலேயே, என் தாத்தாவும் – அம்மாவின் அப்பா – கிராமத்தில் இருந்து வந்து எங்களுடனே வசித்துவந்தார். அவருக்கு மிகக் கொஞ்சம் வைதீகமும், அதைவிடக் கொஞ்சமாக லௌதீகமும் தெரியும். ஏற்கனவே குறைந்த வருமானத்தில் காலட்சேபம் செய்துவரும் மகள் வீட்டில் எல்லோருக்கும் சிரமம் கொடுக்கிறோமே என்று வருத்தப்படுவார். இயன்ற உதவிகளைச் செய்வார். அவரிடம் ஒரு ஓலைச் சுவடி இருந்தது. முப்பது நாற்பது பனை ஓலைகள் கொண்ட கட்டு. பனை ஓலையில் எனக்குத் தெரியாத ஏதோ ஒரு லிபியில் எழுத்துகள் இருந்தன. வருடத்தில் இரண்டு தடவை அந்தச் சுவடிக் கட்டை வெளியில் எடுத்து, பூஜையில் வைப்பார். சரஸ்வதி பூஜைக்கு ஒரு தடவையும், துலாபுராண காலத்தில் ஒரு தடவையும். அவருக்கும் அந்த லிபியை வாசிக்கத் தெரியாது என்று நினைக்கிறேன். பூஜையில் வைப்பார். முடிந்ததும் எடுத்து உள்ளே வைத்துவிடுவார்.

அருகில் கங்காதீஸ்வரர் கோவில் குளத்தை ஒட்டியிருந்த அக்ரஹாரத்து அரசமர மேடையில், சின்ன அழகான பிள்ளையார் சன்னதியில், ஒவ்வொரு ஐப்பசி மாதத்திலும் துலா புராணம் வாசிப்பார். காவிரி நதியின் மகத்துவம் குறித்து புராணம் சொல்லும் அம்சங்களை வாசித்து விளக்குவார். தட்டில் விழும் சில காசுகளை என் அம்மாவிடம் கொடுத்துவிடுவார்.

சுவடின்னு ஒண்ணு இருந்தா, அதில் எழுதிவைத்த குறிப்பு என்ற ஒன்றும் இருந்துதானே ஆகவேண்டும். யதியில் இருந்த சுவடியில் ஒரு வம்சத்தின் விதியே நாலு வரிகளில் எழுதப்பட்டு, பலர் கைகளிலும், பல இடங்களிலும், பல நேரங்களிலும் காட்சியளிக்கிறது . குடும்பத்தின் சரித்திரம், மருத்துவச் சுவடியான காட்சிப்பிழையும் இருக்கிறது.

அவர்சிரித்தார். பிறகு, ‘அந்த சுவடிய எடுத்தாந்திங்களா?’ என்று கேட்டார்.

‘இல்லே. அதை அப்பா வெச்சிருக்கார். ஆனா அது நாடியெல்லாம் இல்லை; எதோ வைத்திய சுவடின்னு சொல்றா.’

‘யாரு சொன்னாங்க?’

‘வைத்தீஸ்வரன் கோயில்ல போய்க் கேட்டோம்.’

அவர் மீண்டும் சிரித்தார். ‘உங்கண்ணன் ஒருநாள் காணாம போயிடுவான்னு எனக்குத் தெரியும். போவுறதுக்கு முன்ன கூடப்பொறந்த ஒருத்தர்ட்டே சொல்லிட்டுப் போடான்னு சொன்னேன். சொன்னானா?’ என்று கேட்டார்.

0

மருத்துவச் சுவடின்னதும், ஆரவ் என்ற இளைஞர், ஓவியா எனும் அழகிய இளைஞிக்கு இதழ் நிறைய அளித்தப் பிரசாதத்தை, ‘ஆண்டவர்’ மருத்தவ முத்தம்னு ‘பிக் பாஸ்’லெ வர்ணித்தது ஞாபகத்துக்கு வந்தது. பா.ரா கமலின் தீவிர ரசிகர் என்று நினைக்கிறேன். மொத்தப் புத்தகதையும் முத்தப்புத்தகம் என்று சொல்ல மாட்டேன். ஆங்காங்கே அழகாகவும் ஓரிரு இடத்தில் ஆவேசமாகவும் பரவிக்கிடந்தாலும், அளவாகத்தான் இருந்தது. ஊடாக வந்த ஒன்று, இங்கே:

பெண் துறவி சிரித்துக் கொண்டே சொன்னாள், ‘உனக்குத் தெரியுமா? அந்தப் பெண் சாஜிதாவுக்கு ஒருநாள் குளிர்க்காய்ச்சல் வந்துவிட்டது. உடம்பெல்லாம் தூக்கித்தூக்கிப் போடஆரம்பித்துவிட்டது. வேறுவழியின்றி அந்த யோகி அவள் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுத்தான் அதை அடக்க வேண்டியிருந்தது.’

‘ஐயோ!’

‘ மருத்துவமாகச் செய்ததுதான். ஆனால் அன்று அத்தவறு அங்கே நிகழ்ந்தேவிட்டது என்று அவரே என்னிடம் சொன்னார்.’

0

உடனே இந்த யதி, கிளுகிளுப்புக்கான ஜலபுல கதாநூல் என்று எண்ணிவிடாதீர்கள். நம்மிடையே நிகழும் நிகழ்ச்சிகளும், அவை பழசோ புதிதோ, கவனம் பெற்ற நிகழ்வுகள், ஏதோ ஒரு ரூபத்தில் – வகையில் – வேணா, வடிவத்தில் என்றே வெச்சுக்கலாம், யதியில் இடமும் கவனமும் பெறுகின்றன. ரஜனீஷும், வருகிறார்; சேஷாத்ரி ஸ்வாமிகளும் வருகிறார். கோரக்கரும் வருகிறார். வடிவமும் களமும் மாறினாலும், வருகிறார்கள்.

வாசகர்கள் அலட்சியமாகவோ, கவனச் சிதறல்களோடோ ‘வேக வாசிப்பு’ என்ற போர்வையில், மிக நுட்பமான இடங்களை, யதியில் வரும் வினோத் மாதிரி விட்டுவிடக் கூடாது.

மெட்ராஸில் அப்போது டிஜிஎஸ் தினகரன் என்றொரு கிறிஸ்தவப் பிரசங்கி பிரபலமாகிக்கொண்டிருந்தார். எனது சீடர்களுள் ஒருவன் அவரது பிரசங்க கேசட் ஒன்றை எனக்கு அனுப்பி, இதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தான். நான் அந்த கேசட்டைப் பொறுமையாகக் கேட்டேன். எனக்கு தினகரனின் பிரசங்கம் மிகவும் பிடித்திருந்தது. இயேசு வருகிறார் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவர் வந்தே விட்டது போன்ற தோற்ற மயக்கத்தை அவரது பிரசங்கம் செய்வதை உணர்ந்தேன். அது சட்டென்று நினைவுக்கு வந்து, ‘வினோத், நீ ஒரு நல்ல தினகரன்’ என்று சொன்னேன்.

என்ன சொல்கிறேன் என்றால், கேலியாக சிரிக்காமல், நிகழ்வுகளை இன்னும் கூர்மையாக கவனிக்க வைக்கிறார், பா.ராகவன். இன்னோர் இடத்தில், ‘உறங்கும்போதுகூட உடன் வைத்திருக்கும் தண்டத்தை அப்போது வைத்திருக்காமல், சன்னியாசிக் கோலத்தில் இருந்த ஒருவரை’ப் பார்த்துவிட்டு வந்த மறுநாள், என்னவாயிற்று என விளக்குகிறார்:

என்னால் மறக்கவே முடியாத ஒருதினம் உண்டென்றால் அது அன்றைய தினம்தான். வாழ்வில் முதல் முறையாகவும், ஒரே முறையாகவும் நான் சில தீர்மானங்கள் செய்துகொண்டேன். அவை அனைத்துமே என் குருநாதர் எனக்குப் பிட்சையாக அளித்த யோசனைகள்.

‘விமல்! ஒரு சன்னியாசியிடம் இருக்கவே கூடாதவை மூன்று. முதலாவது பணம். இரண்டாவது அசையாச் சொத்து. மூன்றாவது நேரடி அதிகாரம்’ என்று அவர் சொன்னார்.

நான் உடனே, ‘பெண்?’ என்று கேட்டேன்.

குரு சிரித்தார். ‘இல்லாதிருந்தால் நல்லது. இருந்தே தீருமானால் அதனால் வரக்கூடிய சிறு இடையூறுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால் நான் சொன்ன மூன்றும் பெண்ணைக் காட்டிலும் அபாயகரமானவை.’

0

யதியின் சில பகுதிகள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிக நெருக்கமானதாக இருந்தன. கடவுள் குறித்த நம்பிக்கைகளும், குறியீடுகளும் என்னுடன் ஒட்டிக்கொண்டும், வெட்டிக்கொண்டும் இருந்தன. என் இத்தனை நாள் வாழ்க்கையில், கடவுள் குறித்த என் நிலைபாடுகள் விசித்திரமானவை. ஓர் எல்லையிலிருந்து, எதிர்ப் புறம் வெகு எளிதாகத் தாண்டியவைதான்.

எட்டொன்பது வயதில், என் பாட்டியுடன் எம்.சிடி.எம்.சிதம்பரம் செட்டியார் பள்ளி வளாகத்தில் உட்கார்ந்து வாரியாரின் கதாகாலட்சேபம் கேட்கும்போது, ‘கந்தன் கருணை’ தந்த வேகத்தில், ‘இனி எப்போதும் எதற்காகவும் பொய் சொல்ல மாட்டேன். உண்மை பேசுவதால் வரும் எந்த இழப்பையும் தண்டனையையும் ஏற்றுக் கொள்வேன்’ என்று உறுதியெடுத்துக் கொண்டேன். வாழ்ந்தேன். விற்பனைப் பிரிவில் பணி செய்தபோதே பொய் சொல்லாமல் இருந்தேன். இன்றும் அப்படியே வாழ்கிறேன்.

யதியில், மூத்த அண்ணனும் கடைசித் தம்பியும் உரையாடுகிறார்கள்:

‘டேய், எப்படிடா இது!’ என்று பிரமித்து நின்றுவிட்டேன். அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ‘விமல், இந்தக் குளத்துல காலவ ரிஷி இருக்கார். இன்னமும் உள்ளயேதான் இருக்கார். அதுவும் உயிரோட. யுக யுகமா அவரால எப்படி மூச்சடக்கித் தவம் பண்ண முடியறதுன்னு யோசி.’

‘நீ பாத்தியா அவர?’

‘அடிக்கடி பாக்கறேன்.’

‘ஐயோ நீ பொய் சொல்ற!’ என்று நான் அலறினேன்.

அவன் தீர்மானமாக இல்லை என்று தலையாட்டினான். ‘என் வாய்ல என்னிக்குப் பொய் வருதோ அன்னிக்கு நான் செத்துப் போயிடுவேன்’ என்று சொன்னான்.

இன்னொன்று. முதலில் என் டிப்ளமா தேர்விலும், அடுத்து இரண்டு தடவை என் குடும்பம் சார்ந்தும் மனமுருகி வேண்டுதலுடனும் முருகனிடம் கையேந்தி நின்றேன். இதுவரை வெறும் மூன்றே முறைதான். மூன்றே வேண்டுதல்கள் தாம். மூன்றிலுமே எனக்குத் தகுதியில்லாவிட்டாலும், நான் கேட்டதைக் கேட்டபடியே தந்து அருளினான். மூன்றுமே என் பதினெட்டு முதல், முப்பத்தாறு வயதுக்குள் நிகழ்ந்தவை. நியாயமாகப் பார்த்தால், இப்போது நான் கோவில் கோவிலாக க்ஷேத்ராடனம் போய்க் கொண்டோ, அல்லது ஏதாவது ஒரு மடத்தில் ‘விலையில்லா’ சேவை செய்துக்கொண்டோ இருந்திருக்க வேண்டும்.

ஆனால், இந்த இடைப்பட்ட கால கட்டங்களில், பூணூலை விட்டேன். எனவே, பதறித் துடித்த தம்பியிடம்,

‘அதுக்கெல்லாம் ஒரு அர்த்தமே இல்லை விமல். உடம்புக்கே அர்த்தம் கிடையாது. உடம்புமேல கிடக்கிற நூலுக்கு என்ன பெரிய அர்த்தம்!’

என்று சொன்ன விஜய்யுடன் மிகவும் இணங்கினேன்.

அதன் பின், முருகன் டாலருடன் அணிந்திருந்த ஒரு சங்கிலியையும் விட்டுவிட்டேன். இப்போது வெறும் கழுத்துடன், கடவுளிடம் அதீத இணக்கமோ பிணக்கோ இல்லாமல், கோவிலையும் கடவுளையும் அடிக்கடி தொந்தரவு செய்யாமல், சந்தோஷமாகவே வாழ்ந்து வருகிறேன். யாரும் கண்ணு போடவேண்டாம்.

அதனால்தானோ என்னவோ, கார்ப்பரேட் சன்னியாசி விமல் எனக்கு நெருக்கமாய்த் தெரிந்தார்:

‘நான் நாத்திகன் என்று யார் சொன்னது?’

‘நீ தானே சொன்னாய்?’

‘இல்லை நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். எனக்குக் கடவுள் தான் கிடையாதே தவிர, நான் ஒரு நல்ல ஆன்மிகவாதி.”

சித்ராவின் அம்மா புலம்பும்போது, என்னால் வெகு எளிதில் அவள் கட்சியில் சேர முடிகிறது.

‘என்னை விடுங்கோ. மாமா நடமாடிண்டு இருந்த வரைக்கும் தெனம் கோயிலுக்குப் போய் பெருக்கித்தள்ளி, குப்பையள்ளிப் போட்டுட்டு வருவேர். என்னன்னு நினைச்சேள்? அவர்அந்தக் காலத்து எம்.ஏ. படிச்சவர். எத்தன பெரியபெரிய அதிகாரிகளெல்லாம் அவரண்ட வந்து கைகட்டி நிப்பா தெரியுமா? அப்பேர்ப்பட்ட மனுஷன், இந்தக் கழிச்சல்ல போறவன் கோயில்ல குப்பை அள்ளிப் போடறதுதான் புண்ணியம்னு கிடந்தார்.’

‘ஐயோ.’

‘என்ன ஐயோ? கோவில் வாசல்ல போய் படுத்துண்டுதான் பிராணன விடுவேன். அன்னிக்குப் பூரா அவனுக்குப் பட்டினி. என் பொணத்த எடுத்துண்டு போய் எரிச்சுட்டு, புண்ணியாவசனம் பண்ணி, சாந்தி பண்ணி, எல்லாம் பண்ணி முடிச்சப்பறம்தான் கோவுல் கதவு திறப்பா. கோவுலானா என்ன, வீடானா என்ன? பொணம் விழுந்த இடத்துக்குத் தீட்டில்லாம போகுமா?’

அது மட்டுமல்ல. விமலிடம் பொறாமையும் ஏற்பட்டது. எப்பேற்பட்ட ஞானியை குருவாகப் பெற்றிருக்கிறார். ஹப்பா…

இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னர் குருநாதர் என்னிடம் சொன்னார், ‘விமல்! வாழ்நாளில் மதத்தையோ கடவுளையோ மருந்துக்கும் தொட்டுப் பாராமல் உன்னால் மக்களுக்கு நாலு நல்ல விஷயங்களைச் சொல்ல முடியுமானால் உன்னைக் காட்டிலும் உயர்ந்த ஜீவன் வேறில்லை.’

0

பாராவின் லாகவமான எழுத்து நடைக்கு தனியே ஒரு வசீகரம் உண்டு. ஒரு நதியைப் போல, ஒரு அருவியைப்போல ஆகர்ஷிக்கும்.

ஜெயகாந்தனின் எந்தப் படைப்பிலும் வில்லனைத் தேடுவது வியர்த்தமான வேலை. சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகட்டும், அல்லது கங்கை எங்கே போகிறாள் ஆகட்டும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறால் தானாகட்டும். எல்லோரும் நல்லவரே. யதியை முழுக்க வாசித்துவிட்டு, நல்லவர் அல்லாத ஒருவரைக் காட்டுங்கள் பார்க்கலாம். வெட்டிக் கொன்ற சன்யாசியே, நம் பிரியத்துக்கு உகந்தவனாகத்தானே இருக்கிறான்!

யதி, பாராவின் தொப்பிக்கு இன்னுமொரு சிறகு.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி